‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-14

பகுதி மூன்று : பலிநீர் –

அஸ்தினபுரியில் கனகரின் பித்து தொட்டுத்தொட்டு படர்ந்து செறிந்துகொண்டிருந்தது. போர் தொடங்கியபோதே எழுந்தது அது. ஒருநாளில் ஒன்றுடனொன்று தொடர்பில்லாத நூறு பணிகள் அவர்மேல் வந்து விழுந்தன. நாழிகைக்கு நூறு ஆணைகளை இடவேண்டியிருந்தது. ஆனால் அவற்றை இயற்றும் அமைப்பு முழுமையாகவே அழிந்துவிட்டிருந்தது. நாளும் வந்துகொண்டிருந்த ஒற்றர்களில் பெரும்பாலானவர்களை அவர் முன்னர் நேரில் சந்தித்திருக்கவில்லை. ஏவலர்கள் அனைவருமே புதியவர்கள். அமைச்சர்களிலேயே பெரும்பாலும் அனைவரும் காடேகிவிட்டிருந்தனர். துரியோதனனுக்கு கங்கைநீர் தொட்டு சொல்லுறுதி எடுத்துக்கொண்டவர்கள் அவர்கள். குடிகளிலேயே ஒரு பகுதியினர் அஸ்தினபுரியைத் துறந்து அயல்நிலங்களுக்குச் சென்றுவிட்டிருந்தனர். கானேகிய அமைச்சர்களின் அடுத்த தலைமுறையினரான இளம் அந்தணர்கள் தந்தையரின் இடங்களில் அமைச்சர்களாக பணியாற்றினர்.

ஆகவே அவர் தன்னிடம் வந்த அத்தனை சொற்களையும் பலமுறை கேட்டு புரிந்துகொள்ள வேண்டியிருந்தது. அதைவிட தன் ஆணைகளை சொல்லிச்சொல்லி புரியவைக்க வேண்டியிருந்தது. எனினும் ஒவ்வொன்றும் சற்றுப் பிழையாகவே நிகழ்ந்தன. ஆனால் அப்பிழைகளின் எதிர்வினைகள் பெரியவையாக இருந்தன. அவர் ஒவ்வொருநாளும் சலித்துக் களைத்து உள்ளம் பொருளற்ற சொற்களின் கிடங்காக மாறிவிட்டிருக்க பின்னிரவில் படுக்கச் சென்றார். அதன் பின்னரும் துயில நெடும்பொழுதாகியது. மங்கலான விளக்கொளியில் ஏடுகளை வாசித்துப்பார்த்தார். அந்தியை அணுகும்போது வெந்நீரில் நீராடி பசும்பால் அருந்திப்பார்த்தார். துயில் அணையவில்லை. ஆகவே மருத்துவரிடம் கேட்டார். “அந்தணர் மது அருந்தலாகாது, அமைச்சரே. ஆனால் சிவமூலி அவர்களுக்கும் உரியதே” என்றார் மருத்துவர்.

கனகர் “சிவமூலியா?” என்று தயங்கினார். “எனில் சற்றே ஃபாங்கம் அருந்தலாம்… மயக்கம் அளிக்கும். உள்ளத்தில் சொற்சுழல் அடங்கினால் துயில்கொள்ள முடியும்” என்றார் மருத்துவர். “நான் உள்ளத்தை வைத்து விளையாடவேண்டியவன்… இந்த மயக்கப்பொருட்கள் அகத்தை மழுங்கடித்துவிடுபவை” என்றார் கனகர். ஆனால் அவரால் அதைக் கடக்கமுடியவில்லை. ஏழெட்டு நாட்களுக்குப் பின் அவரே மருத்துவரிடம் “சற்றே ஃபாங்கம் கொண்டுவருக. ஆனால் அது வேறொரு மருந்தின் வடிவிலிருக்கவேண்டும். எவர் செவிக்கும் செய்தி சென்றுவிடக்கூடாது” என்று ஆணையிட்டார். “அதை அறிவேன். நான் அதை லேகியத்தின் வடிவில் அளிக்கிறேன். மணம்கூட நெல்லிக்காயுடையதாகவே இருக்கும்” என்றார் மருத்துவர். “முன்பும் அமைச்சர்கள் ஃபாங்கம் உண்டது உண்டு… அதற்குரிய நோன்புநிகர்ச் சடங்குகள் உள்ளன.”

உண்மையில் சுவையிலும் வேறுபாடு தெரியவில்லை. அதில் ஓர் உருளையை விழுங்கிவிட்டு படுத்தபோது எந்த வேறுபாடும் தெரியவில்லை. தன்னில் என்ன நிகழ்கிறது என்று கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தார். ஒன்றுமே நிகழவில்லை. தன் உள்ளத்திற்கு அதனால் பயனில்லை போலும் என எண்ணிக்கொண்டார். ஆனால் மறுநாள் எண்ணிநோக்கியபோதுதான் ஆழ்ந்து உறங்கியிருப்பதை அறிந்தார். இறுதியாக நெடும்பொழுது அகல்சுடரை வெறித்துக்கொண்டே இருந்ததும், அது கிளம்பி மிக அருகே வந்து காற்றில் தொங்கிநிற்பதுபோல நின்று அசைந்ததும் நினைவிலெழுந்தது. மறுநாள் மெல்லிய ஆர்வத்துடன் அதை உண்டார். சுடரை நோக்கிக்கொண்டிருந்தார். ஒன்றும் நிகழவில்லை. அது வெறும் உளமயக்கா? ஆனால் மெல்ல சித்தம் கரைந்தபோது சுடர் அவர் அருகே நின்றிருந்தது. விழித்தெழுந்தபோது வாயிலில் ஏவலன் காலைக்கடனுக்குரிய மரவுரியும் நறுமணப்பொருட்களுமாக நின்றிருந்தான்.

