16- 08-2019- கடிதங்கள்

போகன்

கவிஞனின் ஒருநாள்

அன்புள்ள ஜெ

கவிஞனின் ஒருநாள் ஒரு நல்ல குறிப்பு. அப்படி அடையாளம் காட்டியிராவிட்டால் அந்த ஒருநாள் எவராலும் கவனிக்கப்படாமலேயே போயிருக்கும். ஒருநாளில் இவ்வளவு அற்புதமான கவிதைகளை ஒரு கவிஞன் எழுதியிருக்கிறான் என்பதே மிகமுக்கியமான விஷயம்தான். இன்னும் சில ஆண்டுகளில் இந்த ஒருநாள் ஒருவேளை நிறையவே பேசப்படக்கூடியதாக ஆகிவிடலாம். ஆனால் இப்படி அடையாளம் காட்டினால் மட்டுமே முகநூலில் அந்த நாளுக்கு முக்கியத்துவம் வருகிறது. அதுதான் முகநூலின் பிரச்சினை

எம்.ராஜேந்திரன்

***

அன்புள்ள ஜெ

போகன் சங்கரின் அந்த ஒருநாள் கவிதைக் கொந்தளிப்பு அபாரமான அனுபவம் ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு மாதிரி. ஆகவே பொதுவாக அந்த மனநிலை என்ன என்று கூறிவிட முடியவில்லை. அனேகமாக ஒவ்வொரு கவிதையையும் ஒவ்வொரு எல்லையிலிருந்து தொடங்கியிருப்பார் என நினைக்கிறேன். அல்லது கவிதைகளை அவர் வெறுமே முந்தைய கவிதையின் சொல்லில் இருந்து தொடங்கியிருப்பார்.

எல்லா கவிதையுமே சிறப்பாக வந்த ஒரு வெளிப்பாடு இது. இது தமிழில் அபூர்வமாகவே நடந்திருக்கிறது

செல்வக்குமார்

***

அன்புள்ள ஜெ

போகன்சங்கரின் கவிதைத்திருநாள் அற்புதமானது .நீரில் அளைவதோர்
ஒளிப்பிறழ் கை.நிலத்தில் திரிவதோர் மாய உடல். எனக்குப்பிடித்த கவிதை எல்லா கவிதைகளுமே அழகானவை

ஆனால் மிகமுக்கியமான ஒன்று உண்டு. நம் கவிஞர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் இப்படி கவிதைக் கொந்தளிப்பு அடையவேண்டும் என்றால் அது காமம்தான் காரணமாக இருக்கும். காமமே இல்லாமல் ஆன்மிகமான ஒரு எழுச்சியால் இந்த அளவுக்கு கவிதைகளை கண்டடைந்திருப்பது தமிழில் மிக அபூர்வமான நிகழ்வு

ராஜசேகர்

***

முந்தைய கட்டுரைபாலா- வைகுண்டம் -பொருளியல்- விவாதம்
அடுத்த கட்டுரைதிப்பு சுல்தான் யார் – பி.ஏ.கிருஷ்ணன்