குமரிநிலம் -கடிதங்கள்

இருபது நிமிட நிலம்

 

அன்புள்ள ஜெ,

 

நலம்தானே?

 

நீண்ட இடைவேளைக்குப்பின் எழுதுகிறேன். ஆனால் தளத்தை தொடர்ந்து வாசித்துக்கொண்டேதான் இருக்கிறேன். நீங்கள் எழுதிய இருபதுநிமிடநிலம் என்னும் கட்டுரை எழுதத்தூண்டியது. அழகான கட்டுரை. கவித்துவம் மிக இயல்பாக வந்து அமைந்தது. ஒரு நல்ல நாவலின் தொடக்கம் போல ஒரு பகுதி. குமரிமாவட்டத்துக்கு மாதம் ஒருமுறை வந்துகொண்டிருந்தவன்நான். ஆகவே இந்த நிலப்பகுதியின் அழகு எனக்கு நல்ல அறிமுகம். அதிலும் அந்த ரயிலை ஒட்டி வரும் இருபதுநிமிடங்கள் உண்மையிலேயே ஒரு டேவிட் லீன் சினிமாக்காட்சிபோல பிரம்மாண்டமான காட்சியாகவே இருக்கும்.

 

நிறைய இடைவெளிக்குப்பின் அந்த நிலத்தைக் கற்பனையில் ஓட்டிக்கொண்டேன். பரவசமாக உணர்ந்தேன். இவ்வளவு ‘வளர்ச்சி’க்குப்பின்னாடியும் கன்யாகுமரிமாவட்டத்தில் இவ்வளவுக்காவது இயற்கை மிஞ்சியிருப்பதே பெரிய விஷயம். இன்னும் ஒரு பத்தாண்டில் இந்த கட்டுரையையும் படங்களையும் வந்து பார்த்து எப்படியெல்லாம் அந்த நிலம் இருந்தது என நினைத்துப் பெருமூச்சுவிடுவோம் என நினைக்கிறேன் நன்றி

 

சரவணக்குமார்.ஜி

 

அன்புள்ள ஜெ

 

நலமாக இருக்கிறீர்கள் என நினைக்கிறேன். நான் 1999 வாக்கில் மனோன்மணியத்திலே படிக்கும்போது நாகர்கோயிலில் இருந்து அனேகமாக தினமும் நெல்லைக்குப் போய்வந்துகொண்டிருந்தேன். ஆனால் ஒருநாள்கூட இந்த இயற்கைக்காட்சிகளை நின்று ரசித்ததில்லை. அவ்வப்போது கண்ணுக்குப் பட்டிருக்கிறது. இன்றைக்கு வெளிநாட்டிலிருந்துகொண்டு யோசிக்கும்போது இதையெல்லாம் பார்த்திருக்கிறேன் என்ற ஞாபகம் மட்டும்தான் நிற்கிறது.

 

நீங்கள் எழுதிய குறிப்பை பார்க்கும்போது மனசில் ஒரு பெரிய சோர்வும் தனிமையும் ஏக்கமும் வந்தது. ஆனால் இப்போதுகூட நான் தினமும் அந்த வழியே போனால் பார்ப்பேனா என்று சந்தேகம்தான். நீங்கள் அந்த வழியே மாதம் மூன்றுமுறைச்சென்றுவருகிறீர்கள். ஒவ்வொருநாளும் பார்க்கிறீர்கள். இதுதான் எழுத்தாளனுக்கும் மற்றவர்களுக்கும் நடுவே உள்ள வேறுபாடு என நினைக்கிறேன். எழுத்தாளன் அன்றாட வாழ்க்கையால் தன் பார்வையை மறைத்துக்கொள்ளாமல் இருக்கிறான். ஆகவேதான் அவனை கொஞ்சம் லூஸு என்கிறார்கள் என நினைக்கிறேன். அவன் ஒவ்வொரு நாளையும் புதிசாக பார்க்கிறான். ஒவ்வொன்றையும் புதிசாகப் பார்க்க முடிகிறது.

 

 

நான் இனி அந்நிலத்தைப்பார்க்க நாலைந்து ஆண்டுகள் ஆகும். அதுவரை இந்தப்படங்களைப் பார்த்துக்கொள்கிறேன்

 

கே.மாதவன்