நீதிமன்றத்தில் அனுமன்!

எட்டு கிரிமினல் கேஸ் வாங்க 

செய்குதுதம்பி பாவலர் 

நாஞ்சில்நாடன் முன்னுரை

இந்தியாவுக்கு பிரிட்டிஷார் அறிமுகம்செய்த விந்தைகள் பல உண்டு. ரயில், பேருந்து முதல் தபாலட்டை வரை. அவற்றில் மிகமிக விந்தையாக நம்மவர்களுக்கு அன்று தோன்றியது நீதிமன்றம்தான். இரண்டு காரணங்கள், ஒன்று பொதுவாகவே இங்கே புரணி பேசுவதும் மாறிமாறி வாதம் செய்துகொள்வதும் மிகுதி. இங்கே அத்தனை திண்ணைகளும், ஆலமரத்தடிகளும் அதற்கான களங்கள். அவை இடைவிடாது வழக்குகள் நிகழும் நீதிமன்றங்கள். அதற்கப்பால் இங்கே நீதிவழங்கும் பஞ்சாயத்துக்கள் இருந்தன. சாதித்தலைவர்களின் பஞ்சாயத்து அமர்வுகள், ஊர்த்தலைவர் பஞ்சாயத்துக்கள், சிற்றரசர் பஞ்சாயத்துக்கள். வாய்ச்சண்டைக்கே பஞ்சாயத்து என்று சொல்லும் மரபு. வம்புவழக்குக்கே பஞ்சாயத்து என்பார்கள்.

அந்தப் பஞ்சாயத்தை முறையாக வகுத்து, நெறிகள் அமைத்து, அதற்கான ஊழியர்களுடனும் நீதிபதிகளுடனும் வெள்ளையன் அமைத்திருக்கிறான் என்றால் நம்மவர் எண்ணி எண்ணி இறும்பூது எய்தியிருப்பார்கள். அங்கே சென்றும் பேசலாம், அதைப்பற்றி திண்ணையிலும் பேசலாம். 1861ல் இந்திய உயர்நீதிமன்றச் சட்டத்தின் [The Indian High Courts Act of 1861] அடிப்படையில் வெள்ளையர் கல்கத்தாவிலும் மும்பையிலும் சென்னையிலும் உயர்நீதிமன்றங்களை அமைத்ததுமே இந்தியாவின் சமூகச்சூழல் எப்போதைக்குமான மாற்றத்தை அடைந்துவிட்டது. மக்களுக்கு தங்களைப் பற்றிய பார்வை, சமூகத்தைப்பற்றிய பார்வை, அதிகாரம் பற்றிய பார்வை மாறிவிட்டது.

மலையாள எழுத்தாளர் ஆனந்த் இந்திய நீதிமுறையின் பரிணாமம் பற்றி எழுதிய நூலில் பிரிட்டிஷ் இந்தியப் பகுதிக்கு மன்னர்கள் ஆண்ட பகுதியிலிருந்து பலகோடிப்பேர் சென்று குடியேறினர் என்றும், இன்றும் அவையே மக்கள்தொகை செறிந்த பகுதிகள் என்றும், அதற்குக் காரணம் அவர்களின் நீதியமைப்புதான் என்றும் சொல்கிறார். மக்கள் சோறு தேடி அல்ல நீதி தேடி இடம்பெயர்ந்தார்கள். வெள்ளையன் ஆட்சிக்காலத்தில் சென்று நீதிகேட்க ஓர் இடமிருக்கிறது, அந்த நீதியை கருணையாக அல்லாமல் உரிமையாகக் கோரமுடியும் என்னும் நிலை ஒரு பெரிய வாக்குறுதி

வெள்ளையரின் நீதிமன்றங்களின் முக்கியமான சிறப்பியல்புகள் இரண்டு. ஒன்று எழுதித் தொகுக்கப்பட்ட பொதுச்சட்டங்களும் அவற்றுக்கான வரையறைசெய்யப்பட்ட பொதுநடைமுறைகளும். இரண்டு, அவை அனைத்து மானுடருக்கும் நிகரான நீதியை வாக்குறுதி அளித்தன.

