வீடு நமக்கு…

திருவாலங்காடு என்னும் சொல் என்னை எப்போதுமே தொடர்ந்து வருகிறது. ஆலங்காடு, ஆலமரக்காடு. அன்றெல்லாம் ஈமக்கடன் முடிந்ததும் ஆலமரம் நடுவார்கள். ஆகவே இடுகாடு ஆலமரம் செறிந்திருக்கும். ஆலங்காடு என்றால் இடுகாடு ஆனால் ஆலம் என்னும் சொல்லுக்கு பல பொருட்கள் உண்டு. குறிப்பாக வானம், நஞ்சு, கருமை என்னும் மூன்று பொருள்கள். வானமெனும் காடு. நச்சுக்காடு. கரிய காடு. ஆலங்காடு என சித்தர்பாடல்களில் வரும்போது இவையனைத்தையுமே குறிக்கின்றது. திருவாலங்காடு சென்னைக்கு அருகிலுள்ள சிவத்தலம். காரைக்காலம்மையார் ஈசனடி சேர்ந்த இடம் எனப்படுகிறது.

ஆகவே பட்டினத்தார் பாடலில்

வீடு நமக்கு திருவாலங்காடு, விமலர் தந்த
ஓடு நமக்குஉண்டு வற்றாத பாத்திரம், ஓங்கு செல்வ
நாடு நமக்குஉண்டுகேட்டதெல்லாம் தர, நல்நெஞ்சமே
ஈடு நமக்குச் சொலவோ ஒருவரும் இங்கிலையே.

என்று வரும்போது மேலே சொன்ன எல்லா அர்த்தங்களும் வந்துவிடுகின்றன. அந்தப்பாடலில் அடுத்தடுத்த வார்த்தைகளுக்கும் மேலும் பொருள் கொள்ள முடியும். ஓடு என்றால் திருவோடு. தனக்கு தங்கச் சுடுகாடு, உணவுகொள்ள திருவோடு என்கிறார். ஆனால் ஓடு என்றால் உடல். அது வற்றாதது. மலமிலாதவர், விமலர், தந்தது, மூன்று மலம் நிறைந்தது. நாடு என்னும்போது ஊர் என்னும் பொருள். இரப்பவருக்கு கேட்டதெல்லாம் தருவது. ஆனால் நாடப்படுவது என்னும் பொருளில் அது வீடுபேறையும் குறிக்கும். கயிலாயத்தை குறிக்கும்.

அமெரிக்கப் பயணத்தில் ஒருமுறை ஒரு ஹிப்பியைப் பார்த்தேன். பேருந்தில் சென்று சாப்பிட இறங்கிய இடத்தில். அவரே வந்து இந்தியா வந்திருப்பதாகச் சொன்னார். ’இங்கே எப்படி வாழ்கிறீர்கள்?” என்றேன். “யாராவது கொடுப்பார்கள்” என்றார் அலட்சியமாக. ‘கொடுக்காவிட்டால்?” என்றேன். “சாகவேண்டியதுதான்” என்றார் அப்படித் துணிந்தபின் எதையுமே எண்ணி கவலைப்படவேண்டியதில்லை. ஈடு சொல்ல ஒருவருமே இல்லை. பேரரசர்கள்கூட.

அடிக்கடி இப்பாடலை நினைவுகொள்ள வாய்ப்பு அளிக்கும் ஓர் இடம் உண்டு பார்வதிபுரம் – கணியாகுளம் சாலையில். ஒற்றை ஆலமரம்தான். ஆலமரம்தான் ஒரேமரம் காடாவது. தனிமரத்தோப்பு. ஆலமரமே ஒரு காடு. அதன் விழுதுகளும் தழைந்த கிளைகளும் வேர்ப்பின்னலுமாக நம்மை முழுமையாக உள்வாங்கிக்கொள்ளும் பச்சை இருள் கொண்டது.

அதற்கு அடியில் நான்கு துறவிகளின் சமாதிகள் உள்ளன. அது புறம்போக்கு நிலம். ஆகவே இடுகாடாகப் பயன்படுத்தப்பட்டது. அங்கே அந்தத் துறவிகளின் சமாதிகள் அமைந்தபின்னர் வேறெவரும் புதைக்கவோ எரிக்கவோபடவில்லை. ஒரு சமாதியில் பெயர் கல்வெட்டாக கொஞ்சம் வாசிக்கும்படி உள்ளது. இன்னொன்றை வாசிக்க முடியவில்லை.சிமிண்டில் எழுதப்பட்டது.

