சிவப்பயல்

துவாரபாலகன்

சங்கரப்பிள்ளையும் சக்கைக்குருவும்

என் அண்ணாவுக்கு பெயர் போடும்போது அப்பா ஒரு பெரிய தத்துவச் சிக்கலைச் சந்தித்தார். சொல்லப்போனால் அம்மாவும் சித்தப்பாவும் சேர்ந்து அதை அவர்மேல் சுமத்தினார்கள். அப்பா எல்லா கேள்விகளுக்கும் பழைய திருவிதாங்கூர் ஆவணங்களை நாடுபவர். “சூலைநோய்க்கு நல்லெண்ணை நல்லதுன்னு போட்டிருக்கான், எழுநூறாம் ஆண்டு டாக்குமெண்டாக்கும்!” என்று காட்டுவார். நிலப்பதிவுகளினூடாக உலகை அளந்தவர் அவர். மூன்றாம் அடியை வைக்க மண் தேடி அவருடைய கால் எப்போதுமே அந்தரத்தில் நின்றுகொண்டிருக்கும்.

ஆகவே அவர் திகைத்துப்போய்விட்டார். ஆறுமாதம் ஆவணங்களில் மூழ்கிக்கிடந்தார். பிரச்சினை இதுதான். அப்பாவின் அப்பா பெயர் சங்கரப்பிள்ளை. ஆகவே தன் முதல்மகனுக்கு அப்பெயரையே போட்டார். அடுத்த மகனுக்கு பரமேஸ்வரபிள்ளை என்று அம்மாவின் அப்பா பெயர். பரமேஸ்வரபிள்ளை என்றபேரில் தமிழ் எழுத்தாளர் உருவாவதில் விதிக்குச் சம்மதமில்லை. ஆகவே புதுக்கோட்டையில் பொதுப்பணித்துறை ஊழியராகப் பணியாற்றிய என் சித்தப்பா வந்தார். “அய்யய்ய என்ன பேரு இது? பிள்ளைங்களுக்கு பேரு போட்டா அதுக அதை சுமக்க வேண்டாமா? இதென்ன பேரே நாலஞ்சு கிலோ இருக்குமே?” பரமேஸ்வர பிள்ளை அப்போது ஆளே ஆறுகிலோதான் இருந்தார்

ஆகவே பெயர்களை மாற்ற முடிவாயிற்று – அப்பாவுக்கு தெரியாமல். அம்மா நவீனப்பெயர்களைச் சொல்ல அதன் சாத்தியக்கூறுகள் பரிசீலிக்கப்பட்டன. தன் அப்பா பெயரை மாற்றக்கூடாது என அப்பா ஆணையிட்டுவிட்டார். ஆகவே அதற்கு சாயம் அடிக்க முடிவாகியது. பலவகையான சங்கர் பெயர்கள் ஆலோசிக்கப்பட்டன. அம்மா அவள் அப்பா பெயர் எக்கேடோ போகட்டும், பையனுக்கு நல்ல பெயர் போதும் என சொல்ல சரத்சந்திரர் நாவலில் வரும் பெயர் தெரிவாகியது. ஜெயமோகன சட்டர்ஜி மலையாள வேடம்பூண்டார். மூத்தவருக்கு பெயர் அறுதிசெய்யப்பட்டது பாலசங்கர்.

ஆனால் “சங்கரனுக்கு ஏதுடா பால்யம்? அறிவுகெட்டவனே” என்று அப்பா கொந்தளித்தார். “இது நல்லாருக்கே, பால்யம் இல்லாத ஆளுண்டுமா?” என்று கொத்தனார் நேசமணி கருத்துரைத்தார். “அந்தப்பேரு மதி…அதாக்கும் கெமை” என்று நெல்லுகுத்தும்போது தங்கம்மை சொன்னார். ஆகமொத்தம் பெயரை மாற்றினால் ஊரில் ஒரு நுட்பமான சமநிலைக்குலைவும் , ஒருவேளை மதக்கலவவரமேகூட நிகழ வாய்ப்பு. அப்பா ”சங்கரன் அனாதியாக்கும். அவனுக்கு தொடக்கமும் இல்லை, முடிவும் இல்லை” என்று சொன்னார். “அதெல்லாம் சும்மா சொல்லுகது. ஓவ்வொரு மன்வந்தரத்திலும் பராசக்தி மூணு தெய்வங்களையும் பெத்துப் போட்டு பேரிடுதா. அப்பம் சிவன் சின்னப்புள்ளையாட்டுதானே இருக்கணும்? ஆறடி ஆளையா பெத்து போடுவா? அவ என்ன கோட்ட வாசலா வச்சிருக்கா?” என்று உமையப்பன் நாயர் சொன்னார். அவர் தேவிபாகவத அறிஞர்.

