அன்பின் ஜெ,
சொல்புதிது குழுமத்தில் கிருஷ்ணன் அவர்களின் அறிவிப்பு வந்தவுடனேயே பதிவு செய்து விட்டேன். சிறுகதை முகாம் துளியளவும் ஏமாற்றவில்லை. பாரியின் பட்டியல் கூடிக் கொண்டே போனது; ஒரு கட்டத்தில் அவரே (வெள்ளி மாலையன்று!) ‘அநேகமாக இதற்கு மேல் பட்டியல் நீளாது’ என்று 45 கதைகளுடன் முடித்துக் கொண்டார். அனைத்துக் கதைகளையும் முகாம் துவங்குவதற்குள் வாசித்தாவது முடிக்க வேண்டும் என்று சங்கல்பித்துக் கொண்டு அவ்வப்போது வாசித்து சனியன்று காலைக்குள்ளாக 28-30 கதைகள் வாசித்து விட்டேன். ஆனாலும் இந்த அவசரகதி வாசிப்பென்பது ‘நாலுக்கு ரெண்டு பழுதில்லை’ என்ற கணக்கில்தான் (மலையளவு ஒளிந்திருக்கும் சமாசாரங்களில், துளியளவேனும் பிடிபட்டுவிடாதா என்ற நப்பாசைதான்!). ஒன்றும் வாசிக்காமல் வருவதைக் காட்டிலும் தாழ்வில்லை அவ்வளவே. அனைத்து நிகழ்வுகளின் கட்டுரைகளும் தளத்தில் வந்தபின் மீண்டுமொரு முறை அக்கதைகளை வாசித்தால் இன்னும் துலங்கியதொரு சித்திரம் கிடைக்குமென நம்புகிறேன்.
முகாமின் முதலில் (சாந்தமூர்த்திக்கான வாசிப்பு கௌரவத்திற்கு பிறகு) தங்களின் மிகமிகச் செறிவான உரை – புதுமைப்பித்தனில் துவங்கி ஏன் அவன் அவ்வளவு கொண்டாடப்படுகிறான், அனைத்து வகைமைக் கதைகளையும் எழுதிய புதுமைப்பித்தனுக்கு சிலவற்றில் வடிவ நேர்த்தி கைகூடாவிட்டாலும் அனைத்து விதமான கதைகளையும் (பேய்க்கதை, புராணத்தொன்மங்களின் மீளுருவாக்கம், வணிகக்கதை …) வெகு முற்காலத்திலேயே, தமிழில் முயன்று பார்த்தவன் என்ற ஒரு காரணத்திற்காகவே கூட அவன் எவ்வளவு பெரிய மாஸ்டர் என்பதை நிறுவிச் சென்றது உரை. முக்கால் மணிநேரத்திற்கு மேலாக ‘எது இலக்கியம்?, எது, எதனால் இலக்கியம் ஆகாது என்று வேண்டுமளவு உதாரணங்களுடன் (மட்டுமல்லாது கோடுபாடுகள் ரீதியாகவும் சாசுவதத்தன்மை காரணமாகவும்) கூடிய அற்புதமான உரையினை தங்கள் அனுமதியுடன் ஒலிப்பதிவாவது செய்திருக்கலாம்.
பின்னர் சுனீல் கிருஷ்ணன் – குணா கந்தசாமியின் ‘சுக்கிலம்’, பாலசுப்ரமணியம் பொன்ராஜின் ‘ஜங்க்’ – இவ்விரண்டு கதைகளை பிரதானப்படுத்தியும், வேறு பல கதைகளையும் தொட்டு, 2000க்கு பிறகான படைப்பாளிகளின் தொகுப்புகளை முன்வைத்துப் பேசினார். நுண்ணிய அவதானங்களுடன், ஏன் தான் அந்தக் கதைகளை குறிப்பிடுகிறேன், எதனால் அவை முக்கியம் என்று emphasise செய்து பேசினார். சுனீலுடன் (அரங்கிற்கு உள்ளே அவரும், வெளியே இருவரும்) பேசியதில் எதனால் அவர் யுவ புரஸ்கார் வரை உயர்ந்துள்ளார் என்று புரிந்தது – நாளைய தேதி வரை உள்ள படைப்புகளையும் தொகுப்புகளையும் சலியாமல் தேடித்தேடி வாசிப்பதே அவரின் தெளிந்த தீர்க்கமான அசலான கருத்துகளுக்குக் காரணம் என்பதை நிச்சயம் சொல்ல முடிகிறது. (நானெல்லாம் சேர்ந்தாப்ல ரெண்டு புத்தகம் படிச்சிட்டாலே தலகால் புரியாத ஆளு)
பின்னர் மோகனரங்கனின் மொழிபெயர்ப்பு கதைகள் பற்றியதான அரங்கு – லத்தீன் அமெரிக்க சிறுகதைகள் உள்ளிட்ட மொழிபெயர்ப்பு கதைகள் எவ்வாறு 1980களியேயே கூட தமிழ் சிறுகதைகளில் சில போக்குகளை அறிமுகப்படுத்தியும், பாதித்தும் அமைந்திருந்தன என்பதைப் பேசினார்.
