சாதியென வகுத்தல்

அன்புள்ள ஜெமோ,

இது தனிப்பட்ட முறையிலான ஒரு கடிதம். பெயர் இல்லாமல் வெளியிட்டாலும் பிரச்சினை இல்லை. உங்களை பார்ப்பன அடிவருடி என்று பலர் சொல்வதைக் கவனித்திருக்கிறேன். நான் உங்களை தொடர்ந்து வாசித்து வருபவன். எனக்கு முதலில் அவ்வெண்ணம் இருந்தது. இப்போது அப்படி ஒரு சார்புநிலை எடுப்பவர் நீங்கள் என்று தோன்றவில்லை. ஆனால் பிராமணர்களைப் பற்றிய உங்கள் மதிப்பும் அதை நீங்கள் சொல்லிக்கொண்டே இருப்பதும் உண்மையாகவே எனக்கு ஆச்சரியம் அளிப்பவை.

நான் பிராமணர்கள் பலருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தவன். எந்த முன்முடிவுகளும் இல்லாமல்தான் அவர்களை அணுகினேன். ஆனால் அவர்களிடம் இருக்கும் தாங்கள் பிறப்பாலேயே மேம்பட்டவர்கள் என்ற எண்ணமும் எந்த திறமையும் இல்லாமலிருந்தால்கூட அறிவில் மேம்பட்டவர்கள் என்ற நினைப்பும் மதஆன்மீக விஷயங்களில் இயல்பாகவே ஞானத்துடன் பிறரை அங்கீகரிக்கவேண்டிய இடத்தில் இருக்கிறோம் என்ற உணர்வும் கசப்பை உருவாக்குபவை. பிறருடைய அறிவுத்திறத்தையும் ஆன்மிகத்தையும் அவர்களைப்போல எவருமே மட்டம் தட்டுவதில்லை. பிற அனைவருமே அறிவிலிகள் நாகரீகமற்றவர்கள் என்றுதான் அவர்களுக்கு குடும்பத்திலேயே கற்றுத்தரப்படுகிறது.

ஒரு பிராமணரல்லாதவர் பிராமணர்களுடன் நட்புடன் இருக்கவே முடியாது என்றுதான் என் அனுபவம் சொல்கிறது. மேலோட்டமான நட்பு இருக்கலாம். ஆனால் கொஞ்சம் உள்ளே சென்றால் நாம் புண்படுவது உறுதி. இணையத்திலேயேகூட வெட்கமே இல்லாமல் தங்கள் மேட்டிமைத்தனத்தைஎந்த அடிப்படை அறிவும் இல்லாமலேயேகூடவெளிப்படுத்தும் பிராமணர்களையே நாம் காண்கிறோம். இதைப்பற்றிய உங்கள் பதில் என்ன என்று அறிய விரும்புகிறேன்

எஸ்.

***

அன்புள்ள எஸ்,

இத்தகைய கருத்துக்கள் பொதுவாக சொந்த அனுபவங்களை பொதுமைப்படுத்தி அடையப்படுபவை. அப்படி பொதுமைப்படுத்தக் கூடாது என்று நான் சொல்லமாட்டேன். சொந்தவாழ்க்கையில் எவரும் புள்ளிவிவரங்களைக்கொண்டு புறவயமாக முடிவெடுப்பதில்லை. அனுபவம் சார்ந்தே முடிவெடுப்பார்கள். அவ்வண்ணம் முடிவெடுக்கையில் நமது முன்முடிவுகள், நமது பலவீனங்கள் அதில் எந்த பங்களிப்பை ஆற்றுகின்றன என்று நாம் பார்த்தாகவேண்டும். நம் பார்வைக்கோணம் என்ன என்பதை நாமே புறவயமாக வகுத்துக்கொள்ளவேண்டும்.

