பாலா- வைகுண்டம் -பொருளியல்- விவாதம்

காந்தி – வைகுண்டம் – பாலா

திரு பாலா அவர்களின் நீண்ட பதிலில் மேட்டிமை வாதம், மனச்சாய்வு போன்ற சொற்கள் சற்று வருத்தமளிக்கின்றன.

மக்கள் நலத்திட்டங்களும், ஏன் இலவசங்களும், தவறு என்று நான் சொல்லவேயில்லையே. தொழில் வளர்ச்சி காணும் சமூகத்தில் மட்டுமே இவை சாத்தியம் என்ற என் கருத்தை சொன்னேன். தமிழ்நாட்டின் மக்கள் நலத்திட்டங்கள் டாஸ்மாக்கினாலும், திருப்பூர், ஓரகடத்தினாலும் சாத்தியம் ஆகின்றன என்கிறேன்.

இதையும் தீர்வாகச் சொல்லவில்லை. ஐயமாகவே .சொல்கிறேன். மாற்றுக்கருத்துக்கு தற்கால தரவு உண்டா என்றே கேட்கிறேன். பொருளாதாரத்தை மையப்படுத்தும்போதே உபரி சேர்கிறது. உபரி சேரும்போதே நலத்திட்டங்கள் உருவாகின்றன. ஆனால், காந்தியம் மையப்படுத்துதலை ஒவ்வாமையுடன் பார்க்கும் பொது இதில் அடிப்படை முரண் இல்லையா?

ஆகவே, இந்த முரணை விவாதிக்கும் தற்கால நூல்கள் உள்ளனவா என்று கேட்டேன். 5 ட்ரில்லியன் பொருளாதாரத்தை விவாதிக்கும் கட்டுரைகள் பல. சுற்றுச்சூழல் மாசை விவாதிக்கும் கட்டுரைகள் பல. மக்கள் நலத்திட்டங்களின் அவசியத்தை விளக்கும் கட்டுரைகள் பல. இவற்றை ஒரு சேர விவாதிக்கும் கட்டுரைகள் எனக்கு கிடைக்கவில்லை.

How much should a person consume? – Ramachandra Guha, படிக்க தொடங்கியிருக்கிறேன். வேறு நூல்கள்/ கட்டுரைகள் இருந்தால் சொல்லுங்கள். படித்துவிட்டு பின்னும் சந்தேகம் இருந்தால் கேட்கிறேன் . நன்றி.

வைகுண்டம்

மதுரை

***

திரு.பாலா மற்றும் வைகுண்டம் ஆகிய இருவரின் உரையாடல்களைக் கவனித்துக்கொண்டிருந்தேன். அதில் திரு பாலா அவர்களின் கடிதம் கொஞ்சம் ஏமாற்றம் அளித்தது. ஏனென்றால் வைகுண்டம் அவர்களின் கடிதத்தில் இருந்த கேள்விகள் எனக்குமுரியவை. இந்த காந்தியப்பார்வை, நுகர்வுக்கட்டுப்பாடு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, நவீன முதலாளித்துவ எதிர்ப்பு ஆகியவற்றின் நடைமுறைத்தன்மை பற்றிய கேள்விகள் அவை.

உண்மையில் இதெல்லாம் பேசுவது எளிது. ஒரு நவீன அரசின் தேவைகளுக்கு இந்தவகையான பொருளியல் உதவுமா என்ற சந்தேகம் நம்மைப் போன்றவர்களுக்கு எழும். டிராக்டர் சாணிபோடுமா என்று குமரப்பா கேட்டார் என்பார்கள். போடாது, ஆனால் வைக்கோலும் தின்னாது என்பதே பதில். ஒரு டிராக்டர் அளவுக்கு வேலைசெய்ய பத்து காளைகள் வேண்டும். பத்து மனிதர்கள் வேண்டும். இவர்கள் பயன்படுத்தும் ஆற்றலில் ஐந்திலொருபங்குகூட டிராக்டருக்குத்தேவையில்லை. டிராக்டர் ஆற்றலை மிச்சப்படுத்துவது. இது ஒருபார்வை.

ஆகவே இத்தகைய விவாதங்களில் மறுப்புகளும் சந்தேகங்களும் முக்கியமானவை. திரு பாலா அதை எதிர்கொண்ட விதம் ஏமாற்றம் அளிப்பது. அவர் ஐயம் தெரிவிப்பவர்களை எதிரிகளாக்கி, சுரண்டுபவர்களாகவே உருவகித்துக்கொள்கிறார். நம்முடன் சேராத அனைவரையும் எதிரியாக்கி வசைபாடுவதே விவாதம் என்ற மனநிலையை முகநூல் போன்றவை உருவாக்கிவிட்டன. வருத்தமான விஷயம்.

ஜி.திருவாசகம்

***

முந்தைய கட்டுரைஇந்துமத விவாதங்கள்
அடுத்த கட்டுரை16- 08-2019- கடிதங்கள்