நமது கல்வி -கடிதங்கள்

’மொக்கை’ – செல்வேந்திரன்

 

மும்மொழி கற்றல்

 

அன்புள்ள ஜெ

 

மும்மொழி கற்றல் ஒரு நல்ல கட்டுரை. பலகாலமாக நீங்கள் சொல்லிவருவதுதான். ஆனால் மீண்டும் அனைத்தையும் ஒன்றாகத் தொகுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். இன்றைய கல்விமுறையின் பிரச்சினை இதுதான். அது இரண்டு எல்லைகளில் உள்ளது. அரசு சார் கல்வியால் எந்தப்பயனும் இல்லை. அங்கே கல்வியே இல்லை. அரசூழியர்களுக்கே உரிய மெத்தனம். மற்றபக்கம் தனியார்க்கல்லூரியில் கல்வியை வணிகப்பொருளாக்கி வியாபாரப்போட்டியாக்கி வெறும் டிரெயினிங் ஆக்கிவிட்டார்கள்.

 

கல்வியை வடிவமைப்பவர்களுக்கு அவர்களின் அரசியல்தான் முக்கியமாக இருக்கிறதே ஒழிய மக்களின் கல்வியோ முன்னேற்றமோ அல்ல. மாணவர்கள் எவ்வளவு கற்கமுடியும் என்றோ எதைக் கற்றேயாகவேண்டும் என்றோ எவருமே கவலைப்படுவதாகத் தெரியவில்லை. இது மிகவும் துரதிருஷ்டவசமான விஷயம்தான்

 

கணேஷ்

அன்புள்ள ஜெ

 

கல்வி பற்றிய உங்கள் கட்டுரையை வாசித்தேன். ஆசிரியனாக அதிலுள்ள ஒரு விஷயத்துடன் நூறு சதவீதம் உடன்பாடு. இன்றைக்குத்தமிழகத்தில் தமிழில் சரளமாக வாசிப்பவர்கள் மிகமிககுறைவு. கொஞ்சம்பேர் வாசித்தால்கூட அது கிராமப்பள்ளிகளில் மட்டும்தான். நகரத்துப்பள்ளிகளில் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள்கூட ஆனா ஆவன்னா தரம்தான். ஆங்கிலவாசிப்பு உண்டா என்றால் அதுவும் மிககுறைவு. ஆங்கில ஊடகம் என்றால் ஆங்கிலம் வழி ஒப்பேற்றிப்படிப்பது மட்டுமே

 

ஆனால் அதற்காக ஆங்கில லிபி மட்டுமே போதும் இரண்டு லிபிகள் படிக்கும் சுமையிலிருந்து விடுபட்டால் பல சிக்கல்கள் குறைந்துவிடும் என்பது ஏற்கமுடியாததாகவே தெரிகிறது

 

ஆர். அருணாச்சலம்

 

அன்புள்ள ஜெ

 

நீங்கள் எழுதிய மும்மொழிக்கல்வி என்னும் கட்டுரையும் சரி செல்வேந்திரனின் மொக்கை கட்டுரையும் சரி ஒரே விஷயத்தையே இரண்டு கோணங்களில் சொல்கின்றன. முன்பெல்லாம் எல்லா வகுப்பிலும் இரண்டுமூன்றுபேராவது நூல்களை வாசிப்பவர்கள் இருப்பார்கள். தமிழ்வழி வாசிப்பு கொண்டவர்கள். இன்றைக்கு என் வகுப்பில் நூல்வாசிப்புள்ள ஒரு மாணவனைக்கூட கண்டதில்லை. 17 வருஷ சர்வீஸ்.  ஏனென்றால் ஆங்கிலம் சரியாகத்தெரியாது. தமிழ் சுத்தமாகத்தெரியாது. இதுதான் நிலைமை

 

சரவணன் குமரேசன்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-5
அடுத்த கட்டுரைசென்னையில் வாழ்தல்