சித்தார்த்தனும் தம்மமும்-சிவக்குமார் ஹரி

 

தம்மம் தந்தவன் நாவலை வாங்க

புத்தர் என்பது ஒரு நிலை. அது ஒருவருடைய பெயரல்ல கெளதம புத்தராக அறியப்படும் சாக்கிய முனி புத்தருக்கு முன் ஏராளமான புத்தர்கள் இருந்திருக்கிறார்கள். அவருக்குப் பின்னும் ஏராளமானோர். அவரது சமகாலத்திலும் மகாவீரர் உட்பட தேடுவதும் அலைதலும் கொண்டு கண்டடைந்தோர் பலர். அவர்களில் ஒருவனாக வருபவன் தான் ஹெர்மன் ஹெஸ்ஸேயின் சித்தார்த்தன். சித்தார்த்தன் ஒரு அந்தணச் சிறுவன். அந்தணர்களுக்குரிய அனைத்து கல்வியையும் தன் தந்தையிடம் இருந்து முழுமையாக கற்றுத் தெளிகிறான். அனைத்து அனுஷ்டானங்களையும் குறைவின்றி கடைபிடிக்கிறான் என்றாலும் அவனுக்குள் ஒரு நிறைவின்மை சதா இருந்துக் கொண்டே இருக்கிறது. மிகக் குறிப்பாக எதற்காகவென இன்னமும் துலக்கம் பெறாத தெளிவற்ற இன்மை அது. அவனே தன் சொந்த தகுதியில் ஆசிரியராகி பிற மாணாக்கர்களை பயிற்றுவிக்க முடியும் அதுவே அவர் தந்தையின் விருப்பமும் கூட. ஆனால் சமணர் குழாம் ஒன்றை சித்தார்த்தன் பார்க்கும் போது அவனுக்கான முதல் அழைப்பாக உட்குரலை கேட்கிறான். ஆனால் தந்தையிடம் தன் விருப்பத்தை தெரிவிக்கும் போது அதை கடுமையாக மறுக்கிறார். தன் நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருக்கும் சித்தார்த்தனின் உறுதி இறுதியில் தந்தையை அசைக்கிறது. தன் நிழல் போல் இருக்கும் நண்பன் கோவிந்தனுடன் புறப்படுகிறான் சித்தார்த்தன்.

விடுதலைக்கான அடிப்படையான வழிகள் இரண்டு. ஒன்று அன்பின் வழி மற்றொன்று சுதந்திரத்தின் வழி. அன்பின் வழியை தேர்பவர்கள் சுதந்திரத்தில் முழுமை கொள்கிறார்கள். சுதந்திரத்தின் வழி தேர்பவர்களின் முழுமை அன்பிலேயே இருக்கிறது. இன்னொரு வகையில் இது இல்லறம் தேர்பவர்களுக்கும்(அன்பின் வழி) துறவறம் தேர்பவர்களுக்குமானது.(சுதந்திரத்தின் வழி). இது ஒன்றையொன்று முழுமை செய்கிறது. விலாஸ் சாரங்கின் கெளதம சித்தார்த்தன் முதலில் இல்லறம் தேர்கிறான். அவன் சத்ரிய குலத்தை அரச குடும்பத்தைச் சேர்ந்தவன். காமத்தின் ஆசையின் சுவையை அறிந்தவன். பிம்பாவை கைபிடிக்கும் போது அவளிடம் ஒருவித விலக்கத்துடனே நடந்து கொள்கிறான். ஒரு குழந்தையின் பிறப்போடு விடைபெறுவான் என்ற உண்மை பிம்பாவை சுடுகிறது. அதன் காரணமாகவே பல வருடங்கள் தள்ளிப் போடப்பட்டு இறுதியாக பிம்பா ஒரு குழந்தையைப் பெறும் போது சித்தார்த்தன் எந்தவித சலனமுமின்றி பிரிந்து போகிறான். ஹெஸ்ஸேயின் சித்தார்த்தன் முதிரா இளைஞன். யசோதரையை பிரிபவன் பழுத்த கனி. உள்ளத்தாலும் உடலாலும் முதிர்ந்த இளைஞன். ஹெஸ்ஸே சித்தார்த்தனுடைய அறிவு ஏட்டுச் சுரைக்காய் கௌதம சித்தாரத்தனுடையது அனுபவ அறிவு. இருவருடைய வெளியேற்றத்தின் பின்புலம் இது.

