விகடன் தடம் இதழ் நிறுத்தப்பட்டுவிட்டதாகக் கேள்விப்பட்டேன். தமிழுக்கு முக்கியமான இதழாக இருந்தது என்பதே என் உளப்பதிவு. எந்த ஒரு சிற்றிதழும் அதற்கான ஒரு சிறிய சாய்வுடனேயே இருக்கும். விகடன் பேரிதழ் கூட அந்தச் சாய்வுகொண்டதுதான். தடமும் அச்சாய்வு கொண்டிருந்தது. பொதுவாக தமிழ் அறிவுலகில் உள்ள இடதுசாரி,தமிழ்த்தேசிய, திராவிட அரசியல் சாய்வு என அதை வகுத்திருந்தேன். ஆனால் தமிழிலக்கியத்தின் எல்லா குரல்களும் அதில் ஒலிக்க இடமளித்தது. தமிழில் இதுவரை வெளிவந்த இதழ்களிலேயே பார்வைக்கு அழகானது தடம்தான். பக்கவடிவமைப்பில் அது ஒர் உச்சம்.
நான் தொடர்ச்சியாக வாசித்த ஒரே இதழ். பெரும்பாலும் இதழ்களில் எழுதியுமிருக்கிறேன். நான் தடம் இதழில் எழுதிய கட்டுரைகள் முக்கியமானவை என நினைக்கிறேன். அவற்றைக் கேட்டு வாங்கிய கவிஞர் வெயில் அவர்களுக்கு நன்றி
இவ்வாறு பெரிய திட்டங்களுடன் தொடங்கப்படும் முயற்சிகள் நலிந்து நின்றுவிடுவது எப்போதுமே நிகழ்கிறது. நான் தொடர்புகொண்ட முயற்சியாகிய சுந்தர ராமசாமியின் ‘காலச்சுவடு’ நிறுத்தப்பட்டபோது அடைந்த உளச்சோர்வை நினைவுகூர்கிறேன். அதன்பின் என் ஊடகமாக அமைந்த சுபமங்களா நின்றது. இம்முயற்சிகளுக்கு முன்பு இடைநிலை இதழ்களாக இனி [எஸ்விராஜதுரை], புதுயுகம் பிறக்கிறது [வசந்தகுமார்] என பல முயற்சிகள் நின்றன. பல சிற்றிதழ்கள் நின்றன. நான் நடத்திய சொல்புதிதும் அவற்றில் ஒரு முயற்சி. ஒவ்வொரு முயற்சியின் தோல்வியும் மேலும் புதிய முயற்சிகள் தொடங்குவதை பலவகையில் தள்ளிப்போடுகிறது.
ஒவ்வொரு தோல்வியும் காட்டுவது திரும்பத்திரும்ப தமிழ்ச்சூழலின் அக்கறையின்மையைத்தான். அரசியலையும் சினிமாவையும் மாய்ந்து மாய்ந்து விவாதிப்பார்கள். கலை, கலாச்சாரம் என பொங்குவார்கள். தமிழின் தொன்மை என தோள்தட்டுவார்கள். ஆனால் தமிழின்பொருட்டு நிகழும் எந்த முயற்சிக்கும் எந்த உதவியும் செய்யமாட்டார்கள். தடம் இதழைப் பார்த்ததுமே ‘ஐம்பதுரூபாய் அதிகம் சார், கட்டுப்படியாகலை’ என்று சொன்ன பலரை கண்டிருக்கிறேன். மாதம் லட்சம் ரூபாய் ஊதியம் ஈட்டுபவர்கள் அவர்கள். ஒரு நல்ல காப்பியின் விலை. ஒரு முறை ஆட்டோவில் ஏறி இறங்குவதன் குறைந்தபட்ச கட்டணம். ஆனால் நம்மவர் உள்ளத்தில் கலை இலக்கியத்திற்கான விலை அதைவிடக்குறைவு தடம் போன்ற இதழை நம் கல்விநிலையங்களில் நூலகங்களில் வாங்கியிருந்தாலே பத்தாயிரம் பிரதிகள் விற்றிருக்கும்.
தடம் இதழ் நின்றதற்கான முதன்மைக்காரணம், அச்சில் படிப்பவர்கள் குறைவு என்பது. கடைகளில் கண்ணில்பட்டால்தான் வாங்கினார்கள். தேடிச்சென்று வாங்குவதில்லை. அப்படிச் சிலர் இடைநிலை இதழ்களை வாங்கிய காலம் ஒன்று இருந்தது, அது இன்றில்லை. இன்றைய வாசிப்பு செல்பேசித்திரையில் நிகழ்கிறது. என் கட்டுரைகளேகூட தடம் இதழில் வெளிவந்தபின் என் தளத்தில் மீண்டும் வெளிவரும்போதுதான் எதிர்வினைகள் மிகுதியாக வருவது வழக்கம். இது ஒரு காலமாற்றத்தின் சித்திரம். உலகப்புகழ்பெற்ற இடைநிலை இதழ்களும், சிற்றிதழ்களும்கூட நின்றுகொண்டிருக்கின்றன.
