பகுதி ஒன்று : இருள்நகர் – 3
ஆழத்து நிலவறைகளில் இருந்து வெளிவந்த பின்னரும் கனகரின் விழிக்குள் அந்த இருள் இருந்துகொண்டிருந்தது. அவரால் ஒளியை நோக்கி திரும்ப முடியவில்லை. கண்கள் கூச இமைகள் துடித்து மூடிக்கொள்ள விழிநீர் வழிந்தது. அரண்மனையின் இருண்ட மூலைகளை நோக்கியே அவர் நோக்கு திரும்பியது. மூச்சில் நுழைந்த காற்று தெளிந்து மென்மையானதாக இருந்தது. அதுவரை உள்ளே சென்ற காற்று நெஞ்சுக்குள் கொண்டு படியவைத்த இருண்ட விழுக்கு கரைந்து கரைந்து அகல்வதுபோல் ஆறுதல் தோன்றியது. அரண்மனையெங்கும் செறிந்திருந்த அந்த இருள் எங்கிருந்து வந்தது? நெய்ச்சுடர்களை ஏற்றும்படி ஆணையிட்டாலென்ன? ஆனால் பகலில் ஏன் சுடரேற்றவேண்டும்? சுடர் என்பது ஒரு கொண்டாட்டம். ஒற்றைச்சுடர்கூட ஒரு வகை உவகையே. இங்கே சுடர்கள் அனைத்தும் ஒவ்வாமையை அளிக்கின்றன. வழிதவறி வந்தவைபோல் நின்று நெளிகின்றன.
அரண்மனையிலுள்ள பன்னிரண்டாயிரம் நெய்விளக்குகளையும் சுடர்பொருத்திப் பொலியவிடுவது விழவுகளின்போது மட்டுமே. பெருவேள்விகளின்போது மூவாயிரம் விளக்குகள். வெற்றித்திருமகளின் பூசனையின்போது ஆறாயிரம் விளக்குகள். ஆண்டுக்கொருமுறை வரும் அரசரின் முடிசூட்டுநாள் விழாவின்போது அனைத்து விளக்குகளும் என்பது முறைமை. அன்றிரவு அரண்மனை எரியெழுந்ததுபோல் மின்னும். நகரமெங்குமிருந்து மக்கள் அரண்மனை நோக்கி வந்து முற்றங்களையும் சுற்றுப்பாதைகளையும் நிரப்புவார்கள். பேரலைகள் சுருண்டு வந்து நுரைத்து அறையும் கடற்பாறைபோல் அரண்மனை நின்றிருக்கும். இசைக்கலங்கள் முழங்க களிகொண்ட யானை என அது பிளிறலோசை எழுப்பிக்கொண்டிருக்கும். பெரும்பறையின் தோல் விம்மி விம்மி அதிர்வதுபோல அதன் சுவர்கள் தோற்றமளிக்கும். மண்ணிலிருந்து எழுந்து வானில் மிதக்கத் தொடங்கிவிடும் என்பதுபோல.
அவர் நின்று அந்த இடைநாழியை நோக்கினார். அங்கே வந்ததே இல்லை என்று தோன்றியது. தூண்கள் இருள்விழுதுகள் என நின்றிருந்தன. அவற்றுக்கு நடுவே இருண்ட பாதைக்கு அப்பால் வெண்பட்டுத்திரை என திறந்திருந்தது மறுபுறத்து வாயில். ஏன் இந்த இருள்? அஸ்தினபுரியின் அரண்மனை ஆயிரத்தெட்டு சாளரங்கள் கொண்டது என்பது கணக்கு. எவரேனும் அதை எண்ணியிருக்கிறார்களா என அவர் ஏளனத்துடன் சொல்வது உண்டு. ஆனால் அத்தனை சாளரங்களையும் நாளும் திறந்து மூட ஏராளமான பணிப்பெண்களும் ஏவலர்களும் வேண்டும். அரண்மனையில் முன்பிருந்தவர்களில் பத்திலொருவர்கூட அப்போது இல்லை. சாளரங்களில் மிகச் சிலவே நாளும் திறக்கப்பட்டன. ஆகவே அறைகளுக்குள் காற்று வீசுவது குறைந்தது. இருளுக்குள் ஓசையில்லாமல் சிலந்திவலைகள் விரிந்தன.
ஏவலர் எவரையேனும் அழைத்து அனைத்து வாயில்களையும் திறக்க ஆணையிடவேண்டும் என அவர் எண்ணினார். அவருக்குப் பின்னால் செப்பேட்டுத் தொகையுடன் வந்துகொண்டிருந்த ஏவலனை நோக்கி திரும்பினார். அவன் ஆணை ஏற்க விழிகூர்ந்து முன்னால் வந்தான். அவர் அவனை தவிர்த்துவிட்டு திரும்பிக்கொண்டார். மீண்டும் நடந்தபோது எவரிடமென்றில்லாமல் சீற்றம் எழுந்தது. இந்த அரண்மனையில் ஒளி பெருகி பரந்திருந்தால், இக்குமிழ்களும் அத்திரைச்சீலைகளும் ஒளிகொள்ளுமென்றால், அந்தத் தூண்கள் வாழைத்தண்டுகளென மெருகடையும் என்றால் அது மாண்டவர்களுக்கு இழைக்கப்படும் சிறுமை. விண்ணில் வாழும் அரசருக்கு, அவர் உடன்பிறந்தாருக்கு, அவர் மைந்தர்த்திரளுக்கு, அவர்களின் ஆசிரியருக்கு… அவர் பெருமூச்சுவிட்டு மேலும் நடந்தார்.
