பகுதி ஒன்று : இருள்நகர் – 2
அஸ்தினபுரியின் அரண்மனை எரிபுகுந்து எழுந்ததுபோல் கருகி இருந்தது. அதன் தூண்கள் அனைத்தும் தொட்டால் கையில் கரி படியுமோ என நின்றிருந்தன. சுவர்கள் இருள்திரையென்று தொங்கின. நடக்கும் பாதையில் மரப்பலகையின் தேய்தடம்மேல் படிந்திருந்த சாளரத்து மெல்லொளியும் கூட இருளே நீர்மை கொண்டதென்று தோன்றியது. அரண்மனையின் இடைநாழிகளுக்குள் நடக்கையில் அதுவரை அறிந்திராத இடத்திற்கு வரும் பதற்றத்தை கனகர் உணர்ந்தார். மறுகணம் ஏதோ கொடிது நிகழவிருப்பதைப்போல. எவரோ ஓசையின்றி பின்தொடர்வதுபோல. இருளுக்குள் எவரோ பதுங்கியிருக்கிறார்கள். அல்லது இருளே பதுங்கிக் காத்திருக்கிறது.
அந்தத் தொன்மையான அரண்மனையின் பல பகுதிகள் புழக்கத்திலிருந்து விலகிவிட்டவை. அங்கே உள்ளறைகளுக்குள் இருள் நிறைந்திருப்பதை அவர் கண்டதுண்டு. அந்த அரண்மனைக்கு அடியில் ஹஸ்தி கட்டிய பழைய அரண்மனையின் பகுதிகள் உண்டு. அவற்றை தொல்கருவூலங்களாக பயன்படுத்தினர். குறுகிய மரப்படிகளினூடாக கீழிறங்கி இருண்ட ஆழத்திற்குள் மூழ்கி அங்கே சென்றுசேரவேண்டும். அங்கே அவர் அரிதாகவே சென்றிருக்கிறார். பெரும்பாலும் ஏதேனும் அரிய பூசைச்சடங்குக்காக அதற்குரிய பண்டைய அரும்பொருட்களை எடுக்கும் பொருட்டு அங்கே செல்லவேண்டியிருக்கும். அரிதாக ஏதேனும் ஆவணங்கள் தேவைப்படும்.
அந்தச் சிற்றறைகளுக்குள் வழிந்தோடி உறைந்து மையென்றாகியதுபோல் இருள் செறிந்திருப்பதை அவர் கண்டிருக்கிறார். முதல்முறையாக அத்தகைய சிற்றறை ஒன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த ஏதோ தீய காற்றால் கையிலிருந்த அகல்விளக்கின் நெய்ச்சுடர் அணைக்கப்பட சற்று பொழுது விழியில்லாது ஆகிவிட்டதைப்போல் உணர்ந்து பதைத்து அங்குமிங்கும் கைதவித்து சுவர்களிலும் பொருட்களிலும் முட்டிக்கொண்டார். உடன் வந்த துணைஅமைச்சர் சவிதர் “அசையாமல் அங்கு நில்லுங்கள், அமைச்சரே. நான் விளக்கு கொண்டுவரச் சொல்கிறேன்” என்று சொன்னார்.
அசையாமல் நின்றபோது இருள் எல்லாப் பக்கங்களிலுமிருந்து வந்து கவ்விப் பற்றிக்கொண்டதைப்போல தோன்றியது. இருளை கையால் தொட முடியுமென்றும் வழித்து எடுத்துவிட முடியுமென்றும் உளமயக்கு எழுந்தது. நெடும்பொழுதுக்குப் பின் தொலைவிலிருந்து அகல்மணிச் சுடரொன்று அணுகி வந்தது. அதற்குப் பின்னால் பேயுருக்கொண்டு காவலன் ஒருவன் அசைந்துகொண்டிருந்தான். அவன் அருகில் வந்த பிறகும் அச்சுடர் அங்கு நின்றுகொண்டிருப்பதுபோல் தோன்றியது. அவன் அருகணைந்து சுடரை அங்கிருந்த இன்னொரு விளக்கில் கொளுத்தினான். அது தயங்கி மெல்ல நெளிந்து எழுந்து நீண்ட போது அறை மீண்டும் பொருள் கொண்டது.
அங்கிருந்த ஒவ்வொரு பொருட்களையாக அவர் மாறி மாறி பார்த்தார். அவ்வனைத்தும் வேறாக உருமாறிவிட்டிருந்தனவா? இருளுக்குள் அவை பேருருவம் கொண்டெழுந்து, பின்னர் ஒளி வந்ததும் பழகிய பொய்வடிவம் சூடி அங்கு அமர்ந்திருக்கின்றவா? அங்கு பிடரியை சிலிர்ப்படையச் செய்யும் நோக்குணர்வு இருந்துகொண்டே இருந்தது. அவர் அமைச்சரிடம் “விளக்கை எவரோ அருகே வந்து ஊதியணைத்ததுபோல் தோன்றியது. இங்கு காற்றே இல்லை. எவ்வாறு விளக்கு அணைந்தது?” என்றார். சவிதர் “இந்த அறைகளுக்குள் நிலைக்காற்று உள்ளது என்கிறார்கள். உலவும் காற்று தெய்வங்களுக்குரியது. தேங்கிய காற்று கீழுலக இருப்புகளுக்கு ஊர்தி” என்றார்.