ஆனால் விகடனின் அமைப்புவல்லமை அதை ஒரு சிறிய இதழாக நீட்டித்திருக்க முடியும். அது ஏன் நின்றது? ஏனென்று சமூகஊடகங்களைப் பார்த்தால் தெரியும். தடம் வந்துகொண்டிருந்த காலகட்டத்தில் அதில் வெளிவந்த ஏதேனும் ஒரு செய்தியாவது, ஒரு கருத்தாவது, ஒரு படைப்பாவது குறைந்த அளவிலேனும் சமூக ஊடகங்களில் ‘டிரெண்ட்’ ஆகியிருக்கிறதா? சாதாரணமாகவேனும் விவாதிக்கப்பட்டிருக்கிறதா? தேடிப்பாருங்கள் , திகைப்பாக இருக்கும். விதிவிலக்கு நான் என் பேட்டியில் ஈழத்தில் இன அழித்தொழிப்பு நிகழ்கிறதா என்பதற்கு அளித்த பதில் சார்ந்து எழுந்த விவாதம்.. ஏனென்றால் அது என்னை வசைபாட ஒரு வாய்ப்பு. ஆனால் ஈழப்போர் பற்றி விதந்தும் நெகிழ்ந்தும் பேசப்பட்ட பலப்பல பக்கங்கள் தடம் இதழில் வெளிவந்துள்ளன. இந்த வசைபாடிகள் என்ன சொல்லிக்கொண்டிருக்கிறார்களோ அவற்றைச் சொன்ன பல கட்டுரைகள் வந்துள்ளன. அவற்றைப்பற்றி எவராவது விவாதித்திருக்கிறார்களா? பிறருக்கு அடையாளம் காட்டினார்களா?
இங்கே பேசப்பட்டவை அனைத்துமே அரசியல்காழ்ப்புநிலைகள், சினிமா ஆகியவற்றைப் பற்றி செயற்கையாக உருவாக்கப்பட்ட ‘டிரெண்ட்டிங்’ விஷயங்கள் மட்டுமே. நாலைந்து நாட்களுக்கு ஒருமுறை ஒரு பொதுவான பேசுபொருள் எங்கிருந்து எனத் தெரியாமல் கிளம்பி வரும். அத்தனைபேரும் அதையே பேசிப்பேசி சலித்து அப்படியே அடுத்ததற்குச் செல்வார்கள். தங்கள் தனிரசனையை, தங்கள் தனித்த பார்வையை, தங்கள் தேடல்களை எத்தனைபேர் முன்வைத்திருக்கிறார்கள்? முன்வைத்தவர்களுக்கு எத்தனை பேர் வாசகர்களாக வந்தனர்? இந்த செயற்கை ‘டிரெண்டிங்’ தான் இங்கே சீரிய ஊடகங்களை அழிக்கிறது. முன்பு மாலைமுரசுச்செய்தியாக அமைந்தவை இன்று மையச்செய்தியாக ஆகின்றன. அவற்றுக்கு அப்பாலுள்ள கலை, இலக்கியம், பண்பாடு சார்ந்த எதுவும் கவனிக்கப்படுவதில்லை.
தடம் போன்ற இதழ்களின் பங்களிப்பு என்ன? இன்று நாடே ஓரிரு விஷயங்களைப் பற்றி மட்டும் பேசிக்கொண்டிருக்கிறது. பேசவைக்கப்படுகிறது, அதற்கான கொள்கைகள் வியூகங்கள் நடைமுறைகள் அனைத்தையும் அருகிருந்து பார்த்திருக்கிறேன். அந்த பொதுப்போக்குக்கு அப்பால் உள்ள இலக்கியம், அரசியல்கோட்பாடு, பண்பாட்டுச் சிக்கல்களைப் பேசவே தடம் போன்ற இதழ்கள் முயல்கின்றன. ஆகவேதான் அவை மாற்று ஊடகங்கள் எனப்படுகின்றன.