பெரிய சமாதி சன்மார்க்கசித்தன் என்பவருக்காக  அவருடைய மாணவர் நடேச சேர்வை என்பவரால் எழுப்பப்பட்டது. சன்மார்க்கசித்தர் ராமலிங்க வள்ளலாரின் வழிவந்த மாணவராக இருந்திருக்கிறார் இங்கே வீட்டுக்கு அருகிலேயே குடிலமைத்து தங்கியிருக்கிறார். அவருடைய சமாதியில் வள்ளலாரின் பாடல் ஒன்றுபொறிக்கப்பட்டுள்ளது. 1988ல் வீடுபேறடைந்தவர்.

மேலும் இரு சமாதிகள் பெயரற்றவை ஆனால் அவ்வப்போது சிலர் வந்து விளக்கு கொளுத்தி வழிபட்டுவிட்டுச் செல்கிறார்கள். அங்கே செல்ல முறையான பாதை இல்லை. கால்வாய் ஓரமாக புதர்களை தாவிக்கடந்துதான் செல்லவேண்டும்.

இந்தச் சமாதிகள் பெரும்பாலும் கைவிடப்பட்ட நிலையிலேயே உள்ளன. நான் அடிக்கடிச் சென்று தனித்து அமர்வதுண்டு. குளிர்ந்த இடம். முற்றிலும் தனியானது. நாம் வேறெங்கோ போகும் உணர்வு. எவரோ உடனிருக்கும் உணர்வு. அதற்கும் அப்பால் ஒன்று உள்ளது. அலைகளடங்கச்செய்வதும் அதுவரை இல்லாத எண்ணங்களை உருவாக்குவதுமான ஒன்று அங்கே உள்ளது. அங்கிருந்து நோக்கினால் நாம் நிதம் வாழும் உலகம் வெளியே வேறொரு விசையில் சென்றுகொண்டிருப்பதை உணர முடியும்

அவ்வப்போது இங்கே சில சாமியார்கள் வந்து தங்குகிறார்கள். ஓரிரு நாட்கள். சமீபத்தில் ஒருவர் ஒருமாதம் வரை தங்கியிருந்தார். கூடாரம்போல ஒன்றைக் கட்டி, சமைத்துச் சாப்பிட்டுக்கொண்டு. என்ன சிக்கல் என்றால் இங்கே அவ்வப்போது மது அருந்த வரும் ரவுடிகள். அவரை மிரட்டி துரத்த அவர்கள் முயன்றதை ஒருமுறை கண்டேன். அவர் ‘நீ அடித்தால் நான் படுவேன், அப்புறமென்ன’ என்ற முகத்துடன் தன் பாட்டுக்கு இருந்தார். என்னை ரவுடிகள் மிரட்டுவதில்லை, உள்ளூர்க்காரன் எனத் தெரியும்

நெடுங்காலமாக ஒதுங்கிக்கிடந்த இந்த இடம் இன்று திடீரென்று  உருவாகிவரும் நான்குவழிச்சாலைக்கு அருகில் வந்துவிட்டது. இனி எப்படி இது மாறும் என்று சொல்லத்தெரியவில்லை. வேரோடு கெல்லி அகற்றப்பட்டு இங்கே வணிகநிலையங்கள் வரலாம். பெரிய ஆலயமாக மாறவும்கூடும். இன்றிருக்கும் இந்த உணர்வை ஒருவேளை இறுதியாக அடைபவன் நான் மட்டுமாக இருக்கலாம்

‘வீடு நமக்கு காடு’ என்னும் அந்த அழகிய முரண்பாட்டை அவ்வப்போது எண்ணிக்கொள்வேன். அதைப்போல் உத்வேகமூட்டும் வரியும் இல்லை. அத்தனை உளவிசைகளையும் அவிழச்செய்து சும்மா அமரச்செய்வதும் பிறிதில்லை.

***

முந்தைய கட்டுரைகண்ணீரும் வாழ்வும்
அடுத்த கட்டுரைஅபி கவிதைகள் நூல்