“இங்கே சில அறைகளில் நச்சுநீரென அது தேங்கியிருக்கும் என்கிறார்கள். முன்பு ஹஸ்தாஹாரம் என்னும் மேலும் ஆழத்து அறைக்குள் ஓர் ஏவலனை அனுப்பினேன். மாமன்னர் ஹஸ்தி அமைத்த நிலவறை அது. இருண்ட கிணறு போன்றது. ஆழத்தில் இருள் அலைகொண்டு மின்னுவது. பட்டுச்சரடாலான ஏணியினூடாக இறங்கிச்சென்ற அவன் எந்த ஒசையுமின்றி அந்த விழிதொடா நீரில் மூழ்கி மறைந்தான். அவன் கையில் கொண்டு சென்ற விளக்கு அணைந்தது. அவனைத் தூக்கும் பொருட்டு மேலும் நால்வர் இறங்கிச்சென்றனர். அவர்களும் இறந்த பின்னர் மேலும் நின்றவர்கள் அஞ்சி அகன்றுவிட்டனர். கொக்கிகளை வீசி எறிந்து அந்த உடல்களை மேலே எடுத்தோம். நீரில் மூழ்கி இறந்தவர்களின் வெறிப்பு கொண்டிருந்த முகங்கள்… அவற்றிலிருந்தே அவர்கள் கண்ட தெய்வங்களின் கொடிய உருவை அறிய முடிந்தது.”
அதற்குப் பின் அங்கே நின்றிருக்க இயலவில்லை. “ஆவணங்களை கொண்டுவருக!” என்று சொல்லிவிட்டு அவர் வெளியே சென்றார். நெடும்பொழுது உள்ளம் படபடத்துக்கொண்டிருந்தது. அங்கிருந்து மேலே வந்தபின் அந்த இடத்தை முற்றாகவே நினைவிலிருந்து அழித்துக்கொண்டார். அவ்வப்போது கனவில் மட்டும் அந்த இடத்தை கண்டுகொண்டிருந்தார். ஒவ்வொருமுறை கனவிலும் அவர் அங்கே நாகங்களையும் கண்டார். விழி மின்ன இருளுக்குள் அவை சுருண்டு அமர்ந்திருந்தன. இருளென்றே செதில்கள் அசைந்தன. ஆனால் அங்கே அவர் நாகங்களை கண்டதில்லை. இருளில் நாகங்கள் இருந்தே ஆகவேண்டும். அவற்றின் கண்களில் மட்டுமே அங்கு ஒளி இருக்கமுடியும்.
கனகர் படியிறங்கிச் சென்றபோது அங்கே கல்லால் ஆன இருண்ட சிற்றறையில் மேலே எங்கோ திறந்த சிறுசாளரம் வழியாக ஆடிகளில் பட்டுத்திரும்பி வந்த மங்கலான ஒளி ஓர் கிழிந்த ஆடைபோல் விழுந்துகிடந்த இடத்தில் சவிதர் அதே விழிகளுடன் அமர்ந்திருந்தார். அவர் தன்னை அறிவித்ததும் அவரிடம் சற்று முன்னர்தான் பேசி நிறுத்தியதுபோல சொல்லொழுக்கை தொடர்ந்தார். அவர் தன்னை அடையாளம் கண்டுகொண்டார் என்று கனகர் எண்ணினார். பின்னர் உணர்ந்தார், அவருக்கு எவரும் ஆள் அல்ல என்று. முகங்கள் ட பொருட்டல்ல. கண்களை அவர் பார்ப்பதே இல்லை. அவர் பிறரை தன் ஆடிப்பாவை அசைவெனவே பார்த்தார். நெடுநாள் புழுதிப்படலம் கலைந்து மீண்டும் அமைவது போன்றதே அவருடைய பேச்சு.