பின்னர் ஒவ்வொருநாளும் அவருக்கு அந்தியிலேயே அந்த உளக்கிளர்ச்சி உருவாகத் தொடங்கியது. எப்போது பணிகளை முடிப்போம், அறைக்குள் சென்று லேகியத்தை உண்போம் என உள்ளம் துழாவிக்கொண்டே இருந்தது. அப்படி ஒரு பிறர் அறியாச் செயல் இருப்பதே இனிமையாக இருந்தது. இளஅகவைக்குப் பின் அவரிடம் பிறர் அறியாத தனிச்செயல் என ஒன்று இருந்ததில்லை. பின்னர் அவர் வாழ்க்கையின் ஒரு பகுதியாக அது ஆகியது. ஆனால் ஃபாங்கம் அவரை துயிலச் செய்தாலும் அவருடைய காலைகள் ஊக்கமளிப்பவையாக விடியவில்லை. கண்ணிமைகள் தடித்து தொங்க, வாய் உலர்ந்து உயிரில்லாதது போலிருக்க, எச்சிலில் சற்றே கசப்பு மிஞ்சியிருக்க, தசைகளிலும் எலும்புப்பூட்டுகளிலும் உளைச்சலுடன் காலையில் எழுந்தார். நடை தள்ளாட நீராட்டறைக்குச் சென்றார். “நான் ஒவ்வொரு துயிலிலும் சற்றே இறந்துவிடுகிறேன் எனத் தோன்றுகிறது, மருத்துவரே” என்றார் கனகர்.

மருத்துவர் “இனிப்பு உண்க, காலையில் இனிமையால் நாவை நிறையுங்கள். உடலுக்குள் அகிபீனாவின் தேவனாகிய ருத்ரன் எழவேண்டும். அவனுக்கான படையல் அது” என்றார். அவர் காலையிலேயே ஆலயத்திலிருந்து வெல்லமிட்ட பொங்கல் கொண்டுவரும்படி சொல்லி உண்டார். அது அவரை மீட்டது. மெல்லமெல்ல அவருடைய ஊக்கம் மிகுந்து வந்தது. சித்தம் முன்னைவிடக் கூர்மை கொண்டது. ஆனால் அவ்வளவு கூர்கொள்ளும்தோறும் அவருக்கு அமைச்சுச் செயல்பாடுகள் பொருளற்றவையாகத் தோன்றின. பெரும்பாலானவற்றை பிறரிடம் ஒப்படைத்துவிட்டு தன்னை விடுவித்துக்கொண்டார்.

வஜ்ரநாகினி அன்னையின் பூசனை முடிந்த மறுநாள் பாண்டவர்களின் அமைச்சரான சுரேசர் அஸ்தினபுரிக்கு வந்தார். யுயுத்ஸுவுடன் இயல்பாக அவர் வந்தாலும் அது ஒரு ஆட்சிமாற்றச் சடங்கு என கனகர் அறிந்திருந்தார். யுயுத்ஸு தேரிலிருந்து இறங்கிய பின் உடன்வந்த தேரை நோக்கி நின்றபோதுதான் கனகர் அதிலிருந்து இறங்கியவரைப் பார்த்தார். சுரேசர் இறங்கியதும் கனகரைப் பார்த்து வணங்கி இன்முகத்துடன் முகமன் சொன்னார். யுயுத்ஸு “இங்குள்ள பணிகளை இனிமேல் தங்களுடன் சுரேசர் பகிர்ந்துகொள்வார்” என்றான். கனகர் தலைவணங்கினார். முதலில் தோன்றிய எண்ணம் பூசனைநிகழ்வுகள் குறித்து யுயுத்ஸு உசாவக்கூடும் என்பது. ஆனால் அவன் அதை அறிந்திருப்பதாகத் தெரியவில்லை. அவர்களின் ஒற்றர் அமைப்பு வலுவிழந்திருக்கக்கூடும். அல்லது அவர்கள் ஆர்வமிழந்திருக்கலாம்.

“இங்கே அனைத்தையும் மீண்டும் தொடங்கவேண்டியிருக்கிறது. அவையும் அங்காடியும் புதிதாக ஒருங்கவேண்டும். தெய்வச்சடங்குகளேகூட ஏராளமாக உள்ளன. அதை நீங்கள் தனியாகச் செய்ய இயலாது. சுரேசர் உடனிருப்பார்” என்றான் யுயுத்ஸு. கனகர் அனைத்தையும் உடனே புரிந்துகொண்டார். பூசனைச்செய்தி அவர்களைச் சென்றடைந்துவிட்டிருக்கிறது. அது அவர்களுக்குப் பொருட்டாகத் தெரியவில்லை. ஆனால் அவர்கள் அதை தங்கள் அறிதலுக்கு அப்பால் நிகழ்வதை விரும்பவில்லை. அவர் சுரேசரிடம் “வருக” என்றார். யுயுத்ஸு முறைப்படி வரவேற்கப்பட்டு அரண்மனைக்குள் கொண்டுசெல்லப்பட்டான்.

