ஊட்டி, அபி, இளவெயில், குளிர்

 

தீயின் எடை முடிந்தபோது எங்கேனும் செல்லவேண்டும் என்று தோன்றியது. வழக்கமான தனிமையுணர்வு. இம்முறை கிருஷ்ணனுக்கும் அதே தனிமையுணர்வு. துரியோதனனின் இறப்பு அவரை மிகவும் பாதித்தது. அந்த உணர்வை வெண்முரசு என்னும் வட்டத்திற்கு வெளியே உள்ளவர்கள் புரிந்துகொள்வது கடினம். ஏறத்தாழ ஆறாண்டுகளாக தொடர்ந்து ஒவ்வொரு நாளுமென உடன்வந்து வளரும் கதைமாந்தர்கள். அவர்களில் உச்சமென கருமையும் வெண்மையும் முயங்கும் பெரிய ஆளுமை துரியோதனன்.

 

ஆகவே எழுதிமுடித்ததுமே எங்காவது கிளம்பலாமென கிருஷ்ணனே முடிவுசெய்தார். உடன்வரும் நண்பர்களுக்கும் தெரிவித்தார். பத்துபேர் ஊட்டி சென்று குருகுலத்தில் தங்கினோம். கூடுமானவரை வெண்முரசை பேசுவதில்லை என உடன்பாடு. ஈரோட்டிலிருந்து கிருஷ்ணனைத் தவிர பாரி,மணவாளன் இருவரும் வந்தனர். பெங்களூரிலிருந்து நவீன்,ஸ்வேதா. கோவையிலிருந்து நிகிதா. திருச்சியிலிருந்து செல்வராணி. கடலூரிலிருந்து சீனு.

நான்ஆகஸ்ட் 22 அன்று கிளம்பி 23 காலை கோவை எக்ஸ்பிரஸில் திருப்பூர் சென்று ராஜமாணிக்கம் இல்லத்தை அடைந்தேன். அங்கே சீனு வந்திருந்தார். அங்கே குளித்து, சாப்பிட்டுவிட்டு ராஜமாணிக்கத்தின் காரில் கிளம்பினேன். செல்லும் வழியில் கிருஷ்ணனையும் மணவாளனையும் ஏற்றிக்கொண்டு மேட்டுப்பாளையம் வழியாக ஊட்டி. மேட்டுப்பாளையம் அருகே நாலைந்து கிலோமீட்டர் தொலைவுக்கு வண்டிகள் காத்து நின்றன. தீவிரவாதிகள் ஊடுருவல் என ஐயம் கொண்டு போலீஸார் ஒவ்வொரு காராக நிறுத்தி ஆராய்ந்துகொண்டிருந்தனர். நாங்கள் கிளம்பியது ஒன்பது மணிக்கு. மாலை நான்குமணிக்கு குருகுலம் சென்று சேர்ந்தோம்.

 

ஊட்டியில் கடுமையான மழைக்குப்பின் இளவெயில். எங்கு பார்த்தாலும் கண்ணைநிறைக்கும் பசுமை. குருகுலம் தூய்மையாக பசுமையாக தன்னந்தனிமையாக அமைதியாக நிறைந்து கிடந்தது. பெரிய திட்டங்கள் ஏதுமில்லாமல் வந்தமையால் சும்மா பேசிக்கொண்டிருந்தோம். ஒரு சிறிய நடை சென்றுவந்தோம். ஊட்டியில் பிப்ரவரி 15 முதல் ஆகஸ்ட் 15 வரை ஒரு வகை காலநிலை. ஆகஸ்ட் 15 முதல் குளிர்காலம் நோக்கிய நகர்வு தொடங்கும். பிப்ரவரியில் உச்சமடையும். அத்துடன் மழைமூட்டம் கொண்டு வானம் இருண்டுவிட்டால் குளிர் ஓரிரு டிகிரிகள் கூடிவிடும். காற்றும் வீசினால் நன்றாகவே நடுக்கும்.