“செப்பு ஆவணங்கள் அறுபத்தெட்டு அறைகளிலாக உள்ளன. அறுநூற்றெண்பது பேழைகள். நீங்கள் கோருவது எந்த அரசரின் காலத்தைச் சேர்ந்தது என்று கூறுக! அரசச்செயல் சார்ந்த ஆவணங்கள் கருடமுத்திரை கொண்டவை. தெய்வச்சடங்குகள் என்றால் சந்திரசூரியர். குடிகள் குறித்த பதிவுகள் என்றால் அமுதகலம். அதற்குள் ஒவ்வொரு உள்ளடக்கத்திற்கும் தனியடையாளங்கள் உண்டு. அடையாளங்களை வெவ்வேறு வகையில் இணைத்து ஒற்றை அடையாளமாக ஆக்கியிருப்பார்கள். எவை என்று உரையுங்கள்…” என்றார். கனகர் அடையாளங்களை கூறியபோது சிற்றகலில் நெய்ச்சுடரை ஏற்றிக்கொண்டு அவர் கிளம்பினார். கனகர் உடனெழுந்தார். “நீங்கள் வரவேண்டும் என்பதில்லை” என்றார் சவிதர். ஆனால் கனகர் உடன்செல்ல விழைந்தார். அந்தப் பொழுதின் சோர்வை அச்செயல் கலைக்கும் என்பதுபோல. அத்தருணத்தில் எவரேனும் தன்னை இழிசொல் உரைத்தால், அறைந்தால்கூட மகிழ்ச்சியே உருவாகும் எனத் தோன்றியது. எதையேனும் வீசியெறிந்து இந்த அகந்திகழ் அசைவின்மையை கலைத்தேயாகவேண்டும்.
சவிதருடன் அவர் இருளிலிருந்து மேலும் இருளுக்கு என சென்றுகொண்டிருந்தார். தலைக்குமேல் காலம் ஒழுகிச்செல்வதை உணர முடிந்தது. அறைக்கதவுகள் இரும்புக்குமிழி வைத்த தடித்த மரத்தாலானவை. அவை மூடி இறுகி சுவர்களே என்றாகி நின்றிருந்தன. சவிதர் நோக்கி நோக்கி அடையாளங்களைத் தேர்ந்து ஒரு வாயில் முன் நின்று “இதுதான்” என்றார். இடையிலிருந்து தாழ்க்கோலை எடுத்து அறைக்கதவை திறந்தார். முனகலோசையுடன் வாயெனத் திறந்து இருளில் இறங்கிச்சென்ற சிறிய சுரங்கப்பாதை தெரிந்தது. இருளில் குத்தி நிறுத்தியதுபோல வெண்கலத்தாலான ஏணி ஆழ்ந்து சென்றது. அவர் தயங்க சவிதர் “வருக!” என உள்ளே இறங்கிச்சென்றார். அவர் தொடர்ந்தபோது குளிர்ந்த கற்சுவர்கள் மேலேறிச் சென்றன.
“இங்கிருந்த பெரும்பாறை ஒன்றின்மேல்தான் ஹஸ்தி தன் அரண்மனையை கட்டினார். பின்னர் சிற்பிகள் அந்தப் பாறையை குடைந்து குடைந்து கீழிறங்கிச்சென்று இந்த அறைகளை உருவாக்கினர். இவை முன்னர் அரசகுடியினர் இடர்ப்பொழுதுகளில் வந்து மறைந்துகொள்ளும் இடங்களாகவும் கருவூலங்களாகவும் வடிவமைக்கப்பட்டன. பின்னர் கருவூலங்கள் பெருக அறைகள் ஒன்றிலிருந்து ஒன்றெனத் தொடர்ந்து ஆழ்ந்திறங்கிச் சென்றன. இங்கே நாங்கள் அறிந்தவரை நூற்றெட்டு அறைகள் உள்ளன. பல அறைகள் ஒழிந்துகிடக்கின்றன. அறியாத மேலும் அறைகள் இருக்கவும் கூடும். கீழிருக்கும் அறைகளில் நீர் நிறைந்துள்ளது. எவ்வண்ணமோ ஊறிய நீர். ஏதோ யுகத்தின் நீர்.”
“இருளே குளிர்ந்து எடைகொண்டு நீரென்றாயிற்று என்கிறார்கள். இருக்கலாம். ஆனால் நச்சுநீர் அது. அதில் ஒரு துளி நம் உடலில் பட்டாலும் எரியும். நம் உடல் உருகத்தொடங்கும்… இருள் செறியுந்தோறும் இருளுலக தெய்வங்கள் இங்கே குடியேறலாயின. ஏனென்றால் அவை ஒளியை அஞ்சுபவை. ஒளியில் திகழும் காலத்தை வெறுப்பவை. இங்கே அவை இன்மைக்கு நிகரான இருப்பு கொண்டு உறங்குகின்றன. ஒவ்வொரு சிறுஒளியும் இங்கு அசைவுகளாகவே பெருகுகின்றது. அவை தெய்வங்களை எழுப்புகின்றன. எழுந்த தெய்வங்கள் உரிய பலி கொள்ளாமல் மீண்டும் அமைவதில்லை. ஆகவே கூடுமானவரை இந்த அறைகளை திறப்பதில்லை. ஒருமுறை ஓர் அறையை திறந்தால்கூட குருதிகொடுத்தே மீண்டும் மூடுவோம். அக்குருதியால் அத்தெய்வம் நிறைவுறாவிட்டால் மேலெழுந்து சென்று அரண்மனையில் பலிகொள்ளும். அவ்வப்போது அதுவும் நிகழ்வதுண்டு.”