சமணருடன் சேரும் சித்தார்த்தன் கடுமையான நோன்புகளை நோற்கிறான். உடலை வருத்தி பல நாட்கள் பட்டினி கிடந்து உடலை கடக்க விழைகிறான். இதனால் பல நன்மைகளை அடைந்தாலும் அவன் இறுதியில் துவக்கப் புள்ளிக்கே வந்து சேருகிறான். தியானம் என்பது சில மணிநேரம் சுய உணர்வற்று போவது தானே மது அருந்துபவனும் சில மணிநேரம் தன்னை மறக்கத் தானே அதனை செய்கிறான். என் சாதனைகளிலும் நான் தற்காலிக ஓய்வைத்தான் அடைகிறேன் கோவிந்தா. இதுவும் கடந்து செல்ல வேண்டியதுதான் என்று தன் நண்பனிடம் கூறுபவன் தான் கற்ற சித்து வேலைகளை பயன்படுத்தியே சமணரிடம் இருந்து விடை பெறுகிறான். புத்தரின் புகழ் அதற்குள் மிக வேகமாக பரவியிருந்தது. நண்பன் கோவிந்தனுடன் புத்த சங்கத்தை அடைகிறான் சித்தார்த்தன். கோவிந்தன் புத்தரால் ஈர்க்கப்பட்டு அதுவே தன் அறுதியான இடம் தான் இருக்கப் போகும் இடம் என முடிவு செய்கிறான். சித்தார்த்தனோ புத்தரை கண்டு உரையாடிய பின்பும் சமாதானமடையாமல் தன் போக்கில் போகிறான்.

சித்தார்த்தன் புத்தர் சந்திப்பு- கதையின் முக்கியமான பகுதிகள் இரண்டு இது முதலாவது. புத்தரிடம் சித்தார்த்தன் வேறுபடும் இடம். காரணகாரியங்களுடன் கடவுளை பற்றி நிற்காத ஒரு போதனையை தாங்கள் கூறுவது நிகழ்வுகளின் தொடர்ச்சி அது சார்ந்த ஒருமை போன்றவை கேட்பவரை சீண்டி அதனை ஏற்கச் செய்யும் அல்லது முரண்பட செய்யும் ஆனால் இந்த ஆனால் மிக முக்கியமானது. உலகினின்று மேலேறுதல்- உலகை மறுத்தல் என்பது அதில் ஊடும் பாவுமாக தொக்கி நிற்கிறது. சித்தார்த்தன் இதை ஒரு பிழையாகவே காண்கிறான். அவன் புத்தரை மறுத்து வெளியேறும் இடம் இது. புத்தரும் இவ்வாறு பலரை மறுத்தும் ஏற்றும் வெளியேறியவர் தான். தன் தேடுதலின் காலத்தில் வாழ்க்கையின் முதலும் முடிவுமான பிரச்சினை துன்பம் மட்டும் தான் என்று உறுதியாக இருந்தார் புத்தர். அவருக்கு எதை வெல்ல வேண்டும் என்பது குறித்து ஒரு வகை தெளிவு இருந்தது. ஆகவே அவரது அலைதல் தெளிவற்றது என்று கூற முடியாது. பல வகையான பயிற்சிகளையும் கடுந்தவங்களையும் மேற்கொள்கிறார் புத்தர். ஆனால் ஹெர்மன் ஹெஸ்ஸேயின் சித்தார்த்தனிடம் துன்ப விடுதலை என்பது மட்டுமே குறிக்கோள் அல்ல. இந்த கனி முதிர்வதற்கு நாளாகும் என்பதை புரிந்து வாழ்த்தி அனுப்புகிறார் புத்தர்.