அடுத்து சாம்ராஜின் சீரிய மற்றும் அங்கதக் கதைகள் பற்றிய உரை. 2019 ஊட்டி இலக்கிய முகாமிற்கு தெரிவு செய்திருந்த ‘சைவ பாய்லர்’ கவிதையிலேயே சாம்ராஜைப் பற்றிய சித்திரம் ஓரளவு தெரிந்திருந்தது. இதில் அங்கதக் கதைக்கு அவர் பரிந்துரைத்திருந்த ‘கண்டி வீரன்’ கதையை 2017-இல் செல்வேந்திரனின் (ஊட்டி இலக்கிய மூகாம்) பரிந்துரையின் பேரில் வாசித்திருந்தேன். அவரது பட்டியலில் மற்றொரு கதையான கி.ராவின் ‘நாற்காலி’ மிகவும் ஆர்வமூட்டுவதாகவும், ‘அடடா, இத்தனை நாள் வாசிக்காமல் விட்டுவிட்டோமே’ என்ற உணர்வையும் எழுப்பியது.
பின்னர் மாலை நடை – இதில் நான் வழக்கமாக கவனிக்கும் ஒன்றுண்டு. தொடர்ச்சியாக கனமான அரங்குகள் காரணமாக, மாலை/காலை நடையில் சற்றே ‘லைட்டான’ விஷயங்கள் (பெரும்பாலும் உங்களால்) பகிரப்படுவதன் சுவாரசியம் காரணமாக தங்களுக்கு அருகில் வருவதற்கு நாங்கள் வாசகர்கள் அனைவரும் முண்டியடிக்கிறோம். அடுத்த முறை இப்படியாகப்பட்ட நடைகளில் நீங்கள் நடை செல்லும்போது ‘காலர் மைக்’ வைத்துக்கொண்டு, நடந்து கொண்டே பேசுவதை முயன்று பார்க்கலாம்; அமைப்பாளர்களும் அதைப் பரிசீலிக்கலாம் (சீரியசாத்தான் சொல்றேன்!).
நடைக்குப் பின் சுனீல்கிருஷ்ணனின் புலம்பெயர் படைப்பாளிகளைப் பற்றிய உரை – சீ. முத்துசாமி, நவீனின் கதைகள், சீனலட்சுமியின் வரிசை போன்ற கதைகளை முன்வைத்து அமைந்திருந்தது உரை. அதன் பின் சாம்ராஜின் கதை சொல்லுதல் தொடர்பான உரை. அவர் துவக்கத்தில் முன் வைத்த கதைகளை பிரதாப்படுத்தியே அமைந்திருந்தது அவரது உரை. ஒரு வண்ணான் (இந்தச் சொல்லுக்காக சாம்ராஜ் தானே மன்னிப்புக் கோரியது நம் ‘முற்போக்களர்களின் சாதனை’ எனலாம்!) மரணப்படுக்கையிலிருக்கையில் அவன் தினமும் வணங்கும் கருடன் போன்ற ஒரு பதுமையை மரத்தின் மேல் வைத்து அவனைச் சுற்றியிருப்பவர்கள் அதைப் பற்றி வேண்டுமென்றே அவன் காதுபடப்பேசி அவனை உசுப்ப, அவன் வீட்டிற்கு வெளியே வந்து அதை வணங்க, அது பறந்து போவதைப் பற்றிய கதை ஒன்று. ஒரு தீவிலுள்ள குருமார்களுக்கு மந்திரம் கற்பிக்கும் பாதிரியார் திரும்பிச் செல்கையில் அந்த குருமார்கள் இரண்டாவது மந்திரத்தில் எழும் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்வதற்காக தங்களையும் அறியாமல் நீரின் மேல் ஓடி வருவதைப் பார்த்து பாதிரியார் அயர்ந்து நின்றுவிடுவதான இரண்டாவது கதை. சாம்ராஜ் தனது முக்கிய அவதானிப்பாக, “உலகம் முழுக்க வாய்மொழியாகச் சொல்லப்படும் கதைகள் சற்றே நம் ‘பகுத்தறிவை‘ கழற்றிவைக்கக் கோரும் கதைகளாக” இருந்தாலும் அவை தித்திப்பதாகவும் அனைவரையும் வசீகரித்திருப்பதையும் முக்கியமாய் சொன்னார். இயல்பாகவே 2016 விஷ்ணுபுர விழாவில் ‘கரடி‘ கதையை அற்புதமாய் ‘சொன்ன‘ பவா.செல்லதுரையின் நினைவு வந்தது. கி.ரா அண்ணாச்சி கேணி விழாவில் சொன்ன கதைகளைப் பற்றி நினைவு வருவதற்கும் சாம்ராஜ் அத்தொகுப்பினைக் குறிப்ப்டுவதற்கும் சரியாய் இருந்தது.