அன்றுவரையிலான இந்தியாவில் அவ்விரு முறைகளும் இல்லை- ஐரோப்பாவிலேயே நூறாண்டுகளுக்கு முன்னர்தான் அவை உருவாகி வந்தன. நமக்கு தர்மசாஸ்திரங்கள் இருந்தன. அவை சட்டநூல்கள் அல்ல, நெறிநூல்கள். மன்னராட்சியில் மன்னர் சட்டத்துக்குக் கட்டுப்பட்டவர் அல்ல, சட்டத்தை உருவாக்குபவர்கூட அல்ல, அவரேதான் சட்டம். அவரை ஆசாடங்களும் நம்பிக்கைகளும் கட்டுப்படுத்தலாம், அவ்வளவுதான். ஆனால் பெரும்பாலான மன்னர்கள் இயல்பாகவே அவற்றைக் கடந்து சென்றார்கள் என்பதையும் நாம் காண்கிறோம்.

நமக்கு எல்லா காலத்திலுமே சாதிக்கேற்ப நீதி என்பதே நெறியாக இருந்துள்ளது. ஒரு நவீனச் சமூகத்தில் அது அறமில்லாதது என்று தோன்றலாம். ஆனால் அன்றைய சமூகமே சாதியாக வகுக்கப்பட்டு சாதிகளாகவே செயல்பட்டது என்னும்போது அதுவே இயல்பானது. அன்றைய சமூகத்தை அது உறுதியான மேல்-கீழ் என்னும் அடுக்கதிகாரக் கட்டமைப்புக்குள் நிலைநிறுத்தியது. அனைவருக்கும் நீதி என்னும் கருதுகோளே மானுடம் வரலாற்றில் கடைசியாக வந்தடைந்த ஒன்று. அது ஐரோப்பிய மறுமலர்ச்சி உலகுக்கு அளித்த கொடை

ஆகவே பிரிட்டிஷாரின் நீதிமுறை இந்தியர்களுக்கு மிகப்பெரிய வரமாக இருந்துள்ளது. பிரிட்டிஷார் மேல் சாதாரணமான இந்தியர்கள் கொண்ட நம்பிக்கை இருநூறாண்டுகள் நீடித்தமைக்குக் காரணம் அவர்களின் நீதியமைப்புதான். இந்தியாவின் விடுதலைப்போரை முன்னெடுத்த தலைவர்கள்கூட பிரிட்டிஷ் நீதிமேல் தங்கள் நம்பிக்கையை வலியுறுத்துபவர்களாகவே இருந்தனர். காந்தி உட்பட

ஆனால், இங்கே பிரிட்டிஷ் பாணி நீதிமுறை வந்து சேர்ந்ததுமே அது சீரழியத் தொடங்கியது. இந்திய மன்னர்களின் அரசவைகளில் இருந்த எல்லா வகையான துதிபாடல் முறைகளும், லஞ்சமும், ஓரம்சார்ந்த பார்வையும் உள்ளே வந்தன. பொய்சாட்சி சொல்லுதல், பொய் சான்றுகள் உருவாக்குதல் ஆகியவை உச்சத்தை அடைந்தன. தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல்களிலேயே நீதிமன்ற முறையின் ஊழல் பேசு பொருளாகியிருக்கிறது. குறிப்பாக பத்மாவதி சரித்திரம் [அ.மாதவையா] மிகவெளிப்படையாகவே நீதிமன்ற ஊழல்களைப் பற்றிப் பேசுகிறது. கொலைக்கேஸில் விடுதலை பெற ஐந்தாயிரம் ரூபாய் நீதிபதிக்கு அளிக்கவேண்டியிருந்தது என்று மாதவையா சொல்கிறார்.

பத்மாவதி சரித்திரத்தில் வரும் சீதாபதி அய்யர் என்பவர் போலி ஆவணங்களை உருவாக்குவதில் நிபுணர். ஏனென்றால் அன்று இந்தியச் சமூகத்தில் ஆவணங்கள் மிகக்குறைவு. அவையும் பெரும்பாலும் நீட்டோலை ஆவணங்கள். அவற்றை நேரடி ஆவணங்களாகக் கொள்ளமுடியாது, அவ்வாறு விளக்கிக் கொள்ளமுடியும் அவ்வளவுதான். ஆவணங்களைப் பற்றிய புரிதல் மக்களிடையே இல்லை. ஆகவே ஆவணங்களைப் பற்றி அறிந்தவர்கள் பொய்யான ஆவணங்களை உருவாக்கி உடைமைகளைப் பிடுங்குவது ஒரு தொழில் போலவே நிகழ்ந்திருக்கிறது

