கவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது
அபி கவிதைகள் நூல்
அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,
தற்செயல் என்று எதுவுமில்லை என்று நானும் கருதுகிறேன் அல்லது அனைத்தும் ஓயாத தற்செயல்களின் மொத்தம். கவிஞர் அபி அவர்களின் கவிதைகளை வாசித்துக் கொண்டிருக்கிறேன். முதலில் மிக கொஞ்சம் வாசித்தபோது நிச்சயம் இவரை வாசித்தாக வேண்டும் என்று ஒரு எண்ணம் துளிர்த்து அது இனிமையாக உள்ளிருந்து மென்காற்றி்ல் அவ்வப்போது ஆடிக்கொண்டிருந்தது. அவரது கவிதை நூல் எங்கு கிடைக்கும் நண்பர்களிடம் கேட்க எண்ண அவரது மாணவர்கள் இணையத்தில் ஏற்றியது தங்களுக்கு அவர்கள் எழுதிய கடித்தின் வாயிலாக தெரிய வந்தது. எனக்கு புரியுமா? என்று கருத ”புரிய வேண்டியதில்லை” என்றது சூபி முனியின் அருள். ஒவ்வொரு கவிதை வாசகனும் கவிஞனே அவன் இக்கவிதையின் வாயிலாக தனக்கானதை சென்றடையட்டுமே. புன்முறுவல். அமைக இது அருள் நின்று இயற்றுவது தர்க்கப்புரிதலின் நிபந்தனையைத் தள்ளிவிட்டு வாசிப்பில் புகுக.
விஞ்ஞானிக்கும் மெய்ஞானிக்கும் இடையில் இருப்பவர் கவிஞர். விஞ்ஞானி அப்பாலை அவ்வாறு அறிதவரல்ல. மெய்ஞானி உற்றவர் எனினும் சொற்களின் வரம் பெற்றவர் அல்ல அல்லது ஒருவேளை பெற்றவர் என்றாலும் அது சொற்களுக்கு உரியது அன்று என்று சொற்களை ”அப்பால்” என பெயர் சுட்டும் பலகை அளவிற்கே கொள்பவர். இடையே கவிஞர் என்பவர் சொற்களை அப்பால் சேர் ஊர்தி எனக்கொண்டு இங்குமங்கும் சென்று வந்து கொண்டிருப்பவர். ”இது ஒன்றும் வெறும் சொற்கள் அல்ல இதைக்கொண்டு அப்பால் செல்வாய்” என்பவர் அவர். சொற்களால் சாத்தியமில்லை எனும் மெய்ஞானிக்கு மறுப்பாகிறார் அவர். தன் ஆன்மீக சாத்தியத்தை அவர் அறிகிறார். இருவேறு உலகத்து இயற்கை ஒருசேர கொண்டவர் அவர். உலகின் அன்பும் உலகிலியின் அருளும் கவிஞர்கள் பால் அமையுமென்றால் அக்காலமும் நாடும் மாந்தரும் நல்ல என்பது நியாயம்.
காலையை விட மாலையையே அபி அதிகம் தேர்கிறார். மாலை புலரியை விட ஆன்மீகமானது. உடலினின்று உயிர் பால் நோக்கு படர்வது. மனம் மௌனம் தேரும் பொழுது அது. உடல் மனம் என தம் தனியிருப்பைக் களைந்து பேரிருள் ஒன்றென திறவோர் சென்றமையும் வெளியின் அருட்கதவம் அது.
மாலை – த்வனி
நான் வெட்டவெளியாகுமுன்பே
என் தீர்மானங்கள்
கசிந்து வெளியேறிப் போய்விட்டதை
உணர்ந்தேன்
ஆ! மிகவும் நல்லது
அவசரமில்லாத ஓடைகள் நடுவே
கூழாங்கற்களின் மீது
என் வாழ்வை
மெல்லத் தவழவிட்டேன்
வீட்டு முற்றத்தில்
கூழங்கற்களின் நடுவே
ஓடைகளின் சிரிப்போடு
வெளி-உள் அற்று
விரிந்துபோகும் என் வெட்டவெளி
விட்டுப்போன நண்பர்கள்
அர்த்தங்களைத் திரட்டி சுமந்து
வெற்றி உலா போகிறார்கள்
விளக்கு வரிசை மினுமினுக்க
உண்மையின்
அனைத்துச் சுற்றுவாசல்களிலும்
புகுந்து திரிந்து
திருப்தியில் திளைக்கும்
என் நண்பர்களுக்கு
கிடைக்கும் இடைவெளிகளை எல்லாம்
தம் கையிருப்புகள் கொண்டு நிரப்பும்
அவர்களுக்கு
என் வெட்டவெளியைக் காட்டமாட்டேன்
வெறுமைப் பாங்கான
எனது வெளியில்
ஒளியும் இருளும் முரண்படாத
என் அந்தியின் த்வனி
த்வனியின் மீதில்
அர்த்தம் எதுவும் சிந்திவிடவும்
விடமாட்டேன்
அனைத்து சுற்றுவாசல்களிலும் புகுந்து திரிந்தால் போதும் உண்மையுள் பிரவேசிக்க வேண்டியதில்லை எனும் நண்பர்கள் அத்துடன் நின்றால் பரவாயில்லையே கிடைக்கும் இடைவெளிகளையெல்லாம் தம் கையிருப்புகள் கொண்டு நிரப்ப அல்லவா செய்கிறார்கள்? வெட்டவெளியைக் காட்டவும் கூடாது, த்வனியின் மீது அர்த்தம் எதுவும் சிந்திவிடவும் கூடாது. காக்கத்தான் வேண்டும்.
சொற்களை அர்த்தங்களிலிருந்து பாதுகாக்க வேண்டியுள்ளது அது மெய்மையுடன் கவிஞர் செய்துகொண்ட ஒப்பந்தம் போலும்.
உறுதி கூறுகிறேன். என் அர்த்தங்களை, கையிருப்புகளை (மேலே கூறியவற்றில் சில உட்பட) கைவிடுகிறேன். வாசிக்க மட்டும் செய்கிறேன். வெட்டவெளி எனக்கும் வேண்டும்.
அன்புடன்
விக்ரம்
கோவை