வைரமுத்துவின் அழகிய வரிகளில் ஒன்று ‘செங்காட்டுக் கள்ளிச்செடி சில்லென்று பூவெடுக்க’. ஒற்றைவரியில் ஒரு காட்சியும் கூடவே ஒரு தரிசனமும் நிகழும் அரிய வரிகளில் ஒன்று. வைரமுத்து தமிழ்ப்பாடல்களில் அதை அடிக்கடி நிகழ்த்தியிருக்கிறார். ஒரே சமயம் நாட்டாரிசைப்பாடல்களின் நீட்சியாகவும் நவீனக் கவிதையாகவும் நிலைகொள்ளும் வரிகள் அவை.
செங்காட்டைப் பார்த்தவர்கள் அறிவார்கள் அங்கே பூ என்பது மிக அரிய ஒன்று. மழைபெய்தால்கூட முள்தான் தளிர்க்கும். பூக்கள் விரிந்தால்கூட மிகச்சிறியவையாகவும், வண்ணம் குறைவானவையாகவுமே இருக்கும். பொட்டலில் கண்ணுக்குப்படும் பூ எருக்கு. அதை பூ என்று சொல்வது ஒரு மங்கலவழக்குதான். அது ஒரு நச்சுமலர். ஒரு படிகக்கொத்து என்றே தோன்றும். கரியபெண்ணின் ஈறு போல ஒரு ஊதாச்சிவப்பு நிறம்.
பித்தனுக்குரிய மலர் அது. காசியில் எருக்குமலர் மொட்டுகளை கோத்து மாலை செய்து காலபைரவனுக்கு அணிவிக்க அளிப்பார்கள். பாசிமணிமாலை என்றே கண்ணுக்குத்தோன்றும். கையில் வாங்கினால் அவற்றின் எடை துணுக்குறச் செய்யும். குளிர்ந்திருக்கும். காலபைரவன் அணியும் மண்டையோடுகளால் ஆனதோ என மயங்கச் செய்யும்.
பொட்டலில் மலர்கள் நாணமும் எச்சரிக்கையுமாகச் சிரிக்கும் பெண்கள் போல சற்றே மலர்பவை. வெளிக்காட்டிக்கொள்ளாதவை. பொட்டலில் மலர்களைப் பார்க்கவேண்டுமென்றால் பின்மழைக்காலத்திலேயே இயலும். விதிவிலக்கு கள்ளி. அது நல்ல உச்சிக்கோடையில் மலர்வது. அதுவும் வெடித்துச் சிரிப்பது.
கள்ளிமலர் தமிழ்நிலத்தில் விரியும் மிக அழகான மலர்களில் ஒன்று. அதை எவரேனும் தனியாகக் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்களா? ‘கள்ளிப்பூ விரிஞ்சபோலே கள்ளுக்குடம் நுரைச்சபோலே’ என்று தெம்மாங்குப்பாட்டில் வருகிறது. பெண்ணின் சிரிப்புக்கு வர்ணனை. ஆனால் செவ்வியல் கவிஞர்கள் அதை ஒரு மலராகவே கருதியதில்லை. பாலைநில வர்ணனைகள் சங்கப்பாடல்கள் முதல் பெருகிக்கிடக்கின்றன தமிழில். கள்ளிப்பூவை பாடிய கவிஞர்கள் எவரேனும் இருக்கிறார்களா?
கள்ளி பாலையின் செடி.அதற்கு நீர் தேவையில்லை. மானுடரே தேவையில்லை. ‘கள்ளிக்கேது முள்ளில்வேலி?” என்று கண்ணதாசனின் வரி. கள்ளி என்னும் சொல்லே எதிர்மறைப்பொருள் அளிப்பது. கள்ளம் கொண்டது. கள்ளி என்னும் சொல்லில் குறிப்பிடப்படும் செடிகள் பல. இலைக்கள்ளிக்கும் சப்பாத்திக்கள்ளிக்கும் பொதுவான ஒன்றுமில்லை. இலைக்கள்ளி பாலூறும் செடி. சப்பாத்திக்கள் ஒரு முட்புதர். அடுக்குகள்ளி, திருகுகள்ளி, ஆட்கள்ளி என கள்ளிகள் பலவகை.