அத்துடன் அந்தக்காலகட்டம்தான் இந்தியாவின் நிலம் முறையாக அளந்து அடையாளப்படுத்தப்பட்டு ஆவணப்படுத்தப்பட்ட காலம். ஆகவே நிலவுரிமை சார்ந்த வழக்குகள் குவிந்தன. அதையொட்டிய அடிதடிகளும் நீதிமன்றத்தைச் சென்றடைந்தன. அடிதடி கொலை முதலியவை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் வரையறைசெய்யப்பட்ட குற்றங்களாகப் பார்க்கப்பட்டன. அதை அறியாமல் அவற்றில் ஈடுபட்டு சிறைசென்றனர் [உதாரணமாக சொந்த மகனையும் மருமகனையும் கடுமையாகத் தாக்கிவிட்டு சிறைசெல்வது நெல்லைப் பகுதியில் மிகுதி. சொந்த மகனைக்கூட அடிக்கக்கூடாதா என்று கடைசிவரை புலம்பிக்கொண்டும் இருப்பார்கள்]

ஆகவே அன்று நீதிமன்றம் அன்றாட வாழ்க்கையில் ஒரு பகுதி என கலந்திருந்தது. நீதிமன்ற நடவடிக்கைகளில் அனைவருக்குமே பேரார்வம் இருந்தது. சின்னச்சின்ன விஷயங்களுக்குக் கூட நீதிமன்றச் சொற்கள் கையாளப்பட்டன. நீதிமன்றம் சார்ந்த பழமொழிகள் உருவாயின. நீதிமன்றம் போலவே கிராமப் பஞ்சாயத்துகள் உருமாறத் தொடங்கின

அந்தச் சூழலைப் புரிந்துகொண்டால் சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர் எழுதிய எல்லாருக்கும் பார்க்கத்தகுந்த எட்டு கிரிமினல் கேஸ் என்னும் நூலை ஆர்வமாக வாசிக்கமுடியும். சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர் அவர்கள் நாகர்கோயில் இடலாக்குடி பகுதியைச் சேர்ந்தவர். ஷேக் என்னும் சொல்லின் தமிழ் வடிவம் செய்கு. பக்கீர் மீரான் சாகிபுவுக்கும் அமீனாவுக்கும் மகனாக 1874ல் பிறந்தார். திருவிதாங்கூர் அரசுப்பள்ளிகளில் மலையாளம், பழந்தமிழ் பயின்றார். ஆங்கிலத்தின் தன்முயற்சியால் பயிற்சி பெற்றார். சம்ஸ்கிருதமும் அரபியும் கற்றிருந்தார். அவருடைய தமிழாசிரியர் கோட்டாறு பட்டாரியார் வீதியில் வாழ்ந்த சங்கரநாராயண அண்ணாவி என்பவர்.

சென்னை சென்று தக்கலை பீர்முகம்மது அப்பா அவர்களின் ஞானப்புகழ்ச்சியையும் உமறுப்புலவரின் சீறாப்புராணத்தை பிழைநோக்கிப் பதிப்பித்தார். கம்பராமாயணம் சீறாப்புராணம் முதலிய செவ்விலக்கிய நூல்களிலும் இலக்கணங்களிலும் விற்பன்னர். அவற்றைக் கொண்டே சதாவதானம் என்னும் கவனகக் கலையை நிகழ்த்துபவர். சிறந்த சொற்பொழிவாளர். காந்திய இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார். 1950ல் மறைந்தார். கோட்டாறு இடலாக்குடியில் அவருடைய நினைவுமண்டபம் அமைந்துள்ளது

எட்டுகிரிமினல் கேஸ் என்ற இந்நூல் சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர் எழுதிய இருபதுக்கும் மேற்பட்ட நூல்களில் ஒன்று. இது எட்டு நீதிமன்ற வழக்குகளைப் பற்றியது. ஆனால் மெய்யான வழக்குகள் அல்ல. புராண, இதிகாச நிகழ்ச்சிகளை நீதிமன்ற வழக்குகளாக புனைந்திருக்கிறார். அரிச்சந்திரன் வழக்கு, சூர்ப்பனையை மூக்கறுத்த வழக்கு, வாலியை ராமன் கொன்றது பற்றிய வழக்கு, இலங்கையை அனுமன் எரித்தது பற்றிய வழக்கு, ரம்பையை பலவந்தம் செய்த வழக்கு, கோபிகைகளின் ஆடைகளை கண்ணன் கவர்ந்தது பற்றிய வழக்கு, துரோபதை [திரௌபதி] ஆடையை துச்சாதனன் களைந்தது பற்றிய வழக்கு, கீசகன் பாஞ்சாலியை கற்பழிக்க முயன்ற வழக்கு ஆகியவை.  இவற்றில் இலங்கையை எரித்த வழக்கில் மேல்முறையீடு [அப்பீல்] நிகழ்ந்திருக்கிறது. திரௌபதி அவைச்சிறுமை செய்யப்பட்ட வழக்கில் மறுவிசாரணை நிகழ்ந்திருக்கிறது