ஆனால் குளிர் உற்சாகமூட்டுவதாக இருந்தது. குரலில் மெல்லிய நடுக்கத்துடன் பேசிக்கொண்டோம். அடிக்கடி தேவையில்லாமலேயே வெடித்துச் சிரித்தோம். இலக்கியம், அரசியல், வரலாறு என விவாதித்தோம். பாரி மாலையில் கிளம்பி இரவு ஒன்பது மணிக்கு வந்தார். மணி [நிர்மால்யா] யை இப்படித்தான் பரபரப்பான வேலைச்சுமை இல்லாமல் இயல்பாக பார்க்கமுடிகிறது. இரவில் ஒன்பது மணிக்கே நான் தூங்கச் சென்றுவிட்டேன். படுத்தபின்னரும் சுழன்றுகொண்டே இருந்தது தலை. நாள்தோறும் கேட்டுக்கொண்டிருக்கும் சில தெலுங்குப்பாடல்களைக் கேட்டபடி தூங்கிவிட்டேன்

 

நவீன்,ஸ்வேதா,நிகிதா,செல்வராணி ஆகியோர் 24 காலையில் வந்தனர். சமையலுக்கு வழக்கமாக அங்கே சமைக்கும் பெண்மணியை ஏற்பாடு செய்திருந்தோம். வரும் வழியிலேயே காய்கறி கொஞ்சம் வாங்கி வந்திருந்தோம். ஊட்டிக் குளிரில் கொதிக்கக்கொதிக்க உண்பது தனிச்சுவைதான். அதிலும் ஊட்டி குருகுலத்தில் இரவுக்கு மலையாளப்பாணியில் கஞ்சியும் பயறுகறியும். தமிழகநண்பர்கள் பலருக்குப் பிடிக்காது என்பதனால் பொதுவாக நண்பர் சந்திப்புகளில் அதைச் சமைப்பதில்லை. இம்முறை வந்திருந்த அனைவருக்குமே அது பிடித்திருந்தது. ஆகவே மூன்றுநாட்களுக்கு இரவில் கஞ்சிதான். அதைக் குடிக்கவேண்டும் என்றால் வெளியே குளிரக்குளிர கேரளத்து மழைபெய்துகொண்டிருக்கவேண்டும். அல்லது ஊட்டி போல நடுக்கி எடுக்கும் ஊதல்காற்று வீசிக்கொண்டிருக்கவேண்டும்

ஊட்டி போன்ற சூழலுக்கு கஞ்சி மிக உகந்தது. உப்பு குறைவாக போடவேண்டும். தொட்டுக்கொள்ள ஊறுகாய் எல்லாம் கூடாது. பொரித்த, வறுத்த, துவட்டிய பொருட்களை கூட சாப்பிடக்கூடாது. பயறுகறியும் ஒருவகையில் கஞ்சிப்பதம்தான். கஞ்சியும் பயறும் ஒருமணிநேரத்திலேயே செரித்துவிடும்.இரவில் நீர்விடாய் எழாது. ஆகவே நல்ல தூக்கம் வரும். இதற்காகவே இவ்வுணவை உருவாக்கியிருக்கிறார்கள்.

 

பொதுவாக ஒரு நிலப்பகுதியின் உணவு அப்பகுதியின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப உருவாகி வந்திருக்கும். அதுவே அங்கே உகந்ததாகவும் இருக்கும். எங்கள் சந்திப்புகளில் ஊட்டியில் இரவில் சப்பாத்தி, தோசை போடுவோம். அவற்றை சாப்பிட்டுவிட்டு பலர் மறுநாள் காலையில் பேசும்போது முந்தையநாளிரவு மூச்சுத்திணறல் இருந்ததாகச் சொல்வார்கள். ஆனால் அவர்களால் நாவின் சுவைப்பழக்கத்தை மீறமுடியாது, ஒருவேளைக்குக் கூட இன்னொரு உணவை உண்ண முடியாது என நான் அறிவேன்.

ஊட்டி நினைவுகளால் செறிவூட்டப்பட்ட இடம். இங்கே வரத்தொடங்கி முப்பதாண்டுகளாகப் போகின்றது. இன்னும் இங்கே வந்துகொண்டேதான் இருப்பேன். சில இடங்களுடன் நம் ஊழ் நம்மை அறுதியாகப் பிணைத்துவிடுகிறது. குரு இங்கே இருக்கிறார். நினைவுகளாக மட்டும் அல்ல. இங்கே வந்தபின் அவரை பெரிதாக நினைத்துக்கொள்வதில்லை. பேசிக்கொள்வதும் குறைவு. ஆனால் அவர் உடனிருந்துகொண்டே இருப்பார்.