இங்கூள்ள பொதுரசனை அங்கும் வெளியே உள்ள அரட்டையையே எதிர்பார்க்கும்.. அந்த அலைக்கு எதிராக நிலைகொள்ளவேண்டும். அதற்குத்தேவை அவ்வாறு பொதுப்போக்குகளுக்கு அப்பால் நின்றிருக்கும் தனித்தன்மை கொண்ட வாசகர்கள் அத்தகைய ஒரு வாசகர்வட்டம் இங்கே உள்ளதா? உள்ளது என்பதுதான் என் வலைத்தளம் வழியாக நான் கண்டடைந்தது. இந்தத்தளம் இத்தனை வாசகர்களுடன் இத்தனை ஆண்டுகள் நீடிக்கும் என நான் எண்ணியதே இல்லை. ஆனால் அந்த வாசகர்களால் ஏன் தடம் பேணப்படவில்லை? அதற்குக்காரணம் தடம் இதழின் உள்ளடக்கம் என்றோ அதன் கொள்கை என்றோ எவரும் சொல்லமுடியாது.எல்லா கொள்கைகளுக்கும் இங்கே இடமுண்டு. இன்று தமிழில் எழுதும் ஏறத்தாழ அனைவருமே அதில் பங்களிப்பாற்றியிருக்கிறார்கள்.
மிக எளிமையான காரணம்தான், தடம் இதழை அதை வாசித்தவர்கள் பணம்கொடுத்து வாங்கவில்லை. அதற்குக் காரணம் அறிவு, இலக்கியம், கலை என்னும்போது மட்டும் நமக்குள் வரும் கைச்சிக்கனம். அந்த இதழ் வெளிவந்து ஒரு அறிவுத்தரப்பாக, வெளியீட்டுத்தளமாக நிலைகொள்வது எல்லாருக்கும் நல்லது என நாம் உணரவில்லை. அதை நிலைநிறுத்த பிரக்ஞைபூர்வமாக ஏதும் செய்யவில்லை. நம் கலாச்சார அமைப்புக்கள் அதை ஆதரிக்கவில்லை.நம் உரையாடல்களில் அதை நாம் பேசவில்லை.
ஐம்பது ரூபாய் கொடுத்து பத்தாயிரம்பேர் வாங்கியிருந்தால் தடம் தொடர்ந்து நடந்திருக்கும். அது தொடராது என்றே நானும் எண்ணியிருந்தேன். அதை நடத்துவதற்குக் குறைந்தது இரண்டு ஊழியர்களாவது தேவை. அவர்களுக்கு அளிக்கப்படும் ஊதியம் அளவுக்கேனும் அது பொருளீட்டவேண்டும். இங்கே எந்த ஒழுங்குமில்லாமல் வசதிப்பட்ட கால இடைவெளிகளுடன் சிற்றிதழ்கள் நடக்கின்றன. பல இதழ்கள் வந்து நின்றாலும் ஏதோ ஒன்று கண்ணுக்குப்படுகிறது. ஜெயமோகன்.இன் என்னும் இந்த இணையதளம் தடம் இதழைவிட அளவில் ஏழெட்டு மடங்கு பெரியது. ஆனால் சிற்றிதழ்கள் பெரும்பாலும் தனிநபர்களின் இலவச உழைப்பைச் சார்ந்து இயங்குபவை. நிதியிழப்பு கொண்டவை. என் தளமும் அவ்வாறே.
இந்தத்தளம் நண்பர்களின் நன்கொடையாலும் இலவச உழைப்பாலும் நடைபெறுகிறது. இன்று வருகையாளர் அதிகம் என்பதனால் இதை நடத்துவதற்கான செலவும் அதிகம். அதை நண்பர்கள் அளிக்கிறார்கள். அவ்வப்போது சிறு கட்டணம் அல்லது நன்கொடை வைப்போம் என எவரேனும் சொல்வார்கள். அழகிய அச்சில், வண்ணப்பக்கங்களுடன், கையில் எடுத்து பார்க்கத்தக்கதாக, பலர் படிக்கத்தக்கதாக, மேஜையில் போடத்தக்கதாக தடம் போன்ற ஓர் இதழ் வரும்போது மாதம் ஐம்பதுரூபாய்க்கு யோசிக்கும் தமிழர்கள் இணையதளத்திற்கா பணம்கட்டுவார்கள் என்று நான் கேட்டதுண்டு. மெனக்கெட்டு அதை பிடிஎஃப் எடுத்து உலவவிட்டு பணம்கட்டாதீர், வாங்காதீர் என பிரச்சாரம் செய்வார்கள். தங்களால் முடிந்த சேவை
தடம் நின்றுவிட்டது மீண்டும் நம்மையே நமக்கு காட்டுகிறது. அரைநூற்றாண்டாக ஒவ்வொரு சீரிய கலையிலக்கிய முயற்சி தோற்கடிக்கப்படுகையிலும் எழும் அதே பெருமூச்சுதான் எஞ்சுகிறது