பின்னர் இரவு உணவு. இம்முகாமை ஒருங்கமைத்தல், பங்கேற்பாளர்களை ஒருங்கிணைத்தல், உணவு ஏற்பாடு, (ஜமுக்காளம், தலையணை, போர்வை…) இரவு படுக்கை வசதிகள் இவையனைத்தையும் ரூ.1000க்கு மிகாமல் பார்த்துக்கொண்டது இதற்காகவெல்லாம் பாரி, மணவாளன், அந்தியூர் மணி, கிருஷ்ணன் உள்ளிட்டவர்களின் (விடுபட்டவர்கள் மன்னிப்பார்களாக) பங்களிப்பைப் பிரத்தியேகமாகக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். மணவாளன் முகாமின் இரு நாள்களிலும் அங்குமிங்கும் அலைந்து கொண்டுதானிருந்தார். இதுபோன்ற தன்னலமற்ற ஆத்மாக்களின் திட்டமிட்ட கடின உழைப்பினால்தான் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் நிகழ்வுகளின் நேர்த்தி கைகூடுகிறது.
உணவிற்கு பின் திருமூலநாதனின் அஷ்டாவதானம் நிகழ்ச்சி (இவர் சோடசவதானம் வரை இயற்றக்கூடியவர்). முன்னர் 2017-இல் ஊட்டி இலக்கிய முகாமின் முதல்நாள் இரவில் நடந்த நிகழ்வில் நான் செய்த அதே பொறுப்புதான் இங்கும் – அவ்வப்போது அவரது முதுகில் ஒற்றி எடுத்தல். இந்த நிகழ்வு பார்வையாளர்களின் கவனத்தையும் சம அளவு கோருவது. உண்மையில் நாமும் கூர்மையாகவும், விழிப்புடனும் இருந்தால்தான் அவரது மேதமையறிந்து அவரது திறனைப் போற்றவியலும். கல்லூரியில் (2003இல்) கனகசுப்புரத்தினத்தின் தசாவதானம் நிகழ்ச்சி எதிர்பார்த்த அளவு சோபிக்காமல் போனதற்கும் இதுவே காரணம். அவ்வாறன்றி முகாமின் பங்கேற்பாளர்கள் திருமூலநாதனுக்கு ‘டஃப்’ கொடுத்தனர்!
ஞாயிறன்று முதலில் விஷால் ரஜாவின் உரை – கு.அழகிரிசாமியின் ‘தியாகம்’ கதையையும் இன்னும் பல்வேறு கதைகள், கோட்பாடுகளையும் முன்வைத்து பேசினார்.