சவிதர் விளக்கொளியால் கொண்டுசெல்பவர்போலச் சென்று அறைகளை திறந்தார். பேழைகளுக்கு நடுவே நிழலெனச் சென்றார். கனகர் கால் ஓய்ந்து அங்கிருந்த பெட்டிகளில் ஒன்றில் அமர முயன்றபோது “வேண்டாம், அமைச்சரே. இப்பெட்டிகள் அனைத்திலும் புழுதி படிந்துள்ளது” என்று சவிதர் சொன்னார். அப்புழுதியை விழிகளால் நோக்க இயலவில்லை. அவர் அறிந்த புழுதி மெல்லிய அலைகளாக படிந்திருப்பது. அது இருப்பது அறியாமல் சீரான வண்ணப் பூச்சாக மாறியிருந்தது. அவர் அந்தப் பெட்டிகளை கூர்ந்து நோக்கினார். அவை மரத்தாலும் இரும்பாலுமான பேழைகள். அனைத்தும் மண்ணாலானவை போலிருந்தன.
அவர் எண்ணத்தை அறிந்த அமைச்சர் “நீங்கள் கண்டது அலைவுறும் காற்றின் புழுதி, இது நிலைக்காற்று” என்றார். அவர் அப்போதுதான் சவிதரை கூர்ந்து நோக்கினார். அவர் பதறும் விழிகளும், சற்றே கூன் விழுந்த முதுகும், கன்னம் ஒட்டியமையால் எழுந்தமைந்த பற்களும் கொண்டிருந்தார். கனகரை விடவும் மூத்தவர். ஆனால் நெடுங்காலமாக கருவூலத்தின் சிற்றறைகளிலேயே பணிபுரிந்தார். எந்த அரசவிழவுகளிலும் அவரை நோக்கியதில்லை. சிற்றமைச்சர் அவைகளிலேயே பார்த்ததுபோல் நினைவிலெழவில்லை. ஒருவேளை அவர் இந்த ஆழத்திலேயே வாழ்கிறார் போலும். வெளிவராமலேயே இங்கே இருக்கமுடியுமா? முடியும், வெளியுலகை அறியாமலேயே இருக்கவேண்டும். இவர் உண்மையில் இருப்பவரா, அன்றி பேய்த்தோற்றமா? முன்பு கண்ட அவர்தானா இவர்? இவர்கள் அனைவருமே ஒற்றைமுகம் கொண்டுவிடுகிறார்களா என்ன?
கனகர் விரைந்து ஆவணங்களை எடுத்து அளிக்கும்படி அவரிடம் கையசைவால் சொன்னார். அவர் கனகர் கூறிய ஆவணத்தின் நிரைக்குறி எண்ணை உள்ளத்தில் மீண்டும் குறித்துக்கொண்டு ஒவ்வொரு பெட்டியாக விரல் சுட்டி எண்ணியபடி அகன்றார். தலையை ஆட்டியபடி “இங்குள்ள பெட்டிகள் அனைத்தின் மீதும் புழுதி படிந்துள்ளது. அவற்றை நான் தொடுவதில்லை. சில பெட்டிகளின் மீது கை புதையும் அளவுக்கு புழுதி உள்ளது. அப்புழுதி ஒரு காப்பு. அது திரையிட்டு இங்கிருக்கும் பொருட்களை மறைத்துள்ளது. அப்பொருட்களுடன் இணைந்துள்ள தெய்வங்களையும் அதுவே கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது. இங்குள்ளவை அனைத்தும் புதையல்கள். பூதங்களும் தெய்வங்களும் காவல் காக்காத புதையல்கள் இல்லை என்று அறிந்திருப்பீர்கள்” என்றார்.
அவர் நகைத்தபோது முற்றிலும் அது மானுட ஒலிபோல் தோன்றவில்லை. கன்னங்கள் குழிந்து உள்ளே போயிருக்க பிதுங்கிய சிறிய விழிகள் அலைமோதின. அவருடைய கையிலிருந்த விளக்கிலிருந்து முகம் மட்டும் இருளிலிருந்து எழுந்து தெரிந்தது. “இத்தகைய அறைகளுக்குள் இருக்கும் இருள் வேறு வகையானது. வானம் இருக்குமிடத்தில் உள்ள இருள் வேறு. அது ஒருவகை ஒளியேதான். ஏனென்றால் எந்நிலையிலும் அங்கே விழிகள் முற்றிலும் இல்லாமல் ஆவதில்லை. ஒவ்வொரு பொருளும் தன்னை தான் கண்டடையும் அளவுக்கு அங்கு வெளிச்சம் இருக்கும். இத்தகைய இருள் மண்ணுக்கு அடியிலுள்ள குகைகளிலும், அனைத்து வழிகளும் முற்றாக மூடப்பட்ட இதுபோன்ற நிலவறைகளிலும் மட்டுமே இயல்வது” என்றார் சவிதர்.
