விரல்

இல்லாத மணிமுடி

விரல் என அசோகமித்திரன் ஒரு கதை எழுதியிருப்பார். ஜி.நாகராஜனைப் பற்றிய கதை என்பது பொதுவான நம்பிக்கை. எழுத்தாளனும் குடிகாரனுமாகிய நண்பன் விரலை கதவிடுக்கில் விட்டு நசுக்கிக்கொள்ல கதைசொல்லியான எழுத்தாளன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வான். “என் விரல்! என் விரல்!” என்று அந்த குடிகார எழுத்தாளன் போதையில் புலம்புவான். “இனிமேல் என்னால் எழுதவே முடியாது… இனிமேல் எழுதவே முடியாது” என்பான். அழைத்துச்செல்பவன் கசப்புடன் “எழுதித்தான் என்ன ஆகப்போகிறது?” என்பான்

அந்தக்கதையை நினைத்துக்கொள்ள ஒரு தருணம். சென்ற ஜூனில் நிகழ்ந்த அடிநிகழ்ச்சியில் இடதுகை விரலில் அடிபட்டது. அதைப்பற்றி ஒரு குறிப்பும் எழுதியிருந்தேன். தாளமுடியாத வலி ஏதும் இருக்கவில்லை. அசைத்தால் மட்டும்தான் வலி. ஆனால் அந்த விரல் அடிக்கடி அசைக்கப்படுவது அல்ல. வீக்கம் இருந்தது. அது தானாகச் சரியாகப்போய்விடும் என நினைத்தேன். தாடையைப்பற்றித்தான் கவலை இருந்தது. ஆகவே எந்த சிகிழ்ச்சையும் செய்யவில்லை.

ஆனால் விரல் அப்படியேதான் இருந்தது. வீக்கம் கொஞ்சம் குறைந்தது, மீண்டும் கூடியது. ரயிலில் மேல்படுக்கையை கையால் பற்றி ஏறினால் மீண்டும் வீக்கம். இருநாளில் சற்றே குறையும். நண்பர் ஷாகுல் ஹமீதுதான் அதன் வீக்கம் குறையாமலிருப்பது பற்றி சுட்டிக்காட்டிக்கொண்டே இருந்தார். ஆனால் எனக்கு ஒரு டாக்டரிடம் செல்வதுபோல சலிப்பூட்டும் விஷயம் ஒன்றில்லை. எவராவது கட்டாயப்படுத்தாமல் எந்த நோய்க்கும் நான் மருத்துவம் பார்த்துக்கொண்டதில்லை

ஷாகுல் அவரே ஆயுர்வேத எண்ணைகள் கொண்டுவந்து பூசிவிட்டார். அவர் ஒரு ஹீலர். அவருடைய பாரம்பரியத்திலேயே அந்த கூறு உண்டு. அதை நம்பிக்கை சார்ந்தது என்று சொல்லலாம். ஆனால் உண்மையிலேயே அது பயனளிப்பது. என் முதுகுவலி அவரால்தான் இல்லாமலாயிற்று. அது அவருடைய எதிர்மறைப்பண்புகளே இல்லாத ஆளுமையிலிருந்து எழும் ஒரு நம்பிக்கை என்பேன்.ஆனால் இந்த விரலை மருத்துவரிடம் காட்டியே ஆகவேண்டும் என்று ஷாகுல் சொல்லிவிட்டார். மூன்றுமாதங்கள் கடந்தும் வலியும் வீக்கமும் இருப்பது நல்லது அல்ல என்றார்.

ஆகவே நேற்று கோட்டாறிலுள்ள மாஞ்சாங்குடியிருப்பு வைத்தியரிடம் சென்று காட்டினோம். ஷாகுலின் பைக்கில் அவரே அழைத்துச்சென்றார். அது வர்ம- ஆயுர்வேத மருத்துவமனை. இப்பகுதியில் புகழ்பெற்ற ஒன்று. மருத்துவர் விரலைப்பிடித்து அழுத்தினார். நல்ல வலி இருந்தது. எக்ஸ்ரே எடுக்கச் சொன்னார். எக்ஸ்ரேயில் விரல்மூட்டு இறுகி சற்றே புடைத்திருந்தது. எலும்பில் அடிபட்டு அப்படியே ஒன்றுசேர்ந்துவிட்டிருக்கிறது. விரல் சற்று மேலெழுந்து வளைந்தது போலிருக்க அதுவே காரணம். சிலநாட்கள் மருந்துபோட்டால் சரியாகிவிடும் என்றார் மருத்துவர்