காலடியில் எங்கோ ஆழத்தில் இருக்கும் நிலவறைகளை உணரமுடிந்தது. அந்த அதிர்வுகள் அங்கே இருள்மேல் சென்று பதிந்துகொண்டிருக்கின்றன. நீருக்குள் சென்று பதியும் ஓசைகளை அடிச்சேற்றில் மெல்லிய அலைவடிவுகளாகக் காணமுடியும் என்பார்கள். நிலவறைகளுக்குள் இருக்கும் செறிவிருள் அம்மாளிகையைத் தாங்கும் அடித்தளத்தின் நுண்வடிவ அடித்தளம். அதன் மீதுதான் அனைத்தும் கட்டி எழுப்பப்பட்டிருந்தன. ஒளியும் அழகுகளும் நுட்பங்களுமென பெருகிச் சூழ்ந்திருக்கும் அனைத்தும். அனைத்து எடையையும் தன்மேல் ஏற்றிக்கொண்டு அதை சற்றும் உணராமலிருக்கும் அளவிற்கு அவ்விருள் திணிவு கொண்டிருந்தது.
எடையின்மை கொண்ட திணிவு அது. திணிவு முழுமை அடைகையில் எடையின்மை மறைந்துவிடுகிறது போலும். எடை என்பது ஒன்று பிறிதொன்றை அழுத்துவது. ஒன்று எல்லைமீறி மண்ணை அழுத்துவது. தன்னைத் தான் அழுத்தி முற்றிலும் நிகர் விசை கொண்டுவிட்ட ஒன்று எடையிலி ஆகிவிடுகிறது. இருள் முற்றிலும் எடையற்றது. அனலுக்கு எடையுண்டு. காற்றுக்கும் நீருக்கும் எடையுண்டு. ஒளிக்கும் எடை இருக்கக்கூடும். இருள் மட்டுமே எடையற்றது. ஏனென்றால் அது இன்மை. இன்மை மட்டுமே முழுமை. ஏனென்றால் அது அனைத்துக் கோணத்திலும் இன்மையே. இன்மையெனும் இருப்பை உணர்ந்த முதல் மெய்யறிவன் எவன்?
இங்கே இருண்டிருக்கின்றன அனைத்தும். இருள் ஆமையென தன்னை முற்றிலும் உள்ளிழுத்துக்கொண்டு அவ்வண்ணமே முடிவிலி வரை அமையும் இயல்புகொண்டது. புவியைத் தாங்கும் திசையானைகள் இருண்டவை. அவை நின்றிருக்கும் ஆமை மேலும் இருண்டது. இருளின் வெவ்வேறு செறிவுகள் அவை. இருண்டவன் மாலவன். மாலென்பதே இருள். கனகர் மூச்சிரைத்தார். ஏவலன் அவர் அருகே வந்து நின்றான். அவர் அங்கே எங்கேனும் அமர விழைந்தார். பின்னர் மீண்டும் நடந்தார். இந்த அரண்மனை ஒளியில் சுருங்கி சிறிதாக இருந்தது. இருளில் எல்லைகள் கரைந்து விரிந்து பரவிவிட்டிருக்கிறது. அறிந்தவை சிறிதாகின்றன. அறியாதவை பெருகுகின்றன. அறியவொண்ணாதது முடிவிலியென்றாகிறது.
கனகர் அஸ்தினபுரியின் அரண்மனையிலிருந்து அகன்று செல்ல விழைந்தார். ஒவ்வொரு கணமும் மண்ணுக்கடியில் இருக்கும் முடிவிலா கரிய தேக்கத்திலிருந்து வெவ்வேறு துளைகளினூடாக ஊறிப் பெருகி அவ்வரண்மனையை நிறைத்துக்கொண்டிருந்தது இருள். தூண்கள் மூழ்கின. அறைகள் ஓசையிலாது நிரம்பின. கூரைக்குவைகளில் இருள் சுழித்தது. அங்குள்ள ஒவ்வொரு மானிடருக்கும் இருளில் நீந்தும் விழித்தெரியாத சிறகுகள் முளைத்தன. அவர்கள் இருளை மட்டுமே நோக்குபவர்கள் ஆயினர். இருளால் நோக்கு கொண்டனர். ஒளி துலக்கும் பொருட்களை நோக்குவது ஒழிந்து இருளால் சமைக்கப்படுவனவற்றை பார்க்கலாயினர். அவர்களின் ஓசைகள்கூட கரிய குமிழ்கள்போல அவற்றில் மிதந்து கிடந்தன.
இருள் வழியாக செல்கையில் தானும் இரு கைகளையும் வீசி இருளை உந்தி நீந்தி முன்னேறுவதாக அவருக்கு தோன்றியது. மூச்சிழுத்தபோது உள்ளே சென்று உடற்குகைக்குள் நிறைந்து செறிந்து அனைத்து உறுப்புகளையும் நிறைத்தது. சித்தத்திற்குள் புகுந்து அனைத்து சொற்களையும் கரியதாக்கியது. அனைத்து எண்ணங்களையும் இருளலையாக ஆக்கியது. அனைத்து நினைவுகளும் நிழலாட்டங்களாக மாறின. எதிரே வரும் ஒவ்வொருவரும் இருள் நிறைந்த விழிகள் கொண்டிருந்தார்கள். இருள் இருளை கண்டுகொண்டது. இருள் இருளுடன் உரையாடிக்கொண்டது.