அப்பா தேவிபாகவதத்தை வாசித்தார். மெய்தான். பராசக்தியின் பிள்ளைகள்தான் பிரம்மாவும் விஷ்ணுவும் சிவனும். பராசக்தி அவர்களைப் பெற்று அப்படியே போட்டுவிட்டாள். மூன்று பிள்ளைகளும் “ள்ளே ள்ளே” என்று பாலுக்கழுதபோது அவள் சொன்னாள் சர்வ கல்வித மேவாஹம்,நானாஸ்தி சனாதனம்’ இதெல்லாம் நானே. நானல்லாது தொடக்கம் வேறில்லை. ஆகவே சங்கரனுக்கு பால்யம் உண்டு. ஆனால் பால்யகால லீலைகள் ஏதும் சொல்லப்படவில்லை. உதாரணமாக அந்த பாம்பை எப்போது கழுத்தில் தூக்கிப் போட்டுக்கொண்டார்? சூலம் சின்னவயசிலேயே கையில் இருந்ததா? குழந்தைப்பருவத்திலேயே புலித்தோலாடை தானா? சாம்பலை அள்ளிப்பூசும்போது அவ்வப்போது வாய்க்குள்ளும் போட்டுக்கொள்ளும் வழக்கம் இருந்ததா? காளை எப்போது நெருக்கமாக ஆகியது? எவ்வளவோ கேள்விகள்

அப்பா முடிவுக்கு வந்தார். திருவிதாங்கூர் ஆவணங்களில் பாலசங்கரப் பிள்ளை என்று ஒரு பெயர் இல்லை. ஆகவே அது பிரபஞ்சத்தில் இருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் இருக்கிறதே, இதோ கண்முன் மண்ணைவாரி விளையாடுகிறதே என்று அம்மா சொன்னாள். “சட்டுன்னு ஒரு முடிவுக்கு வாங்க… இப்டியே போனா பேரில்லாப்பிள்ளைன்னு ஆளு வளந்துபோடும்” என்று அபிரகாம் மாஸ்டர் சொன்னார். “நம்ம தாணப்பனுக்க பிள்ளைய பள்ளிக்கூடம் சேக்கிறப்பத்தான் பேரு போட்டது. குமரேசனுன்னு. அதுவரை அவனுக்கு ஆறாமத்தவன்னு நம்பர் மட்டுமாக்கும்…” அதிலென்ன சிக்கல் என்றால் சதானந்தனின் ஆறாவது மகனுக்கும் அப்பெயர் உண்டு. அதை ஆறு பி என்று செல்லமாக பள்ளியில் சொன்னார்கள்

ஒருவழியாக முடிவாகியது. அதாவது அப்பா சோர்ந்துபோய் “என்னமாம் செய்யிங்கடே” என்று ஒதுங்கிக்கொண்டார். ஆனாலும் அவருக்கு சோர்வுதான். பாலவிஷ்ணு, பாலபிரம்மா என்றும் பெயர்கள் இல்லை. அதற்குப் பின்னால்கூட எவரும் போட்டதில்லை. பாலதுர்க்கை, பாலலக்ஷ்மி இல்லை. ஆனால் பாலசரஸ்வதி உண்டு. ஆனால் அது எங்கள் ஊரில் எவருக்கும் தெரியாது. பாலபராசக்தி என்று போடமுடியாது. அது மட்டும்தான் தத்துவப்பிழை. மற்றதெல்லாம் சரிதான். ஆகவே அண்ணா பாலசங்கர் ஆக மாறினார். அப்பாவுக்கு அண்ணாவைப் பார்க்கும்போதெல்லாம் தவறாக கைப்பிடி பொருத்தப்பட்ட ஒரு பொருளைப் பார்க்கும் குழப்பம். எங்கே பிடித்து தூக்குவது என்பதுபோல. ஆகவே பெரியவனே என்றுதான் அழைப்பார். சின்னவனை வய்யாத்தவனே என்று. நோயுற்றவன். அவனுடைய நோய் என்ன என்று அப்போது அவருக்கு சரியாகத் தெரிந்திருக்கவில்லை

அந்நாட்களில் தூரத்துச் சொந்தத்தில் ஒரு பெரியப்பாவான மாதவன்பிள்ளை  கேஸ்விஷயமாக வீட்டுக்கு வந்தார். “என்னடே பேரு செறுக்கனுக்கு?” என்றார். அப்பா மூச்சுத்திணறி “ஒருமாதிரி ஏனக்கேடான பேராக்கும்” என்றார். “என்ன அப்பிடி? பயலப்பாத்தா தரக்கேடில்லாம இருக்கானே?” அப்பா விஷயத்தைச் சொன்னார். “ஏடே, மதிகெட்ட மரக்கட்டாயா இருக்கியேடே. நீ சிவன்குட்டீங்கிற பேர கேள்விப்பட்டதே இல்லியா?” அப்பா தெளிந்தார். “ஆமா, உண்டே” எங்களூரில் புகழ்பெற்ற பெயர். இன்றும் கூட. திருவனந்தபுரம் மேயர்களில் ஒருவரி பெயர்கூட அதுதான். “பின்ன? சிவன் குட்டியா இருந்தா அது பாலசங்கர்!” அப்பா முகம் மலர்ந்து “உள்ளதாக்குமே” என்றார். கோவிந்தன்குட்டி, கேசவன்குட்டி உண்டு. அப்பாவின் அம்மா பெயரே லக்ஷ்மிக்குட்டிதான். அருகே வாழ்ந்த பெரியம்மா பெயர் காளிக்குட்டி. பிறகென்ன?

என்ன ஆச்சரியம் என்றால் அடுத்த அறுபதாண்டுகளில் அப்பாவுக்கு வந்த தத்துவச்சிக்கல் எவருக்குமே வரவில்லை என்பதுதான்.

***

முந்தைய கட்டுரைஅமெரிக்கா பயணம்,
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-55