போரும் அமைதியும் – ஒரு செய்தி, செய்தித்திரிபு

ஜெ,

வெர்னான் கோன்ஸ்லாவிஸ் [Vernon Gonsalves] ஒரு முன்னாள் பேராசிரியர், சமூக போராளி, எழுத்தாளர். முன்பும் சில முறை கைதாகி விடுதலையாகியுள்ளார்.

இம்முறை, பீமா கோரேகாவ் [Bhima-Koregaon] வன்முறையில் இவருக்கு தொடர்பு இருக்கும் என சந்தேகத்தின் பெயரில் பூனே போலிஸ் ஆகஸ்ட் 2018ல் அவரை கைது செய்தது. ஒரு வருடமாக, சாட்சயங்கள் எதுவும் காட்டப்படவில்லை (அரசு தரபில் சாட்சி தாக்கல் செய்யவில்லை?).

இந்நிலையில், அவரது ஜாமின் வழக்கை இன்று விசாரித்த மும்பை உயர்நிதிமன்ற நீதிபதி, உன்னிடம் போரும் அமைதியும் புத்தகம் உள்ளது. வேறு ஒரு நாட்டில் நடைப்பெற்ற போர் பற்றிய புத்தகத்தை நீ ஏன் வைத்துள்ளாய். அதற்கு தகுந்த விளக்கம் தர வேண்டும் என கூறியுள்ளார்.

//“The title of the CD ‘Rajya Daman Virodhi’ itself suggests it has something against the State while War and Peace is about a war in another country. Why were you (Gonsalves) having these books and CDs at home? You will have to explain this to the court,” said a single-judge bench of Justice Sarang Kotwal.//

She said a search conducted at Gonsalves’ house had yielded “incriminating evidence” in the form of “books and CDs with objectionable titles including the books and CDs mentioned above”.

Agreeing with defence that mere possession of such material does not make anyone a terrorist, Justice Kotwal, however, said Gonsalves will have to explain why he kept such material at his home.

https://www.huffingtonpost.in/entry/war-and-peace-bombay-hc-question-activist-vernon-gonsalves-bhima-koregaon_in_5d66787ce4b022fbceb4069c?utm_hp_ref=in-news

உங்களிடம் போரும் அமைதியும் 2 அல்லது 3 பிரதி உள்ளது என எண்ணுகிறேன். நீங்கள் ஏன் அதை வீட்டில் வைத்துள்ளீர்கள்?

ரியாஸ்

***

அன்புள்ள ரியாஸ்,

இந்தச் செய்தியை வாசித்த மறுகணமே நான் எண்ணியது இது மிகப்பிழையாக அறிக்கையிடப்பட்ட செய்தி, நீதிமன்றம் இப்படிச் சொல்லியிருக்காது என்பதே. வேறு எதைச் சொன்னாலும் நம் உயர்நீதிமன்றத்த்தில் உள்ள அளவுக்கு அறிவுத்தகுதி ஊடகங்களில் கண்டிப்பாக இல்லை. எனக்கே பல ஆங்கிலச் செய்தியாளர்களைத் தெரியும். ஓர் இலக்கிய அரங்கின் உரையில் பிரேம்சந்த் என்று சொல்லப்பட்டதும் “அந்த எழுத்தாளர் இங்கே வந்திருக்கிறாரா?” என்று அருகிருந்த கேட்ட மூத்த டெல்லிச் செய்தியாளரின் முகம் நினைவுக்கு வருகிறது.

ஆகவே ஒருநாள் பொறுத்து இச்செய்தியை உறுதிசெய்துகொள்ளலாம் என நினைத்தேன். அதற்குள் உயர்நீதிமன்ற நீதிபதியை அவன் இவன் என்றெல்லாம் வசைபாடி எழுதித்தள்ளிவிட்டனர். தாங்கள் ஏதோ அறிவொடு பிறந்த ஞானிகள் என.  மிகப்பெரும்பாலானவர்கள் போரும் அமைதியும் என்ற பெயரையே அந்தச்செய்தியால்தான் அறிந்திருப்பார்கள். அதை அறிக்கையிட்ட செய்தியாளர் போரும் அமைதியும் என கூகிளில் தேடி டால்ஸ்டாய் என்பவரை கண்டடைந்திருப்பார். எவ்வளவு வசைகள். எவ்வளவு நையாண்டிகள், எக்காளங்கள். இந்தக்கும்பல்கள் தங்களை என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? இவர்கள் எவராலும் கவனிக்கப்படவில்லை என்பதனாலேயே இந்த வீராவேசம். இத்தனை அறிவுக்கொந்தளிப்பு. பரிதாபம், வேறென்னச் சொல்ல?

