சிங்கப்பூர் இலக்கியம் – ஒரு பெயரிலி
அன்பு ஜெ. நலம்தானே?
ஏனய்யா இந்த கொலைவெறி? தொடர்ந்து உங்களை வாசித்துக்கொண்டும் உங்கள் மொக்கை ஜோக்குகளுக்குக்கூட வாய்விட்டு சிரித்தும்வந்த என்னை இப்படி அழ வைப்பது நியாயமா?
”சிங்கப்பூர் இலக்கியம் – ஒரு பெயரிலி” என்ற தலைப்பில், ஒரு கடிதம் உங்கள் தளத்தில் வந்ததைப்பார்த்தேன். சிங்கப்பூரிலிருந்து எழுதும் புது சிங்கப்பூரர், 18வருடங்களாய் இங்கு இருப்பவர், ’எம்.’ என்ற பெயரில் முதலெழுத்து போன்ற எதுகை, மோனை மற்றும் இயைபுகளை வைத்து, அந்த கவிதைக் கடிதத்தை எழுதிய ’எம்.’ இந்த ’எம்.கே.குமார்’தான் என்று சிங்கைத்தமிழ்கூறு நல்லுலகம் என்னை அல்லல்படுத்துகிறது.
”உமாஸ்ரீபஞ்சு” போல இவரும் தன் ’உண்மைப்பெயரில்’ எழுதினாலோ அல்லது அமெரிக்காவிலிருந்து வந்து சிங்கப்பூர் இலக்கியம் வாசித்துவிட்டு அமெரிக்கா சென்றுவிட்டதாய் எழுதிவிட்டாலோ எவ்வளவு நன்றாய் இருந்திருக்கும். என்னை ஏன் இவர் இழுத்துவிடுகிறார் எனத்தெரியவில்லை. நிற்க.
இந்நிலையில் ஐயா, தங்களிடம் வேண்டுவது ஒன்றே ஒன்றைத்தான். தயவுசெய்து இனி அவர் கடிதம் எழுதினால், அவர் பெயரை முழுமையாய்ப் போடச்சொல்லுங்கள் அல்லது நீங்களாவது அவர் ஈமெயில் முகவரி கூகுளில் எப்போது ஆரம்பிக்கப்பட்டது அல்லது சிங்கப்பூரிலிருந்துதானா போன்ற ருசிகர தகவல்களைத் தேடிவைத்துக்கொள்ளுங்கள். இலக்கியத்தின்பொருட்டு இன்னொரு போலீசு கேசை இந்த ’எம்’ மேல் நான் போடவேண்டிவரும். இலக்கியம் வளர்க்கலாம் என்றுபார்த்தால் போலீசு கேசுதான் வளர்கிறது.
மேலும் அந்த கடிதம், சிங்கப்பூர் இலக்கியவாதிகளைப் பற்றி மிகுந்த அரைகுறைப்புரிதல் உள்ள ஒருவரால் எழுதப்பட்ட கடிதம் என அறிக. ’தான் எழுதுவதும் இங்கு எழுதப்படுவதும்’ என எல்லாம் தெரிந்த எழுத்தாளர் சித்துராஜையே ஒன்றும் அறியாதவர் என்று அவர் சொல்கிறார் எனில், மிச்சம் மீதி ஏதும் இங்கு தேறுமா தெரியவில்லை. எழுத்தாளர் சூர்யரத்னா அவர்கள், அவருடைய புகைப்படத்தை உங்கள் தளத்தில் பயன்படுத்தியதற்காகத்தான் வழக்குபோட்டுள்ளதாக அறிகிறேன். கதை நன்றாயில்லை என்று சொன்னதற்காக அல்ல. இப்படி பல அரைகுரை விஷயங்கள் இக்கடிதத்தில்.
அண்மையில் தமிழ்முரசு நடத்திய ”விசை” பயிலரங்குக்கு வந்த, திரு சு வேணுகோபால், தான் வாசித்தவைகளில், தன் ரசனைக்குரியதாய், ஏறக்குறைய 70 கவிதைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றைத் தன் கைப்பட எழுதி, காலை 10மணிமுதல் மாலை 6மணிவரை, நாஞ்சில் நாடனின் ”பாம்பு”கதையில் வரும் முனைவரைப்போலின்றி, அவ்வளவு நேர்த்தியாக, அந்த கவிதைப்பட்டறையில் போராடிக்கொண்டிருந்தார் என்று அறிந்தேன்.
இன்னொரு பக்கம் திரு சுனில் கிருஷ்ணன், தன்னுடைய சிறுகதைப்பயிலரங்கில் பகிர்ந்த- தொகுத்த கதைகளை வைத்து, ’அறிவியல் புனைகதை மற்றும் வரலாற்றுப்புனைவுகளின் ஆழமும் விரிவும்’ என்று 50பக்கக் கட்டுரை எழுதிவிடலாம், அவ்வளவு தகவல்கள் அந்த பயிற்சிப்பட்டறையில். நானே சாட்சி. எத்தனை நாட்கள் வாசித்தாரோ, தகவல்களைத் திரட்டினாரோ தெரியவில்லை அவர்.