 

குருகுலத்தில் வியாசப்பிரசாத் சுவாமி , ஜப்பானிய சுவாமினி மியாகோ ஆகியோர் உள்ளனர். இயான் என்னும் அமெரிக்கர் தங்கியிருக்கிறார். நடராஜ குருவின் நூல்களை ஆங்கிலத்தில் செம்பதிப்புகளாகக் கொண்டுவரும் முயற்சி. அமெரிக்கப் பதிப்பகம். பல மாதங்களாக அப்பணி நடைபெறுகிறது. ஒவ்வொருநாளும் பலமணிநேரம் அவரும் வியாசப்பிரசாத் சுவாமியும் அமர்ந்து பணியாற்றுகிறார்கள். வெள்ளையர்கள் ஒரு பணியில் மூழ்குவது எப்படி என அறிந்தவர்கள்.

 

இம்முறை அபி கவிதைகளை கூடி அமர்ந்து வாசிக்கலாம் என முடிவுசெய்திருந்தோம். ஆளுக்கு ஐந்து கவிதைகளைக் கொண்டுவரும்படிச் சொல்லியிருந்தோம். அக்கவிதைகளை ஒருவர் வாசிக்க பிறர் அதன்மீதான தங்கள் வாசிப்புகளைச் சொன்னார்கள். கூட்டு வாசிப்பில் கவிதைகள் சரசரவென திறந்துகொள்வது எப்போதுமே ஒர் அரிய அனுபவம். மொத்தம் மூன்று அமர்வுகளிலாக அபி கவிதைகளை வாசித்தோம். நூலக அறையில் இரு அமர்வுகள். ஓர் அமர்வு வெளியே வெயில் பொழிந்துகொண்டிருந்த புல்வெளியில்

 

அபி கவிதைகளை சேர்ந்தமர்ந்து வாசிக்கையில் நிகழ்வது இது. ஒருவர் அருவமான அக்கவிதையை சூழல்வயப்படுத்தி, தருணப்படுத்தி தான் புரிந்துகொண்டதை விளக்குவார். அங்கிருந்து தொடங்கி அதை மேலும் மேலும் அருவப்படுத்தியபடியே செல்வார். இந்தப் பயிற்சி பொதுவாக இக்கவிதைகள் அளிக்கும் முதற்கட்டத் திகைப்பை இல்லாமலாக்கிவிடுகிறது. வாசகர்கள் உள்ளூரில்கூட சேர்ந்துவாசிப்பை முயன்று பார்க்கலாம்.

அனைவரும் ஞாயிற்றுக்கிழமையே கிளம்பிச் சென்றார்கள். நான் மேலுமொருநாள் தங்க விரும்பினேன். கூட சீனுவும் இருந்தார். அனைவரும் சென்றபின் நாங்கள் இருவரும் மட்டும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். மறுநாள் காலை ஒரு நீண்ட நடை சென்றோம் – வழி கொஞ்சம் தவறியதனால் அது மிகநீண்ட நடையாக ஆகியது. அன்று உச்சிப்பொழுதில் கிளம்பி கோவை வழியாக ஊர் திரும்பினேன்.

 

அருண்மொழி கடலூர் சீனுவிடம் வாசிப்பதற்காக வாங்கிய நூல்களை திரும்ப அளித்திருந்தாள். அவற்றை அவரிடம் நான் ‘முறைப்படி’ திரும்ப அளித்ததுமே பலரும் வாங்கிக்கொண்டார்கள். அதை முன்னரே அருண்மொழியிடம் எச்சரித்திருந்தேன். கடலூர் சீனு கொண்டுவந்த நூல்களை அருண்மொழிக்காக எடுத்துக்கொண்டேன். அதில் ஜெயகாந்தனின் பாரிசுக்குப்போ இருந்தது. நீண்ட இடைவேளைக்குப் பின் அதை வாசித்தேன். ஒரே மூச்சில் இரவில் வாசித்து முடித்தேன். வியப்பாக இருந்தது, நாவல் இன்றும் கூர்மை இழக்காமல் இருக்கிறது. அதன் அடிப்படை முடிச்சுகள் மேலும் இறுக்கம் கொண்டிருக்கின்றன. லலிதா போன்ற ஒரு ஆளுமையை அதன்பின்னரும்கூட தமிழிலக்கியம் உருவாக்கவில்லை.

