பைரப்பாவின் தரவுகள்

தரவுகள் என்னும் மூடுதிரை

அன்புள்ள ஜெ

எஸ்.எல்.ஃபைரப்பா பற்றிய கட்டுரை [தரவுகள் என்னும் மூடுதிரை] வாசித்தேன். ஃபைரப்பாவின் படைப்புகளில் ஒரு மாறுதல்போக்கு உள்ளது. அல்லது தப்பான வளர்ச்சி என்று சொல்லலாம். அல்லது ஆரம்பம் முதலே அவர் ஒரு சமநிலையில்லாத பார்வையையே கொண்டிருக்கிறார் என்றும் சொல்லலாம். அவருடைய ஆரம்பகால படைப்புக்களில் அவர் மரபை கடுமையாக நிராகரிப்பவராக இருந்தார். அன்றைக்கு அவர் சம்பிரதாயங்களால் பாதிக்கப்பட்ட ஒருவராக இருந்தார். கிருகபங்கா நாவலில் வரும் சின்னப்பையன் அவர்தான். அன்றிருந்த கிராமியச் சாதியமைப்பினால் துன்பம் அடைந்தவர். அன்றிருந்த எந்த மத அமைப்பும் அவருக்கு உதவவில்லை. அவருடைய ஆரம்பகால படைப்புக்களில் அந்தக் கசப்புதான் வெளிப்படுகிறது.

ஆனால் பின்னாடி அவர் எழுதிய படைப்புக்களின் பாணி வேறு. கொஞ்சம் கொஞ்சமாக அவர் மாறினார். அதற்கு அங்கே இருந்த இடதுசாரிகள் காரணம். குறிப்பாக கிரீஷ் கர்நாட், யூ.ஆர்.அனந்தமூர்த்தி, சந்திரசேகரக் கம்பார் போன்றவர்கள். அவர்களுக்கு எதிராக ஒரு நிலைபாடு எடுத்து பைரப்பா நேர் எதிரான திசைக்குச் சென்று இந்து அடிப்படைவாதம் அளவுக்கே சென்றார். ஆகவே ஃபைரப்பாவை ஒரே கருத்துநிலையாக கொள்ளவேண்டியதில்லை. ஆவரணா எழுதிய பைரப்பா இன்றைக்கு இருப்பவர். பழைய பைரப்பா வம்சவிருக்ஷா எழுதியவர். ரெண்டுபேரும் வேறுவேறு என்றுதான் கொள்ளவேண்டும் இன்றைக்கு இந்துத்துவர்கள் ஃபைரப்பாவைக் கொண்டாடுகிறார்கள்.  காரணம் அவர் எழுதிய ஆவரணா. இவர்கள்தான் நேற்று அவரை திட்டி எதிர்த்தனர். நேற்று அவருடைய நண்பர்களாக இருந்தவர்கள்தான் இன்றைக்கு திட்டிக்கொண்டிருக்கிறார்கள்

எஸ்.சுந்தரமூர்த்தி

***

ஜெ

தரவுகள் என்னும் மூடுதிரை நல்ல குறிப்பு. ஒரு நாவலில் தரவுகளின் இடமென்ன என்று கறாராகச் சொல்கிறது. நாவல் சொல்லவருவது தரவுகள் சார்ந்த உண்மையை அல்ல. கற்பனைமூலம் சென்றடையும் உண்மையை. அந்த உண்மையை எப்படிக் கண்டடைவது என்பதுதான் ஆசிரியனின் வேலையே ஒழிய தரவுகளைச் சேர்த்துப் படிப்படியாக ஒரு உண்மையை நிலைநாட்டுவது அல்ல.

இதெல்லாமே எவரும் சரிபார்க்கக்கூடிய உண்மை என ஒரு ஆசிரியன் சொல்வானேயானால் அவனுடைய இலக்கியத்தகுதியே குறைந்துபோய்விடுகிறது என்றுதான் அர்த்தம். அவன் சொல்லவேண்டியது இது நான் என் ஆழத்தில் கண்டடைந்த உண்மை, இது நான் மட்டுமே அறிந்தது, என்னை நம்பி என்னுடன் சேர்ந்து கற்பனைசெய்தால் நீ இதை உணரலாம், இல்லையேல் உணரமுடியாது என்றுதான். இந்த வேறுபாட்டை நாம் எல்லா இலக்கியவிவாதச் சூழலிலும் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியிருக்கிறது

ஜெயக்குமார்

***

முந்தைய கட்டுரைதுயரக்கீற்று- கடிதங்கள்
அடுத்த கட்டுரைசில்லென்று சிரிப்பது