இடைநாழியில் நடக்கையில் சுரேசர் புன்னகையுடன் “தங்கள் மைந்தர் கானேகிய செய்தியை அறிந்தேன், கனகரே. என்னைவிட மூன்று அகவை இளையவன்… நாங்கள் ஒரு சாலை மாணாக்கர்” என்றார். அதை அவர் ஏன் சொன்னார் என்று கனகர் குழம்பினார். தன்னை எவ்வகையிலேனும் சீண்டுகிறாரா? நிலைகுலைவேன் என எண்ணுகிறாரா? ஆனால் அதை அவர் இயல்பாகக்கூடக் கேட்டிருக்கலாம். என் உள்ளம்தான் திரிபடைந்திருக்கிறது. அவர் மங்கலாகப் புன்னகைத்து “ஆம், அறிவேன். அவன் இருக்குமிடம் தெரியவில்லை. நன்று நிகழ்க அவனுக்கு என்று வாழ்த்துவதன்றி தந்தையென நான் செய்வதற்கொன்றுமில்லை” என்றார். “குடியில் ஒருவர் துறவுகொள்வது தெய்வங்களின் ஆணை. மூதாதையர் விழைவு” என்றார் சுரேசர். கனகர் “ஆம்” என்றபின் நீள்மூச்செறிந்தார். அவ்வுரையாடல் அவர்களை அணுக்கமாக்குவதற்கு மாறாக மேலும் விலக்கியது.

முதலிரு நாட்கள் அவருக்கு சோர்வும் கசப்பும் இருந்தது. அனைத்தையும் அப்படியே விட்டுவிட்டு விதுரர் வாழ்ந்த குடிலுக்குச் சென்றுவிடலாமா என்றுகூட அவர் எண்ணிப்பார்த்தார். ஆனால் அது தன்னால் இயலாதென்றும் அறிந்திருந்தார். அந்த இடமும் பொறுப்புமே அவருடைய அடையாளமாக இருந்தன. அவை இல்லையேல் எஞ்சுவது ஒன்றுமில்லை. விதுரருக்கு அமைச்சுப்பொறுப்பு ஆடை, எனக்கு உடல் என அவர் சொல்லிக்கொண்டார். அவர் அரண்மனையிலேயே வளர்ந்தவர். பாம்பு தோலை உரிக்கும், ஆமை ஓட்டுக்குள்ளேயே இறக்கும் என்று எண்ணி அவரே பெருமூச்செறிந்தார்.

சுரேசர் கடுமையாகவும் இளக்காரமாகவும் தன்னை நடத்துவதைப்போல கற்பனைசெய்துகொண்டு வெவ்வேறு நிலைகளில் சீற்றமும் தன்னிரக்கமும் விலக்கமும் கொண்டார். அவ்வாறு அவர் தன்னை நடத்திவிட்டதாகவே நடந்துகொண்டார். ஆனால் சுரேசர் மிக மிக நுண்ணுணர்வுடனும் பொறுப்புடனும் நடந்துகொண்டார். அவர் எல்லா ஆணைகளையும் கனகரிடம் ஒரு வேண்டுகோளாக முன்வைத்து அவருடைய சொற்களினூடாக அது வெளிப்படும்படி செய்தார். தன் கருத்துக்களை பரிந்துரைகளாக முன்வைத்தார். பிறர் முன்னால் ஒருபோதும் கனகரிடம் மாற்றுக்கருத்து சொல்லவில்லை. எப்போதும் பணிவுடனும் முகமலர்வுடனும் மட்டுமே பேசினார். மெல்லமெல்ல கனகர் எல்லா பொறுப்பையும் சுரேசரிடமே விட்டார். “நீங்களே முடிவெடுங்கள், உத்தமரே. நீங்கள் இளையவர், எனில் என்னை விடவும் கற்றவர்” என்றார். “இவ்வரண்மனையின் பொறுப்பு உங்களுக்கு அஸ்தினபுரியின் பேரமைச்சரால் அளிக்கப்பட்டது. அந்த கணையாழி உங்களிடமே உள்ளது. நான் தங்கள் பணியாளன் மட்டிலுமே” என்றார் சுரேசர்.

ஆனால் சுரேசர் அரண்மனையின் அனைத்து நடத்துகையையும் ஒருசில நாட்களிலேயே கையிலெடுத்துக்கொண்டார். மெல்லமெல்ல நாடெங்குமிருந்து வந்துகொண்டிருந்த ஒற்றர்செய்திகளை முறைப்படுத்தினார். தான் செய்யத் தவறியது என்ன என அதன் பின்னரே கனகர் அறிந்தார். ஒற்றர்கள் மேல்கீழ் அடுக்குகளினால் ஆனவர்கள். கீழ்நிலை ஒற்றர்கள் அனைத்துச் செய்திகளையுமே மேலே அனுப்புகிறார்கள். மேலே உள்ள ஒற்றர்கள் அவற்றில் உரியவற்றை மட்டும் தனக்கு மேலே அனுப்புகிறார்கள். பல செய்திகளை தொகுத்து ஒற்றைச்செய்திகளாக்குகிறார்கள். செய்திகளுடன் தங்கள் கருத்துக்களையும் இணைக்கிறார்கள். போர்க்காலத்தில் தலைமை ஒற்றர்கள் கொல்லப்பட கீழிருந்தவர்கள் மேலேறியபோது அவர்களில் பலரால் மேலிருந்து செயல்பட இயலவில்லை. ஆகவே அவர்முன் ஒற்றுசெய்திகள் நாளும் மலையெனக் குவிந்தன. அவர் அனைத்தையும் படித்தறிய இயலாமல் சீற்றம்கொண்டார். எரிச்சலுடன் பெரும்பாலானவற்றை படிக்காமல் ஒதுக்கினார். படித்தவற்றை மட்டும்கொண்டு கருத்துக்களை உருவாக்கினார். அவை பிழையாக ஆயின.