நோயின் அணுக்கள் உடலுறுப்புக்குள் எங்கோ ஒளிந்திருப்பதாக நச்சு நீக்கும் மருத்துவர்கள் சொல்வதுண்டு. உடல் அமுதாலும் நஞ்சாலும் ஆனது. அமுது ஓங்கியிருக்கையில் நஞ்சு சுருங்கி ஒளிந்துகொள்கிறது. பேராற்றல் கொண்ட மல்லனின் உடலுக்குள்கூட தன்னை துளியென சுருட்டிக்கொண்டு அமைந்திருக்கிறது நஞ்சு. நஞ்சுக்கு தன்னை சுருட்டிக்கொள்ளும் ஆற்றல் உண்டு. மிகச் சிறிய இடத்தில் தன்னை முற்றொளித்துக்கொள்ள அதனால் இயலும். துயிலாதது அது. தன் வாலை தானே விழுங்கி இறுகி கரிய விதையென்றாகி, அணுவென்றாகி அசைவின்மை கொள்ள, அதனூடாக முடிவற்று காத்திருக்க அதனால் இயலும். அமுது நலிகையில் நஞ்சு முளைத்தெழுகிறது. ஆயிரம் தலைவிரித்து நாபறக்க விழியொளி கொள்கிறது.
நச்சிருள். முடிவிலாத செயல் பேருருக்கொண்டு எழுகிறது. இவையனைத்தையும் தாங்குவது நஞ்சு. விண்ணுருவன் பள்ளிகொண்டிருப்பது. அனல் விழியன் கழுத்தில் அணிந்தது. புரவியை ஈன்ற அன்னையின் அணிகலன். அத்தனை தேவர்களுக்கும் படைக்கலம். அவர் தன்முன் இருளின் நெளிவை கண்டார். உளம் அதிர்வு கொள்ள அசைவழிந்து நின்றார். அவருக்கு முன் தோன்றி தோன்றியதா என்ற ஐயத்தை உடனே எழுப்பி ஓர் இருள் நெளிவென அரண்மனை இடுக்கொன்றில் மறைந்தது கரிய நாகம் ஒன்று.
கனகர் தன் அரண்மனைக்கு வந்தபோது மெல்ல மெல்ல உளமடங்கிவிட்டிருந்தார். அமைச்சுநிலையில் அவருடைய சிற்றறையில் அவருடைய உடலின் வெம்மையும் வியர்வைமணமும் நிறைந்திருந்தது. அவருடைய உடலே ஓடென்றாகிவிட்டதுபோல. அதற்குள் கைகளையும் கால்களையும் தலையையும் இழுத்துக்கொண்டுவிடமுடியும். அவர் தன் பீடத்தில் அமர்ந்து கால்களை மேலே தூக்கி வைத்துக்கொண்டார். உடலைத் தளர்த்தி கண்களை மூடிக்கொண்டு மெல்லிய துயிலில் ஆழ்ந்தார். அவர் உள்ளம் கரைந்து கரைந்து எங்கோ சென்றுகொண்டிருந்தது. தலை தழைந்து உடல் நிலையழிந்தபோது அவர் விழித்துக்கொண்டார். சாளரம் வழியாக வந்து கிடந்த ஒளிக்கீற்றை வெறித்து நோக்கிக்கொண்டிருந்தார்.
ஏவலன் அவரை நோக்கியபடி அப்பால் நின்றிருந்தான். அவனிடம் வாய்கழுவ நீரும் உண்ண நீரன்னமும் கொண்டுவரும்படி ஆணையிட்டார். அவன் கொண்டுவந்த மரத்தாலத்தில் முகம் கழுவிக்கொண்டார். சுரைக்கொப்பரையில் நன்றாகக் கரைத்த நீரன்னம் இருந்தது. சற்றே புளித்தது. அவர் பல நாட்களாக அதை மட்டுமே உணவென அருந்திக்கொண்டிருந்தார். பசி என ஒன்றை உணர்ந்தே நெடுநாட்களாகிவிட்டிருந்தது. விடாயை பசியெனக்கொண்டு அதை அருந்திவிடமுடியும். எதையேனும் உண்ணும் பொருட்டு சென்று அமர்ந்தால் குமட்டல் கொண்டு வயிறு பொங்கி எழுந்தது. குடுவையை அளித்துவிட்டு அவர் மீண்டும் அமர்ந்து “சொல்லறிவர் வருக!” என்றார்.
சொல்லறிவர் ஸ்ரீபத்மன் வந்து வணங்கினார். அவர் அந்த செப்பேட்டுத்தொகையை சுட்டிக்காட்டினார். அவர் அதை எடுத்து இலச்சினைகளை நோக்கிவிட்டு “படித்துப்பார்க்கிறேன்” என்றார். கனகர் அவருடைய விழிகளை நோக்கிக்கொண்டிருந்தார். மண்மறைந்த மொழிகளில் வாழ்பவர். அங்கே இருளில் மறைந்திருக்கும் எழுத்துக்கள். இந்த ஏடுகளினூடாக அவை இவர் சித்தத்திற்குள் நுழையக்கூடுமா என்ன? ஸ்ரீபத்மன் மிகக் குறைவாகவே பேசுபவர். சொல்லறிவர்கள் அனைவருமே பேசும்திறன் அற்றவர்கள். பேச்சு என்பது நிகழ்மொழி. எழுத்து கடந்தமொழி. படிப்பதென்பதே எழுத்து என்னும் அடையாளங்கள் வழியாக சென்று மறைந்த மொழியொன்றை இன்றென மீட்டு நிகழ்த்தும் செயல்தான். இறந்தகாலம் மொழியினூடாக மீள் பிறப்பு கொள்கிறது.
