நமது ஊற்றுக்கள்
வேங்கடத்துக்கு அப்பால் தமிழ் டிஜிட்டல் நூலகம்
வேங்கடத்துக்கு அப்பால் வாங்க…
அன்புள்ள ஜெயமோகன்,
தொ.மு. பாஸ்கரத் தொண்டைமானின் ‘’வேங்கடம் முதல் குமரி வரை’’ நூலைத் தொடர்ந்து அவர் எழுதிய ‘’வேங்கடத்துக்கு அப்பால்’’ என்ற நூலை வாசித்தேன். நண்பர்கள் சிலருடன் கோவையிலிருந்து காரில் புறப்பட்டு ஒரு இந்தியப் பயணத்தை நிகழ்த்துகிறார். அப்பயணத்தில் அவர் சென்ற தலங்களைக் குறித்து எழுதுகிறார். அவர் பயணித்திருக்கும் பாதை இந்தியப் பயணம் மேற்கொள்ள விரும்பும் ஆர்வலர்களுக்கு இந்தியாவின் இந்தியக் கலையின் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அடையாளப்படுத்தக் கூடியது. மோட்டார்சைக்கிளிலோ அல்லது காரிலோ அல்லது ரயிலிலோ இந்தியப் பயணம் நிகழ்த்த விரும்புபவர்கள் அவர் சென்ற மார்க்கத்தின் வழியே செல்லலாம். அது ஒரு மிக நல்ல முக்கியமான துவக்கமாக நிகழும்.
‘’வேங்கடம் முதல் குமரி வரை’’ நூலில் ஆலயங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவை. அத்தொடர் எழுதும் போது கம்பனும், இளங்கோவும் அவர் நடையில் வந்து விழுகின்றனர். தொன்மங்களிலிருந்து வரலாற்றுக்கு வந்து சேர்கிறார். இலக்கியமும் அதனுடன் இணையாக வருகிறது. ‘’வேங்கடத்துக்கு அப்பால்’’ நூலில் வரலாறு குறித்த தகவல்கள் அதிகம் இடம்பெறுகின்றன. தமிழ் நிலம் அன்னியத் தாக்குதலால் சிதைவுபடாமல் விஜயநகரப் பேரரசால் காக்கப்பட்டதும் வட இந்திய ஆலயங்கள் அவ்வாறு காக்கப்பட வாய்ப்பின்றி முற்றிலும் தகர்க்கப்பட்டு மறு உருவாக்கம் செய்யப்பட்டன என்பதுமே காரணம்.
இந்நூலில் ஒரு சுவாரசியமான விஷயத்தைக் கவனித்தேன். இந்நூல் எழுதப்பட்ட போது இன்று புழக்கத்தில் இருக்கும் பெரும்பாலான சாலைகள் சிறிய சாலைகளாகவே இருந்திருக்கின்றன. அன்று இந்திய நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு ரயிலே பெரிதும் உதவியிருக்கிறது. தங்க நாற்கரச் சாலை மூலம் இந்தியாவின் நான்கு திசைகளும் இணைக்கப்பட வேண்டும் என்று பேரார்வம் கொண்டிருந்த முன்னாள் இந்தியப் பிரதமர் திரு. அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களை நினைத்துக் கொண்டேன். ‘’கிராமச் சாலைகள்’’ (கிராம் சதக்) திட்டமும் அவருடைய எண்ணமே.
ஆசிரியர் காஜுரஹோ சிற்பங்கள் குறித்து பேசும் போது ‘’அதை விகற்பமாக எண்ணுகிறவர்கள் மனத்தில் தான் கோளாறே தவிர சிற்ப வடிவங்களிலோ அதை வடித்த சிற்பிகளிடத்தோ கோளாறு இருக்கவில்லை’’ என்கிறார். வட இந்தியர்கள் ‘’ராதே ஷியாம்’’ என கை கூப்பும் போது அவர்கள் உணர்ச்சியைக் கண்டு உளம் கனிகிறார்.
அன்புடன்,
பிரபு மயிலாடுதுறை
***