‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-2

பகுதி ஒன்று : இருள்நகர் – 1

அரசியே, கேள். முதற்பொருளாகிய விஷ்ணுவிலிருந்து படைப்பிறையாகிய பிரம்மனும் பிரம்மனிலிருந்து பிறவித் தொடராக முதற்றாதையர் மரீசியும், கஸ்யபனும், விவஸ்வானும், வைவஸ்வதமனுவும் பிறந்தனர். புவிமன்னர் குலத்தை உருவாக்கிய பிரஜாபதியாகிய வைவஸ்வதமனுவின் மைந்தர் இக்ஷுவாகு. வைவஸ்வதமனு தன் மெய்யறிவையே சிரத்தா என்னும் பெண்ணென எழச் செய்து அவளுடன் இணைந்து இக்ஷுவாகு, நிருகன், சர்யாதி, திஷ்டன், திருஷ்டன், கரூஷன், நரிஷ்யந்தன், நாபாகன், பிருத்ரன், கவி என்னும் பத்து மைந்தர்களை பெற்றார். மெய்மையின் நிழலான ஐயத்தை சாயை என்னும் பெண்ணாக்கி அவளைப் புணர்ந்து மனு, யமன், யமி, ரேவந்தன், சத்யும்னன், அஸ்வினிகுமாரர்கள் என்னும் மைந்தர்களுக்குத் தந்தையானார். இக்ஷுவாகுவிலிருந்து பிறந்தது இக்ஷுவாகு குலம் என்று அறிக! அவர்கள் சூரியகுலத்தவர் என்று அறியப்படுகிறார்கள். அவர்களின் புகழ் அழிவிலாதெழுக!

இக்ஷுவாகுவிலிருந்து தண்டன், விகுக்ஷி, நிமி என்னும் மூன்று அரசர்கள் பிறந்தனர். அவர்களில் விகுக்ஷியிலிருந்து சசாதனும் அவன் மைந்தனாக புரஞ்சயனும் பிறந்தனர். ககுல்ஸ்தன், அனேனஸ், பிருதூலாஸ்வன், பிரசேனஜித், யுவனாஸ்வன் என்னும் கொடிவழியில் மாமன்னன் மாந்தாதா பிறந்தார். அவருடைய மைந்தர்களே அம்பரீஷன், முசுகுந்தன், புருகத்ஸன் என்னும் அரசர்கள். புருகத்ஸனின் மைந்தன் திரிசதஸ்யு. அவனிலிருந்து அனரண்யன், அர்யஸ்வன், வசுமனஸ், சுதன்வா, த்ரைர்யாருணன் ஆகியோர் பிறந்தனர். அவன் மைந்தன் திரிசங்கு தனக்கென்று உலகைப் படைத்தவன். அவன் மைந்தனே மெய்யே வாழ்வென்று நிலைகொண்ட ஹரிச்சந்திரன். அவன் புகழ் வாழ்க!

ஹரிச்சந்திரனின் மைந்தன் லோகிதாஸ்வனிலிருந்து ஹரிதன், சுஞ்சு, சுதேவன், ஃபருகன், சகரன் என்னும் கொடிவழி நீட்சி உருவாகியது. அசமஞ்சஸின் மைந்தன் அம்சுமான். அவன் மைந்தனே கங்கையை மண்ணுக்குக் கொண்டுவந்தவனாகிய பகீரதன். அவன் புகழ் என்றும் நிலைகொள்க! வாழ்வோருக்கு அன்னமும் நீத்தோருக்கு நீரும் தெய்வங்களுக்கு ஊர்தியும் ஆகிய கங்கையை வணங்குக! மீன்குலங்களால் விழிகள் கொண்டவள். மூவிழியனின் சடையில் அமர்ந்தவள். குளிர்ந்த கைகளால் கற்களை சாளக்கிராமம் ஆக்குபவள். கனிந்தவள். கைபெருகி பாரதப்பெருநிலத்தை அணைப்பவள். அவளில் கரைக நம் கனவுகள்! நம் துயர்களும் ஏமாற்றங்களும் பழிகளும் அவளிலேயே அமைக! நம் உவகைகளும் களியாட்டுகளும் அவள் மடியிலேயே நிகழ்க! அவள் வாழ்க!