 

தமிழிலக்கியத்தில் மிகப்பெரிய  அநீதி இழைக்கப்பட்டவர் ஜெயகாந்தன். அவருடைய முக்கியமான படைப்புக்கள் படிக்கப்படவே இல்லை என்று தோன்றுகிறது. இரண்டு அடிப்படைகளில் அவர் ஒரேயடியாக நிராகரிக்கப்பட்டார். ஒன்று, வணிக இதழ்களில் வெளிவந்தாலே அது இலக்கியமல்ல, பலரும் வாசித்தாலே அது இலக்கியத்தகுதி கொண்டது அல்ல என்ற ஒரு வகை சிற்றிதழ்மூர்க்கம். இன்னொன்று, கலை என்பது பூடகப்படுத்துவதும் மென்மையாகச் சொல்வதும் மட்டுமே என்ற குறுக்கல்நோக்கு. இன்றுகூட  இலக்கியவாதிகளில் ஒரு சாரார் இப்படி மேலோட்டமாக ஜெயகாந்தனை நிராகரித்துப் பேசுவதைக் காணலாம். அவர்கள் கலை என எண்ணுவது உலகியல் சார்ந்த ஒரு சின்ன விஷயம் புனைவில் கண்டுபிடிக்கத்தக்கபடி ஒளித்து வைக்கப்பட்டிருப்பதை மட்டுமே. ஆகவே ஜெயகாந்தன் படைப்புக்களை நேரடியாகப்பேசும் எழுத்துக்கள் என்று சொல்லி கடந்துசெல்வார்கள். எந்த ஒரு படைப்புமேலும் அதற்குமேல் ஆக்கப்பூர்வமான ஒரு விமர்சனத்தை அவர்களால் முன்வைக்கவும் முடியாது.

 

ஜெயகாந்தனின் நாவல்களில் சிலநேரங்களில் சில மனிதர்கள், பாரிசுக்குப்போ,  ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், ஒரு மனிதன் ஒருவீடு ஒரு உலகம் ஆகியவை புதிய வாசகர்களின் கூர்ந்த கவனிப்புக்கு உரியவை. நவீனத்துவம் உருவாக்கிய சோனியான யதார்த்தவாத அழகியல்கொள்கைகளை விட்டு நம் வாசகர்கள் கடந்துசெல்கையில் அவர் மீண்டும் கண்டடையப்படுவார் என நினைக்கிறேன். அவருடைய படைப்புக்கள் யதார்த்தவாத அழகியலின்படி ‘நிறைய’ பேசுபவை. ஆனால் மிகமிக முக்கியமான பண்பாட்டு முடிச்சுக்களை அவர் சென்று தொடுகிறார். அடிப்படையான வினாக்களை எழுப்பிக்கொள்கிறார். அவற்றுக்கு அறிவார்ந்ததும் ஆன்மிகமானதுமான விடைகளைச் சென்று தொடுகிறார், அல்லது அப்படியே விட்டுவிடுகிறார். அவர் எழுப்பிய வினாக்களுடன், அவர் பேசிய விஷயங்களுடன் ஒப்பிடுகையில் அன்று கொண்டாடப்பட்ட சிற்றிதழ்சார் எழுத்தாளர்கள் மென்பாலியலை எழுதியவர்கள், ஆழமான உசாவல்கள் அற்றவர்கள், ஆணின் விருப்பக்கற்பனைகளை நோக்கி பூடகமாகப் பேசியவர்கள் மட்டுமே என்று தோன்றிவிடுகிறது

அடிக்கடி இப்படி ‘சும்மா’ ஊட்டிக்கு வரவேண்டும் என நினைத்துக்கொள்வதுண்டு. இயல்வதில்லை. ஊட்டி எத்தனை முறை வந்தாலும் புத்தம்புதிய ஊர். குருவின் இருப்பு எப்போதுமே ஒரு பருநிகழ்வென உணரமுடிவது. அங்கே வெயிலும் காற்றும் பசுமையும் எல்லாமே வேறுதான். இம்முறை சிரித்துக்கொண்டே இருந்தோம். விடைபெறும்போது சுவாமி வியாசப்பிரசாத் அவர்கள் கிருஷ்ணனிடம் “என்ன புதிய வெற்றிச்செய்தி ஏதாவதா? ஒரே கொண்டாட்டமாக இருந்தீர்கள். வந்த நாள் முதல் சிரிப்பொலியே கேட்டுக்கொண்டிருந்ததே?” என்றார். மகிழ்ச்சியாக இருப்பதற்கு தனியாக வெற்றி தேவையா என்ன? அதுவே ஒரு வெற்றி

முந்தைய கட்டுரைநீங்கள் பூமிக்கு உப்பாக இருக்கிறீர்கள்- கடலூர் சீனு
அடுத்த கட்டுரைவேண்டுதல் நிறைவு