தீவிரச் சிறுகதைகளும் பகடிச் சிறுகதைகளும் -சாம்ராஜ்

தமிழ் இலக்கியத்தில் தீவிரச் சிறுகதைகள் எழுதபட்ட அளவுக்கு பகடிச் சிறுகதைகள் எழுதப்படவில்லை பொதுவாக தமிழர்களுக்கு தீவிரத்தில் இருக்கும் மோகம் இலக்கியத்திலும் பிரதிபலிக்கும். TMT முறுக்கு கம்பிகளை போல இலக்கியத்திலும் உணர்ச்சிகள் முறுக்கி கொண்டிருக்க வேண்டும் என கருதுவோர் உண்டு. இந்த தீவிர உணர்ச்சிகளிலும் பாவனைகள் நிறைய உண்டு. பாலியல் தொழிலாளி- விடுதியில் அவளை சந்திப்பது போன்ற வகையிலான கதைகள் நிறைய எழுதப்படுவதுண்டு. இவற்றில் பெரும்பாலும் பாவனையான மிகையான கதைகளே. “இல்லாத காட்டில் இல்லாத புலியை தேடும்” கதைகள். வண்ணதாசனின் மிச்சம் கதையில் ஒரு அசலான பாலியல் தொழிலாளியின் சித்திரமுண்டு.

நான் தீவிர கதையின் தரப்பிற்காக ஷோபா சக்தியின் பாரபாஸ்சையும் மறுபக்கத்தில் பகடிச் கதைகளின் தரப்பாக கீ.ரா.வின் “ நாற்காலியையும்” நாஞ்சில் நாடனின் ”வாக்குப்பொறுக்கிகள்”களையும் கூடுதலாக ஷோபா சக்தியின் கண்டிவீரனையும் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.

பொதுவாக ஏன் தமிழில் பகடிச்சிறுகதைகள் எழுதப்படுவதில்லை எனில் பகடிக்கு அடிப்படை சுய எள்ளல். சுய எள்ளல் தமிழ் சமூகத்தில் மிக குறைவே.

நகைச்சுவைக் கதைகள் வேறு, பகடிக் கதைகள் வேறு. நகைச்சுவைக் கதைகளுக்கு உள்ளடுக்குகள் கிடையாது. ஆனால் பகடிக் கதைகளுக்கு பல உள்ளடுக்குகள் உண்டு. ஒரு நல்ல எழுத்தாளன் வெறும் நகைச்சுவை கதைகளை ஒருபோதும் எழுதுவதில்லை. பகடி என்பது நாம் சிரித்துக் கொண்டிருக்கும் பொழுதே ஒரு கசப்பையோ, ஒரு துக்கத்தையோ, வாழ்வு சார்ந்த எள்ளல்களையோ நம்மிடம் கடத்துபவை. நகைச்சுவை கதைகள் தொட்டில் செடி ஆழம் ஒன்றும் கிடையாது.

ஷோபாவின் பாரபாஸ் சந்தியாபுலத்தீவின் இன்றைய நசிந்த நிலையையும், முன்பு அங்கு நடந்த திருட்டுக்கள் பற்றியும், அதற்காக தண்டிக்கப்பட்டவர்களை பற்றியும், இறுதியாக தண்டிக்கப்பட்ட வில்லியம் குடும்பத்தின் தற்கொலையும், கால் தடத்தை பரிசோதித்து திருடன் யாரென சொல்லும் எப்பாஸ் தம்பி இம்முறை திருடனின் தடம் குதிரையின் குளம்படிகளாக இருப்பதாக கண்டறிகிறான். அந்த குதிரை சந்தியோகுமையோரின் குதிரை. இந்த கதை எதார்த்த தளத்திலிருந்து புறப்பட்டு ஒரு மாயத்தன்மையில் முடிகிறது. இந்த மாயத்தன்மை நமக்குள் கிளர்த்தும் கேள்விகள் பல. யார் குற்றவாளி?, தண்டிக்கப்பட்டவர்களெல்லாம் குற்றவாளிகளா? இன்று அந்த தீவு நசிந்து போய் கிடப்பதற்கு இதுதான் காரணமா? கதையின் தலைப்பு நமக்கு சூசகமாய் பலவற்றை சொல்கிறது. இந்த கதை முழுக்க துயரத்தின் நெடி உண்டு. கடந்த வருடம் மலையாளத்தில் வெளியான லிஜோ ஜோஸ் பெல்லிசெரியின் இ.மா.யூ படத்தை பார்த்த பொழுது பாரபாஸ் ஞாபகம் விடாது வந்தது. இரண்டும் ஒரே போல் நிலப்பரப்பு, கிறிஸ்த்துவ மீனவர்களின் கடற்புறம். எப்பொழுது எடுத்து வாசித்தாலும் வலியை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது பாரபாஸ்.