மேலும், கவிஞர் சாம்ராஜ் நடத்திய மற்றொரு கவிதைப்பட்டறையில், எத்தனையோ கவிதைகள் பகிரப்பட்டன. ’கரம் சிரம் புறம் நீட்டாதீர்கள்’ என்பதிலிருந்து ‘கடைசிப்பெட்டிக்கும் முந்தைய பெட்டிக்கும் இடையில் ரயிலைக் கடந்தான்’ என்பதுவரை எப்படியெல்லாம் அவர் விளக்கினார் என்பதை நேரிலும் அனுபவித்தேன். நானே மேலும் சாட்சி.
இப்படி இவர்களெல்லாம் சிங்கப்பூர் வந்து, ஒரு நாள் ஒர்க்ஷாப் நடத்திவிட்டுப்போவதால் இவர்களுக்கு வரும் வருமானத்தை விட, திங்கள்கிழமை வந்து புதன்கிழமை ஊர்திரும்பும் ’குருவி’யாய் வாராவாரம் வந்தால், இன்னும்அதிகம் சம்பாதிக்கமுடியும் என்பதையறியாமல், இவர்கள் இந்தப் பாடு படுகிறார்களே என்று எண்ணி இவர்களுக்காக வருந்தத்தான் நேரிடுகிறது.
மேலும், ஒரு பயிற்சிப்பட்டறை நடத்த அனுமதி வாங்கி, அதற்கு ஆட்களைத்தேடிப்பிடித்து வரவைக்க படாத பாடுபட்டு, அதை நடத்த வரும் ஆளும் நல்லவர்தான், ’கேசுகீசு’ இல்லாதவர்தான் என்று போராடி, அத்தனையையும் ஒருங்கிணைத்து, அதிலும் ஓரிருவர் ’போதிய கூட்டமில்லையே, குறிக்கோள் எட்டப்படவில்லையே’ என்று கடிதம் எழுதிவிட்டால் அதற்கும் தலையில் குட்டுவாங்கி, இப்படி சகலத்தையும் தமிழின்மேலும் இலக்கியத்தின்மேலும் உள்ள ஆர்வத்தால் செய்தாலும், ’அழைத்து வந்த ஆள் அவரை மட்டுமே பாராட்டுகிறார்’ என்பதுபோன்ற அவதூறுகளையும் பார்க்கும்போது இலக்கியத்தை நினைத்து பாவமாகத்தான் இருக்கிறது, அது என்ன செய்யும் பாவம்!
எனவே, இனிமேல் இப்படி ஏதும் கடிதம்கிடிதம் வந்தால், அவருடைய முழுப்பெயரையும் போடச்சொல்ல வேண்டுகிறேன் அல்லது நீங்களே ஒரு நல்ல பெயராய் அவர் சம்மதத்தோடு வைத்துவிட்டாலும் சரி. இலக்கியம் உட்பட, எல்லோரும் நல்லா இருக்கணும் சாமி.
அன்புடன்
எம்.கே.குமார்
அன்புள்ள எம்.கே.குமார்
உங்களை வாசிப்பவர்களுக்கு தெரியும், அது நீங்கள் எழுதியது அல்ல. அங்கே இப்போதும் இருந்துகொண்டிருப்பவர் எவரும் அப்படி எழுதமாட்டார்கள். ஆகவே உங்கள் நலன் காக்க இன்னொரு முறை சொல்லிக்கொள்கிறேன், அது நீங்கள் எழுதியது அல்ல. அங்கே இப்போது இருக்கும் எவரும் எழுதியது அல்ல. அங்குள்ள அறியப்பட்ட எழுத்தாளர்கள் , வாசகர்கள் எவரும் எழுதியது அல்ல. அது பிரசுரத்திற்காக எழுதப்பட்டதும் அல்ல. அப்படி அவர் சொல்லியிருந்தார். சும்மா எம் என்று போட்டு அதை வெளியிட்டேன். அதிலுள்ளது ஓர் எரிச்சல்பார்வை. ஆனாலும் அது கொஞ்சம் பயனுள்ளது என்று பட்டது. ஆகவே கொஞ்சம் பட்டி -டிங்கரிங் செய்து வெளியிட்டேன்.
அதற்கு ஒரே காரணம் அதிலுள்ள இலக்கியப்பூசல். இலக்கியப்பூசல் இலக்கியத்துக்கு எப்படியும் நல்லது. அதை கொஞ்சம்பேர் கவனிப்பார்கள். அதிலுள்ள பெயர்களையும், கருத்துக்களையும். அதேசமயம் வெறும் நக்கல் கிண்டல் தனிநபர் தாக்குதல் என்றுபோகும் இலக்கியப்பூசல்கள் பயனற்றவை. சிங்கை, மலேசிய, ஈழ இலக்கியங்கள் இங்கே கவனம்பெற்றமைக்கு இந்தப்பூசல்கள் முக்கியமான காரணம் என்பதை மறக்கவேண்டியதில்லை. அங்கே இலக்கிய கருத்தரங்கு அமைப்பதற்குச் சமானமான ஒரு ‘பண்பாட்டுச்’செயல்பாடுதான் இதுவும்.
கடைசியாக மின்னஞ்சல், பெயர் முகவரியுடன் எழுதப்படும் மொட்டைக்கடிதங்கள் இந்தியாவில் இன்றும்கூட உருவாகவில்லை. எப்போதுதான் முன்னேறப்போகிறோமோ என்னவோ
ஜெ