நீதிமன்றம், நெறிகள் – கடிதம்

நீதிமன்றத்தில் அனுமன்!

அன்புள்ள ஜெ,

நீதிமன்றத்தில் அனுமன் கட்டுரையை வாசித்தேன் .இது தொடர்பாக வேறொரு பார்வையை முன்வைக்க முயல்கிறேன் .

அ) பாரதத்தில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகவே ஸ்ம்ருதிகள் எழுதி தொகுக்கப்பட்ட சட்டங்களாக இருந்து வந்தன .ஆனால் இந்தியா முழுவதற்கும் ஒரே ஸ்ம்ருதியாக இருந்தது இல்லை .ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு வித ஸ்ம்ருதி .இவை சில அடிப்படை விஷயங்களில் ஒன்றாகவும் ஏனையவற்றில் வித விதமாக வினோத விஷயமாகவும் இருந்து வந்தன . விலக்கப்பட்ட திருமண உறவுகள் தொடங்கி வாரிசு உரிமை தத்து எடுக்கும் உரிமை வரை பல விஷயங்களிலும் வேறு பாடுகள் இருந்தன

உதாரணத்திற்கு பழைய உணவை அந்தணர் உண்ணக் கூடாது என்று கூறும் ஒரு ஸ்ம்ருதி உரை ஆனால் அத்தகைய பழக்கம் சாதாரணமாக தமிழக அந்தணர்களிடம் இருந்தது என்ற விளக்கத்தையும் தருகிறது பாரதத்தின் மற்ற பகுதியில் இருந்த ஸ்ம்ருதிகளுக்கும் கேரளத்தில் புழக்கத்தில் இருந்த சங்கர ஸ்ம்ருதிக்கும் இருந்த வேறுபாடுகளை குறித்து பக்கம் பக்கமாக எழுதலாம் . பால்ய விவாகம் இல்லை என்பதில் தொடங்கி மருமக்கள் வழி சொத்துரிமை வரை பல விஷயங்கள் அதன் அடிப்படையில் இருந்ததே . சிக்கலான வழக்குகள் ஸ்ம்ருதிகளின் அடிப்படையில் தர்க்கம் நியாயம் மீமாம்சிக சூத்திரம் போன்றவற்றில் சிறப்பு பயிற்சி பெற்ற பண்டிதர்களைக் கொண்டு விசாரிக்கப்பட்டு தீர்ப்பு சொல்லப்பட்டன .சில நேரங்களில் மடங்களின் கருத்தும் கேற்கப்பட்டது .நம்பூதிரிகள் நடத்திய ஸ்மார்த்த விசாரணை இப்படிப்பட்ட ஒன்று தான் .அங்கு உள்ள ஸ்மார்த்த என்பது ஸ்ம்ருதி என்பதை வேர்ச்சொல்லாகக் கொண்டது . விசாரணையை நடத்தும் ஸ்மார்த்தன் என்னும் நம்பூதிரி ஸ்ம்ருதிகளை நன்றாக தெரிந்தவனாக இருக்க வேண்டியது அவசியம் .பாரதம் முழுக்க வித விதமான வடிவில் சில நேரங்களில் ஜாதி பஞ்சாயத்தாகக் கூட இத்தகைய நீதி விசாரணை முறை இருந்தது .