ஒருகணம் அவர் அந்த விந்தையில் திகைப்பு கொண்டார். சென்று மறைந்ததை மீட்டெடுக்க மானுடருக்கு இருக்கும் ஒரே வழி எழுத்தைப் படிப்பது மட்டும்தான். இறந்தகாலம் நிகழ்காலத்திற்குள் ஊடுருவும் ஒரே பாதை. அவர் அச்சத்துடன் எழுந்துவிட்டார். அங்கே ஆழத்தில் உறையும் இருள் மேலெழுந்து வருவதற்கும் வேறு வழியே இல்லை. “என்ன?” என்றார் சொல்லறிவர். “ஒன்றுமில்லை, கொண்டுசெல்க!” என்றார் கனகர். அவர் தலையசைத்தார். செப்பேட்டுத்தொகையை அவர் தோல்பையில் போட்டபோது “ஸ்ரீபத்மரே” என கனகர் அழைத்தார். “சொல்க!” என்றார் ஸ்ரீபத்மன். “என்றேனும் இத்தகைய தொல்லெழுத்துக்களுடன் இணைந்து நாகங்கள் எழுந்துள்ளனவா?” என்றார் கனகர்.
“ஏன்?” என்று ஸ்ரீபத்மன் கேட்டார். “இல்லை, அறியும்பொருட்டே” என்றார் கனகர். “நாகம் இல்லாத தொன்மை என்பதே இல்லை” என்று ஸ்ரீபத்மன் சொன்னார். “நாங்கள் தொல்மொழிகளை படிக்கையில் எல்லாம் நாகங்களை நோக்குவதுண்டு. தொல்மொழியை பயில்வதற்கே இமையா விழிகள் தேவை என்பார்கள்.” கனகர் “ஆம்” என்றார். “எழுத்துக்கள் என்பவை நுண்ணிய நாகநெளிவுகளின் பல்லாயிரம் வடிவங்களே என்பது எங்கள் குடியின் தொல்கூற்று” என்றார் ஸ்ரீபத்மன். “வெறும்நெளிவென ஏடுகளிலும் சுவர்களிலும் தெரியும் எழுத்துக்கள் ஏதோ ஒரு கணத்தில் பொருள்கொள்கின்றன. அத்தருணத்தை நாகம் படமெடுக்கும் பொழுது என்றே எந்தை சொல்வார்.”
கனகர் தலையசைக்க ஸ்ரீபத்மன் வெளியே சென்றார். அவர் செல்வதை சற்றுநேரம் நோக்கிக்கொண்டிருந்த பின் கனகர் ஒற்றர்களை வரச்சொல்லி ஆணையிட்டார். முதல் ஒற்றன் நெடுந்தொலைவிலிருந்து வந்திருந்தான். அவரை முறைப்படி வணங்கி அமர்ந்தான். அவர் சொல்க என ஆணையிட்டு விழிகளை மூடிக்கொண்டார். “அமைச்சரே, குருக்ஷேத்ரத்திலிருந்து பாண்டவர்கள் அருகிலுள்ள தசவிருக்ஷம் என்னும் குறுங்காட்டில் ஒருங்கிணைந்திருக்கிறார்கள். அங்கே ஓடும் பிரபாவதி என்னும் சிற்றாறின் கரையில் அவர்கள் தங்கள் தங்குமிடங்களை அமைத்திருக்கிறார்கள். நேற்றுமுன்னாள்தான் அவை கட்டி முடிக்கப்பட்டன. நேற்று காலைதான் அவர்கள் அங்கே குடியேறினார்கள். அருகே உயர்ந்த மரத்தின்மேல் அவர்களின் மின்படைக்கொடி பறந்துகொண்டிருக்கிறது. வில்லேந்திய காவலர்கள் சூழ்ந்திருக்கும் மரங்களுக்குமேல் சிறுகுடில் கட்டி அமர்ந்து காவல்காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் போர்வெற்றி முழுதமைந்துவிட்டமையால் அஸ்தினபுரியின் ஒற்றர்களை அவர்கள் எதிரிகளாக காண்பதில்லை. ஆகவே அருகணைந்து நோக்கவும் உள்ளே நுழைந்து உசாவவும் இயன்றது.”
அவர்கள் தசவிருக்ஷம் நோக்கி செல்வதை கனகர் முன்பே அறிந்திருந்தார். “அவர்களின் படைகளில் எவரும் எஞ்சவில்லை. உபப்பிலாவ்யத்திலிருந்தும் இந்திரப்பிரஸ்தத்தில் இருந்தும் அவர்களை ஆதரிக்கும் குடிகள் கிளம்பி அவர்களுடன் சேர்ந்துகொள்ளும்படி ஓலை சென்றிருக்கிறது. ஒவ்வொருவராக வந்துசேர்ந்துகொண்டிருக்கிறார்கள். நாள்தோறும் புதியவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். சிறிதுசிறிதாக அவர்களின் எண்ணிக்கை மிகுந்துகொண்டிருக்கிறது. நான் சென்று நோக்குகையில் இருந்த குடில்களின் எண்ணிக்கை கிளம்புகையில் இருமடங்காக பெருகிவிட்டிருக்கிறது.”