ஹெர்மன் ஹெஸ்ஸேயின் சித்தார்த்தன் தற்காலத்தைச் சார்ந்தவன் தான். முழுமையான ஒரு தனிமனிதவாதி. உறவோடும் ஞானத்தோடும் வாழ விழைபவன். அவனுக்கு துன்ப விடுதலை முதன்மையானது அல்ல அது ஒரு பொருட்டாகவே கூட இருப்பதில்லை. அவன் அடிப்படையான கேள்வி புத்தராக ஏன் ஸோர்பாவை மறுக்க வேண்டும் என்பது தான். மிக திட்டவட்டமான நெறிமுறைகளை தரும் சங்கங்கள் அவனுக்கு உவப்பாக இருக்கவில்லை. வழியில் காணும் புத்தரை இந்த அடிப்படையிலேயே மறுத்துச் செல்கிறான்.

விலாஸ் சாரங்கின் கெளதம சித்தார்த்தனுக்கு உலகியல் நோக்கங்கள் எதுவும் கிடையாது. உண்மையில் தன் மனைவி பிம்பாவைக் கூட ஒரு வகையில் தயார் படுத்துகிறான் தான் விட்டுச் செல்லும் நாளில் ஏமாற்றமும் வேதனையும் அடையாமல் இருக்க. ஹெஸ்ஸேயின் சித்தார்த்தனோ தன் முடிவில் உறுதியாக தன் தந்தையை ஏற்கச் செய்கிறான். உலகியல் சார்ந்த விருப்பங்கள் உள்ளுக்குள் அடங்கியிருக்கிறது. கமலாவை சந்திக்கும் போது அது வெளிப்படுகிறது. உண்மையில் கமலாவே அவனுக்கு முதல் குருவாக அமைகிறாள். அவள் ஒரு தாசி அவள் வேண்டுவதை வேண்டுவது போல் சித்தார்த்தன் இருப்பதை கோருகிறாள். அப்போது மட்டுமே தன்னை அடைய அவன் தகுதியானவன். அவளுக்காக ஒரு வேலையில் சேர்கிறான். பொருள் ஈட்டுகிறான். ஒரு குழந்தையையும் பெறுகிறான். சம்சார கடலில் மூழ்குபவன் மீண்டும் தோணிக்காரனை அடையும் போது தான் இழந்தவைகளை புரிந்து கொள்கிறான். ஆற்றுடன் பேசுகிறான் அதனுடன் சிரிக்கிறான் ஆற்றுடனேயே இசைந்து வாழ்கிறான். வாசுதேவனே தன் இரண்டாவது குரு என கூறும் போது அவன் அதை மறுத்து ஆறு தான் நம் குரு என்கிறான்.

கெளதம புத்தரின் மகன் தீக்கை பெறுவதும் அவரது சங்கத்தில் சேர்வதும் மிக இயல்பாக நடக்கிறது. அவன் தந்தையான புத்தரை பணிகிறான்.. அவனுக்கு கலைகளில் ஆர்வம் இருந்தாலும் முற்றான துறவை தந்தையின் நோக்கத்திற்கு மாறாக எதுவும் செய்யவில்லை. ஆனால் சித்தார்த்தனின் மகன் அவன் மேல் கடும் வெறுப்பு கொள்கிறான். அவன் நேசிக்கப்பட்டாலும் அதுவே அவனுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. சித்தார்த்தனின் இனிமையும் நேசமுமே ஒரு நுண்ணிய தளையாக உணர்கிறான். அவன் போக்கில் விட்டு விடுவதே சிறந்தது என்கிறான் வாசுதேவன். மகன் பிரியும் போது சித்தார்த்தன் தன் தந்தையை பிரிந்து வந்த ஒரு வட்டம் முழுமையடைகிறது. வாசுதேவனுடனும் ஆற்றுடனும் அவன் முழுமையடைகிறான். ஒவ்வொரு உண்மையிலும் அதன் எதிர்மறையானதும் அதே அளவு உண்மை என்கிறான் சித்தார்த்தன் தன் நண்பன் கோவிந்தனிடம். அவன் அறிந்ததும் தெரிந்ததுமான திரண்ட கருத்து இது. கனி இப்போது முதிர்ந்து விட்டது. Samsara is Nirvana என்ற பிற்கால முழக்கங்களின்