பொட்டல் காட்டில் கள்ளிக்கு மட்டும் பச்சை எங்கிருந்தோ அளிக்கப்பட்டிருக்கும். எத்தனை கசந்தால் இத்தனை முள்சூடியிருக்கும் என எண்ணியிருக்கிறேன். எத்தனை அஞ்சினால் இலையிலும் கிளையிலும் இத்தனை நஞ்சு நிறைத்துக்கொண்டிருக்கும். தொலைநிலங்களில் எட்டும் பதினாறும் கைகளை விரித்து தலைக்குமேல் எழுந்து நின்றிருக்கும் ஆட்கள்ளி பேயென தோன்றுவது
நான் குடியிருக்கும் இடம் கள்ளியங்காடு. இங்கே கள்ளியங்காட்டுநீலி என்னும் யக்ஷி வாழ்ந்திருக்கிறாள். மூலம்திருநாள் மகாராஜா ஆட்சிக்காலத்தில் 1884ல் பேச்சிப்பாறை அணை வந்தபோது இப்பகுதிக்கு கால்வாய்நீர் வந்தது. கள்ளியங்காடு வயல்வெளியாகியது. யக்ஷிக்கு கோயில் அமைந்தது. இப்போது இங்கே கள்ளியே இல்லை, பெயரில் தவிர. குமரிமாவட்ட வழக்கில் கள்ளி என்பது மிக அமங்கலமான பெயர். ‘கள்ளிவெட்டிச் சாத்துவது’ என்பது பெரிய வசை. துரோகிகளை புதைக்கையில் கள்ளியை வெட்டி குழிமேல் நடுவார்கள். அவனுக்கு சொர்க்கம் இல்லை.
ஆனால் கள்ளி பூக்கிறது. தமிழகத்துப் பூக்களியேயே அழகான சிலவற்றில் ஒன்று. பெரிய மலர். குவளைவடிவம். வெளிர்நீலம், வெளிர் சிவப்பு, சிவப்பு என வண்ணங்கள். விரியும் இதழ்கள். ஒருவகை ஆம்பலோ என ஐயம் தோன்றும். ஆம்பலுக்கு அவ்வளவு நீர் தேவை. நீரில்லாமல் மலரும் ஆம்பல். பாலைநில மலர்களுக்குரிய வரண்ட தன்மை இல்லை. மெத்தென்று நீர்மைகொண்ட இதழ்கள். ஆம்பல் போலவே குளிர்ந்த மலர் கள்ளி
முள்செறிந்த கள்ளியில் அந்த மலர் விரிந்திருக்கையில் ஒரு பரவசம் ஏற்படுகிறது. மிகமிகக் கடுமையான முகம்கொண்ட அன்னை ஒருத்தி சட்டென்று சிரிப்பதுபோல. பொட்டலின் சிரிப்பு அது. அதுவும் சட்டென்று விரிவது. கவிஞன் சொல்வதுபோல செங்காடு சில்லென்று பூப்பது அது.
சென்ற ஜூனில் இங்கே அந்த அடிபட்ட நிகழ்வுக்குப் பின் சற்று உளச்சோர்வுடன் நண்பர் ஒருவரின் பண்ணைவீட்டுக்குச் சென்றிருந்தேன். காலைநடை செல்லும்போது செம்மண்பூமியில் செறிந்திருந்த கள்ளி மலர்ந்திருப்பதைக் கண்டு நின்றுவிட்டேன். ஒரே கணத்தில் அத்தனை உளச்சோர்வும் மறைந்துவிட்டது. பேருருவம் கொண்ட அந்நிலம் என்னை நோக்கி புன்னகைத்தது. “ஆம்” என்று அதனிடம் சொன்னேன்
***