“ஆம், அவர்கள் வென்றவர்கள்” என்று கனகர் முனகிக்கொண்டார். “அமைச்சரே, நான் அஸ்தினபுரியின் வணிகன் என்று சொல்லிக்கொண்டே உள்ளே சென்று நோக்கினேன். காட்டில் தொடர்ந்து மழைபொழிந்துகொண்டிருப்பதனால் பாண்டவர்கள் பெரும்பாலும் குடில்களுக்குள்ளேயே முடங்கியிருக்கிறார்கள். கடுந்துயரும் அவர்களை முடக்கியிருக்கக்கூடும். அரசர் யுதிஷ்டிரன் தனிக்குடிலில் நோயுற்று படுத்திருக்கிறார் என்று அறிந்தேன். அவருக்கு தொடர்ச்சியாக அகிபீனா அளிக்கப்பட்டு துயிலிலேயே வைக்கப்பட்டிருக்கிறார். விழித்தெழுகையில் உரக்க அலறி அழுகிறார். வலிப்பு வந்து துடிக்கிறார். இருமுறை பித்தர்போல் எழுந்து வெளியே ஓட முயன்றாராம். ஒருமுறை வாளை எடுத்து கழுத்தில் பாய்ச்சிக்கொள்ளப்போனார் என்றனர். ஆகவே அவருடன் எந்நேரமும் படைவீரர்கள் காவலிருக்கின்றனர்.”
“மைந்தர்துயர் அவர்களை எரியெனச் சூழ்ந்துள்ளது. இளைய பாண்டவர் பீமசேனர் மைந்தர் இறந்த செய்தியைக் கேட்டதும் அலறியபடி நினைவழிந்து விழுந்தார். பின்னர் விழித்துக்கொண்டு நெஞ்சில் வெறிகொண்டு அறைந்தபடி ஒருநாள் முழுக்க கதறி அழுதார். தன்னிலை மீண்டபின் இதுவரை ஒருசொல்லும் உரைக்கவில்லை. விழிநீர் வழிய தனித்து அமர்ந்திருக்கிறார். இறந்தவர்போல் வானை வெறித்தபடி மழையிலேயே படுத்திருக்கிறார். காட்டுக்குள் மரங்களில் முட்டி விழுந்து எழுந்தும் அடிமரங்களிலும் பாறைகளிலும் கைகளால் ஓங்கியறைந்தபடியும் அலைகிறார். அவரிடம் எவரும் பேசக்கூடவில்லை. அருகே எவர் சென்றாலும் மதம்கொண்டு முகம்மறந்த களிறு என தாக்கவருகிறார். உணவு உண்ணவில்லை. நீர் அருந்தவில்லை. இந்த ஏழு நாட்களுக்குள் அவர் உடல் பாதியாக குறைந்துவிட்டது. தசைகள் தளர்ந்து தோள்கள் ஒடுங்கி முகம் தொங்கி முதியவர்போல் ஆகிவிட்டிருக்கிறார்.”
“அங்கே சற்றேனும் தன்னிலையுடன் இருப்பது கடைப்பாண்டவரான சகதேவன் மட்டிலுமே. இணையரான நகுலன் சகதேவனிடமிருந்து தன் ஆற்றலை பெற்றுக்கொண்டவர் போலிருக்கிறார். ஆனால் அவர்களும் சொல்கொள்வதில்லை. உசாவப்படும்போது தலையசைத்தோ கையசைத்தோ சகதேவன் மட்டுமே அரச ஒப்புதலை அளிக்கிறார். அனைத்தையும் காவலர்தலைவனாகிய வீர்யவான் தானே எடுத்து செய்துகொண்டிருக்கிறான்” என்றான் ஒற்றன். “அஸ்தினபுரியிலிருந்து மீண்ட நகுலன் சகதேவனைக் கண்டதும் ஓடிச்சென்று தழுவிக்கொண்டார். இருவரும் சொல்லின்றி உடல்நடுங்கி அதிர மேலும் மேலும் அணைத்து இறுக்கிக்கொண்டு சுழன்றனர். பின்னர் விடுவித்துக்கொண்டு இரு எல்லைகளை நோக்கி சென்று தலைகுனிந்து நிலம்நோக்கி அமர்ந்து ஏங்கினர். அதன்பின் இன்றுவரை அவர்கள் பேசிக்கொள்ளவே இல்லை என்கிறார்கள்.”
கனகர் வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தார். ஒரே செய்தியே மீண்டும் மீண்டும் வந்துகொண்டிருப்பது போலிருந்தது. ஆனால் ஒவ்வொரு முறையும் அது நடுக்குறச் செய்தது. அவரே அங்கிருப்பதுபோல் உணர்ந்தார். “பேரரசி குந்தியும் பாஞ்சாலத்து அரசி திரௌபதியும் அவர்களுடன் உள்ளனர். பேரரசி குந்தியின் இடக்கையும் காலும் இழுத்துக்கொண்டுவிட்டன. அவர் முகம் கோணலாகி நாக்கு உள்ளே மடிந்துவிட்டது. விழிநீர் வழிய நினைவுகொண்டு முனகி அழுத ஒலியைக் கேட்டதுமே சேடியர் அகிபீனாவை அளிக்கிறார்கள். நான்கு மருத்துவர்கள் அவருக்கு சேவையளிக்கிறார்கள். உபப்பிலாவ்யத்திற்கோ அல்லது அருகிலுள்ள சிற்றூர்களில் எதற்கேனுமோ அவரை கொண்டுசென்று மருந்து அளிப்பதே நன்று என்று மருத்துவர் கூறினர். ஆனால் சாவுச்சடங்குகள் நிறைவடையாமல் இல்லம்திரும்புவது முறையல்ல என்று அந்தணர்கள் கூறிவிட்டனர்.”