“இது இருளல்ல. இதற்கு வேறு சொல் உள்ளது” என்று அவர் தொடர்ந்தார். “மயர்வு, மயல், மருள்… சரியான சொல் செம்மொழியில் உள்ளது. அவர்கள் இதை தமஸ் என்கிறார்கள். தமஸ் என்றால் இருள் மட்டுமல்ல, செயலின்மையும்கூட. நிலைத்ததன்மையும் ஆகும். இருளென்பது மாறாமை. நிலைத்தன்மை. இன்மை. ஒன்றுபிறிதொன்றாகும் மயக்கவெளி” அவர் எவருடன் பேசுகிறார் எனத் தெரியவில்லை. இருளுக்குள் இருந்து என குரல் ஒலித்துக்கொண்டிருந்தது.
“நான் இங்கு பணிக்கு வந்தபோது எனக்கு பதினாறு அகவை. இந்த அறைகளில் பணிபுரிய அந்தணர்கள் விரும்புவதில்லை. இங்கு சில நாட்கள் பணிபுரிந்தால் அதன் பின் வேள்விக்கூடத்திற்குள் நுழைய இயலாதென்றும் அனலெழும் எரிகுளத்திற்கருகே அமரமுடியாதென்றும் சொல்வார்கள். ஆகவே இங்கு மிகக் குறைவாகவே அமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வழிவழியாக வருபவர்கள். இதன் காவலர்கள் கூட ஒருசில குடிகளில் இருந்தே மீண்டும் வருகிறார்கள். அவர்கள் இங்குள்ள தெய்வங்களால் ஆட்கொள்ளப்பட்டவர்கள். தெய்வங்களிடமிருந்து மானுடருக்கு மீட்பில்லை.”
“எந்தை இங்கு பணிபுரிந்தார். அவர் விழிகளில் இருள் நிறைந்திருக்க மறைந்தார். அவரை நான் நன்கு நினைவுறுகிறேன். முதுகு வளைந்த, தோல் வெளிறிய, பற்கள் உந்திய சிறிய மனிதர். ஆம், என்னைப் போலவே.” அவர் அனல் பற்றிக்கொள்ளும் மூச்சொலி எழுப்பி சிரித்தார். “அவர் இங்கே ஒரு காவலறைக்குள் இறந்து அமர்ந்திருந்தார். கையில் விளக்குடன் உள்ளே நுழைந்தவர் அந்த விளக்கு அணைந்து போனதும் அங்கேயே உயிரிழந்து மூலையொன்றில் அமர்ந்திருந்தார். இறந்து உலர்ந்து ஒட்டியிருக்கும் பல்லிபோல.” அவர் மீண்டும் நகைத்தார்.
“எப்போதும் அப்படித்தான் இருப்பார். இங்கே பெரிய அறைகூவலே காலம்தான். அது ஒழுகிக்கொண்டிருப்பது. அதை உணரும் உள்ளம் இங்கே அமைந்திருக்க முடியாது. காலத்தை உணர்பவன் இங்கே இருந்தால் பித்தனாவான். காலம் கரிய யானைபோல் துதிக்கையால் கால்களை சுழற்றிப்பிடித்து இழுக்கும் என்பார்கள். ஆகவே இங்கே அனைவருமே அகிபீனா உண்பார்கள். எங்களுக்கு தடையில்லாமல் அதை அளிக்கவேண்டும் என்பது நெறி. அது காலத்தை அழித்துவிடும். உள்ளத்தின் மேல் ஒரு கரிய பாறையைத் தூக்கி வைத்துவிடும். அவ்வப்போது அதன் விளிம்புகள் அலைகொள்ளுமே ஒழிய அசைவு நிகழாது. வைத்த இடத்தில் அவ்வண்ணமே அமைந்திருக்கும். இந்த எடைமிக்க பேழைகள் என நாமும் அமர்ந்திருக்கலாகும்.”
“மெல்ல மெல்ல புழுதி படியத் தொடங்கும். எண்ணங்கள் மேல் உணர்வுகள் மேல் நினைவுகள் மேல். மெய்யாகவே உடல் புழுதி வடிவமாக ஆகும். அதன்பின் இடர் இல்லை. இங்கே இருப்பது எளிது. இருப்பதும் இல்லாமலிருப்பதும் வேறுபாடில்லாமலாகும்போது இருப்பதைப்போல் எளிது பிறிதில்லை.” அவர் மீண்டும் சிரித்தார். அது சிரிப்பல்ல, வெறும் ஓசை என்று தோன்றியது. தேனீக்கூட்டில் கல்பட்டதுபோல் அந்தப் பேச்சு ஒரு கலைவு. அவர் விரைவிலேயே அடங்கி சொல்லின்மைக்குள் சென்றுவிடுவார். இச்சொற்கள் அனைத்தும் மீண்டும் சென்றமையும்பொருட்டே சுழன்று சுழன்று பறக்கின்றன.
