கல்,கல்வி

இனிய ஜெயமோகன் அவா்களுக்கு

அறிந்திருப்பீா்கள் என நினைக்கிறேன்.  பொள்ளாச்சி கோவை பிரதான சாலையில் அமைந்துள்ள குரும்பபாளையத்தில் 2300 ஆண்டுகள் பழமையான நெடுங்கல் திருப்பூாில் இயங்கிவரும் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் ஆய்வு மையத்தை சாா்ந்த நண்பா்கள் கண்டெடுத்துள்ளனா். ஏறத்தாழ 14 அடி உயரமும்,  கீழ்பகுதி 4 அடி அகலமும்,   முன்பாக உள்ள கல் வட்டம் 20 அடி சுற்றளவும் 55 செ. மீ உயரமும் கொண்டதாக காணப்படுகிறது. அதனுடைய எடை 10 முதல் 15 டன் இருக்ககூடும் எனவும் கருதப்படுகிறது.  மேலும் மக்கள் பயன்படுத்திய வண்ண பானை ஓடுகளும் காணக்கிடைக்கின்றன.

இந்த நெடுங்கல்  அங்கு வாழ்ந்த இனக்குழுவின் தலைவனின் நினைவாக ஏற்படுத்தியிருக்க கூடும் எனவும் கருதப்படுகிறது.  உடனே சென்று கண்டுவிடவேண்டும் என்று உளம் எழுந்தது,  இருப்பினும் ஆழ்ந்த புாிதல்களோ,  தொன்மங்களின் ஊடாக உரையாடும் பயிற்சியோ இல்லாத சூழலில் அது பயனற்றது என விட்டுவிட்டேன். அருகிலேயே இருப்பதால் விரைவில் சென்று கண்டுவிடவேண்டும்,  மேலும் அது நல்ல துவக்கமாக அமையும் என நம்புகிறேன்.

நன்றி,

ராஜன்

திருப்பூா்.

***

அன்புள்ள ராஜன்

அந்த நெடுங்கல்லை நீங்கள் சென்று பார்க்கலாம். அதைப்பற்றி ஆராயலாம். அதனூடாக பயணம் செய்யலாம். எளிமையான கேள்வி, அதனால் என்ன பயன்? நீங்கள் ஒரு தொல்லியல் நிபுணராக ஆக முடியுமா? அதில் சாதனை படைக்க முடியுமா? இதை உடனடியாக நம்மவர் கேட்பார்கள்

அதற்கான பதில் இதுவே. ஒருசூழலில் பயில்முறை ஆய்வாளர்களும் ஆர்வலர்களும் பெருவாரியாக ஒன்றில் ஈடுபடும்போதே ஒட்டுமொத்தமாகப் முக்கியமான சாதனைகள் உருவாகின்றன. ஒரு தேசமே கிரிக்கெட் விளையாடினால்தான் சச்சின் அல்லது டோனி உருவாகமுடியும்.

மேலைநாடுகளில் இத்தகைய ஆய்வுத்துறைகளில் பயில்முறையாளர்களின் பங்களிப்பு மிகுதி. பயில்முறையாளர்கள் மிகப்பெரிய வலையென விழுந்து மொத்த தேசத்தையுமே இடுக்குவிடாமல் ஆராயமுடியும். அது ஆய்வுகளுக்கு மிகப்பெரிய பின்புலமாக அமையும்.குடாப்பி கல்லோவியங்கள் பயில்முறையாளர்களால் கண்டடையப்பட்டவை

அதைவிட இத்தகைய ஓர் அறிவுத்தளத்தில் நாம் செயல்படும்போது நம் பார்வை மேம்படுகிறது. நமக்கு ஒட்டுமொத்தமாக வரலாறு, வாழ்க்கை சார்ந்து ஒரு பார்வைக்கோணம் திரள்கிறது. இல்லையேல் அன்றாட அரசியலின் வம்புகளிலேயே ஆழ்ந்து பத்தோடு நூறோடு ஒன்றாக ஆகிவிடுவோம்

வாழ்த்துக்கள்

ஜெ

***

வீரர்கள் நினைவாக நடப்பட்ட 2,300 ஆண்டுகள் பழமையான நெடுங்கல் கண்டெடுப்பு

நடுகற்கள் – வரலாறு டாட் காம்

 

முந்தைய கட்டுரைபகடியும் தமிழிலக்கியமும்- கடிதம்
அடுத்த கட்டுரைவிரலிடுக்கில் நழுவுவது