“பாஞ்சாலத்து அரசி எவ்வண்ணம் இருக்கிறார்கள் என உசாவினேன். ஒவ்வொருவரும் ஒவ்வொன்று சொன்னார்கள். அரசி உளமழிந்து நிலைமறந்தவர் போலிருக்கிறார். அவரிடமிருந்த அனைத்து நிமிர்வும் அழகும் அகன்றுவிட்டிருக்கின்றன. முதுமை வந்து மூடிவிட்டது. சொல்லடங்கி விழிகள் வெறித்து தனித்திருக்கிறார். இதை ஒரு சேடிப்பெண் சொன்னாள். அதன்பின் இன்னொருத்தி அரசி நீர்நிறைந்த கலம் என எடையும் அமைதியும் கொண்டுவிட்டிருக்கிறார் என்றாள். இங்கே இல்லாதவராக அப்பாலிருந்து அனைத்தையும் நோக்குபவராக ஆகிவிட்டிருக்கிறார். மைந்தர்துயரை அவர் அறியவே இல்லை. நேற்று அங்கே வந்தபோது அருகிருந்த சிறுமரத்தில் எழுந்த தளிரிலைக்கொத்தை நெடுநேரம் நின்று நோக்கிக்கொண்டிருந்தார். முகம் மலர்ந்திருக்க மெல்ல பாடினார். அதைக் கேட்டு அருகே சென்றபோது திரும்பி நோக்கி புன்னகைத்தார் என்றாள் அச்சேடி.”
“அவருக்குள் மலைத்தெய்வம் ஏதோ குடியேறியிருக்கக் கூடும் என்று ஒரு முதிய சேடி சொன்னாள். நன்கு உண்கிறார். அது பசிக்கோ சுவைக்கோ உண்பது அல்ல, பள்ளம் ஒன்று நிரம்புவதுபோன்ற ஊண். காட்டுமலர்களைக் கொய்து குழல்சூடிக்கொள்கிறார். இரவில் எழுந்தமர்ந்து இனிப்புணவு வேண்டுமென்று கேட்டார். எழுந்து வெளியே சென்று இருளில் மழைபொழிவதை நோக்கியபடி நின்றார். பொழிநீரில் குழல்விரித்து கைவிரலால் அளைத்தபடி வான்நோக்கினார். அவர் தன் கொழுநர் ஐவரையுமே மறந்துவிட்டவர் போலிருக்கிறார். கேட்கக்கேட்க அவர் சொல்லும் ஒவ்வொன்றும் ஒவ்வொருவரைப் பற்றியதென்று தோன்றுகிறது. ஓருடலில் பலர் திகழ்வதுபோல. கணந்தோறும் புதியவராக எழுவதுபோல” என்றான் ஒற்றன்.
கனகர் “இளைய பாண்டவர் அர்ஜுனன் எங்கே இருக்கிறார்?” என்றார். “அவரும் இளைய யாதவரும் நான் செல்லும்போது அங்கே இல்லை. அவர்கள் தங்கள் உடன்பிறந்தவர்களுடன் அங்கே வந்தனர். உணவுண்ட பின் பார்த்தன் தன் வில்லுடன் காட்டுக்குள் புகுந்தார். உடன் இளைய யாதவரும் சென்றார். அவர்கள் அதன்பின் இரவிலேயே மீண்டுவந்தனர். காலையில் மீண்டும் சென்றுவிட்டனர். அவர்களை அங்கு சிலரே பார்த்திருக்கிறார்கள்” என்றான் ஒற்றன். “இளைய பாண்டவர் அர்ஜுனன் அங்கு நிகழ்வன எதையுமே அறியாதவர் போலிருக்கிறார். விந்தையான ஏதோ பித்து குடியேறிய விழிகள். தனக்குத்தானே பேசிக்கொள்வதுபோன்ற உதட்டசைவு. கைகள் எப்போதுமே அம்பும் வில்லும் கொண்டிருப்பது போலிருக்கின்றன என்றனர்.” கனகர் தலையசைக்க ஒற்றன் வணங்கி வெளியேறினான்.
அடுத்த ஒற்றன் பாஞ்சாலத்திற்கும் விராடநகரிக்கும் ஓலைகள் சென்றிருப்பதாகவும் அங்கிருந்து எஞ்சிய படைவீரர்களும் ஏவலர்களும் கிளம்பி தசவிருக்ஷம் நோக்கி வர ஆணை என்றும் சொன்னான். “இன்னும் ஐந்தாறு நாட்களில் அவர்கள் ஒரு சிறு நகர் அளவுக்கே விரிந்துவிடக்கூடும்.” கனகர் அதை எதிர்பார்த்திருக்கவில்லை. “அவர்கள் அங்கே நெடுநாட்கள் தங்கும் எண்ணம் உண்டா என்ன?” என்றார். “அவர்கள் முதன்மை வைதியர் தௌம்யரும் மாணவர்களும் வருவதற்காக காத்திருக்கிறார்கள். அதன் பின்னரே ஆவன குறித்து முடிவெடுக்கப்படும் என்று சொல்லக்கேட்டேன்” என்றான் ஒற்றன். “நான் அறிந்தவரை அவர்கள் ஒருமாதகாலம் நீண்டுசெல்லக்கூடிய ஈமச்சடங்குகளை முடித்து அனைத்திலிருந்தும் விடுபட்ட பின்னரே நகர்புகுவதற்கு முடிவெடுப்பார்கள். இன்றைய நிலையில் அவர்களால் எந்த விழவையும் இயற்ற முடியாது. எதிலும் உவகைகொள்ளவும் இயலாது.”