War and Peace in Junglemahal People, State and Maoists

உண்மைச்செய்தி இது. நீங்களே வாசிக்கலாம்.

Bombay HC did not raise questions on Leo Tolstoy’s War and Peace but one by Biswajit Roy

நீதிமன்றம் குறிப்பிட்ட நூல் டால்ஸ்டாயின் போரும் அமைதியும் அல்ல. பிஸ்வஜித் ராய் எழுதிய   War and Peace in Junglemahal: People, State and Maoists  என்றநூல். அது மாவோயிஸ்டுகளில் பிரச்சார நூல் என்பது குற்றம்சாட்டுவோர் [அரசு] தரப்பு வாதம்.. அது குற்றம் சாட்டப்பட்டவர் வீட்டில் கிடைத்தது. அதை ஒரு சாட்சியாக போலீஸ் தரப்பில் முன்வைக்கும்போது அதை ஏன் வீட்டில் வைத்திருந்தீர்கள் என அதிகாரபூர்வமாக கேட்டு பதிவுசெய்வது நீதிமன்றத்தின் கடமை. சர்வ சாதாரணமான ஒரு சட்டச்சடங்கு. அவ்வளவுதான்..அதுதான் நிகழ்ந்தது. செய்தியாளர் அரைகுறையாகக் குறித்துக்கொள்ள செய்தி ஆசிரியர்கள் அதை அபத்தமாக எழுத இணைய ஊடகக்காரர்கள் மேலும் அபத்தமாக அதை நாடெங்கும் பரப்பிவிட்டனர்

இது தமிழ் இணைய ஊடகச் செய்தி.

டால்ஸ்டாய் புத்தகத்தை ஏன் வீட்டில் வைத்திருந்தீர்கள்?- திகைக்க வைத்த நீதிபதி. 

இந்த ஊடகத்திற்கு அனேகமாகச் செய்தியாளர்களே இருக்கமாட்டார்கள். இணையத்தில் கிடைக்கும் எதுவும் பதினைந்து நிமிடங்களில் இவர்களுக்குச் செய்தியாகிவிடும்.  ஆராய்வதற்கும் செய்திக்குப் பொறுப்பேற்றுக்கொள்வதற்கும் ஆசிரியர் என்றும் எவரும் இருக்கமாட்டார்கள். இந்தப்பிழையான செய்திக்காக நாம் எவரிடமும் குறை சொல்லமுடியாது. இன்று இவையே நாம் ஊடகம் என நினைக்கிறோம். நாம் இதை வாசித்துக்கொண்டிருக்கையிலேயே நூறு ஆயிரம் பல்லாயிரமாக பெருகிவிட்டிருக்கும். இந்நேரம் பல்லாயிரம் வாட்ஸ்டப் செய்திகள் நாடெங்கும் பறந்துகொண்டிருக்கும்

இப்போது ஆதாரபூர்வமான தெளிவான மறுப்பு வந்துவிட்டது. நீதிமன்றம் உண்மையில் அதிர்ச்சி அடைந்துவிட்டது. ஆனால் நாடெங்கும் பரவிய இச்செய்தியை எவர் இனி மறுப்பார்கள்? இதை பரப்பியவர்கள் அப்படியே விட்டுவிட்டு அடுத்தச் செய்திக்குச் சென்றுவிடுவார்கள். இவர்களே இசெய்தியை திரித்தவர்கள் ஆகவே தங்கள் பிழையை தாங்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இந்த நேரடி உண்மையை மீண்டும் திரிப்பார்கள். ‘பலப்பல’ கோணங்களில் பேசுவார்கள். சொற்களைப்பெருக்கி குவித்து கடந்துசெல்வார்கள். இந்த அபத்ததை எவரேனும் சுட்டிக்காட்டினால் அவரை தாக்கி அவதூறு செய்து வசைபாடுவார்கள்.இதைப்போல ஒரு பத்துப்பதினைந்து செய்திகளைக் கொண்டுவந்து காட்டி இதைப்பற்றி நீ ஏன் பேசவில்லை, ஏன் களமிறங்கவில்லை என்று மடக்க முயல்வார்கள்.இதுதான் இங்குள்ள வழக்கம்.

