எழுத்தாளனின் சாட்சி

சாட்சிமொழி வாங்க

இன்று பெற்றவை : எழுத்தாளனின் டைரி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நான் ஓராண்டு காலமாக உங்கள் வாசகன். முதலில் அண்ணா ஹஸாரே பற்றி நீங்கள் எழுதிய புத்தகத்தை வாசித்தேன். பின்பு ரப்பர், இன்றைய காந்தி, உரையாடும் காந்தி ஆகிய புத்தகங்களையும் படித்தேன். ஒரு ஆண்டாக உங்கள் இணையதளத்தை தினமும் வாசித்து வருகிறேன்.

சாட்சி மொழி புத்தகத்தை ஒரு மாதமாக படித்து வருகிறேன். 300 பக்கங்கள் தான், இருந்தும் ஒரு மாதம் ஆனது. கட்டுரைகள் அனைத்தும் வெவ்வேறு அரசியல் சார்ந்த குறிப்புகள் கொண்டது, தொடர்ச்சியாக படித்து முடிக்க முடியவில்லை. வழக்கமான பாணியில் இப்புத்தகம் இல்லை.

ஜெயமோகன் அவரது அரசியல் பார்வையை முன்வைக்கிறார். இடதுசாரியா, வலதுசாரியா, குழப்பவாதியா என்று பல கேள்விகள். ஜெ அவரை ஒரு சாமானிய தரப்பாகவே நிறுத்தி கொள்கிறார். ஆனால் அதை வரலாற்று ரீதியாக அணுகி, ஒரு பெரும் சித்திரத்தை நம்மிடம் கொடுத்து, நம்மை சிந்திக்க வைக்க வேண்டும் என்று முயல்கிறார். அதில் அனேக இடங்களில் வெற்றி காண்கிறார். இதை முன்முடிவுகள் இன்றி ஒரு வாசகன் அணுகுவான் என்றால், பல புதிய பரிமாணங்களை அறியக் கூடும். சாமானிய அரசியல் என்பது காந்தியின் அரசியல், அது தான் எனது அரசியலும் என்கிறார் ஜெயமோகன். திராவிட இயக்கத்தை நிராகரிக்கிறார். மேடை, நாடகம், சினிமா இயக்கம் தான் திராவிட இயக்கம், அறிவுக்கு அடிப்படையான எழுத்தை அது என்றுமே பேணவில்லை. பரப்பிய இயக்கம் (populist), அதன் வெளிப்பாடாக பாமர தனமான நோக்கத்திலே அனைத்தையும் அணுகும். மக்களை கேளிக்கை நோக்கியே செலுத்துகிறது. இவை அனைத்தும் முக்கியமான காரணங்களாக தெளிவு படுத்தி திராவிட இயக்கத்தை முழுமையாக நிராகரிக்கிறார்.

சுனாமி பேரழிவு, மலேசிய வன்முறை, கேரள வன்முறை, நீர் பங்கீடு என பதிவுகள் இருக்கிறது. அதில் எனக்கு சுனாமி மற்றும் மலேசிய கட்டுரைகள் மிக முக்கியமானவை என்று பட்டது. அரசு சுனாமி போன்ற இயற்கை பேரழிவை கையாள முடியாமல் இருந்த நிலையில், சமய பண்பாட்டு மற்றும் தனியார் குழுக்கள் இத்தருணத்தில் ஆற்றிய பணியை ஜெ பதிவிட்ட இடம் ஆச்சரியமும் நெகிழ்ச்சியும் அடைய செய்கிறது. மக்கள் பட்ட அவதி பதற வைக்கக்கூடிய ஒன்று. அத்தனை ஆயிரம் உயிர்கள் மாண்டும், பாதிக்கப்பட்ட மக்கள் சில தினங்களில் மீன் பிடிக்க சென்றதை அறியும்போது, மானுடம் அவ்வளவு எளிதாக வீழ்த்த கூடிய ஓன்ற அல்ல என்று தோன்றுகிறது. இதில் மத அரசியல், கமிஸன் வாங்கும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள், கலகம் மூட்டும் எதிர் கட்சிகள் அனைவரையும் வெறுக்க செய்கிறது. ஜெ நேரடி அனுபவம் பெற்றதால், நமக்கும் அந்த உணர்வு வந்து விடுகிறது. நான் சுனாமி வந்த போது நான்காம் வகுப்பு படித்து வந்தேன், ஒன்றும் அறியாத பருவம். இந்த பதிவு முக்கியமான தகவல்களோடு பேரனுபவத்திற்கானது.