மூன்றாவது ஒற்றன் இந்திரப்பிரஸ்தத்தின் உளநிலை குறித்து சொன்னான். “அங்கே உவகையோ களியாட்டோ இல்லை. ஏனென்றால் அங்குள்ள அத்தனை இல்லங்களிலிருந்தும் மைந்தரோ தந்தையரோ கொழுநரோ மறைந்திருக்கிறார்கள். நகரம் அஸ்தினபுரியைப்போலவே இருள்மூடித்தான் கிடக்கிறது. ஒவ்வொருநாளும் வெற்றிமுரசு முழங்கியது. ஆனால் முரசுடன் இணைந்து எழவேண்டிய வெற்றிக்கூச்சல்கள் எழவில்லை. நகரம் வெறும்பாறையடுக்குகள்போல் அவ்வோசையை எதிரொலித்தது. அதை அம்மக்கள் கேட்டதுபோலவே தெரியவில்லை. அதன்பின் முரசொலிகளை நிறுத்திவிட்டார்கள்.”
“அங்கே அமைச்சர் சுரேசர் ஆட்சியை நடத்துகிறார். ஒவ்வொருநாளும் அவர் அரசவைகூட்டி வந்து அமர்கிறார். குறைகளும் கோரிக்கைகளுமாக எவரும் அங்கே செல்வதில்லை. குடியவை கூட்டியபோதும் ஒருவர்கூட சென்று அமரவில்லை. ஒழிந்த மாபெரும் அவைக்கூடத்தில் அமைச்சருக்குரிய பீடத்தில் அவர் மட்டும் தனித்து அமர்ந்து ஒற்றர்களின் செய்தியை கேட்டுக்கொண்டிருக்கிறார். சலிப்புற்றவராகவும் ஆகவே எரிச்சலுடன் பேசுபவராகவும் திகழ்கிறார்” என்றான் ஒற்றன்.
அடுத்த ஒற்றன் காட்டில் பரந்திருந்த உதிரிப்படைவீரர்கள் சிதறி சிறு குழுக்களாக தெற்கும் கிழக்கும் சென்றுகொண்டிருப்பதைப் பற்றி சொன்னான். “அவர்கள் செல்லச்செல்ல நாடோடிகளாக மாறிவிட்டிருக்கிறார்கள். அவர்கள் படைவீரர்கள் என அறிந்தால் மக்கள் அவர்களை தாக்குகிறார்கள். கூட்டம்விட்டு வந்த ஓநாய் கொடியது என அதற்கு கொள்கையும் கூறுகிறார்கள். பலநூறு படைவீரர்கள் இதற்குள் கொன்று புதைக்கப்பட்டுவிட்டனர். ஆகவே எஞ்சியவர்கள் தங்களை சூத்திரர்கள்போல் மாற்றிக்கொண்டுவிட்டார்கள். சூத்திரர் என காட்டும்படி நெற்றியிலும் தோளிலும் சூடுபோட்டு முத்திரைகளை பொறிக்கிறார்கள். பலர் தங்களை அடிமைகளாகவே விற்றுக்கொண்டுவிட்டார்கள். கிழிந்த உடைகளும் பசித்துமெலிந்த உடலுமாக ஊர்களை ஒழிந்து காடுகளினூடாக வழியறியாமல் சென்றுகொண்டே இருக்கிறார்கள். பசித்தும் களைத்தும் நோயுற்றும் வழியிலேயே பலர் செத்து விழுந்துகிடப்பதை கண்டேன்.”
கனகர் அவனிடம் “அஸ்வத்தாமனைப் பற்றியும் கிருபரைப் பற்றியும் ஏதேனும் செய்தி உண்டா? கிருதவர்மன் சததன்வாவின் குலம் நோக்கி சென்றுவிட்டதாகச் சொன்னார்களே, சான்றுகள் உண்டா?” என்றார். “கிருதவர்மன் யாதவக் குடிகளை நாடிச் சென்றிருப்பது உறுதி. ஆனால் சென்றடையவில்லை” என்று ஒற்றன் சொன்னான். “அவர்கள் அவரை காத்திருக்கிறார்கள். தங்கள் குடியை மீட்கும் பெருவீரன் என எண்ணுகிறார்கள். யாதவர்கள் நடுவே கிருதவர்மனைப் பற்றிய வீரப்பாடல்கள்தான் முழங்கிக்கொண்டிருக்கின்றன. அவர் தங்கள் ஊருக்கு வந்ததாகவும் தங்கி உண்டு கடந்துசென்றதாகவும் அத்தனை யாதவச்சிற்றூரிலும் சொல்கிறார்கள். அவர் தலைமையில் அந்தகர்களும் போஜர்களும் குக்குடர்களும் ஒன்றுகூடக்கூடும் என்கிறார்கள். விருஷ்ணிகளிலும் ஒருசாரார் அவருடன் இருக்கிறார்கள். அவர்கள் போரிட்டு துவாரகையை வெல்லவும் முயல வாய்ப்புண்டு.”
