நீரும் நெறியும் கடிதங்கள்

நீரும் நெறியும்

 

அன்புள்ள ஜெ

 

நீரும் நெறியும் பழைய கட்டுரை. ஆனால் மீண்டும் மீண்டும் புதிதாக வாசிக்கவைக்கிறது. ஏனென்றால் இன்றைக்கும் இருக்கும் பிரச்சினை. நாம் காவேரிநீரை நமக்குத்தரவில்லை என்பதை மட்டும் உணர்ச்சிப்பிரச்சினையாக ஆக்கிக்கொள்கிறோம். நமது நீராதாரங்கள் அழிவதைப்பற்றி கவலைப்படுவதில்லை.நம்முடைய நீரை நம் சகோதரர்களுடன் பகிர்ந்துகொள்வதுமில்லை.

 

நாம் இந்த மனநிலையை எவரேனும் சுட்டிக்காட்டினால் அவர்மேல் கோபம் கொள்கிறோம். கொந்தளிக்கிறோம். உண்மையில் நம்முடைய பிரச்சினைதான் என்ன என்பதே சிக்கலான கேள்விதான். நம்முடைய பலவீனங்களையும் சில்லறைத்தனங்களையும் மறைக்கவே இந்த நாடகங்களை ஆடிக்கொண்டிருக்கிறோமா?

 

ஆர்.சத்யமூர்த்தி

 

அன்புள்ள ஜெ

நீரும் நெறியும் கட்டுரையில் ஒரு விஷயம் என்னை மிகவும் கவர்ந்தது. அதாவது குமரிமாவட்டத்திற்கே உயிர்கொடுத்த பேச்சிப்பாறை அணையைக்கட்டிய மகாராஜாவையும் அதன் பொறியியலாளரையும் எவருமே நினைவுகூரவில்லை, அரசியல்வாதிகளைப்பற்றியே பேசினார்கள் என்பது

 

இதுதான் நம் மனச்சிக்கல். நாம் நமக்கு என்னதான் நன்மை செய்திருந்தாலும் நம் சாதி. நம் மதம் சார்ந்தவர்களைத்தான் மதிக்கிறோம். மற்றவர்களை மறந்துவிடுகிறோம். அல்லது அவமதிக்கிறோம். உதாரணமாக கொங்குமண்ணின் வளர்ச்சிக்கு காமராஜர் ஆட்சிக்காலமே முதன்மையான காரணம். ஆனால் கோவைப்பகுதியில் காமராஜரை நினைவுகூர எவருமே இல்லை. அங்கே அவருக்கு ஒரு நல்ல சிலைகூட இல்லை

 

அதேபோல தமிழகத்திற்குப் பெரும்பங்காற்றிய பல தெலுங்கர்கள் உண்டு. அவர்கள் எல்லாருமே தமிழ்ப்பற்று காரணமாக மறக்கப்பட்டுவிட்டார்கள். இந்த மனநிலையிலிருந்துதான் நாம் எந்த நன்மையும் செய்யாமல் சும்மாவே சாதி மத இன மொழி சண்டைகளை தூண்டிவிடும் தலைவர்களை பெறுகிறோம்

 

டி,.எம்.கணேஷ்குமார்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-1
அடுத்த கட்டுரைசாக்லேட்டிற்கும் கவிதைக்கும் என்ன வித்தியாசம்?