சாதிகள் எவையாயினும் இரண்டு முகங்கள் அவற்றுக்கு உண்டு. சாதிசார்ந்த தன்னிலை, சாதிசார்ந்த பெருமிதம். இரண்டுமே இளமைப்பருவதிலேயே வருபவை, குடும்பத்தால் அளிக்கப்படுபவை. சாதிசார்ந்த தன்னிலை ஒருவகையான பண்பாட்டு உருவகம் எனலாம். குடித்தெய்வங்கள், குடும்ப ஆசாரங்கள், பல்வேறு பழக்கவழக்கங்கள் ஆகியவற்றால் ஆனது. அவற்றை கைவிடுவது எளிதல்ல. கைவிட்டால் பலசமயம் பாரம்பரியமே இல்லாமலாகிவிடவும்கூடும். கைவிடுபவரின் தெரிவு அது. அதை எவரும் கட்டாயப்படுத்த முடியாது என்றே நினைக்கிறேன்

சாதிசார்ந்த பெருமிதமே மேட்டிமை உணர்வாக வெளிப்படுகிறது. பிறரை மட்டம்தட்டுவதாக ஆகிறது. ஆனால் அவ்வியல்பு இல்லாத சாதியினர் எவரேனும் இந்தியாவில் உண்டா என்ன? ஒவ்வொரு சாதியைப்பற்றியும் அதற்குக்கீழே இருக்கும் சாதியினரிடம் கேட்டால் ஒன்றையேதான் சொல்வார்கள்மேட்டிமைத்தனம், அதன் விளைவான ஏளனம்.தமிழகத்தில் எந்தச்சாதியைப் பற்றியும் அதற்குக்கீழே இருக்கும் சாதி பாராட்டுதலாக ஏதேனும் சொல்லி இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை.

தங்கள் சொந்த கல்வியறிவாலும், பண்பாட்டாலும் தங்களை மேம்படுத்திக் கொண்டவர்கள் அந்த வெற்றுப்பெருமிதங்களைக் கடந்திருப்பார்கள். ஆனால் எந்தச்சாதியிலும் அவர்கள் மிகமிகச் சிறிய எண்ணிக்கையில்தான் இருப்பார்கள். அவர்களிடம் அந்த வழக்கமான தோரணைகள் வெளிப்படாது. அந்த தோரணைகளை வெளிப்படுத்துபவர்கள் எந்தச்சாதியினரானாலும் வெற்றுவேட்டுக்கள். புறக்கணிப்புக்குரியவர்கள்.

நான் என் வரையில் சிறந்தவர்களைக் கொண்டே பொதுமைப்படுத்தும் முடிவுகளை எடுக்கவேண்டும் என நினைக்கிறேன். எனக்கும் பல கசப்பான அனுபவங்கள் உண்டு, அவற்றைக் கடந்துசென்றுவிடுவேன். நான் பெயர் சொல்லவிரும்பாத ஒருவர். அவர்மேல் பெருமதிப்பு கொண்டிருந்தேன். அதை பலமுறை எழுதியிருக்கிறேன். இத்தளத்திலேயேகூட. ஆனால் நான் சென்ற ஜூன் மாதம் தாக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது அவர் அதை மகிழ்ந்து கொண்டாடி ஆனந்தப்பட்டார். நான் கேஸை பலப்படுத்தும்பொருட்டு வேண்டுமென்றே பொய்யாக மருத்துவமனையில் இருப்பதாக அந்த இரவிலேயே டிவீட் போட்டார்.நையாண்டி செய்தார்.

அந்த டிவீட் இணையத்தில் பெருவாரியாகப் பரப்பப் பட்டது. நான் காவல் உயரதிகாரியைச் சந்திக்க சென்றபோது அவரே கூடஉங்களுக்கு மெய்யாகவே அடிபட்டதா?” என்று கேட்டார். அந்த டிவீட்டை அவரும் பார்த்திருந்தார். நான் அடிபட்ட தடங்களைஅவை மிக வலுவாகவே பதிந்து தெளிவாகத் தெரியும்படி இருந்தனகாட்டியபோது அதிர்ச்சி அடைந்தார். அந்த டிவீட் போட்டவர் பெரிய நிறுவனங்களில் மக்கள்தொடர்புப் பணியில் இருந்தவர். பலநூறுமுறை காவல்நிலையங்களுக்குச் சென்றவர். அந்த டிவீட்டின் பொருளும் விளைவும் அவருக்கு நன்கு தெரியும்

என் நண்பர்கள் அந்த டிவீட்டை அவர் தெரியாமல் போட்டிருக்கக் கூடும் என அழைத்தபோது அவர் செல்பேசியை எடுக்கவே இல்லை. அவருடைய நண்பர் ஒருவர் வழியாக இறுதியாக அவரிடம் மெய்யாகவே நான் மருத்துவமனையில் இருப்பதைச் சொன்னபின்னர் தனக்கு ஒன்றுமே தெரியாது, கேள்விப்பட்டதை இணையத்தில் போட்டேன் என்று கூறி அதை நீக்கினார். ஆனால் என் நண்பர் ஒருவர் அவருக்கு “You nailed him’ என ஒரு குறுஞ்செய்தி அனுப்பியபோது அதற்கு haha என மறுமொழி அளித்தார்.