எல்லா வழக்குகளும் நீதிமன்ற ஆவணமொழியில் அசல் ஆவணங்களைப் போலவே அமைந்திருக்கின்றன அரிச்சந்திரன் வழக்கில் வாதி அரிச்சந்திரன், சுக்கிரன், காசிராஜன் ஆகியோர். பிரதிவாதிகள் விஸ்வாமித்திரன், சுக்கிரன், காசிராஜன். வாதிபக்கமும் பிரதிவாதிபக்கமும் சாட்சிகள் பட்டியலிடப்பட்டிருக்கின்றனர். வாதியின் வக்கீல் எம்.சத்யவாகீசுவரையன். பிரதிவாதி வக்கீல் மிஸ்ற்றர் மௌற்கல்லியன் [வெள்ளைக்காரர்!] மூன்றாம் பிரதிவாதி வக்கீல் கே.விஸ்வநாதையன்.

வியாச்சியம் இப்படி ஆரம்பமாகிறது ‘1 ஆம் பிரதிவாதி மனப்பூர்ணமாய் என்னை வேதனைப்படுத்த வேண்டுமெனவும் எனது சத்தியத்திற்கு விரோதஞ் செய்ய வேண்டுமெனவும் இன்னும் பலவிதமான கெட்ட எண்ணத்தோடும் தாம் கேட்ட திரவியத்தை கொடுக்கிறேனென்ற வாக்குத்தத்தை வஞ்சகமாக முன்னரே என்னிடத்தில் வாங்கிக்கொண்டு. . . . . ” இப்படி முடிகிறது “இது சிக்ஷாநியமம் 415, 416, 304, 302, 552, 333 ஆகிய இவ்வகுப்புகளின்படி தண்டிக்கத்தக்க குற்றமானதினாற் பிரதிவாதிகளையும் சாக்ஷிகளையும் வரவழைத்துக்கேட்டு தீர்மானப்படுத்தி நியாயஞ் செலுத்தவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்”

அன்றைய நீதிமன்ற மொழி இது. குற்றம் நிகழ்ந்தால் மட்டும் போதாது, அந்தக்குற்றம் செய்யவேண்டுமென்ற நோக்கமும் செய்தவருக்கு இருக்கவேண்டும் என்பதனால்தான் மனப்பூர்ணமாய் என்னை வேதனைப் படுத்தவேண்டும் என்றும் பலவிதமான கெட்ட எண்ணத்துடனும் நடந்துகொண்டதாகச் சொல்லப்படுகிறது. ஆச்சரியம் என்னவென்றால் இன்றைக்கும் போலீஸி ‘மகசர்’ எழுதுவது இந்த மொழியில்தான்.

வழக்கு விசாரணை இப்படி நிகழ்கிறது. பிரதிவாதியாக கூண்டில் நிற்பவர் அனுமன்.

வாதியை தெரியுமா

தெரியும்

நீ வாதியினது இராச்சியமான இலங்காபுரிக்கு எப்போதாவது போனதுண்டா?

உண்டு

அப்படிப்போவதற்கு காரணம் யாது?

எனது இரட்சகரான ராமபிரானது மனைவியாகிய சீதையம்மாளை இந்த வாதி திருடிக் கொண்டுபோய் தனது நாடாகிய இலங்காபுரியினரது ராஜதானியில் வைத்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். அதையறிந்து வரும்படி பிரானவர்கள் என்னை அனுப்பினார்கள். அக்கட்டளைப்படி அங்கு போனேன்.

நீங்கள் கேள்விப்பட்டபடி அந்த அம்மாள் அங்கே இருந்தார்களா?

இருந்தார்கள்

அப்பால் நீர் செய்தது யாது?

இப்படி விசாரணை நீள்கிறது. எல்லா வழக்குகளிலும் நீதிபதி விரிவாக தீர்ப்பு வழங்குகிறார். கீசகன் பாஞ்சாலியைக் கற்பழிக்க முயன்ற வழக்கின் தீர்ப்பு இப்படி முடிகிறது.