“ஆனால் அஸ்வத்தாமனைப்பற்றி எச்செய்தியும் இல்லை. அவர் ஏதோ பிலத்திற்குள் நுழைந்து மண்ணுக்குள் மறைந்துவிட்டதாக ஒரு கதை சொல்லப்படுகிறது. கங்கையின் சுழியினூடாக நாகருலகு சென்றார் என்றும் கேட்டேன். அவர் உத்தரபாஞ்சாலத்திற்கு மீளவில்லை. போர்வெற்றிச் செய்தி சென்றடைந்ததுமே தட்சிணபாஞ்சாலத்தினர் பெருந்திரளாக கிளம்பிச்சென்று உத்தரபாஞ்சாலத்தை கைப்பற்றிக்கொண்டார்கள். அங்குள்ளவர்களும் உடன்பிறந்தார் என இவர்களை வரவேற்று இணைந்துகொண்டனர். நீரோடு நீர் கலந்ததுபோல் இரு நாடுகளும் இணைந்தன என சூதர் பாடுவதைக் கேட்டேன். அங்குள்ளோர் அஸ்வத்தாமனை இழிவுசெய்தும் ஏளனம்செய்தும் பாடிக்கொண்டிருந்தனர். அவர் உருவங்களை முச்சந்தியில் இட்டு எரித்தனர். அவருடைய கொடிகளை மண்ணிலிட்டு இழுத்தனர். அவருடைய மாளிகை ஒன்றும் தீயிடப்பட்டது என அறிந்தேன்.”
“கிருபர் அஸ்வத்தாமனுடன் செல்லவில்லை என்றார்கள். அவர் தன் தந்தை சரத்வானின் குருநிலைக்கே சென்றிருக்கக் கூடும். அங்கே அவர் சென்றிருந்தார் என்றால் செய்தி இங்கே வருவதற்கு மேலும் பத்து நாட்களாகும்” என்று ஒற்றன் சொன்னான். கனகர் பெருமூச்சுடன் அவன் செல்லலாம் என கையசைத்தார். அவன் சற்றே தயங்கி “நான் இளைய யாதவரைப்பற்றி கேள்விப்பட்டேன்” என்றான். “சொல்” என்றார் கனகர். “அவர் அங்கே தசவிருக்ஷத்தில் பாண்டவர்களுடன் இருக்கிறார். அவரிடம் எத்துயரும் இல்லை என்றார்கள். காட்டில் ஆநிரை மேய்ப்பவர் போலிருக்கிறார் என்று முதிய வேடன் ஒருவன் சொன்னான். அவருடன் இளைய பாண்டவர் அர்ஜுனனும் கானாடுகிறார் என்றான். காட்டில் மலைப்பாறை ஒன்றின் மேலிருந்து இளைய யாதவர் குழலூதுவதை அவ்வேடன் கேட்டிருக்கிறான் என்றான்” என்றான் ஒற்றன்.
கனகர் வெறுமனே நோக்கிக்கொண்டிருக்க அவன் தொடர்ந்தான். “அவ்வேடன் என்னிடம் சொன்னான். காட்டில் நனைந்த இலைகள் ஒளிகொண்டிருப்பதைக் கண்டே அவன் அங்கே சென்றானாம். அருகணைந்தபோது அங்கே இளவெயில் விழுந்த நீர்நிலை ஒன்று இருப்பதுபோல் ஒளி தேங்கி மெல்ல அலையடித்துக்கொண்டிருந்தது. அவன் மேலும் அருகே சென்றபோது அக்காடே ஒளிர்ந்துகொண்டிருக்க நடுவே நீலச்சுடர்போல இளைய யாதவர் அமர்ந்து குழலூதுவதை கேட்டானாம்.”
“மழைச்சரடுகளுக்கும் துளியுதிர்வுகளுக்கும் ஊடாக அந்த இசை காட்டை நிறைத்ததைக் கேட்டு அவன் அஞ்சி திரும்பி ஓடிவந்துவிட்டான். அது பல்லாயிரம் உகிர்க்கைகளும் நஞ்சுவழியும் பற்களும்கொண்ட கொடிய தெய்வம்போல் தன்னை அச்சுறுத்தியது என்றான். அதைச் சொல்லும்போதும் அவன் நடுங்கினான். அதைக் கேட்டு நின்றிருந்த வீரர்கள் இருவர் அச்சத்துடன் கைகள் நடுங்க கால்கள் தளர அப்பால் சென்றனர். ஏனென்று அறியாமல் நானும் அஞ்சி உடல்நடுக்கு கொண்டேன். அதன்பின் அவர்களைப்பற்றி எதுவுமே கேட்கவில்லை.”
கனகர் அவனை நோக்கிக்கொண்டிருந்தார். அவன் முகத்தில் அப்போதும் அச்சம் நிறைந்திருந்தது. செல்க என அவர் கையசைக்க அவன் தலைவணங்கி அகன்றான். அவர் பெருமூச்சுவிட்டு உடலை எளிதாக்கிக்கொண்ட போதுதான் தானும் அஞ்சி மெய்ப்பு கொண்டிருப்பதை உணர்ந்தார்.