சுரேசர் ஒற்றர்களில் எவர் மேலே அமையும் தகுதிகொண்டவர் என கணித்தார். அவர்களை மேலே கொண்டுவந்து பதவியளித்தார். அவர்களுக்கு இணையான நிலையிலிருந்த ஆனால் அத்தகைய திறன் இல்லாத ஒற்றர்களுக்கு ஏதேனும் பட்டத்தையோ பரிசையோ கொடுத்து நிறைவுசெய்தார். ஓரிரு நாளிலேயே ஒற்றர்களின் மேல்கீழ் அமைப்பு ஒழுங்குகொண்டது. ஏவலர்கள் அனைவருமே இளைஞர்கள், முன்னர் பணியாற்றிய பட்டறிதல் அற்றவர்கள். ஆகவே அவர்கள் ஒவ்வொன்றுக்கும் செய்வதறியாது குழம்பினர். ஆளுக்கொரு முடிவெடுத்து ஒருவரோடொருவர் மோதிக்கொண்டனர். அவர்கள் முடிவெடுக்க முடியாமல் இருக்கையில்கூட சற்றே உள்ளொழுங்கு நிலைகொண்டது. சிறந்த முடிவுகளை எடுத்துவிட்டால் அம்முடிவுகள் விசையுடன் மோதிக்கொண்டன. முடிவெடுத்தவர்கள் தங்கள் ஆணவங்களையே முன்வைத்தனர்.

பட்டறிவின் பயன் என்ன என்பதை அப்போதுதான் கனகர் புரிந்துகொண்டார். பட்டறிவு முன்னர் நிகழ்ந்து நல்விளைவை உருவாக்கிய முடிவையும் செயல்பாட்டையும் நினைவுகூர்கிறது. அதையே மீண்டும் பரிந்துரைக்கிறது. அரசு என்பது மீளமீள நிகழ்வது. மீளமீள நிகழ்கையிலேயே அரசு உறுதியாக இருக்கிறது. மாற்றமின்மையே அரசின் ஆற்றலை உருவாக்குகிறது. ஏனென்றால் அரசு என்பது அதன் குடிகளிடம் திகழும் ஒரு நம்பிக்கையின் குவிமையம். மாற்றமில்லாமையையே மக்கள் விழைகிறார்கள். ஆலயக்கருவறையில் இருக்கும் தெய்வம் என்ன என்று அறிந்திருப்பதுபோல. எது எவ்வண்ணம் மாறினாலும் அது அவ்வண்ணம் இருக்கும் என்னும் நம்பிக்கையே ஆலயத்தெய்வத்தின் அருள் எனக் கருதப்படுகிறது. அரசுச் செயல்பாடுகள் எண்ணியபடியே நிகழ்கையில் குடிகள் நிறைவடைகிறார்கள். ஊழியர்கள் இயல்பாக இருக்கிறார்கள். மேலாளர்கள் சுமையில்லாமல் செயல்படுகிறார்கள்.

ஒரு சிறு புதிய செயல்பாடுகூட அரசை நிலைகுலையச் செய்கிறது. விசையுடன் ஒன்றுடன் ஒன்று கவ்விச் சுழலும் பற்சகடங்களின் நடுவே சிறு கல் ஒன்று சிக்கிக்கொண்டதுபோல ஓசையும் அனலும் உருவாகிறது. அனைத்தும் நிலைகுலைகின்றன. ஆனால் புதியவர்களுக்கு முன்பு நிகழ்ந்தவை எதுவும் தெரிந்திருக்கவில்லை. முறைமைகள் பொருளற்றவையாகத் தோன்றின. பெரும்பாலானவர்கள் பதினாறு அகவைகூட ஆகாத சிறுவர்கள். கல்விநிலையிலிருந்து நேரடியாகவே அமைச்சுப்பணிக்கு வந்தவர்கள். ஆணைகளையே மும்முறை சொல்லவேண்டியிருந்தது. அந்த ஆணை நிறைவேற்றப்பட்டதா என மீண்டும் நோக்கவேண்டியிருந்தது. அதன் பிழைகளைச் சுட்டிக்காட்ட வேண்டியிருந்து. அவை ஏன் பிழைகள் என அவர்களுக்குப் புரியவைக்கவும் வேண்டியிருந்தது. ஆயினும் குடிகள் திகைப்படைந்தனர். அவர்கள் முன் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்து இன்னொருவரிடம் உசாவும் அரசுப்பணியாளன் அவர்களைக் கைவிடும் ஒரு தெய்வத்தின் விழித்தோற்றம். அரசு முடிவெடுக்காது என எண்ணியபோது அவர்களின் சிக்கல்கள் மேலும் பெருகின.