“எந்தையை நான்கு நாட்கள் தேடினர். இங்கே உடல்கள் மட்கிய கெடுமணம் எழுவதில்லை. எழக்கூடும், இங்குள்ள பொதுமணத்தில் அதை தனித்தறிய இயலாது. இங்கே அனைத்துமே மட்கிக்கொண்டிருப்பவை” என்றார் சவிதர். “தற்செயலாக ஒரு அறை திறந்திருப்பதைக் கண்டு ஏவலர்கள் உள்ளே வந்து அவரை மீட்டனர். அப்போது அவர் உடல் வற்றிவிட்டிருந்தது. முகத்தில் விந்தையானதொரு இளிப்பும் கண்களில் ஒளியின்மையும் நிகழ்ந்திருந்தது. அந்தணராயினும் எங்களை எரிப்பதில்லை, அவரை புதைத்தனர். அந்த இளிப்பு அப்படியே மண்ணுள் மறைந்தது.”
“என் அன்னை அரண்மனைப்பணி தவிர வேறு எந்தப் பணிக்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்று சொன்னார். எனக்குக் கீழே ஏழு மைந்தர்கள். தந்தை கொண்டுவரும் ஊதியமன்றி வேறு வாழ்க்கைக்கு அடிப்படை ஏதுமில்லை. எந்தையும் என்னை அரண்மனைக்கு கொண்டுசெல்ல விரும்பவில்லை. என்னை அவர் வேதம் படிக்க அனுப்பினார். என் நினைவில் வேதம் எழவில்லை. எரிகுளத்தை நோக்கி அமர்ந்திருக்கையில் மேலிருந்து பொழிந்து அனலை கவ்விக் கவ்வி உண்ணும் இருளை மட்டுமே நான் பார்த்திருந்தேன். பதினாறாண்டு அகவையில் ஒரு சொல்கூட வேதம் சித்தத்தில் நிற்கவில்லை.”
“ஆகவே வேறு வழியில்லாமல் நான் இங்கு பணிக்கு வந்தேன். இங்கிருந்த மூத்த அமைச்சர் பிரகதர் என்னை அருகணைத்து தன் கையை என் தோளில் வைத்து சொன்னார். உன் தந்தையை எனக்குத் தெரியும். நீ இங்கு பணிக்கு வரமாட்டாய் என்று சொன்னார்கள். நான் அதை நம்பவில்லை. எவ்வண்ணமாயினும் நீ இங்கு வந்துவிடுவாய் என்றே எனக்கு உறுதியிருந்தது. மைந்தா, ஒளியின் ஊழியர்கள் போலவே இருளுக்கும் ஊழியர்கள் உண்டு. அவர்களைவிட நாம் மேலும் வல்லமை கொண்டவர்கள். ஏனெனில் நம்மை ஆள்வது பலமடங்கு ஆற்றல் கொண்டது. இங்கே இப்புள்ளியில் இருந்து கடுவெளியின் முடிவிலி வரை புடவியை நிறைத்திருப்பது இருளே. அந்தப் பெருவெளியில் உள்ள இருளையே இங்குள்ள அறைகள் தேக்கி வைத்திருக்கின்றன என்றார்.”
“இருள் ஒன்றே அது சென்று தொடும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு தெய்வமாக தான் வெளிப்படுவது. ஒவ்வொரு மூலைக்கும் ஒவ்வொரு வளைச்சுழிப்புக்கும் உரிய தெய்வத்தை அது தன்னிலிருந்து பிறப்பித்துக்கொள்கிறது. இங்கிருக்கும் தெய்வங்கள் முடிவற்றவை. நோக்க நோக்க பெருகுபவை. எண்ணங்கள் தொடும்தோறும் பேருருக் கொள்பவை. இருளை வணங்குபவன் அழிவிலாததும் எங்குமிருப்பதும் அனைத்திற்கும் அன்னையானதுமான ஒன்றை வணங்குகிறான். வெளியே அதை பராசக்தி என்கிறார்க்ள். மூன்று தெய்வங்களை ஈன்றவள் அவள். கைகளை விரித்து பெரும் உளஎழுச்சியுடன் அவர் கூவினார் சர்வ கல்விதமாமேகம் நான்யாஸ்தி சனாதனம்! அன்னை சொன்ன சொல்! சர்வ கல்விதமாமேகம் நான்யாஸ்தி சனாதனம்!”
“அவர் முகத்திலிருந்த களிப்பு பித்தர்களுக்கும் யோகியருக்கும் உரியது. கன்னங்கரியவள், இருளே உருவானவள், இன்மையை இருப்பெனக் கொண்டவள் என்று அவர் கூவினார். நான் அவரை நோக்கிக்கொண்டிருந்தேன். அக்கணம் முடிவுசெய்தேன், என் இடம் இது. இங்கன்றி வேறெங்கும் எனக்கு விடுதலை இல்லை.” அவர் குனிந்து அவர் விழிகளை பார்த்தார். “விடுதலை என்றால் என்ன? கட்டுப்படுத்துவனவற்றை கடந்து எய்தவேண்டியவற்றைச் சென்றடைவது அல்லவா? சிறையை ஒருவன் தன் அறுதிப் பரிசென அடைந்தால் அதுவே அவனுக்கு விடுதலை என்றாகும் அல்லவா?”