பகீரதனின் குருதியிலிருந்து சுருதநாபன், சிந்துத்வீபன், ஆயுதாயுஸ், ரிதுபர்ணன், சர்வகாமன், சுதாசன், மித்ரசகன், கன்மாஷபாதன் என குலச்சரடு நீண்டது. அஸ்மகன், மூலகன், கட்கவாங்கன், தீர்க்கபாகு என வளர்ந்தது. திலீபன் என அழைக்கப்பட்ட தீர்க்கபாகுவின் மைந்தனே ரகு. அவன் குருதியினரே ரகுகுலத்தோர். ரகுவின் மைந்தன் அஜன். அவன் மைந்தன் பத்து தேர்களில் தனித்தூரும் அரசனாகிய தசரதன். தசரதனின் மைந்தனாக எழுந்தவன் ராமன். ராகவராமன் திரேதாயுகத்தின் தலைவன். அவன் ஆண்டமையால் இந்த மண் அரசநெறி என்றால் என்னவென்று அறிந்தது. அது மானுடநெறியிலிருந்து எவ்வண்ணம் முரண்பட்டு உருக்கொண்டு எழும் என்பதைக் கண்டது. அரசநிலையே தவமென்றாகும் என்று கற்றது. வானுறையும் தெய்வங்களும் மண்ணில் வாழ வரலாகும் என அவன் பிறவி நிறுவியது. அவன் வாழ்க!

அரசியே, இக்ஷுவாகுவின் மூன்றாவது மைந்தன் நிமி. நிமியின் மைந்தனே மிதி. கௌதம முனிவரின் மாணவனாகிய நிமி வேதவேள்விகளில் ஈடுபட்டு தன் நாட்டையும் தன் மூதாதையர் வாழும் விண்ணுலகையும் செழிக்கச் செய்தான். அவருக்காக ஜயந்தபுரம் என்னும் வேள்விச்சிற்றூரை உருவாக்கி அளித்தான். வேள்வியால் தன் அகத்தைச் செழிப்புறச் செய்தான். அரசக்கொண்டாட்டங்களால் தன் உடலை நிறைவுறச் செய்தான். ஒன்று பிறிதொன்றை வளர்த்தது. ஒன்று பிறிதொன்றுக்குப் பொருள் அளித்தது. நல்லரசன் தந்தையெனக் கனிகிறான். தந்தையெனக் கனிபவன் நல்லரசன் என்றாகிறான்.

அந்நாளில் ஒருமுறை நிமி தன் அவைக்கு வந்த கௌதம முனிவரிடம் “ஆசிரியரே, ஓர் அரசன் இயற்றும் வேள்விகளில் முதன்மையானது எது?” என வினவினான். கௌதமர் “அரசே, தன் படைகள் வெல்லவேண்டும் என அரசன் இயற்றும் வேள்வி உயர்ந்தது” என்றார். அதைவிட உயர்ந்தது என்ன என்று நிமி கேட்டான். “தன் நாட்டில் வேதம் பொலியவேண்டி கருவூலம் முற்றொழிய அந்தணர்க்கு ஈந்து அரசன் ஆற்றும் வேள்வி” என்றார் கௌதமர். அதையும் கடந்தது என்ன என்றான் நிமி. “தன் குடிகள் செழிக்கவேண்டும் என்று அரசன் தன்னையே ஈந்து இயற்றும் வேள்வியே மேலும் சிறந்தது” என்றார் கௌதமர். அதைவிடவும் சிறந்த வேள்வி என்ன என்று நிமி கேட்டான். “தன் நிலத்தில் மழை ஒழியலாகாது என்று அரசன் தன் வேள்விநலன்களையும் அளித்து இயற்றும் வேள்வி” என்றார் கௌதமர். அதைவிடவும் மேலானது என்ன என்று நிமி கேட்டான். “தன் மூதாதையர் நிறைவடையவேண்டும் என அரசன் தன் மைந்தரையும் அளித்து ஆற்றும் வேள்வியே அதனினும் மேலானது” என்றார் கௌதமர்.

நிறைவுறாதவனாக “முனிவரே, அதைக்காட்டிலும் மேலான வேள்வி எது?” என்றான் நிமி. “தன் கொடிவழியினர் அழிவின்மை கொள்ளவேண்டும் என அரசன் இயற்றும் வேள்வியே அனைத்தைவிடவும் மேலானது. அதற்கப்பால் ஒரு வேள்வி இல்லை. வெற்றி, வேதச்சிறப்பு, குடிப்பெருக்கம், மழைநிறைவு, மூதாதையர் மகிழ்வு என்னும் ஐந்து நலன்களையும் இவ்வேள்வியே அளித்துவிடும்” என்றார் கௌதமர். “ஐந்து வேள்விகளை நான் சொன்னபோதும் உன்னுள் இருந்து நிறைவுறாது பொங்கியது தந்தையென்னும் பெருநிலை. பெருந்தந்தை என்றாகுக! பேரரசன் என உன்னை அமைப்பது தெய்வங்களின் கடன்” என்று கௌதமர் சொன்னார்.