ஒவ்வொரு முடிவும் பிறிதொன்றுடன் முரண்பட பல நாட்கள் அஸ்தினபுரியே உறைந்துகிடந்தது. போர்நாட்களில் அவ்வாறு இருக்கவில்லை. அப்போது பானுமதி ஊக்கத்துடன் இருந்தாள். ஒவ்வொன்றுக்கும் அவளிடமிருந்து ஆணைகள் வந்தன. அன்று நகரம் மிகமிகச் சிறிதாகச் சுருங்கிவிட்டிருந்தது. நகரில் வணிகமும் தொழிலும் பெரும்பாலும் இல்லாமலாகிவிட்டிருந்தன. சிறுபூசல்கள் அனைத்தும் நின்று அனைவருமே போரை எண்ணிக்கொண்டிருந்தனர். ஆனால் போர்முடிந்ததும் அனைத்தும் முன்னைவிட விசையுடன் எழுந்தன. ஒவ்வொன்றிலும் புதிய சிக்கல்கள் உருவாயின. “அஸ்தினபுரியையே மீண்டும் புதிதாக கட்டி எழுப்பவேண்டியிருக்கிறது என தோன்றுகிறது” என்று கனகர் சொன்னார். பழைய வணிகர்கள் வராமலானார்கள். வந்துசேர்ந்த புதிய வணிகர்களுக்கு அங்காடியில் நெடுங்காலமாக அமைந்திருந்த முறைமைகள் ஏதும் தெரியவில்லை. ஆயர்களும் வேளாண்குடிகளும் மீண்டு வந்து தொழில்தொடங்கியபோது பூசல்கள் நாளும் நூறு ஆயிரமென வெடித்துப் பெருகின.

முன்பே அளிக்கப்பட்டிருந்த சொற்களை நினைவுகூர்வோர் சிலரே இருந்தனர். நீர்க்கடன்கள் செய்வதிலிருந்து மாண்டவரின் உடைமைகளை கைக்கொள்வது வரை ஒவ்வொரு குடியிலும் மோதல்கள் உருவாயின. அரசவையில் பானுமதி அமரவில்லை. ஆகவே அறுதிச்சொல் இன்றி பலநூறு வழக்குகள் காத்து நின்றிருந்தன. “நான் என்ன செய்யக்கூடும்?” என்பதே கனகரின் சொல்லாக இருந்தது. “இது இன்று அரசரில்லா நிலம். நீர்க்கடன்கள் கழிந்து அரசர் நகர்புகுந்து அவையமரவேண்டும். கோல் நிலைகொள்ளவேண்டும். குடியவை நிறையவேண்டும். அதன் பின்னரே ஒவ்வொன்றும் ஒருங்க முடியும். அதுவரை இதை இவ்வண்ணம் உருட்டிக் கொண்டுசெல்வதே என் பணி.” சுரேசர் வந்த மறுநாளே நிலைமையை உணர்ந்துகொண்டார். அதற்கான வழியையும் அவர் கண்டடைந்தார். “மகளிர் இந்நகரை ஆண்டிருக்கிறார்கள். முதுமகளிருக்கு இங்குள்ள முறைமைகள் அனைத்தும் தெரியும். பட்டறிதலின் வளம் அவர்களிடம் உண்டு” என்றார்.

“ஆனால் ஆண்கள் பெண்களின் சொற்களை ஏற்கமாட்டார்கள்… இது அன்னைவழி ஆளும் நாடல்ல” என்றார் கனகர். “ஆம், மைந்தரே பொறுப்பிலிருக்கட்டும். ஒவ்வொரு மைந்தனுக்கும் துணைக்கு பட்டறிவு மிக்க மூதன்னையர் அமைந்த ஒரு சிறு சொல்லவை துணைநிற்கட்டும்” என்றார் சுரேசர். அன்னையர் பொறுப்பேற்றுக்கொண்டதும் இரண்டு நாட்களிலேயே ஒவ்வொன்றும் தெளிவுகொண்டன. மிகச் சிக்கலான நூல்கண்டை ஓரிரு இழுப்புகளில் தனித்தனியாகப் பிரித்து நேர்செய்வதுபோல சுரேசர் அனைத்தையும் சீரமைத்தார். கனகர் தன்னிடமிருந்து எல்லா பொறுப்பும் அகன்றுவிட்டதை பத்து நாட்களுக்குள் உணர்ந்தார். ஆனால் எல்லா ஓலைகளும் அவர் பெயருடனேயே சென்றன. அவர்தான் ஒவ்வொருநாளும் பானுமதியைச் சந்தித்து நிகழ்வனவற்றை சுருக்கிச் சொன்னார்.