முதல் குரல் ஹெஸ்ஸே. இருமைகளை கடந்த ஒரு சிந்தனையின் முழுமையை சித்தார்த்தன்-கோவிந்தன் உரையாடலில் இறுதியாக வழங்குகிறார் ஆசிரியர். இவர் பெயர் இல்லை என்றால் நிச்சயம் இதை இந்தியர் எழுதியிருப்பதாகவே கருதுவோம். விலாஸ் சாரங்கின் பெயர் இல்லாவிட்டால் தம்மம் தந்தவன் முற்றிலும் மேற்கை சேர்ந்த ஒருவர் எழுதியதாகவே கருதலாம்.

தம்மம் தந்தவன் நூலில் புத்தரின் போதனைகள் இல்லை. ஆனால் ஒரு குறுக்கு வெட்டு தோற்றத்தில் அவரது வாழ்க்கையை அறியலாம். அவரது போதனைகளை அறிய இந்தப் பின்னணி மிக அவசியமானது. ஹெஸ்ஸே சித்தார்த்தாவின் கடைசிப் பகுதி சித்தார்த்தன் கோவிந்தனிடம் கூறுவதாக வருவது சென்ற நூற்றாண்டில் திரண்டு வந்த தனிமனித வாதத்தில் இருந்து கிளைத்து வந்த மகத்தான மானுட தரிசனம். பகவத்கீதையில் கிருஷ்ணனின் விஸ்வரூப தரிசனத்திற்கு நிகரான ஒரு அனுபவத்தை அடைகிறான் கோவிந்தன்.

ஆனாலும் அதன் முதல் விதை ஊன்றப்படுவது புத்தரிலிருந்து தான். அந்த மகத்தான சுதந்திரத்தின் ஊற்று அவரின் கடைசி வரிகள்.

“நீங்கள் எண்ணி அசை போட நான் என் சிந்தனைகளை உங்களுக்கு அளித்துவிட்டேன். இனி உங்களுக்கானதொரு சிறந்த பாதையை நான் முன்மொழிந்த கேள்விகள் மூலமும் இலக்குகள் மூலமும் நீங்களே சுதந்திரமாகப் படைத்துக் கொள்ளுங்கள். உங்களின் விமோசனத்திற்காக விடாமுயற்சியுடன் பாடுபடுங்கள். நான் விடைபெற்றுச் செல்கிறேன். உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.”

மேலை பெளத்த நோக்கு இருவகையானது. மரபார்ந்த தேரவாதம் அவர்களுக்கு ஆர்வமூட்டுவதல்ல மாறாக மாத்யமிக மற்றும் ஸென் பெளத்தமே அவர்களுக்கு அணுக்கமாக உணர்கிறார்கள். பெளத்தத்தை மதமாக அல்லாமல் தத்துவமாகவே அணுகுகிறார்கள். அதற்கான அடிப்படைகள் திபெத்திய பெளத்தத்திலும் ஸென்னிலும் மேலதிகமாக இருக்கின்றன. தாங்கள் பிறந்த மதத்தின் மீது ஒவ்வாமை கொண்ட அதன் போதாமைகளை உணர்ந்த ஒரு தலைமுறையே 1960களிலும் 70களிலும் பெளத்தம் உள்ளிட்ட கீழைத்தேய தத்துவங்களிடம் திரும்பியது. அது தனிமனித வாதத்துடன் சேர்த்து பெளத்த சிந்தனையை புதிய முறையில் விளக்க முற்பட்டது. ஹெஸ்ஸேயின் நூல் அந்த வகையில் முதன்மையானது. குருட்ஜியெஃப் (Gurdjieff) போன்றோர் பல வஜ்ராயன புத்த முறைகளை தங்கள் தியானங்களில் பயன்படுத்தினர். அந்த வகையில் Applied Buddhism என்பதின் முன்னோடி அவர்.