அவ்வண்ணம் ஒரு வேள்வியை நிகழ்த்த நிமி முடிவுசெய்தான். வேள்விக்குரிய பொருட்கள் அனைத்தும் வரவழைக்கப்பட்டன. அவை பாரதவர்ஷத்தின் எட்டு திசைகளில் இருந்தும் கொண்டுவரப்பட்டன. கௌதமர், பிருகு, அங்கிரஸ், வாமதேவர், புலகர், புலஸ்த்யர், ருசீகர் என்னும் ஏழு மாமுனிவர்களும் வேள்வியில் அமர ஒப்புக்கொண்டனர். வேள்வித்தலைமைகொள்ள முதல் வைதிகரும் தன் குலகுருவுமான வசிட்டரை சென்று பணிந்து அழைத்தான் நிமி. ஆனால் அப்போது வசிட்டர் இந்திரன் ஒருங்கமைத்துக்கொண்டிருந்த மாபெரும் வேள்வி ஒன்றை நிகழ்த்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்தார். தன்னால் நிமியின் வேள்விக்கு வர முடியாது என அறிவித்தார். பலமுறை பணிந்து கோரியும் வசிட்டர் சொல்மீற முடியாதென்று உரைத்தார்.

குறித்த நாளில் வேள்வி தொடங்கவில்லை என்றால் தீங்கு விளையக்கூடும் என்று நிமித்திகர் கூறியமையால் கௌதமர் தலைமையில் முனிவர் அறுவரைக் கொண்டே நிமி வேள்வியை முடித்தான். மைந்தர் பெருகவும், கொடிவழிகள் சிறப்புறவும் தேவர்கள் வந்து சொல்லளித்தனர். வேள்விநலன் பெற்று நாடு செழிக்க உளம் நிறைந்து நிமி அமர்ந்திருந்த நாட்களில் விண்ணிலிருந்து வசிட்டர் மீண்டுவந்தார். அரண்மனைக்கு வந்த அவர் அரசன் நிமியை சந்திக்க விழைந்தார். ஆனால் வேள்விநிறைவில் கேளிக்கைகளில் ஈடுபட்டிருந்த அரசன் அப்போது பகல்பொழுதில் துயில் கொண்டிருந்தான். அவனை எழுப்பத் தயங்கிய காவலர் வசிட்டரின் வரவை அறிவிக்கவில்லை. சினம்கொண்ட வசிட்டர் நிமியை நோக்கி தீச்சொல் ஏவினார். “கோலேந்தி அவையமர வேண்டிய பொழுதில் துயிலும் நீ உன்னால் பேணிப் பெருகவைக்கப்பட்ட அவ்வுடலை உதறுக! இப்போதே நீ உடலிலி ஆகுக!” என்றார்.

அவருடைய சொல் நிகழ்ந்ததுமே நிமியின் உடலில் இருந்து ஆத்மா கற்பூரத்தில் இருந்து நறுமணம் என பிரிந்து எழுந்தது. அவன் உடல் அங்கேயே கிடந்தது. வாழ்க்கை முடிவடையாமல் உடல்நீத்த அவன் ஆத்மா கடுவெளியில் நின்று தவித்தது. உடலிழந்ததுமே அது மூச்சுலகை அடைந்தது. அங்கே மூதாதையரின் தெய்வநிலையை அடைந்தது. “உயிர்பறிக்கும் உரிமை யமனுக்கு உரியது. ஏனென்றால் வாழ்க்கையின் பொருள் அறிந்தவன் அவன் மட்டுமே. மாமுனிவராக இருந்தாலும் நீங்கள் இவ்வண்ணம் உயிரகற்றியது உங்களுக்கு வாழ்வென்றால் என்னவென்று தெரிந்திருக்கவில்லை என்பதன் சான்று. நெடுநாட்கள் பயின்ற நோன்பாலும் ஊழ்கத்தாலும் நீங்கள் வாழ்க்கையை மறந்துவிட்டீர்கள். நோன்பும் ஊழ்கமும் வாழ்க்கையை அறிந்து கடத்தலின்பொருட்டே. மெய்மையும் வீடுபேறும் வாழ்க்கையை பொருள்கொள்ளச் செய்வன மட்டுமே. பெண்ணென்றும் ஆணென்றும் மைந்தன் என்றும் மகளிரென்றும் நின்று வாழ்க்கையை உணரும் ஓர் எளிய மானுடன் ஒவ்வொரு தவமுனிவனுக்குள்ளும் குடிகொண்டாகவேண்டும். இல்லையேல் அவன் பிறரை உணராதவனாவான். பிறர்மேல் அளியற்றவனாவான்” என்றான் நிமி.

