இமைக்கணத்தில் நிகழ்ந்தது

 

ஒரு பேருரையில் நித்ய சைதன்ய யதி சொன்ன ஒற்றைவரியிலிருந்து தொடங்குகிறது இமைக்கணம். பகவத்கீதையை கிருஷ்ணன் நாமறிந்த ஆளுமைகளுக்குச் சொல்லியிருந்தால் நேருவுக்கு சாங்கிய யோகத்தைச் சொல்லியிருப்பார்.காந்திக்குக் கர்மயோகத்தையும் விவேகானந்தருக்கு ஞானயோகத்தையும் சொல்லியிருப்பார். மோக்ஷசன்யாச யோகம் ரமணருக்குச் சொல்லப்பட்டிருக்கும்’ நித்யாவின் வழி எப்போதுமே சற்றே வேடிக்கை கலந்து நம் கற்பனையையும் அறிதல்முறையையும் சீண்டுவது. அந்த வரி என்னை நெடுங்காலம் தொடர்ந்து வந்தது. இமைக்கணத்தின் கரு அதுவே

வெண்முரசு வாசிப்பவர்கள் இதற்குள் அறிந்த ஒன்று கீதையைப்பற்றிய வெண்முரசின் அணுகுமுறை. மகாபாரதப்போரில் கீதை உரைக்கப்படவில்லை, கீதைக்காகவே மகாபாரதப்போர் நிகழ்ந்தது என்பதே அதன் தரிசனம். அனைத்து மக்களுக்கும் தங்களுக்கான வேதங்கள் உள்ளன. அவற்றிலிருந்து தொகுக்கப்பட்டது நால்வேதம். நால்வேதத்தின் தொடர்ச்சியும் எதிர்நிலையுமே நாராயணவேதம். அதாவது கீதை. கீதையின் பீடமே மகாபாரதம். அதன் முன்னோடிநூல்கள் உபநிடதங்களும் கீதையிலேயே குறிப்பிடப்படும் பிரம்மசூத்திரமும். வேதங்களுக்கும் வேதாந்தத்திற்குமான முரண்பாடு, அல்லது முரணியக்கம் கீதையிலேயே சொல்லப்பட்ட ஒன்று. அதையே வெண்முரசு மொத்த மகாபாரதமாக விரித்துக்கொள்கிறது.

ஆகவே வெண்முரசில் கீதை களத்தில் நிகழவில்லை. அது கிருஷ்ணனால் அர்ஜுனனுக்கு உரைக்கப்படுகிறது— பிறிதொரு மெய்வெளியில். அதேசமயம் அது அனைத்து மகாபாரதக் கதைமாந்தர்களுக்கும் அவரவருக்கு உகந்த வடிவில் உரைக்கப்படுகிறது. இமைக்கணக் காடு என இங்கே சொல்லப்பட்டிருக்கும் நைமிஷாரண்யத்தில்தான் பின்னர் மகாபாரதக் கதை முழுதுறக் கூறப்பட்டது. ஆகவே அதுவே கீதைக்குரிய காடு. இந்நூல் வெண்முரசு வெவ்வேறு நூல்களினூகாகச் சொன்ன வேதாந்தக் கருத்துக்களை புனைவுவடிவில் அளிக்கும் ஒரு தனிநூல்.

வெண்முரசில் இதன் பின்னரே போர் தொடங்குகிறது. இதில் பேசப்பட்டவை மீண்டும் அறநிலமான குருநிலையில் கண்டடையப்படுகின்றன.

நாராயணகுருகுலத்தின் சுவாமி வியாசப்பிரசாத் அவர்களுக்கு இந்நூல் காணிக்கை

ஜெ

கிழக்கு வெளியீடாக வரவிருக்கும் வெண்முரசுஇமைக்கணம் நாவலுக்கு எழுதிய முன்னுரை

 

முந்தைய கட்டுரைகருத்துச்சுதந்திரம் காப்போம் !!!
அடுத்த கட்டுரைராஜராஜன் பற்றி பா. ரஞ்சித் பேசியதும் வரலாறும்