பானுமதி எதையும் செவிகொள்ளவில்லை. அவள் ஒவ்வொருநாளும் மெலிந்துகொண்டிருந்தாள். அத்தனை விரைவாக மானுடர் உருவழியமுடியுமா என்பதே அவருக்கு எண்ணத்தொலையாததாக இருந்தது. அவளுடைய முகத்தசைகள் சுருங்கி, பற்கள் உந்தி வெளிவந்தன. கண்கள் குழிந்ததும் முகத்திலிருந்த மலர்ச்சி மறைந்தது. புன்னகைத்தாலும் முகம் மலராமல் ஆகியது. தலைமுடியில் நரை தோன்றியது. பெரும்பாலான பொழுதுகளில் அவள் தன் தனியறையிலேயே இருந்தாள். வெண்ணிற ஆடை அணிந்து மங்கலங்கள் ஏதுமின்றி மரவுரியிட்ட பீடத்தில் அமர்ந்திருந்தாள். அவர் அரசுச்செய்திகளைச் சொல்லி முடித்ததும் மிக மெல்லிய குரலில் ஓரிரு ஆணைகளை மட்டும் பிறப்பித்தாள். அவளருகே அவளைப் போலவே தோன்றிய அசலையும் இருந்தாள். அவள் எச்சொற்களையும் செவிகொள்ளவில்லை. சாளரம் வழியாக வெளியே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். அவர்கள் உள்ளத்தால் அங்கிருந்து நெடுநாட்களுக்கு முன்னரே கிளம்பிவிட்டிருந்தார்கள். போர்குறித்த எச்செய்தியையும் கேட்க அவர்கள் விரும்பவில்லை. அன்றாடச் செய்திகளை மட்டுமே அறித்தால் போதுமென அரசியின் ஆணை இருந்தது.

பானுமதி ஒரே ஒருமுறை மட்டும் “நீர்க்கடன்கள் முடிய எத்தனை காலமாகும்?” என்றாள். “நீர்க்கடன்களுக்கு நூல்கள் வகுத்த நெறிகள் உள்ளன அரசி. பிராமணர் பத்து நாட்களிலும் ஷத்ரியர் பன்னிரண்டு நாட்களிலும் வைசியர் பதினைந்து நாட்களிலும் சூத்திரர் ஒரு மாதத்திலும் இறப்புத்தீட்டு அழிகிறார்கள் என்பது நூல்வகுப்பு. அங்கே விதுரர் இருக்கிறார். அவருக்கும் நீர்க்கடன் பொறுப்பு உண்டு. ஆகவே ஒரு மாதமாகலாம்” என்று கனகர் சொன்னார். பானுமதி ஒன்றும் சொல்லவில்லை. சற்றுநேரம் காத்துவிட்டு “பேரரசர் திருதராஷ்டிரர் நீர்க்கடன் முடிந்து பதினொரு நாட்கள் கடந்தபின் நகரணையக்கூடும். தங்கள் முடிப்பொறுப்பை அவரிடம் ஒப்படைத்துவிடலாம். அவரிடமிருந்து பாண்டவ அரசர் பெற்றுக்கொள்வார்” என்றார். “நான் நீர்க்கடன் முடிந்து பேரரசர் இங்கே வந்த அன்றே காசிக்குக் கிளம்பவேண்டும். அனைத்தும் ஒருங்கியிருக்கட்டும். என் நோக்கம் அவர்களுக்கும் அறியப்படுத்தப்பட வேண்டும்” என்று பானுமதி சொன்னாள். “முடிசூட்டுவிழாவுக்கு…” என்று கனகர் சொல்ல “எந்த விழாவிலும் நான் பங்கெடுக்கக்கூடாது…” என்று பானுமதி சொன்னாள். கனகர் தலைவணங்கினார்.

யுயுத்ஸு மூன்று நாட்களுக்கு ஒருமுறை கங்கைக்கரையில் அஸ்தினபுரிக்கு வந்து ஒருநாள் தங்கி மறுநாள் கிளம்பிச் சென்றான். அவனுடைய வருகையால்தான் அஸ்தினபுரி அரசர் என ஒருவர் எங்கோ இருக்கும் உணர்வை அடைந்தது. அவனிடமிருந்து எழுவன யுதிஷ்டிரன் சொல்லும் சொற்கள் என்று கனகர் எண்ணினார். சுரேசரும் அதையே சொன்னார். அவன் மொழியும் சாயலும் யுதிஷ்டிரன் போலவே இருந்தன. அவன் எப்போதுமே யுதிஷ்டிரனை எண்ணிக்கொண்டிருந்தவன். அருகமைந்தபோது விழிகளாலும் அள்ளி உள்ளே அமைத்துக்கொண்டுவிட்டிருந்தான். யுதிஷ்டிரனின் மெல்லிய கூன்கூட யுயுத்ஸுவுக்கும் வந்திருக்கிறது என இளம் அமைச்சரான சூர்யசேனன் சொன்னார். கனகர் “சொற்களை அமைச்சன் வீணடிக்கக் கூடாது. தனக்குள்ளேயே கூட எண்ணித்தான் பேசவேண்டும்” என அவரைக் கடிந்துகொண்டாலும் அது மெய் என்றே உள்ளத்துள் உணர்ந்தார்.

அஸ்தினபுரியின் அரசப்பொறுப்பை யுதிஷ்டிரன் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதனால் பாண்டவர்களிடமிருந்து நேரடியாக ஆணைகள் எவையும் அஸ்தினபுரிக்கு வந்துசேரவில்லை. யுதிஷ்டிரன் உளம் சோர்ந்து சொல்லவிந்து ஒதுங்கியிருப்பதாகவும், நாற்பத்தொருநாள் நீளும் கடுநோன்பு கொண்டிருப்பதாகவும் செய்தி வந்தது. யுதிஷ்டிரனின் ஆணை என யுயுத்ஸுவின் சொற்களே கொள்ளப்பட்டன. பிறிதொன்று எண்ணமுடியாதபடி அவை நெறிசூழ்ந்தவையாகவும் நடைமுறைக்கு உகந்தவையாகவும் இருந்தன.