சவிதர் “என்னிடம் அவர் சொன்ன அந்தச் சொற்களை ஒவ்வொரு நாளும் தொட்டுத் துலக்கி வந்திருக்கிறேன். அந்த முதல் நுண்சொல்லை என்னுள் உரைக்காத நாழிகையே இல்லை” என்றார். கைகளை விரித்து “சர்வ கல்விதமாமேகம் நான்யாஸ்தி சனாதனம்! சர்வ கல்விதமாமேகம் நான்யாஸ்தி சனாதனம்!” என்று கூவினார். கனகர் அவரை விந்தையுணர்வுடன் நோக்க “அஞ்சவேண்டாம். நான் சித்தம் புரண்டவன் அல்ல. அகிபீனா என் சித்தத்தை நிலைநிறுத்துவதன்றி கலைப்பது அல்ல” என்றார்.
கனகர் எரிச்சலுடன் “பேச்சைக் குறைத்து அதை தேடித் தருக!” என்றார். “ஆம், தேடிக்கொண்டிருக்கிறேன். ஆனால் நான் பேசுவது மிக அரிது. நீங்கள் அறியமாட்டீர்கள், பத்தாண்டுகளில் இங்கே ஆவணம் கோரி வந்த ஏழாவது மானுடர் நீங்கள். இங்கு சில பணியாளர்களும் அமைச்சர்களும் இருப்பதை அப்போது மட்டும்தான் மேலிருக்கும் ஊழியர்களும் அமைச்சர்களும் உணர்கிறார்கள். எங்களைப் பார்த்து அவர்கள் திகைக்கிறார்கள். மண்ணில் விழுந்து மறந்துவிட்ட பொருளை எடுத்து நோக்குகையில் அடியில் புழுக்கள் நெளிந்து கொண்டிருப்பதை பார்ப்பதுபோல. அல்லது மண்ணுக்குள்ளிருந்து வேர்கள் வந்து அதை கவ்வியிருப்பதைக் கண்டு திகைப்பதுபோல. நான் எண்ணுவதுண்டு புழுக்கள் வேறு வகையான வேர்கள் என. வேர்கள் ஒருவகை புழுக்கள். நான் என்ன சொல்லிக்கொண்டிருந்தேன்?”
கனகர் அவரை பார்த்துக்கொண்டிருந்தார். “ஆம், இருள். இதை தமஸ் என்கிறார்கள். அச்சொல்லை எனக்கு பிரகதர் சொன்னதை நினைவுகூர்கிறேன். தமஸ் என்றால் தேக்கமும் கூடத்தான். தேங்கியிருப்பது இருள். எழுவது ஒளி. விசைகொள்வது, விரைவது, எரிவது, அணைவது, மீண்டும் எழுவது, நெளிவது, துவள்வது, புகைவது, வெடிப்பது, சுழல்வது, அலைகொள்வது, தாவிப்பற்றி ஏறுவது, தொற்றிக்கொள்வது, மின்னுவது, துடிப்பது, பரவுவது, குவிவது. ஒளி அனைத்தையும் நிகழ்த்துகிறது. இருள் எதையும் செய்வதில்லை. அது தேங்கி நின்றுகொண்டிருக்கிறது.”
ஏற்ற இறக்கமில்லாமல் ஏதோ தொன்மையான வழிபாட்டுச்சொல்லொழுக்கு என அவர் பேசிக்கொண்டே சென்றார். “இப்புடவி ஒரு மாபெரும் கலம். அதில் இருளை நிரப்பி வைத்திருக்கிறாள் பேராற்றல்வடிவினள். இல்லை, இருள் அதுவே ஒரு கலமாக தன்னைத்தானே தாங்கி புடவியென்று நின்றிருக்கிறது. அது நம்மிடம் கூறுகிறது சர்வ கல்விதமாமேகம் நான்யாஸ்தி சனாதனம்…” கனகர் மூச்சுத்திணறுவதுபோல் உணர்ந்தார். சொற்கள் மூச்சுத்திணறச் செய்யும் என அறிந்தார். “நன்று, நீங்கள் கோரியது இந்தப் பெட்டியில் உள்ளது” என்றார் சவிதர். “விரைவாக எடுங்கள். இங்கு நான் மிகைப்பொழுது நின்றிருக்க இயலாது” என்றார் கனகர்.