பின்னர் மணற்கடிகை கோபாலகிருஷ்ணனின் குறிப்புணர்த்துதல் தொடர்பான உரை. இது எனக்கு மிகவும் ஆர்வமூட்டுவதாயிருந்தது. பெரும்பாலும் இந்த குறிப்புணர்த்துதல் என்பது படிமச் சாத்தியங்களை கவனிக்கும் கலை/திறனுக்கு நெருங்கியேயுள்ளது என்பதை கோபலகிருஷ்ணனின் உரை வழியாக உணர்ந்தேன். வண்ணதாசனின் ‘நிலை’ கதையில் எவ்வாறு குறிப்புகள் வழியாக மறைபிரதியை (அச்சிறுமியின் வயதும் – ‘வேலைக்கு வந்த புதிதில் சுவிட்ச் போர்டில் உள்ள விளக்கு சுவிட்சை எம்பிப் போட்டு விடுவாள்’), அவளின் குடும்பச் சூழ்நிலையும் [மனைவியை இழந்த அவளின் தந்தை அவளை வீட்டு வேலை செய்ய அனுப்புவது] கவனிக்கலாம் என்பதையும், போலவே அவர் பரிந்துரைத்திருந்த அ.முத்துலிங்கத்தின் கொழுத்தாடு பிடிப்பேன் கதையில் எவ்வாறு குறிப்புகள் வழியாக புலம்பெயர்ந்த நாயகனின் அப்பாவித்தனம் உணர்த்தப்பட்டிருக்கிறது என்பதையும் தொட்டு அமைந்திருந்தது அவரது உரை. இது தொடர்பான வாசகர் ஒருவரின் கேள்விக்கு தாங்கள், சுந்தர ராமசாமியின் ‘Knock every door’ எனும் பிரசித்தி பெற்ற, ‘எங்கெல்லாம் குறிப்புகள்/படிமங்கள் தென்படுகின்றன என்பதையும்’, அவ்வாறு வாசல்களைத் தட்ட முற்படும்போது ‘Knock with your intuition; not with your intellect’ என்பதையும் குறிப்பிட்டது மிகப் பெரிய திறப்பாக அமைந்தது. பின்னர் அனைத்து எழுத்தாளர்கள் பங்கேற்ற கேள்வி பதில் என்று அதிகாரப்பூர்வமாக முகாம் நிறைவுபெற்றது.
சம காலத்தை மட்டுமே வைத்துப் பார்க்கையில் கூட இந்த முகாம் மிக முக்கியமானது என்பதை ஐயந்திரிபற உணர முடிகிறது – இவ்வளவு கதைகள், அதன் வகைமைகள், சிறுகதை தொடர்பான சிறிதும் பெரிதுமான அறிமுகங்கள் (short/narrow fiction போன்றவை), நவீனச் சிறுகதையின் பலமே அதன் பலவீனமாயிருப்பது (‘நாயகனைச் சுற்றியே கதை நகர்வது’), தேய்வழக்குகள் கட்டுடைக்கப்படுதல், ஆளுமைகளின் அசலான பங்களிப்புகள் (மிகச் சிறந்த உதாரணம் – மௌனி), போலி பாவனைகளை இனங்கண்டு ஒதுக்குதல் (‘நபக்கோவ்’), irony, humour, satire, wit – இவற்றின் வித்தியாசங்களும் நகைச்சுவையின் (முறையே) அவற்றின் ஸ்திதி என்ன என்பதும், ‘ஜங்க்’ போன்ற கதைகள் காலப்பிரமாணத்தின் முன் நிற்க முடியாமல் போவதற்கான சாத்தியங்கள்… எவ்வளவு சொன்னாலும் சொல்லப்படாததன் பட்டியலே மிகுதி! சிறுகதைகளுடன் தொடர்புடைய பல விஷயங்கள் நம்மை இரு நாள்களும் சூழ்ந்திருந்தபோது, போதத்துடன் நாம் அவதானித்ததைக் காட்டிலும் நம்மையும் அறியாமல் பல முக்கியமான அவதானிப்புகளுக்கும் சிந்தனைகளுக்கும் நம்மை ஒப்புக்கொடுத்திருப்பதன் மூலமே அதிக விஷயங்கள் நம்முள் இறங்கியிருக்கும் என்றே நம்புகிறேன். இது ஒரு அறிமுக வாசகனுக்கு (மட்டுமல்லாது இன்னும் மேம்பட்டவர்களுக்கும் கூட) ஒரு வாகான launchpad ஆக அமைந்திருக்கும். இத்தகையதொரு நல்வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கும், தங்களுக்கும், தங்கள் அறிவார்த்த உழைப்பினை நல்கிய எழுத்தாளர்களுக்கும் நன்றிகள் பல!
இனி அரங்கிற்கு உள்ளெயும் வேலியேயும் நான் கவனித்த சில ஆர்வமூட்டிய சங்கதிகள்:
* முதன்முதல் நிகழ்ச்சி சாந்தமூர்த்தி அவர்களுக்கான கௌரவம் – 766+ மணிநேரங்களைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கும் அவரின் சாதனை மகத்தானது. பின்னர் உணவு இடைவேளையில் அவருடன் பேசிக்கொண்டிருக்கையில் வாசகன் சந்திக்கும் பிரச்சினைகள் எவ்வயதினருக்கும், எத்தரப்பினருக்கும் ஒன்றுதான் என்பதை உணர்த்தின!