உங்களை எனக்குத்தெரியும். உண்மையாகவே வாசிப்பவர். இச்செய்தி வந்ததுமே எப்படி நம்பினீர்கள்? நானும் நம்பும் மனநிலையில்தான் கொஞ்சநாள் முன்புவரை இருந்தேன். அவநம்பிக்கை உருவாகி சில ஆண்டுகள் ஆகிவிட்டன. சமீபத்தில் நானே இந்த குப்பைப்புயல் நடுவே இரண்டுநாட்கள் நின்றிருக்க நேர்ந்தது. ஒன்றுமே செய்ய முடியாது. அவதூறு, திரிபு, நையாண்டி, தாக்குதல். மீம்ஸ்கள், கருத்துக்கள் மறுகருத்துக்கள், நுண்விசாரணைகள், உள்தகவல்கள்…. நான் உண்மையிலேயே இது என்ன என்று திகைத்து அமர்ந்துவிட்டேன்.

இந்த அரைவேக்காட்டு இணைய ஊடகங்கள், அவர்களை நம்பி கொந்தளிக்கும் ஒரு சமூகவலைத்தளக்கும்பல் நம்மைச்சூழ்ந்து நாம் எதையுமே அறியவும் சிந்திக்கவும் முடியாதவர்க்ளாக ஆக்கிவிட்டிருக்கிறது. என் விஷயத்தில். இவர்களே விசாரணையை முடித்து இவர்களே தீர்ப்பையும் எழுதிவிட்டனர். என் நண்பர் சொன்னார். ஒரு வழக்குக்கு நாநூறு நீதிபதிகள் நாநூறு தீர்ப்பை எழுதிய அற்புதக்காட்சி என்று..என்ன ஒரு நன்மை என்றால் மூன்றாம்நாள் நாம் இருப்பதே இவர்களுக்கு மறந்துவிடும். அடுத்த இரை வந்து சேர்ந்துவிடும்.

இதை நாம் ஏன் நம்புகிறோம்? ஏன் என்றால் நாம் நம்ப விரும்புகிறோம். ஏன் நம்ப விரும்புகிறோம் என்றால் அந்த மனநிலைக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறோம். எப்படி அங்கே வந்தோம் என்றால் இதே ஊடகங்களால்தான். தொடர்ச்சியாக இவை உருவாக்கும் மாயச்சூழலுக்குள் வாழ்கிறோம்.

இது பின்நவீனத்துவக் காலம். ஒவ்வொரு செய்தியையும் நாம் இருமுறை ஆராயவேண்டியிருக்கிறது. செய்தி அல்ல செய்திக்குப் பின்னாலுள்ள நோக்கமே முக்கியம் என உணர்ந்தாகவேண்டியிருக்கிறது. ஆனால் பின்நவீனத்துவம் பேசுபவர்கள்தான் இப்படி ஒரு செய்தி வந்ததுமே அதன்மேல் பாய்ந்து விழுந்து எடுத்து தலையில் வைத்துக்கொள்கிறார்கள்.

வெர்னான் கோன்ஸ்லாவிஸ் குற்றமற்றவரா, அவரை நீதிமன்றம் சரிவர விசாரிக்கிறதா என்பதெல்லாம் வேறு விஷயம். அதைப்பற்றிய பேச்சே அல்ல இது. ஏன் சொல்கிறேன் என்றால் இந்த அறிவின்மையைப் பரப்பியவர்கள் உடனடியாக பேச்சை அப்படி திருப்பிவிடுவார்கள். ஒரு நீதிமன்றம் ஏன் இப்படி இழிவுசெய்யப்படுகிறது? இதற்குப்பின்னாலிருக்கும் நோக்கம் என்ன? நீதிமன்றம் இனிமேல் இந்த மாபெரும் அறிவிலிப்பெருக்கை கருத்தில்கொண்டுதான் பேசவேண்டுமா என்ன?

ஜெ

***

முந்தைய கட்டுரைகுமரிநிலம் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைதடம் இதழ்