கீ.ரா.வின் நாற்காலி ஒரு ஊரிலேயே நாற்காலி இல்லாத காலத்தில் நாற்காலி செய்ய முயன்ற வீட்டைப் பற்றியும் அவர்கள் அதனால் எதிர்கொண்ட சிக்கல்கள் பற்றியும் பேசுகிறது. தொடக்கம் முதலே அற்பமானவர் என்று கதைச் சொல்லியால் வர்ணிக்கப்படும் சம்மந்தி, நாற்காலி செய்வது தொடர்பாக வீட்டில் நடக்கும் உரையாடல், முக்காலியிலிருந்து கீழே விழுந்த சப்கோர்ட் ஜட்ஜ், செத்த பிணங்கள் உட்காரும் நாற்காலியாய் மாறிப்போன நாற்காலி. ஒரு மெல்லிய புன்னகையாலேயே கதையை எழுதிக் கொண்டு போகிறார் கீ.ரா. கதவு எழுதிய கீ.ரா தான் நாற்காலியும் எழுதுகிறார். கீ.ரா.விடம் எப்பொழுதும் ஒரு அனுபவத்தின் சிரிப்பு உண்டு. அது இக்கதையிலும் உண்டு.

நாஞ்சில் நாடனின் வாக்குப்பொறுக்கிகள் 1980 வாக்கில் எழுதப்பட்டவை. நாடன் துயரமான கதைகள் நிறைய எழுதியவர். உப்பு, கால் நடைகள் கனக தண்டிகள், விலாங்கு, ஊதுபத்தி, வைக்கோல்  நிறைய சொல்லலாம். தமிழில் அசலான பகடி கதைகள் எழுதுபவராய் நாஞ்சிலை நான் எப்போதும் உணர்வேன். டிங் டாங் சிறுகதை ஒரு சிறந்த உதாரணம்.

தேர்தல் சமயங்களில் நண்பர்கள் அழைத்து தேர்தலை அம்பலப்படுத்தும் விதமாக ஏதேனும் கதைகளோ, கவிதைகளோ உண்டா? என்று கேட்பார்கள். நான் எப்பொழுதும் அவர்களுக்கு சொல்லும் பதில் வாக்கு பொறுக்கிகள். நாஞ்சில் நாட்டில் நடக்கும் தேர்தலில் மூன்று வேட்பாளர்களை துல்லியமாக வர்ணிக்கிறது இச்சிறுகதை. துல்லியமென்றால் அத்தனை துல்லியம். ”என்னதான் மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசு என்று ஐந்தாம் வகுப்பு பாடமெடுத்தாலும் இந்த தொகுதியில் மருமக்கள் வழி வேளாளர் அன்றி மகாத்மாவே வந்து நின்றாலும் ஜெயிக்க முடியாது.”

”பரமேஸ்வர பிள்ளைக்கு தெளிவாக தெரியும் இந்த தேர்தலில் தோற்றால் மறுபடியும் அந்த நைல் நதியின் தீரத்திற்கு போக வேண்டியது வரும் என”

மூன்று வேட்பாளர்களின் “ஆகிருதியை” சித்திரமாய் சொல்லும் கதையின் இறுதி வரி ”தேர்தல் முடிந்து விட்டது வாக்கு எண்ணிக்கை நடந்துக் கொண்டிருக்கிறது. இந்த மூவரில் ஒருவர் ஜெயிக்கத்தான் போகிறார்”. இன்றைய ஜனநாயகத்தை இதை விட காத்திரமாய் பகடி செய்ய முடியாது.

ஷோபாவின் கண்டிவீரன் வண்ணதாசனின் சிறுகதை ஒன்று இப்படி தொடங்கும் “எந்த மரத்தை வெட்டப் போகிறோமோ அந்த மரத்தின் நிழலில்தான் அதை வெட்டுவதற்கான தாம்பு கயிறும், அரமும் வைக்கப்படுகிறது. ” கண்டிவீரனுக்கான பொழிப்புரை இதுவே.