வீட்டுக்கு வந்தேன். மின்னஞ்சல் ஒன்று வந்திருந்தது. ‘அன்புள்ள ஜெமோ புளிச்சமாவில் இடியாப்பம் சுடமுடியுமா? சமையல்குறிப்பு அனுப்பமுடியுமா?” இப்படி நாளுக்கு நாலைந்து மின்னஞ்சல்கள் வந்துகொண்டிருந்தன. இப்போது கொஞ்சம் குறைந்துவிட்டாலும் அவ்வப்போது வருகின்றன. நேற்று ஒன்று “அன்புள்ள ஜெமோ, தாடையைச் செப்பனிடுவதற்கு சிறந்த வழி இன்னொரு புளிச்சமாவு என்று நண்பன் சொல்கிறான். உங்கள் கருத்து என்ன?”

இவற்றை எழுதி அனுப்புபவர்கள் இதை கேலி என எண்ணுகிறார்கள். இதைப்பார்த்ததும் நான் புண்பட்டு சுருண்டுவிடுவேன் அல்லது சீற்றம்கொண்டு கொதிப்பேன் என்று கற்பனை செய்துகொள்வார்கள் போல. நண்பர்களிடம் “அவனுக்கு ஒரு இமெயில் பண்ணியிருக்கேன் மாப்ள….இந்நேரம் செத்திருப்பான்” என்று சொல்லும் அந்த கள்ளமற்ற முகத்தை நினைவில் கொண்டுவருகையில் புன்னகைதான் வருகிறது.

உண்மையில் ஏதேனும் ஓர் எழுத்தாளரை ஓரிரு பக்கங்களேனும் வாசித்தவர்கள் இதை எழுதுவதில்லை. இவர்கள் பெயர் மட்டுமே தெரிந்துவைத்திருப்பவர்கள். இந்த கடிதங்களைக் கண்டு எழுத்தாளன் சோர்வோ சீற்றமோ அடைவான் என்று அதனால்தான் எண்ணுகிறார்கள். எந்த எழுத்தாளனும் இக்கடிதங்களை மெனெக்கெட்டு எழுதுபவர்களின் உளநிலையை ஊகித்து புரிந்துகொள்ள முடியுமா என்றுதான் பார்ப்பான். இவர்கள் யார், இவர்களின் பொதுவான பண்பாட்டுநிலை என்ன?

மிகப்பெரும்பாலும் மதக்காழ்ப்பையே காண்கிறேன்.பல மின்னஞ்சல்கள் போலியானவை. ஆனாலும் எளிதில் கண்டடையமுடியும். உள்ளூர் கிறிஸ்தவர்களே மிகுதி. ஒவ்வொருநாளும் வசைகளைப் பெறுபவன் என்பதனால் எனக்கு முதல் வரியிலேயே புரிந்துவிடும். அழித்துவிடுவேன். சிலசமயம் ஏதாவது குறும்புகள் செய்வேன். சிலசமயம் பரிதாபமாக இருக்கும்.

முன்பு விரல் பற்றி எழுதியபோது இரண்டுவாரத்தில் சரியாகிவிடும் என்றும் அதுவரை வெறுப்பாளர்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டிருந்தேன். அவர்கள் மேலும் ஒருமாதமாவது மகிழ்ச்சி அடையலாம். முக்கியமாக அவர்களுக்காகவே இதை எழுதுகிறேன் .அவர்களுக்கு என்ன இலக்கியமா கலையா, இப்படி ஏதாவது மகிழ்ச்சி வந்தால்தானே? ஏதோ ஒருவகையில் அவர்களும் நமக்கு வேண்டியவர்கள் அல்லவா?

ஆகவே விரல்குறித்த மின்னஞ்சல்களையும் மீம்களையும் எதிர்பார்க்கிறேன்.

***

மாயாவிலாசம்!

தாடை!

முந்தைய கட்டுரைசித்தார்த்தனும் தம்மமும்-சிவக்குமார் ஹரி
அடுத்த கட்டுரைஒருபோதும் விடைபெறாதே!