பின்னர்தான் தெரிந்தது, அவர் சில ஆண்டுகளாகவே என்மேல் வஞ்சத்துடன் இருந்திருக்கிறார். சில சாதியக் குழுக்களில் என்னை கிண்டலும் கேலியும் செய்து எழுதியிருக்கிறார். அவருடைய நுட்பமான சாதிய எதிர்வினை அது. ஆனால் மிகமிக திறமையாக ஒரு இனிய நட்பார்ந்த முகத்தை தொடர்ந்து பல ஆண்டுகள் எனக்குக் காட்டியிருக்கிறார். தருணத்திற்காகக் காத்திருந்திருக்கிறார். மனிதர்களின் கீழ்மைக்கு அளவே இல்லை

மிக எளிதாக இதை பிராமணச் சாதியின் குணம் என பொதுமைப்படுத்திக்கொள்ள முடியும். பலர் அப்படித்தான் செய்வார்கள். ஆனால் நான் அச்சாதியின் முகமாக நினைப்பவர்கள் சுந்தர ராமசாமியும் வெங்கட் சாமிநாதனும்தான், இவர் அல்ல. சுந்தர ராமசாமி பிராமணத் தன்னிலையையும் கடந்தவர். அவருடைய பண்பாட்டுச்சூழல் பிராமணியம் சார்ந்தது, அவ்வளவுதான். வெங்கட் சாமிநாதன் பிராமணராக தன்னை உணர்பவர். ஆனால் மேட்டிமைத்தனம் கொண்டவர் அல்ல. அவர்களுடனான என் அனுபவங்கள் முற்றிலும் வேறானவை.எழுத்தாளர்களுக்காக நான் திரட்டிய எல்லா நிதியிலும் இயல்பிலேயே கஞ்சரான சுந்தர ராமசாமியின் பங்களிப்பே முதன்மையானதாக இருந்திருக்கிறது. உதவிபெற்றவர்களில் அவருடைய முதன்மை எதிரிகளும் உண்டு

சமீபத்தில் நண்பர்களுடன் வெங்கட் சாமிநாதனைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். நான் ஏழுமுறை வெவ்வேறு நண்பர்களுக்காக அவரிடம் உதவிகோரியிருக்கிறேன். ஒருமுறை ஒரு நண்பர் வேலையில்லாமல் கடும் வறுமையில் இருந்தபோது பெ.சு.மணி அவர்களின் மகள் திருமணவிழாவிற்கு வந்திருந்த வெங்கட் சாமிநாதனிடம் அவரை அறிமுகம் செய்துவைத்தேன். பெ.சு.மணி அந்த திருமணத்திற்கு என்னை அழைக்கவில்லை. சாமிநாதனை  ‘தற்செயலாகச்’ சந்திக்கும்பொருட்டே அங்கே சென்றோம். சாமிநாதன் முழுமூச்சாக இறங்கி அவருக்கு வேலைவாங்கி அளித்தார். அவர் வாழ்க்கையே மாறியது

சாமிநாதன் எந்த தோரணையும் இல்லாமல் சிபாரிசுகளுக்குச் செல்வார். முக்கியமானவர்களிடம் மன்றாடுவார், நச்சரிப்பார். “ஒருத்தன் நல்லா இருப்பான்னா இருக்கட்டுமே….பாப்பான் யாசகம் பண்ணலாம்னு இருக்கு” என்பார். நான் சொல்லி அவர் வேலை வாங்கித்தந்தவர்களில் எவருமே பிராமணர் அல்ல. அவர்களில் நால்வர் கடுமையான ‘பார்ப்பன எதிர்ப்பாளர்கள்’. அதுவும் அவருக்குத் தெரியும். அவர்கள் எவரும் இன்றுவரை ஒரு வார்த்தைகூட அவரைப்பற்றி நன்றியாகவோ பாராட்டாகவோ சொன்னதில்லை. அவருடைய உதவிகளால் மேலே வந்தவர்கள் மேலும் பலர்நான் அறிந்து இலக்கியச் சூழலில் உண்டு. அவர்களிலும் எவரும் பிராமணர்கள் அல்ல. அவர்கள் அவர் இறந்தபோது ஒரு அஞ்சலிக்குறிப்பு கூட எழுதவில்லை. .மேலே எங்கோ இருந்து சாமிநாதன் “சரிவிடு, இவனுங்க சொல்லித்தானா?” என்று சொல்லி சிரிப்பதாக எண்ணிக்கொள்வேன்.