மலேசிய வன்முறை பற்றி படிக்கும் போது கபாலி படம் தான் உடனே நினைவுக்கு வந்தது. இந்திய வம்சாவளி மலேசியர்கள் மீது 2001 மார்ச் மாதம் நடந்த வன்முறை பற்றி தான் இக்கட்டுரை. இனவாத வன்முறை, இதற்கு குழு மனப்பான்மை முக்கியமான காரணம். இப்படி ஒரு வன்முறை நடந்தது என்பதே நான் இக்கட்டுரை மூலம் தான் அறிந்து கொண்டேன்.

சோதிபிரகாசம் எழுதிய ‘வாழ்க்கையின் கேள்விகள்’ என்ற நூலுக்கு முன்னுரை ஜெ எழுதி இருக்கிறார். இதில் மார்க்சியம் பற்றி விரிவாக விவாதிக்க பட்டிருக்கிறது. பெரும்பாலான இடங்களில் மார்க்சியம் அடைந்த நடைமுறை தோல்விகளை சுற்றி காட்டி அதை நிராகரிக்கிறார் ஜெ. இலக்கியம், மதம், கடவுள் நம்பிக்கை, பொருளாதாரம், நுகர்வு கலாச்சாரம் பற்றியும் இதில் உள்ளது. இதை புரிந்து கொள்ள நான் சிரமப்பட்டேன்.

சாட்சி மொழி பற்றி இது முழுமையான ஒன்றாக இருக்காது. என் புரிதல், நான் முக்கியமாக கருதியவை மட்டுமே. நம் புரிதல், அறிதலுக்கு அப்பால் பல தரப்புகளும், நிகழ்வுகளும் உள்ளது என்பதை எனக்கு இப்புத்தகம் திரும்பவும் நினைவூட்டிய ஒன்று. மேலும் வாசிக்க வேண்டும், மேலும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையுடன் நிறைவு செய்தேன்.

-அன்புடன் சபரிநாத்,

சோளிங்கர்.

***

அன்புள்ள சபரிநாத்

எனக்கு அரசியல் கருத்துக்களைப் பொறுத்தவரை ஒரு புரிதல் உண்டு. தெளிவான அறுதியான அரசியல்நிலைபாடு எழுத்தாளனுக்கு உகந்தது அல்ல. அது அவனுடைய பார்வையை முன்கூட்டியே வகுத்துவிடும். அதன்பின் அவனுக்கு எதுவுமே கிடைக்காது. அவனுடைய அறவுணர்வு, சூழ்நோக்கு ஆகிய இரண்டையும் அளவுகோலாகக் கொண்டு இயல்பாக உசாவியபடியும் வெளிப்படுத்தியபடியும் செல்லவேண்டும் என்று நினைக்கிறேன். ‘எழுத்தாளனின் அரசியல்’ என நான் சொல்வது இதையே

இது இரண்டு முகம் கொண்டிருக்கும். சாமானியனின் குரலாக அவன் குரல் ஒலிக்கும். சூழலில் பொதுவாக என்ன எண்ணப்படுகிறதோ அதை காட்டும். கூடவே அவனுடைய நுண்ணுணர்வால் கண்டடையப்பட்ட சில அவதானிப்புகள், சில உருவகங்கள் அதில் இருக்கும். சிலசமயம் தவறாகலாம், சிலசமயம் எவருமே சொல்லாததாக ஆகலாம். ஆனால் அவனுடைய பங்களிப்பு அதுவே, ‘சரியானதை’ மட்டுமே சொல்லவேண்டும் என நினைக்கும் எழுத்தாளன் தான் உணர்ந்ததைச் சொல்லமுடியாதவனாக ஆவான்.

ஏறத்தாழ ஆற்றூர் ரவிவர்மா ஒரு குறிப்பில் கூறியிருப்பதன் இன்னொரு வடிவம் இக்கருத்து. சாட்சிமொழி உட்பட என் நூல்களில் காண்பது இதுவே. ஏதேனும் அரசியல் நிலைபாடு வழியாக அதை மதிப்பிடுபவர்கள் அதை வசைபாடவே முயல்வார்கள். பொதுப்பார்வையில் தென்படாத சிலவற்றை அதில் கண்டடைபவனே இலக்கியவாசகன், இவை அவனுக்காக எழுதப்படுகின்ரன.

ஜெ

***

அரசியலாதல்

அழியாத சாட்சி

இன்றைய அரசியல்

அரசியல்சரிநிலைகள்

எனது அரசியல்