“ஆசிரியரே, உங்களுக்கும் மூதாதையென நின்று இதை சொல்கிறேன். நீங்கள் இழந்ததை அடைந்து எழுக! எளியோனாக பிறந்து எய்தி மீள்க… இதுவே என் தீச்சொல்” என்று நிமி சொன்னான். வசிட்டர் அக்கணமே உடல்நீத்து மறுபிறப்பு கொண்டார். ஆதித்யர்களாகிய மித்ரனுக்கும் வருணனுக்கும் மைந்தனாக ஒரு குடத்திலிருந்து எழுந்தார். கமண்டலத்தில் பிறந்த அகத்தியரின் இளையோன் என அவர் அறியப்பட்டார். அங்கே அவர் அருந்ததியை மணந்து தவம்செய்து மெய்மையை மீண்டும் வந்தடைந்தார். கடலில் இருந்து கிளம்பி மலைமேல் பொழிந்து ஊறி நதியென ஒழுகி மீண்டும் கடலை அடைந்து நீர் என்று ஆனார்.

அரசன் மறைய நாடு மைந்தரில்லாமல் ஆகியதை அறிந்த அந்தணர்கள் முனிவர்களிடம் சென்று செய்வதென்ன என்று வினவினர். கௌதமர் “நீடுவாழும் கொடிவழியை அரசனுக்கு அளித்துள்ளனர் தேவர்கள். அச்சொல் அழியாது. அவர்களே அதற்குப் பொறுப்பு. அவர் உடலை வேள்விச்சாலைக்கு கொண்டுசெல்க! அவ்வுடலில் இருந்து மைந்தன் எழுந்தாகவேண்டும்” என்றார். அந்தணர் நிமியின் உடலை வேள்விச்சாலைக்கு கொண்டுசென்றனர். வேள்வியில் அமர்ந்த முனிவராகிய பிருகு “பால் கடையப்பட்டு வெண்ணை எழுகிறது. கடல் கடையப்பட்டு அமுதும் நஞ்சும் பிறந்தன. வான் கடையப்பட்டு எழுந்தவை சூரியனும் சந்திரனும் விண்மீன்களும் என்கின்றன நூல்கள். புடவியும் காலமும் மெய்யுணர்வால் கடையப்பட்டதன் விளைவாகத் திரண்டதே பிரம்மம் என்னும் அறிதல். அறிக, மைந்தர் பெற்றோரின் உடலில் எழும் அமுது! இவ்வுடலை நாம் கடைவோம். இவனிலிருந்து எழுக இவன் குடித்தொடர்!” என்றார்.

அவர்கள் அவ்வுடலை அனலுக்கு அளித்தனர்.  ஆடையென்பது அரையுடல். அணியென்பது அவ்வுடலின் ஒளி. உடல் உண்ட அன்னம் என்பதே அவ்வுடலின் முதல்வடிவம். ஆகவே அரசன் விரும்பி உண்ட உணவால் அவன் வடிவை அமைத்தனர். அதை அவன் அணிந்திருந்த ஆடைகளாலும் அணிகளாலும் அழகுசெய்தபோது அவன் அங்கே கிடப்பதாகவே உணர்ந்தனர். அவனைச் சூழ்ந்தமர்ந்திருந்த சூதர் அவனுடைய வெற்றியையும் கொடையையும் அளியையும் அன்பையும் அழகையும் புகழ்ந்து பாடப்பாட அவன் முகம் மலர்ந்தது. விழிகளில் உயிர் சுடர்ந்தது.

அந்தணர் வேதம் முழக்கியபடி அந்த உடலை மென்மையாகக் கடைந்தனர். அவ்வுடலில் இடத்தொடை அதிர்ந்தது. அதை பிளந்துகொண்டு ஒரு மைந்தன் எழுந்தான். மதனத்தால் ஜனித்த அவனை மிதி ஜனகன் என அவர்கள் அழைத்தனர். உடலிலியின் மைந்தன் என்பதனால் விதேகன் என்றனர். விதேகன் ஆட்சிசெய்த நிலம் விதேகம் என்றும், மிதி அமைத்த அதன் தலைநகர் மிதிலை என்றும் பெயர்கொண்டது. ஜனகர்களின் நிரையில் அரசமுனிவர் தோன்றினர். அருகமர்ந்து சொல்தேர்ந்து மெய்மை உரைத்தனர். அவர்களின் குருதியில் புவிமகள் என சீதை பிறந்து ராகவராமனை மணந்தாள். தன் தூய கால்களால் பாரதவர்ஷத்தை நடந்தே பொலிவுறச் செய்தாள். பேரன்னையை வணங்குவோம். அவள் புகழ் கணம்தோறும் பெருகி எழுக!