* சக்கியின் கதைகளில் வரும் irony – அந்த சோப் கதையின் மூலம் விளக்கப்பட விதம். போலவே பஷீரின் கதை மாந்தர்கள் ஒருவரும் அவரால் நக்கலடிக்கப்படாமல் ஆனால் அவர்களுக்கு நேரும் நகைமுரண் சம்பவங்களால் வாசகனை சிரிக்கவைக்கும் விதம் – மாறாக பெரும்பாலான பகடி கதைகளில் ஆசிரியன் ஒரு பீடத்தில் அமர்ந்து கொண்டு மனிதர்களை நக்கலடிப்பதால் வாசகர்களிடம் உண்டாகும் ஏளனப்பார்வையால் உருவாக்கப்படும் நகைச்சுவை தரத்தில் சற்றே கீழேயே இருப்பது – எனக்கு தெரிந்து நகைச்சுவையில் தங்களை சக்கியும் பஷீரும் (அல்லது அது போன்ற நகைச்சுவை) அதிகம் கவர்ந்திருக்கின்றனர்.
* அக்னிப்பிரவேசம், புலிக்கலைஞன் போன்ற கதைகளில் தங்களின் பார்வை வெளிவந்த பின் அவை வாசிக்கப்பட்டதன் மாற்றங்கள்.
* இலக்கிய வாசகர்களல்லாதவர்கள் உதிர்க்கும் மிகப்பிரபலமான தேய்வழக்கு வாசகம் – ‘பத்து பேரு பட்டியல் போட்டா ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பத்து கதையைத்தானே தேர்ந்தெடுப்பாங்க, அப்படீன்னா எது இலக்கியம்னு யாரு முடிவு பண்றது’, இதற்கான தங்கள் பதில் – ‘அப்படி கிடையாதுங்க, பத்து பேரு பத்து பட்டியல் போட்டா, ஒவ்வொரு பட்டியல்லயும் எட்டு கதை பொதுவாத்தான் இருக்கும், மிச்சம் ரெண்டு அந்த எழுத்தாளருக்கோ, வாசகருக்கோ ஏதோவொரு விதத்துல தனிப்பட்ட வகையில் முக்கியமானதா இருக்கும்’
* Newyork Times எல் வரும் கதைகள் ஒரு சமையல் குறிப்பிற்கேற்ப ‘செய்யப்படுவதும்’ பலமுறை பல எடிட்டர்களால் கைவைக்கப்படுவதும் பிரதிபலனாக கிடைக்கும் உலகப்புகழும், சன்மானமும் எழுத்தாளர்களுக்கு உவாப்பாயிருப்பதும்.
* சாக்ரடீஸ் விஷத்தைக் குடிக்குமுன் கடன் வாங்கியவனிடம் திருப்பிக் கொடுக்கச் சொன்ன அந்தக் கோழியின் முட்டையே கம்யூனிசம் எனும் நக்கல்.
* கணவனுக்கும் காதலனுக்குமான வேறுபாடு (இதில் வரும் அந்த கேரளப்பெண்மணியின் விவரங்களைச் சரியாக கவனத்தில் கொள்ளாமல் சிதறவிட்டுடேன்)
* மலையாளத் திரைப்பார்வையாளர்களின் கூர்மை – எந்தவொரு வெளிப்புறத் தூண்டுதலுமின்றி கவனித்துச் சிரிப்பதில் அவர்களுக்கிருக்கும் ஆர்வம்,
* யோகம் தொடர்பான ஸ்வேதாவின் கேள்விக்கு தங்களின் பதிலை முக்கியமாகக் கருதுகிறேன் – வர்கலா உள்ளிட்ட சிறப்பு யோக பயிற்சி நிலையங்கள், சூழல், உணவு, ஆசனம், தத்துவம் என்று ஒரு முழுமையான யோகப்பயிற்சியை அளிக்கும் கல்வி நிலையங்கள். அவை முழுநேரமாகவே அவற்றை அளிப்பதன் காரணம், லௌகீகங்களை உதறிவிட்டு யோகம் ஒன்றே வாழ்க்கை என வருவோர்க்கு மட்டுமே அளிக்கின்றன என்பது.
வெங்கட்ராமன்