தீர்மானம்

முற்கூறிய காரணங்களினால் இந்தியன் பினல்கோர்டு 375 511 ஆகிய இவ்வகுப்புகளின்படியுள்ள குற்றங்களைப் பிரதிவாதி செய்திருப்பதாகத் தெரிகின்றது. ஆதலால் அக்குற்றங்களைப் பிரதிவாதியின்மீது ஸ்தாபகப்படுத்தி அதற்காக வாதியினது நாயகனாகிய வீமன் பிரதிவாதியாகிய கீசகனைப்பிடித்து அவனது மார்பைப்பிளந்து அவனைக்கொல்லும்படி தீர்மானித்திருக்கின்றேன்

தேவலோகம் டிஸ்திரிக்கட்டு மாஜிஸ்திரேட்டு

தேவேந்திரையன்

[கையெழுத்து]

இந்நூல் 1907ல் வெளியானது. கோல்டன் அச்சு இயந்திரசாலை டி.கோபால்நாயக்கர். இட்டா பார்த்தசாரதி நாயிடு அவர்களின் நிதியுதவி நூலுக்கு இருந்திருக்கிறது. நோட்டு, ஆர்டர், ஜட்ஜிமெண்டு, வக்கீல் கிறாஸு போன்ற ஆங்கிலச்சொற்கள் அப்படியே பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை அக்கால வாசகர்களுக்கு பெரிய கிளர்ச்சியை உண்டு பண்ணியிருக்கும் என நினைக்கிறேன். என் அப்பா லட்டுலட்டாக வாசித்து மகிழ்ச்சி அடைந்திருப்பார்.

இந்நூல் ஏன் வெளியானது என்பது ஆர்வமூட்டக்கூடியது. பாவலர் உசாவும் இவ்வழக்குகள் புராணப் பிரசங்க மேடைகளில் புகழ்பெற்றவை. இவை சில அடிப்படையான அறச்சிக்கல்களை எழுப்புபவை. மரபான அற, ஒழுக்க, நீதிப்பிரச்சினைகளை பிரிட்டிஷ் நீதிமுறைக்குள் வைத்து ஆராய முயல்பவை இந்த வழக்குகள். அன்று உண்மையிலேயே நம் சமூகத்தின் மிகப்பெரிய சிந்தனைப் பொருளாக இது இருந்திருக்கிறது. நாம் வழிவழியாக சரி தவறுகளை வகுத்து வைத்திருக்கிறோம். அவை திடீரென்று பிரிட்டிஷாரின் நீதிமன்றத்தால் நிறுவப்படவேண்டியவை ஆகிவிட்டன. அச்சூழலில் நம்முடைய மொத்த அறவியலையும் ஒழுக்கவியலையும் புதிய சட்டமுறையை வைத்து ஆராய்ந்தாக வேண்டியிருக்கிறது

இன்றும் கூட இப்பிரச்சினை உள்ளது.  நாம் விவாதங்களில்  ‘சூர்ப்பனகையை மூக்கறுத்த ராமன் இன்றிருந்தால் ஈவ்டீசிங் வழக்கில் உள்ளே போயிருபபார்’ என்று பேசுகிறோம். “சொந்தப் பெண்டாட்டியை நாலு அடிபோட கணவனுக்கு உரிமை இல்லையா?” என சட்டத்தை மரபான பார்வையைக் கொண்டு அறைகூவல் விடுக்கிறோம். நூறாண்டுகளுக்கு முன் மூவாயிரம் ஆண்டுக்கால மரபை நவீன பிரிட்டிஷ் சட்டமாக ஆக்கிக்கொள்ள போராடிக் கொண்டிருந்திருப்பார்கள். அச்சூழலில் இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது

ஆகவே அன்று இந்நூல் மிக விரும்பி வாசிக்கப்பட்டிருக்கும். உண்மையில் இது ஒரு நீதிமன்ற நிகழ்வுபோல மேடைகளிலும், உள்ளரங்குகளிலும் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. அதன் பின்னர்தான் நூல் வடிவில் எழுதியிருக்கிறார். இன்றும்கூட வழக்காடு மன்றம் என்னும் வடிவில் இந்த விவாதக் கலைநிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கிறது

இன்று வெறுமே இலக்கிய ஆராய்ச்சிக்காக மட்டுமல்ல, அன்றைய சிந்தனைமுறை எப்படி இருந்தது என்பதை அறியவும் என்னென்ன மாற்றங்கள் அதில் நிகழ்ந்தன என உணரவும் உதவும் நூல் இது. ஒரு மரபான சமூகம் தன் நம்பிக்கைகளை புதிய அறவியலுக்குள் கொண்டுவந்து பொருத்திக் கொள்வதற்காகச்  செய்துகொண்டிருந்த முயற்சியை இதில் காணலாம்

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று-நீர்ச்சுடர்
அடுத்த கட்டுரைஇருபத்தொரு குரல்கள்