 

“கோசலனாகிய பிருஹத்பலனை வாழ்த்துக! இக்ஷுவாகு குடியில் பிரசேனஜித்தின் மைந்தனாகப் பிறந்து குருக்ஷேத்ரப் போர்க்களத்தில் நின்றுபொருதி மாண்ட நிமியின் குருதிம்ரபினனை வாழ்த்துக! விண்ணில் அவன் நிறைவுறுக! மண்ணில் அவன் புகழ் செறிவுறுக! ஆம், அவ்வாறே ஆகுக!” என்று பாணன் பாடினான். அவன் முன் காந்தாரியும் பிற அரசியரும் பானுமதியும் அமர்ந்திருந்தனர். தென்னகத்துச் சூதன் கருகிய சுள்ளிபோல் மெலிந்த சிற்றுடல் கொண்டிருந்தான். அவனுடன் அவன் நிழலென்றே தோன்றிய விறலி வெண்சிப்பிகள் என அகன்ற விழிகள் கொண்டிருந்தாள். அன்று காலை அவன் அரண்மனை முற்றத்தில் வந்து நின்று “புகழ்பாடி பரிசில் பெறவந்த பாணன் நான்… வாயில்கள் எனக்காகத் திறக்கட்டும்!” என்றான்.

அரண்மனையே அக்குரல் கேட்டு திகைத்தது. நெடுங்காலமாக அங்கே பாணரும் புலவரும் அணுகவில்லை என்பதைப்போல் அவர்கள் உணர்ந்தனர். அவனை என்ன செய்வது என்று தெரியாமல் காவல்பெண்டிர் தயங்கினர். முதிய செவிலி “இங்கே எவரும் பாடலுக்கு செவியளிக்கும் நிலையில் இல்லை… அவனை எளிய பரிசில் அளித்து அனுப்பிவையுங்கள்” என்றாள். இளைய அந்தணராகிய சிற்றமைச்சர் ஸ்ரீமுகன் பொன்நாணயத்துடன் சென்று பாணனை வணங்கி “கொள்க, பாணரே. இவ்வரண்மனை இறப்பின் துயரால் இருள்மூடியுள்ளது என அறிந்திருப்பீர்கள். இங்கே சொல்கொள்ளும் உள்ளங்கள் இன்றில்லை… இதை பெறுக! ஊட்டுபுரையில் உண்டு தங்கி மீள்க! என்றேனும் இங்கு மங்கலம் திகழ்கையில் வருக!” என்றார்.

தன் கையை பின்னிழுத்துக்கொண்டு பாணன் சொன்னான் “நான் இரவலன் அல்ல, பாணன். இங்கு வரும்வழியெங்கும் எனக்கு உணவிட இல்லறத்தோர் இருந்தனர். என் சொல்கொள்ள எவருமில்லை. சொல்லுக்கு பொருள்கொள்வேனே ஒழிய எவருடைய அளியையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். நானும் என் விறலியும் உணவுண்டு பன்னிரு நாட்களாகின்றன. இங்கு பசித்து மடிவதற்கும் எங்களுக்குத் தயக்கமில்லை.” ஸ்ரீமுகன் என்ன செய்வதென்று அறியாமல் முதிய செவிலியை நோக்க மேலே உப்பரிகையில் வந்து நின்ற ஏவற்பெண்டு “முழவொலி கேட்டு பேரரசி உசாவினார்கள். பரிசில்கொள்ள வந்த பாணனா என்று அறியவந்தேன்” என்றாள். “ஆம், சொல்லுக்கு ஈடாக மட்டுமே பொருள்கொள்ளும் தென்னிலத்துப் பாணன் என்று கூறுக!” என்றான் பாணன்.

சென்று திரும்பிவந்த ஏவற்பெண்டு “அரசி அவரை அகத்தளத்திற்கு அழைத்துச்செல்லும்படி ஆணையிட்டார்கள்” என்றாள். பாணன் தலைவணங்கி தன் யாழுடனும் முழவுடனும் உள்ளே வந்து படிகளில் ஏறினான். முதிய செவிலி “இவர் போர்ப்பரணிகள் பாடப்போகிறார். அதுவன்றி இவர்களிடம் பாடுபொருள் வேறில்லை” என்றாள். ஸ்ரீமுகன் “போரைப்பற்றியா?” என்றார். “ஆம், ஆனால் போர் என்னும் சொல்லைக் கேட்டாலே இந்த அரண்மனை சருகுக்குவை என சரிந்துவிடும் போலுள்ளது” என்றாள் செவிலி. “நாம் என்ன செய்ய இயலும்? அவர்கள் காற்றுபோல. நம்மை அவர்கள் பொருட்படுத்துவதில்லை. நமக்கு புழுங்குவதும் நடுங்குவதும் காற்றுக்குத் தெரிவதேயில்லை” என்றார்.