எவரை நான் பொதுமைப்படுத்துவது? சாமிநாதனைக்கொண்டா, அவரிடம் உதவிபெற்றுக்கொண்டு அவரை இழிவுசெய்பவர்களைக்கொண்டா? நான் சாமிநாதனையே அந்தணரியல்பு கொண்டவர் என்று எடுத்துக்கொள்வேன். நீங்களல்ல எவர் என்னை பிராமண அடிவருடி என்றாலும் ”ஆமாடா போடா’ என்றுதான் மரியாதையாக பதில் சொல்வேன்.

முப்பதாண்டுக்காலமாக பிரமிள் சுந்தர ராமசாமியையும், சாமிநாதனையும் எழுத்தில் அவதூறுசெய்தார். பல அவதூறுகள் அனைத்து எல்லைகளையும் மீறியவை. குடும்பத்தையும் இழிவுசெய்பவை. பிரமிள் மகத்தான கவிஞர் என்று சொல்லும் ஒவ்வொரு முறையும் இயல்பிலேயே அற்பர் , உளச்சிக்கல்களால் இயக்கப்பட்டவர் என்பதையும் நான் சொல்லத்தவறியதில்லை- அவர் இருந்தபோதேகூட.. அவர் சகபடைப்பாளிகளைப் பற்றி எழுதியதில் அனேகமாக அத்தனை வரியும் பொய்யானது என நான் தனிப்பட்ட முறையில் அறிவேன். அதையும் எழுதியிருக்கிறேன். நேரில் சொல்லியுமிருக்கிறேன். என் முன் நேரில் சொல்லமுயன்றபோது கடுமையாக எச்சரித்துமிருக்கிறேன்.

பிரமிள் இலங்கைக்குடிமகன். சட்டவிரோதமாக இங்கே வாழ்ந்தவர். எந்த ஆவணமும் கையில் இல்லாதவர். வெங்கட் சாமிந்தான் இந்திய அரசின் பாதுகாப்புத்துறையில் முக்கியமான பதவி ஒன்றை வகித்தவர். ஒரு சொல்லில் பிரமிளை அவர் சிறைக்கு அனுப்பியிருக்கக்கூடும். அதை அவர் செய்யவில்லை. தன்னை தானே கடக்கமுடிபவரின் இயல்பு அது. அதைக்கொண்டே நான் அவரை மதிப்பிடுவேன்

பிரமிள் தன்னை பார்ப்பன எதிர்ப்புக் கொள்கையாளர் என்று சொல்லிக்கொண்டார். ஆனால் ஒருபோதும் சாதிய எதிர்ப்பாளர் அல்ல. மிகத்தெளிவான வேளாளச் சாதிவெறி கொண்டவர். இதை நான் தனிப்பட்ட முறையில் நன்கறிவேன். இது அவர் வாழ்ந்தபோதே அது விரிவாக அவருடைய அணுக்க மாணவர்களால் பதிவுசெய்யப்பட்டுள்ளது [அவருடைய மாணவர் ஒருவரின் குமுறலாக எழுதப்பட்ட விமர்சிக்கப்படாத கடவுள் என்னும் நீண்ட கட்டுரை நினைவுக்கு வருகிறது] பிரமிளைக்கொண்டு வேளாளர்களை மதிப்பிடுவேனா? மாட்டேன். உலகக்குடிமகனாகிய, மரபும் நவீனத்துவமும் பிசிறின்றி கலந்தவராகிய, பேரறிவும் பெருந்தன்மையும் கொண்ட மாமனிதராகிய ஜெயகாந்தனைக்கொண்டே மதிப்பிடுவேன்

உங்கள் பார்வை உங்கள் தெரிவு

ஜெ

***

முந்தைய கட்டுரைதிருச்சி இலக்கியம்- கடிதம்
அடுத்த கட்டுரைகடலூர் சீனுவின் கடிதங்கள்…