பக்தி இலக்கியம் – கடிதங்கள்

பக்தி இலக்கியத்தின் இன்றைய வாசிப்பு

 

பக்தி இலக்கியம்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ

 

 

பக்தி இலக்கியம்- இன்றைய வாசிப்பு என்னும் கட்டுரையை வாசித்தேன். சுருக்கமாக ஒரு விரிவான சித்திரத்தை அளித்திருக்கிறீர்கள். அதில் கூறப்பட்டிருப்பதை இப்படி புரிந்துகொள்கிறேன். தமிழின் பக்தி இயக்க கவிதைகள் ஆயிரம் ஆண்டுக்கால வரலாறு கொண்டவை. ஏழாம் நூற்றாண்டு முதல் பதினேழாம் நூற்றாண்டுவரை. அவற்றை பயிலாத ஒருவரால் தமிழ்மொழியின் அழகையும் தமிழ்ப்பண்பாட்டின் முழுமையையும் அறிய முடியாது. ஆனால் அவர் பக்தி இல்லாதவர், நாத்திகர் என்றால் அவர் அதை ஆழமாக கற்கமுடியாமல் ஒரு விலக்கம் உருவாகலாம். அப்படி விலக்கம் இல்லாமல் நவீன வாசகன் எப்படி பக்தி இலக்கியத்தைக் கற்பது என விளக்குகிறீர்கள்

 

நவீனவாசகன் பக்தி இலக்கியத்தைக் கற்பதற்கு நீங்கள் சொல்லும் வழிகளை இப்படிச் சுருக்கிக்கொள்ளலாமா? பக்தியை ஒரு வகை ரொமான்டிஸிஸம் என்று அழகியல்ரீதியாக வகுத்துக்கொள்ளவேண்டும். பக்தியிலுள்ள கொள்கைகளை சைவசித்தாந்தம், வேதாந்தம் ஆகிய தத்துவக்கொள்கைகளாக விரிவாக்கிக்கொள்ளவேண்டும். பக்திக்காலகட்டத்து கவிதைகளிலுள்ள புராணக்குறிப்புகளை தொன்மங்கள், ஆர்க்கிடைப்புகள், படிமங்களாக கருத்தில்கொள்ளவேண்டும். அந்நிலையில் அவற்றை வெறும்கவிதைகளாகவே வாசிக்கமுடியும். அவற்றின் கவித்துவ உச்சத்தை அறியவும் முடியும்.

 

ஆனால் இதற்கு தடையாக உள்ளது இங்கே உள்ள பக்தர்கள்தான். அவர்கள் அந்த வாசிப்பை முழுமூச்சாக எதிர்ப்பார்கள். அவர்கள் பக்தியை மெய்ஞானவழி என்றும் அதன் புராணங்களை வேறுவகையான சூப்பர்லேட்டிவ் உண்மைகள் என்றும் சொல்வார்கள். அவர்களைக் கடந்துபோவதே கடினம். அந்தவகையான உரை இல்லாத ஒரு நூலே கிடையாது. நீங்கள் கடைசியில் புராணங்களை எப்படிச் சுதந்திரமாக அர்த்தம்கொள்ளலாம், படிமம்போல வாசிக்கலாம் என்கிறீர்கள். அதைக் கேட்டாலே இங்கே உள்ள பக்தர்கள் குதிக்க ஆரம்பிக்கக்கூடும்

 

எம். மகேந்திரன்

 

அன்புள்ள ஜெ

பக்தி இலக்கியம் பற்றிய கட்டுரை அருமை. குறைவானவர்களே அதை வாசித்திருப்பார்கள். ஆனால் எதிர்காலத்தில் அது வாசிக்கப்படும். அந்தக் கட்டுரையில் வரும் ஒரு வரி என்னை மிகவும் புதிதாக யோசிக்க வைத்தது. யதர்த்தவாதம் எல்லாவற்றையும் சொல்கிறது. ஆகவே அது சமநிலையில் சொல்லவேண்டியிருக்கிறது. ஆனால் கற்பனாவாதம் மிகமிக நுட்பமான விஷயங்களைப்பற்றி மட்டுமே சொல்கிறது. ஆகவே அது அதை மிகைப்படுத்திக்காட்டுகிறது. உருப்பெருக்கியால் காட்டுவதுபோல. ஒரு அருமையான கருத்து இது. இதைக்கொண்டு நாம் கற்பனாவாதத்தையே வேறுவகையிலே வரையறைசெய்யமுடியும்

 

எஸ்.சிவக்குமார்

முந்தைய கட்டுரைஇந்தியன்- 2,கதை
அடுத்த கட்டுரைநீங்கள் பூமிக்கு உப்பாக இருக்கிறீர்கள்- கடலூர் சீனு