அகத்தளத்தில் காந்தாரிமுன் அமர்ந்த பாணன் அவள் கோராமலேயே பாடத்தொடங்கினான். “சூரியகுலத்தின் பெருமையை பாடித் திரியும் பாணன் நான். எழுகதிர் பெருமையை, வீழ்கதிர் சிறப்பை, அழியாக்கதிர் ஒளியை பாடுபவன்” என்றான். காந்தாரி மறுமொழி சொல்லவில்லை. அவள் சொல்லெடுத்தே நெடுநாட்களாகிவிட்டிருந்ததுபோல் தோன்றியது. பளிங்காலான சிலை என அவள் பீடத்தில் அமர்ந்திருந்தாள். சிறிய வெண்ணிற விரல்கள் கோத்து மடியில் வைக்கப்பட்டிருந்தன. உதடுகள் இறுகி ஒட்டி செந்நிறப் புண் என தெரிந்தன.

“குருக்ஷேத்ரப் போர்க்களத்தில் கோசலனாகிய பிருஹத்பலன் மலர்ச்சூழ்கைக்குள் நின்று பாண்டவ மைந்தனாகிய அபிமன்யுவுடன் பொருதினான். இரு மாவீரர்களும் அணுவிடை குறையாத ஆற்றலுடன் ஒருவரை ஒருவர் தாக்கி போரிட்டனர். விலகியும் அணுகியும் நிகழ்ந்தது அப்போர்” என்று பாணன் பாடினான். “ஆயிரத்தெட்டு இதழ்களுடன் விரிந்த பெருந்தாமரையின் இதழ்கள் ஒன்றன்மீது ஒன்றென மெல்ல படிந்து ஒற்றை வளையமென்றாகி குவிந்து மொட்டாகி இறுகி செண்டாகி மணியாகி மூடிக்கொண்டன. உறுதியான ஓர் எண்ணம் மலரை உலோகமென்றாக்கும் என்று அறிக! மலர்ச்சூழ்கைக்குள் பாண்டவ இளையோனாகிய அபிமன்யு முழுமையாகவே சிக்கிக்கொண்டான். அவனைச் சூழ்ந்து கௌரவர்களின் பெருவீரர்கள் அனைவரும் குலைத்த வில்லுடன் நிறைந்த ஆவநாழியுடன் வந்து வளையமென்றானார்கள்.”

கை பெருகி சித்தம் ஒன்றென்றாகி நின்று போரிட்ட அபிமன்யுவைச் சூழ்ந்திருந்த கௌரவ வீரர்கள் ஒவ்வொருவரும் காற்றெரியில் சுழன்று பதறிப் பறக்கும் பறவைகள்போல் அலைமோதினார்கள். உடன்வந்த பாஞ்சால வீரர்கள் அனைவரும் கொன்றொழிக்கப்பட அபிமன்யு தன்னந்தனியனாக நின்று போரிட்டான். அவன் அம்புகள் பட்டு சுபலரின் ஏழு படைத்தலைவர்கள் தேர்த்தட்டுகளில் விழுந்தனர். துரியோதனன் தன்னெதிரே தழலென ஆடி நின்றிருந்த அர்ஜுனனை பார்த்தான். என் மைந்தன் என் மைந்தன் என எழுந்து கொந்தளித்த நெஞ்சை உணர்ந்தான். நடுங்கும் கைகளுடன் தேரில் அமர்ந்திருந்தான். அவனுக்கு இருபுறமும் துச்சகனும் துச்சாதனனும் வில் சோர தேரில் பின்னடைந்துகொண்டிருந்தனர்.

அக்கணம் கோசலனாகிய பிருஹத்பலன் தன் தேரிலிருந்து வில்லுடன் பாய்ந்திறங்கி நெஞ்சில் அறைந்து வஞ்சினம் கூவினான். “இந்தக் கணத்திற்கென்றே வாழ்ந்தேன், பாண்டவனே” என்று குரலெழுப்பியபடி நாணொலித்துக்கொண்டு அபிமன்யுவை நோக்கி சென்றான். உடைந்த அம்புகளில் சிலவற்றை பொறுக்கியபடி எழுந்த அபிமன்யு நாண் தளர்ந்த வில்லுடன் அவனை எதிர்த்தான். அபிமன்யுவில் எழுந்த ஊழின் ஆற்றலை உணர்ந்த துரியோதனன் “செல்க, கோசலனை காத்துநில்லுங்கள்!” என்று கூவினான். ஆனால் ஊழ் வகுத்ததை மானுடர் திருத்த இயலாதென்று அவனும் அறிந்திருந்தான். “அழியாக் கொடிவழிக்காக நிமி தெய்வங்களிடம் சொல் பெற்றுள்ளான். பிருஹத்பலனோ மைந்தன் இல்லாதவன், இளையோன். எனவே இக்களத்தில் அவன் வீழப் போவதில்லை” என்று அப்பாலிருந்து கிருபர் கூவினார்.