“In properly organized groups no faith is required; what is required is simply a little trust and even that only for a little while, for the sooner a man begins to verify all he hears the better it is for him… Accept nothing you cannot verify for yourself.”

–G.I. Gurdjieff

முற்றிலும் விசுவாசிக்க அழைப்பு விடுத்து மீட்சி அதன் வழியாகவே சாத்தியம் என்று கூறும் நிறுவன அமைப்புகளில் இருந்து எதிர்திசையில் செல்லுவது இது. ஆன்மிக ஆய்வுக்கான ஒரு வாசல் பெளத்தத்தில் புத்தரின் போதனைகளில் திறந்தே இருக்கிறது. பகுத்தறிவிற்கு (Rational Thinking) உட்பட்ட ஆனால் அதனைக் கடந்த ஒரு மார்க்கமாகவே மேலை நோக்கில் பெளத்தம் பார்க்கப்படுகிறது.

கிழக்கில் சங்கரர் முதல் ஓஷோ வரை பெளத்தத்துடன் உடன்பட்டும் மறுத்தும் வரும் ஒரு நீண்ட மரபு நம்மிடம் இருக்கிறது. அத்வைத வேதாந்தம் அதில் முக்கியமான ஒரு மாற்றுத் தரப்பு. இன்றளவும் ஏற்றும் மறுத்தும் உரையாடலில் இருக்கும் தரப்புகள் இவை. மேலை கோணத்தின் அடிப்படையில் பெளத்தத்தை அணுகிய இந்தியர்கள் புத்தரை கடவுளாகவோ கடவுளின் அவதாரமாகவோ காணாமல் ஞானகுரு என்னும் அடிப்படையிலும் பேரறிஞர் என்னும் அடிப்படையிலுமே பார்த்தார்கள். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் போன்ற தத்துவ அறிஞர்கள் எந்த வயதிலும் ஒருவன் துறவியாகலாம் என்பது போன்ற பெளத்தத்தின் போதாமைகளை இந்து மத அடிப்படைகளை கொண்டு (இல்லறத்திற்கு பின் துறவறம்) சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். பெளத்தத்தின் மறுபிறவி கொள்கை எப்போதும் அறிஞர்களுக்கு காரண அறிவுக்கு உட்படாததாக சங்கடத்தை ஏற்படுத்தக் கூடியது. Brian Weiss-ன் “Many Masters Many Lives” இதனை கடந்து நோக்கும் ஆர்வம் கொண்டவர்களுக்கானது.

விலாஸ் சாரங்கின் தம்மம் தந்தவன் நடையில் பல இடங்களில் ஒரு எள்ளல் போக்கு உள்ளது. உதாரணமாக சமகாலத்தவர்களான மகாவீரர் மற்றும் புத்தர் சந்திக்காததின் காரணத்தை ஒரு எள்ளலுடன் கடந்து செல்கிறார். தற்கால பெண்ணிய நோக்குடன் பெளத்த பெண்ணிய நோக்கை ஒப்பிடுகிறார். இது பெளத்தத்தை பொறுத்தவரை மட்டுமல்ல எல்லா மதங்களை பொறுத்தவரையிலுமே கூட தவறானது. இத்தகைய பெண்ணிய நோக்கு நமக்கு நவீன காலகட்டத்தில் தான் வந்து சேர்கிறது. ஆகவே அனைத்தையும் அதன் போதாமைகளுடன் ஏற்பதே சிறந்தது.

சாரங்கின் தம்மம் புத்தரின் சோதனைகளுக்கான அடிப்படைகளை தரக்கூடியது. ஹெர்மன் ஹெஸ்ஸே சித்தார்த்தனின் பயணம் வழியாக ஒரு மகத்தான தரிசனத்தை தருகிறார். ஒரு சிறிய சாளரத்திற்கு அப்பால் உள்ள நட்சத்திரங்களைக் காண்பதைப் போன்றது.

சிவக்குமார் ஹரி

***

தம்மம் தோன்றிய வழி…

தம்மமும் தமிழும்

 

முந்தைய கட்டுரைபகடி -போகன்- நேர்காணல்.
அடுத்த கட்டுரைவிரல்