வஜ்ரநாகினி அன்னையின் பூசனை முடிந்து தன் அறைக்குத் திரும்பிய அன்றுதான் கனகர் முதல்முறையாக பகலில் அகிபீனா குளிகைகளை உண்டார். தன் உடலெங்கும் குருதி வாடை அடிப்பதாக எழுந்த உணர்விலிருந்து அவரால் தப்பவே முடியவில்லை. அன்று சாலையில் புரவியில் வருகையில் செம்புழுதி குருதிச்சேறென்று தோன்றியது. புரவிக்கால்கள் மென்பூழியில் விழுந்தபோது நைந்து துவைந்தவை கருக்குழவிகளின் மெல்லுடல்கள் என தோன்ற அவர் விதிர்த்து நடுங்கிக்கொண்டிருந்தார். பற்கள் கிட்டித்து கண்கள் கலங்கி வழிந்தன. தன் மாளிகையை அடைந்ததும் அவர் நழுவி விழுவதுபோல் புரவியிலிருந்து கீழிறங்கினார். தரையில் கையூன்றி அமர்ந்து தலைதாழ்த்தி வாயுமிழ்ந்தார். ஏவலர் அவரை உள்ளே கொண்டுசென்றனர்.

அவர் மஞ்சத்தறைக்குச் சென்றார். குருதியின் கெடுமணம் உடலெங்கும் பரவியிருப்பதாகத் தோன்ற நீராட்டறைக்குச் செல்ல ஆணையிட்டார். நீராடி நறுஞ்சுண்ணம் பூசி வந்து அமர்ந்தபோது ஏவலர் உணவு பரிமாறினர். ஆவிபறந்த அப்பத்தை கையில் எடுத்தார். அது உயிருள்ள சிறு குழந்தை என நெளிந்தது. மெல்லிய முனகலோசையை அவர் கேட்டார். அலறி அதை வீசிவிட்டு எழுந்து நின்றார். ஏவலர் அவரைக் கூர்ந்து நோக்கியபடி நின்றனர். அவர் கையை உதறியபடி சுவர் அருகே சென்றார். பின்னர் இடையைப்பற்றியபடி அமர்ந்து வாயுமிழ்ந்தார். வயிற்றுக்குள் நீரன்றி ஏதுமிருக்கவில்லை. அவர் வாயுமிழ்ந்தபடியே இருந்தார். பின்னர் விழிகள் வழிய சோர்ந்து அப்பால் அமர்ந்தார்.

அவர்கள் அவரை தூக்கி கொண்டுசென்று படுக்கச்செய்தார்கள். அவர் வலிகண்டவர்போல புரண்டபடியே இருந்தார். ஏவலன் ஒரு கிண்ணத்தில் இன்கூழ் கொண்டுவந்தான். அதைப் பார்த்ததும் மீண்டும் உடல் உலுக்கிக்கொண்டது. “வேண்டாம்!” என்றார். பின்னர் எழுந்து அமர்ந்து அப்பாலிருந்த கலத்தைச் சுட்டி “அதைக் கொண்டுவா” என்றார். “இது…” தயங்கிய ஏவலன் “பகலில்…” என்றான். “கொண்டுவா” என அவர் ஆணையிட்டார். அவன் அதை எடுத்துக்கொண்டுவர இரு உருளைகளை விழுங்கிய பின் மல்லாந்து படுத்துக்கொண்டார். மீண்டும் மீண்டும் வாயுமிழ்வதுபோல உடல் அதிர்ந்துகொண்டிருந்தது. குருதியின் வாடை அவர் மூக்கருகே இருந்து எழுந்தது. அல்லது உடலுக்குள் இருந்து. ஆனால் அவர் துயில்கொண்டுவிட்டிருந்தார்.

அதன்பின் பகல்பொழுதிலும் சற்றே ஃபாங்கம் கலந்த லேகியத்தை உண்ணும் வழக்கம் கனகரிடம் உருவாகியது. சுரேசர் அனைத்தையும் ஒருங்கிணைத்து சீர்ப்படுத்தி தானே செயலாக்கிக்கொண்டும் இருந்தார். காலையில் அமைச்சுநிலைக்கு வந்தால் ஓரிரு ஒற்றுச்செய்திகளை கேட்டபின் வெறுமனே கைகளைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருப்பார். அவ்வப்போது கோழி என விழிசரிந்து வாய் விழுந்து அரைத்துயிலில் ஆழ்ந்து திடுக்கிட்டு விழித்துக்கொள்வார். வெறுமனே அமர்ந்திருக்கையில் எல்லாம் ஃபாங்கம் நினைவிலெழுந்தது. அமைச்சுநிலையில் அதை உண்ணுவது பெரிய குற்றம் என முன்னரே வகுக்கப்பட்டிருந்தது. அவ்வாறு உண்ட பலரை அவர் தண்டனைக்கு அனுப்பியதுமுண்டு. ஓரிரு நாட்கள் போராடிய பின் அவர் சற்றே லேகியத்தை சிறிய வெள்ளிச்சிமிழில் கொண்டுவரத் தொடங்கினார். அதை வெற்றிலையுடன் வைத்து வாயிலிட்டு மென்று விழுங்கினால் சிறிது நேரத்திலேயே உடலில் அனைத்து கட்டுகளும் அவிழும். அத்தனை தசைகளும் தளரும். உள்ளத்தில் ஓரிரு சொற்கள் மட்டும் ஊசலாடிக்கொண்டிருக்கும். அலைநீர்ப்பரப்பில் நெற்றுகள்போல ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற ஒருவகை ஆடல்.