மறுகணமோ முற்கணமோ அற்றவன்போல் பிருஹத்பலன் போரிட்டான். ஏழு அம்புகளால் அவன் அபிமன்யுவின் வில்லை உடைத்தான். எஞ்சிய ஒற்றை அம்புடன் அவன் தேர்ச்சகடம் ஒன்றுக்கு அடியில் பதுங்கினான். கர்ணன் நாண்குலைத்தபடி தேரில் அபிமன்யுவை நோக்கி வருவதற்குள் அருகில் உடைந்து கிடந்த தேர் ஒன்றின் மேல் பாய்ந்தேறிய அபிமன்யு அந்த ஒற்றை அம்பை வீசினான். காற்றின் திரைகளை ஒவ்வொன்றாக கிழித்துக்கொண்டு அந்த அம்பு எழுந்தது. ஒருகணமே நூறு அணுக்கணங்களாக மாறியது. ஒவ்வொரு அணுக்கணமும் நூறு தன்மாத்திரைகளாக ஆயின. ஒவ்வொன்றிலும் ஒரு முகம் என இக்ஷுவாகு குடியின் மூதாதையர் தோன்றினர். திகைப்பும் துயரும் சீற்றமும் அமைதியும் என முகங்கள் தெரிந்தன.

அவற்றில் ஒன்றில் மாமன்னன் நிமி தோன்றினான். “தெய்வங்களே, கூறுக! நான் உங்கள் அருட்சொல் கொண்டிருக்கிறேன். இக்ஷுவாகுவின் கொடிவழி அழியாது பெருகும் என்று வேள்வித்தீயில் வந்து சொன்னவர்கள் நீங்கள். உங்கள் சொல்வந்து தடுக்கட்டும் இந்த கொலையம்பை…” என்று கூவினான். அவன் முன் பிரம்மன் தோன்றினார். “மைந்தா, உன் குடியே உன் உயிரில் இருந்து எழவில்லை என்று அறிவாய்” என்றார். “உன் வேள்விப்பயனே மைந்தன் எனத் திரண்டது. அதுவே இக்ஷுவாகு குலமாக நீண்டது. ஐயமிருப்பின் உன் தந்தை இக்ஷுவாகு இதோ உள்ளான். அவன் உடலை முகர்ந்து நோக்குக! உன் மைந்தனையும் முகர்ந்து ஒப்பிடுக!” என்றார்.

தன் முன் திரையிலெழுந்த இக்ஷுவாகுவை நிமி முகர்ந்தான். “இவரிலெழுவது என் குருதியின் மணம்” என்றான். பின்னர் அப்பால் எழுந்த அலையில் தோன்றிய மிதிஜனகனை முகர்ந்து “இது என் குருதியின் மணம் அல்ல. வேள்விநெய்யின் மணம் இது” என்றான். “அறிக, உன் வேள்விப்பயன் மைந்தன் என்று ஆகுமென்றால் உன் குடியின் புகழ் திரண்டு ஒரு மைந்தன் என்று ஆகி தொடரலாகாதா?” என்றார் படைப்பிறைவன். நிமி “ஆம்” என்று சொல்லி பெருமூச்சுடன் தலையசைத்தான். “அவர்களில் எழுவது புதுப் பனையோலையின் மணம் என்று அறிக! சொற்களில் அழியாமல் திகழும் உன் குலமென்று தெளிக!” என்றார் பிரம்மன். நிமி சொல்லின்றி பிரம்மனை வணங்கிவிட்டு தன்னைக் கடந்துசெல்லும் அம்பை வெறுமனே நோக்கி நின்றான். நீந்தும் நாகம் என கடந்து சென்றது அந்த அம்பு.

அதன் கூர்முனை பிருஹத்பலனின் கழுத்துநரம்பை வெட்டியது. திடுக்கிட்டு அள்ளிப் பொத்திய விரல்களின் நடுவே குருதி கொப்பளித்து எழ, வாய் கோணலாகி, கால்கள் குழைய பிருஹத்பலன் களத்தில் விழுந்தான். அவன் குருதி பெருகி மண்ணில் விழுந்தது. இரு கைகளாலும் காற்றை அளைந்தபடி உடல் புளைந்தது. விழிகளில் வெறுமை அசைவிலாதமைந்தபோது அவன் உடலை அவன் வேறெங்கிருந்தோ திகைத்து நோக்கிக்கொண்டிருந்தான். அவ்வுடல் சிதையேற்றப்படுவது வரை காற்றில் இருந்தான். எரியணைந்து வெள்ளெலும்பானபோது இறுதியாக நோக்கிவிட்டு விண்ணிலேறி காத்திருந்தான்.