“ஆம்” என்றபின் அவர் அப்பெட்டியை கூர்ந்து நோக்கி கண்களை மூடி உதடுகளை அசைத்துக்கொண்டிருந்தார். பின்னர் பெருமூச்சுடன் கண் திறந்து கை தொழுது அந்தப் பெட்டியின் பூட்டுக்குள் தாழை நுழைத்து வெவ்வேறு வகையில் சுழற்றினார். “இதற்குரிய தாழ்க்கோலை கொண்டு வந்திருக்கிறீர்களா?” என்று கனகர் கேட்டார். “இங்குள்ள அனைத்துப் பெட்டிகளுக்கும் தாழ்க்கோல் ஒன்றே. இவற்றை ஆளும் தெய்வத்திற்குரிய நுண்சொல் உண்டு. ஒவ்வொரு பெட்டிக்கும் அது நுட்பமாக உருமாறுகிறது. அப்பெட்டியின் அளவிலிருந்தும் வடிவத்திலிருந்தும் அது வைக்கப்பட்டிருக்கும் இடத்திலிருந்தும் அக்கணக்கை நம் உள்ளத்திலிருந்து கறந்து எடுப்பதுபோல் திரட்டிக்கொள்ள வேண்டும். அதற்கேற்ப இத்தாழ்க்கோலைச் சுழற்றி பெட்டிகளை திறப்போம்” என்றார் சவிதர்.
பெட்டியை அவர் திறந்தபோது பிறிதொரு கெடுமணம் எழுந்தது. காட்டுப்பன்றி வாய்திறந்ததுபோல் வெம்மைகொண்ட ஆவியின் மணம். அதுவரை இருந்த கெடுமணமே இருளின் மணம் என்று எண்ணியிருந்தார். அது ஒரு மட்கிய உடல்களின், நெடுநாள் பழகிய புழுதியின், காறல் என மாறிய எண்ணெய்ப் பிசுக்கின், மயிர் எரிவதன் மணங்கள் கலந்தது. எண்ணும்தோறும் உருமாறிக்கொண்டிருப்பது என்றும் என்றுமென அங்கு நின்றிருப்பது என்றும் தோன்றுவது. அக்கெடுமணத்திற்குள் நீருக்குள் நீர் ஊறுவதுபோல அந்தப் புதிய கெடுமணம் கரந்து எழுந்து வந்தது.
“என்ன கெடுமணம் அது?” என்றார் கனகர். “இந்தப் பெட்டிக்குள் இருக்கும் மணம். இவ்வறைக்குள் இருக்கும் மணத்தைவிட மேலும் செறிவானது இது” என்றபின் உள்ளே குனிந்து செப்பேடுகளை தொட்டுத் தொட்டு நோக்கி மாந்தளிர்ச்சுருள்கள்போன்ற மெல்லிய செப்பேடுகளால் ஆன எடைமிக்க நூல் ஒன்றை எடுத்து விளக்கருகே கொண்டுவந்து அதன் முகப்பை கூர்ந்து நோக்கி “தாங்கள் கோரியது” என்றார் சவிதர். “மிகத் தொன்மையானது என எண்ணுகிறேன்… அக்காலத்து எழுத்துக்கள்…” கனகர் “அவற்றை படித்தறிவோர் உண்டு” என்றார். சவிதர் “ஆம், அறிவேன். இங்கே எங்களில் எவராலும் இங்குள்ள எவற்றையும் படிக்கமுடியாது. ஒரு சொல்கூட” என்றபின் நகைத்து “அறிந்துகொள்ள முடியாதவற்றையே முறையாக காவல் காக்க முடியும்” என்றார்.
கனகர் அருகே சென்று அதை பெற்றுக்கொண்டார். கூர்ந்து அதன் அடையாளங்களை மட்டும் நோக்கி “ஆம், இதுதான்” என்றார். சவிதர் “இது பலநூறாண்டுகள் தொன்மையானது என்று தோன்றுகிறது” என்றார். “ஆம், மாமன்னர் ஹஸ்தியின் மைந்தரான அஜமீடரின் மைந்தர் ருக்ஷரின் காலத்தையது. ஏற்கெனவே அவர் மைந்தர் சம்வரணரின் காலம் வரையிலான ஆவணங்களை நோக்கிவிட்டேன்” என்றார். “சென்ற நாலைந்து நாட்களாகவே ஆவணங்களைத்தான் துழாவிக்கொண்டிருக்கிறேன்.”
“இதை இங்கிருந்து எடுத்துச் செல்கையில் ஓர் முற்றமைதியை குலைக்கிறீர்கள் என்று எண்ணுக! இந்த இருளில் அனைத்தும் விதைவடிவில் கருநிலையில் உறைகின்றன. இங்கிருந்து துயில் கலைந்து அசைவுகொள்பவை மேலெழுந்து அங்கே நீங்கள் காணும் நகரும் வாழ்வும் மொழியும் எண்ணங்களும் ஆகின்றன. அசைவிழக்கையில் மீண்டும் எடைகொண்டு ஆழ்ந்து இங்கே வந்து படிகின்றன. அவ்வண்ணம் வந்தமைந்த ஒன்று இது…” கனகர் “ஆம்” என்றார்.