சுரேசர் அமைச்சுநிலைக்குள் புகுந்தபோது கனகர் துயின்றுகொண்டிருந்தார். அவர் இருமுறை அழைத்த பின்னரே விழித்துக்கொண்டார். வாயைத் துடைத்தபடி “என்ன?” என்றார். “பேரமைச்சர் விதுரர் நாளைக் காலை முக்தவனத்தை வந்தடைகிறார். தாங்கள் அங்கே செல்லவேண்டும் என ஆணை வந்துள்ளது” என்றார் சுரேசர். திகைப்புடன் “நானா?” என்றார். “ஆம், தங்களைத்தான் வரச்சொல்லியிருக்கிறார்” என்றார் சுரேசர். “ஆனால் இங்கே…” என கனகர் தயங்க “இங்குள்ள பணிகளை நான் பார்த்துக்கொள்கிறேன். தாங்கள் செல்லலாம்… அரசு ஆணைக்கு நிகர் அமைச்சரின் ஆணை” என்றார் சுரேசர். “ஆம்” என்றபின் கனகர் “நான் நாளை புலரியிலேயே கிளம்புகிறேன்” என்றார். சுரேசர் மேலும் ஏதோ சொல்ல விழைந்து பின்னர் அதை ஒழிந்து தலைவணங்கி அகன்றார்.

அவர் செல்லும்போது சொல்லாக எழாத உதட்டு அசைவை கனகர் எண்ணிக்கொண்டிருந்தார். அவர் சொல்ல வந்தது என்ன? அவர் எழுந்துசென்று வாயை கழுவிவிட்டு வெற்றிலைச்செல்லத்தை திறந்தார். உள்ளே வெள்ளிச்சிமிழ் இருந்தது. அவருக்கு சுரேசர் சொல்லவந்தது புரிந்தது. அவரைப் பார்த்ததுமே விதுரர் உணர்ந்துவிடக்கூடும். அவர் அச்சத்தால் அடித்துக்கொண்ட நெஞ்சுடன் அந்த வெள்ளிச்சிமிழிலிருந்த ஃபாங்கத்தை வழித்து சாளரம் வழியாக வெளியே வீசினார். சிமிழை தூக்கி உள்ளறைக்குள் போட்டார். உடல் வியர்வைகொண்டிருந்தது. பின்னர் மெல்ல எண்ணங்கள் தெளிந்தன. அவர் முகம் களைத்திருக்கிறது. கண்கள் நீர்மைகொண்டிருக்கின்றன. கையில் நடுக்கு இருக்கிறது. குரலிலேயே கூட இடறல் தெரியலாம். ஆனால் அதெல்லாம் அஸ்தினபுரியில் அனைவரிடமும் இருக்கும் இயல்புகள். இந்தப் போருக்குப் பின் இங்கே தன்னிலையில் இருப்பவர் எவர்? திடுக்கிட்டு எழாது, கொடுங்கனவு இல்லாது துயில்கொள்பவர் எவர்?

அவர் பெருமூச்சுவிட்டார். “ஒன்றுமில்லை… வீண் அச்சம். அவருக்குத் தெரியும்” என எவரிடமோ என தன்னுள் சொல்லிக்கொண்டார். “நான் மட்டுமா? இங்கு அனைவருமேதான்” என்றார். “சொல்வது எளிது, இங்கிருப்பது மேலும் கடினம்… இதுவும் ஒரு போர்க்களம். இங்கே போர் இன்னும் முடியவில்லை” என்றார். சீற்றத்துடன் “விட்டுவிட்டு ஓடியவருக்கு இதைக் கேட்கும் தகுதி உண்டா?” என்றார். கையை ஆட்டி முகம்சுளித்து சினத்துடன் “இங்கே நாங்கள் மட்கி அழிந்துகொண்டிருக்கிறோம். எரிந்தழிவது மிக எளிது!” என்றார். பின்னர் எழுந்து ஏவலனிடம் “நான் கிளம்பி என் மாளிகைக்குச் செல்கிறேன். சுரேசரிடம் சொல்” என்று கூறிவிட்டு இடைநாழியினூடாக நடந்தார். செல்லச்செல்ல அவர் நடை விசைகொண்டது. முகம் மலர்ந்தது. மூச்சுவாங்க தன் மாளிகையை அடைந்து மஞ்சத்தறைக்குள் நுழைந்து லேகியம் இருந்த கலத்தை திறந்து பெரிய உருளைகளாக இரண்டு எடுத்து விழுங்கினார். அருகே இருந்த குவளையிலிருந்து நீரை குடித்துவிட்டு மஞ்சத்தில் கால்நீட்டி படுத்துக்கொண்டார். கண்களை மூடியபோது வழக்கமான சுடர் தெரிந்தது, அணுகி வரலாயிற்று.

முந்தைய கட்டுரைகாமரூபிணி
அடுத்த கட்டுரைமும்மொழி- கடிதம்