கோசலத்தின் தலைநகர் குசாவதியைச் சூழ்ந்து ஓடும் சிற்றாறான ஹிரண்யவதியின் நீரில் கோசலத்து அந்தணரும் அமைச்சரும் குடித்தலைவர்களும் படைமுதல்வர்களும் கூடி பிருஹத்பலனுக்கு நீர்க்கடன் செய்தனர். குருக்ஷேத்ரத்திலிருந்து சிறு மண்கலத்தில் கொண்டுவரப்பட்ட எலும்புகளை ஹிரண்யவதிக் கரையில் மணல்கூட்டி செம்பட்டு விரித்து அமைக்கப்பட்ட பீடத்தில் வைத்து மலர்மாலை சூட்டி வழிபட்டனர். அவன் புகழை சூதர்கள் கலமுழவும் யாழும் மீட்டிப் பாடினர். அங்கே சமைக்கப்பட்ட எள்ளரிசி அன்னமும் காய்களும் கனிகளும் அவனுக்கு படைக்கப்பட்டன.

ஹிரண்யவதி குளிர்ந்து கிடந்தது. அங்கே காற்றலைகளில் பிருஹத்பலன் இருப்பதாக அனைவரும் உணர்ந்து மெய்ப்பு கொண்டனர். அங்கேயே குடித்தலைவர்கள் கூடி அமர்ந்து முன்னரே முடிவெடுக்கப்பட்டபடி கோசலத்துத் தொல்குடியாகிய குசர்களில் இருந்து ஏழு அகவை நிறைந்த இளமைந்தன் ஒருவனை தெரிவுசெய்து பிருஹத்பலனின் புகழ்மைந்தனாக அனலைச் சான்றாக்கி தெரிவுசெய்தனர். அவன் தன் கையை அறுத்து ஏழு துளிக் குருதியை மண்ணில் சொட்டி தன் குருதித்தந்தையையும் குடியையும் உதறினான். நீருள் மும்முறை மூழ்கி எழுந்து மறுபிறப்புகொண்டு மேலே வந்தான். அந்தணர் அவனை வாழ்த்தி அவனுக்கு பிருஹத்ஷத்ரன் என்று பெயர் சூட்டினர். அமைச்சர்கள் அவனை வணங்கி சொல்கொண்டனர். படைத்தலைவர்கள் அவன்முன் வாள் தாழ்த்தினர்.

பிருஹத்ஷத்ரன் தன் தந்தை பிருஹத்பலனுக்கு ஹிரண்யவதியின் தூய பெருக்கில் நீர்க்கடன் செய்தான். கைநூறு கைகள் விரித்து கங்கை பலிநீர் கொள்கிறது. பெருநீர் வடிவென்றாகி கடலை அடைகிறது. பிருஹத்ஷத்ரன் கரையை அடைந்தபோது விண்ணிலிருந்து தழைந்திறங்கிய செம்பருந்து ஒன்று அவன் தலைக்குமேல் மும்முறை வட்டமிட்டு பொன்னொளியில் கணம்சுடர்ந்து மேலேறி காற்றில் மிதந்து வானில் மறைந்தது. அந்தணர் வேதம் ஓத, கோசலத்தினர் மறைந்த மாமன்னரை வாழ்த்திக் கூவினர். “இக்ஷுவாகு குலம் பெருகுக! பிருஹத்பலன் புகழ் நிலைகொள்க! பிருஹத்ஷத்ரன் கோல் சிறப்புறுக!” என்று ஆர்ப்பரித்தனர்.

“அரசியே அறிக, செல்வம் அழியும். குருதி அறுபடும். குடிகளும் நகர்களும் மண்ணிலிருந்து மறையும். அறம்நின்று புகழ்பெற்ற குலம் என்றும் அழிவதில்லை. ஆம், அவ்வாறே ஆகுக!” என்று பாடியபின் பாணன் யாழை தாழ்த்தினான். கூடத்தில் அமைதி நிறைந்திருந்தது. தன் மடியில் கைகளைக் கோத்து இறுக்கியபடி காந்தாரி தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். அவளைச் சூழ்ந்தவர்களாக நின்றிருந்த ஒன்பது அரசியரில் எவரிடமிருந்தோ மெல்லிய விசும்பலோசை மட்டும் எழுந்தது.

வெண்முரசு விவாதங்கள்

முந்தைய கட்டுரைபொன்னீலன் 80- விழா
அடுத்த கட்டுரைகுமரப்பா, பாலா, வைகுண்டம்- விவாதம்