ஒரு சிறிய இயக்கம் தனது செல்வாக்கை நிலைநாட்ட ஒருவனுக்கு கொலை தண்டனை அறிவித்து, அவனை கொல்வதற்கு அவனை கொண்டே ஒரு வங்கி கொள்ளை நடத்தி, தோற்று, அங்கே கிடைத்த பழைய துப்பாக்கியைக் கொண்டு அவனை கொல்லலாம் என்று கருதுகையில் பெரிய இயக்கத்தால் சுற்றி வளைக்கப்பட்டு, கைதியால் அவனை சுட வைத்திருக்கும் துப்பாக்கியால் பெரிய இயக்கக் காரர்கள் சுடப்பட்டு, கைதியான கண்டிவீரன் தலைமையில் சிறிய இயக்கத்துக் காரர்கள் தமிழ்நாட்டுக்கு தப்பிப் போகிறார்கள்.

இந்த கதை பல்வேறு திறப்புகளை கொண்டது. கண்டிவீரன் எனப்படும் காந்திராஜன் மலையகத்தைச் சேர்ந்தவன். அவன் மூதாதையர்கள் தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள். மலையகத்தை சேர்ந்த ஒரு தமிழன் சிறிய இயக்கத்துக்காரர்களை காப்பாற்றிக் கொண்டு போகிறான். சார்லி சாப்ளினீன் Gold Rush திரைப்படத்தில் துப்பாக்கியால் சுட ஒருவனை விரட்ட இருவரும் ஓடி ஓடி சுடுபவனின் முதுகுக்கு பின்னால் வந்து கொண்டிருப்பான் சுடப்பட வேண்டியவன். அப்படி மொழியில் நிகழும் ஒரு அங்கத விளையாட்டு இச்சிறுகதை.

பகடி சிறுகதைகளுக்கும், வட்டார மொழிக்கும் பந்தம் இருப்பதாக தோன்றுகிறது. கீ.ரா-வும், நாஞ்சிலும் வட்டார வழக்கின் பிரதிநிதிகள். ஷோபாவும் லேசாக அதனோடு தோய்வதுண்டு. மாடர்ன் மோட்சத்தை ஒரு பொதுவான தமிழில் எழுதியிருந்தால் என்னவாகியிருக்கும்?.

தீவிர கதைகள் எவ்வளவு நமக்கு தேவைப்படுகின்றனவோ அதற்கு நிகராக பகடி கதைகளும் தேவைப்படுகின்றன என நம்புபவன் நான். பகடியின் வழியே தான் இந்த உலகம் தான் வாழ்வதற்கான ஆற்றலை பெற்றுக் கொள்கிறது என தோன்றுகிறது. பகடி இல்லையெனில் முதலாளிகளிடத்திலும், உயரதிகாரிகளிடத்திலும், பிரபலங்களிடத்திலும் ஒருவனோ ஒருத்தியோ எப்படி தொடர்ந்து பணிபுரிய முடியும். பகடி ஆசுவாசத்தை தருகிறது. வீழ்த்த முடியாதவர்களை வீழ்த்திய உணர்வுகளை தருகிறது. பகடியின் வழி ”மரியாதைக்குரியவர்கள்” தலைகீழாக நடக்க வைக்கப்படுகிறார்கள். அவர்களின் கீரிடங்கள் எட்டி உதைக்கப்படுகின்றன. மூச்சுமுட்ட வைக்கப்படும் ஒழுக்க விதிகள் தூசி படிந்த கார்பட்டை போல தெருவில் தூக்கி வீசப்படுகிறது. ஓபேரா அரங்கத்தில் விசும்பலுக்கும், விசிலுக்கும் இடம் தரப்படுகிறது.

முகுந்த நாகராஜின் கவிதை ஒன்று உண்டு.

”தோசை தெய்வம்

அதை பழிக்காதே

நான் பகடியை தெய்வம் என்பேன். எங்கள் ஊர் பக்கம் முப்பது நாற்பது வருடம் வாடகைக்கு இருப்பவர் அந்த கடையை வேறொருவருக்கு மாற்றி தரும் பொழுது கடைக்கான அட்வான்சை உரிமையாளர் வாங்கிக் கொள்வார். முப்பது நாற்பது வருடம் இந்த கடையை வைத்திருந்து கொடுப்பதற்கான தொகையை வரும் புதிய நபரிடம் பழையவர் வாங்கிக் கொள்வார். அந்த தொகைக்கு பெயர் பகடி. தமிழ் இலக்கியமும் அப்படி பெருந்தொகை கொடுத்து பகடியை பெற்றுக் கொள்ள வேண்டுமென விரும்புகிறேன்.

 [ஆகஸ்டு 10, 11,2019  அன்று ஈரோடு சிறுகதை உரையாடல் அரங்கில் பேசியதன் எழுத்து வடிவம்]

***

முந்தைய கட்டுரைஒருபோதும் விடைபெறாதே!
அடுத்த கட்டுரைசை.பீர்முகம்மதுவுக்கு வல்லினம் விருது