ஆ) ஆங்கிலேயர்கள் நாட்டை முழுமையாக கைப்பற்றுவதின் ஒரு பகுதியாக நீதித்துறையையும் கைவசப்படுத்தினார்கள் .ஆனால் அவர்களும் அனைவருக்கும் சம நீதி என்பது (குறைந்தது உரிமையியல் வழக்குகளில் ) குறித்து எல்லாம் எண்ணவில்லை .இன்றளவும் சட்டக் கல்லூரியில் இந்து குடும்ப சட்டம் , கிறிஸ்த்தவ குடும்ப சட்டம் , இஸ்லாமிய குடும்ப சட்டம் என்று தான் கற்பிக்கப்படுகிறது . ஆங்கிலேயர்கள் கிறிஸ்தவர்களை மட்டுமே தங்கள் சட்டத்தின் கீழ் கொண்டு வர முயன்றார்கள் .அதிலும் சீர் திருத்த கிறிஸ்த்தவர்களை மட்டும் .இந்து சட்டம் , ஷரியத் ஆகியவற்றில் கை வைக்கவில்லை . ஆரம்ப கால நீதிமன்றங்களில் ஸ்ம்ருதி பூர்வ மீமாம்ச நியாயம் போன்றவற்றில் வல்லுனரான பண்டிதர்கள் ஆங்கில நீதிபதிகளுக்கு வழிகாட்டிகளாக செயல்பட்டு வந்தனர் .Native pundits என்ற ஒரு பதவி இருந்தது .இவர்கள் தான் நீதி நூல்கள் அடிப்படையில் நிர்ணயம் செய்வார்கள் .பிறகு codified law புழக்கத்தில் வந்த போது இந்த பதவி மறைந்தது .ஆனால் இவர்களும் இவர்களது வாரிசுகளும் மிகச் சிறந்த வக்கீல்களாக மாறினார்கள் .Transferable skills என்பதற்கு நல்ல உதாரணம் இது . ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மார்கண்டைய கட்ஜு மீமாம்சிக அடிப்படையில் சட்டங்களை புரிந்து கொள்ள முயல்வது குறித்த கட்டுரைகளை எழுதியுள்ளார் .மேற்கத்திய நிர்ணய முறைகளை விட இவை சிறந்தவை என்பது அவரது வாதம் .சில உதாரண வழக்குகளையும் முன்வைத்துள்ளார் .இன்றளவும் பாகப்பிரிவினை என்றால் மித்ராக்ஷ பள்ளி என்ன சொல்கிறது தயாபாக பள்ளி என்ன சொல்கிறது என்றே சிவில் சட்டங்கள் விளக்குகின்றன .

இ) எனில் ஆங்கில அரசின் சட்ட முறை வந்த பிறகு குற்ற வழக்குகள் அவற்றிற்கான தண்டனைகள் போன்றவை தரப்படுத்தப்பட்டதா என்றால் பெரிய அளவில் இல்லை என்றே தோன்றுகிறது .முன்னர் தங்கள் செல்வாக்கை மட்டும் முன் நிறுத்தியவர்கள் இப்போது தங்கள் செல்வத்தையும் முன் நிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்று எண்ணுகிறேன் .

ஈ) இந்த விவாதங்களின் வரலாற்றின் தொடர்ச்சியாக தான் இன்று முன் வைக்கப்படும் பொது சிவில் சட்டத்தை குறித்தும் பார்க்கிறேன் . முகநூலில் அறிமுகமான ஸ்ரீராம்தாஸ் மகாலிங்கம் என்னும் நண்பர் ஹிந்து மத கொள்கைகளின் அடிப்படையில் பொது சிவில் சட்டத்தை எதிர்க்கிறார் . அவர் சொல்வதில் நியாயம் இருப்பதாகத் தான் தோன்றுகிறது .தங்கள் வயதோ தங்கள் மனைவி வயதோ என்னவென்று தெரியாத ஆனால் இருபாலரும் விரும்பி மணம் முடித்து மகிழ்ச்சியாக வாழும் நேரத்தில் அப்பாவி கேரள ஆதிவாசி இளைஞர்கள் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள் .ஹிமாச்சல் பிரதேச பழங்குடி ஒன்றில் பல புருஷ மணம் இன்றும் உள்ளது .தாய் மாமனை திருமணம் செய்வது வடக்கில் ,கேரளத்தில் விலக்கப்பட்ட விஷயம் .ஆனால் தமிழகத்தில் தொன்று தொட்டு இருக்கிறது . மரண படுக்கையில் வாய் வார்தையாகவே தனது சொத்தை ஒரு இஸ்லாமியர் தானம் செய்யலாம் என்பதும் அதற்கு சட்ட அங்கீகாரம் உண்டு என்பதும் அவர்கள் நம்பிக்கை .இதை எல்லாம் பொது சிவில் சட்டம் எப்படி சமன் செய்யப்போகிறது? எப்படி செய்ய முடியும் ? தெரியவில்லை.

பி.கு: வழக்கு விசாரணை பாணி நூல்கள் என்பது 19 ஆம் நூற்றாண்டின் இறுதி , 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களில் மிகப் பிரபலமாக இருந்தது போலும் .மாத்வ சித்தாந்தத்தை வெகு ஜனங்கள் இடையே கொண்டு செல்ல பல மொழிகளில் வெளியிடப்பட்ட ஒரு பிரபல நூலின் பெயர் “சிவில் சூட் ” . வெவ்வேறு தத்துவ பள்ளிகளை சார்ந்தவர்கள் மேல் உலகில் நடத்தும் சிவில் வழக்கில் த்வைத தரப்பு வாதம் எப்படி வெல்கிறது என்ற பாணியில் இருக்கும் .

அனீஸ்கிருஷ்ணன் நாயர்

முந்தைய கட்டுரைதடம் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஃபாசிஸத்தின் காலம்