ஈரோடு சிறுகதை முகாம் -கடிதம்

அன்புள்ள ஜெ,

சுகம்தானே?

கடந்தவாரம் ஈரோட்டில் நடைபெற்ற சிறுகதை முகாமில் கலந்துகொண்டேன். தாங்கள் முன்னெடுக்கும் நிகழ்வில் கலந்துகொள்வது இதுவே முதல்முறை. ஆர்வத்தில் வெள்ளிக்கிழைமை மாலையே நிகழ்விடம் சேர நினைத்தேன்.  ஆனால் திங்கட்கிழமை பக்ரித் விடுமுறையை முன்னிட்டு, பொறுப்புமிக்க பேராசிரியர் ஒருவர் திங்கட்கிழமை வகுப்புகளை வெள்ளி மாலையிலேயே எடுக்க நேர்ந்ததால் பயணத்திட்டத்தை இறுதிநேரத்தில் மாற்றவேண்டியிருந்தது.

சனிக்கிழமை காலை 6மணி சுமாருக்கு ஈரோடு பேருந்துநிலையம் வந்தடைந்தேன். இராப்பயணம் எனக்கு எப்பவுமே தோதுபடாது. கால்கள் ரெண்டும் வீங்கிப்போயிருந்தன. என்னைப்போலவே ஒரு ஜீவன் பஸ் ட்ரைவரிடம் கவண்டச்சிபாளையம் வழிகேட்டுக்கொண்டிருந்தது. ‘பாஸ் நீங்களும் ஜெயமோகன் ஈவன்டுக்குத்தான் போறிங்களா?’ என்றேன். துணைகிடைத்த சந்தோஷத்தில் ஆமாம் என்று தலையசைத்தார். பஸ்ஸில் ஏறியதும் பரஸ்பர விசாரிப்புகள் தொடங்கின. அவர் சென்னை திரைப்படக் கல்லூரியில் படிப்பு முடித்து சினிமா துறையில் sound designerஆக இருக்கிறார். சொந்தமாக ஸ்டுடியோ வைத்துள்ளார். இதுவரை சில திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். சில திரைப்படங்கள் வெளிவரவிருப்பதாகவும் சொன்னார். என் நட்பு வட்டத்தில் எவருமே சினிமா துறையிலில்லை. ‘டைரக்ஷன்ல விருப்பமிருக்கா?’ என்று கேட்டேன். மிக வேகமாக இல்லையென்று தலையசைத்தார். எனக்குக் கொஞ்சம் ஏமாற்றமாயிருந்தது.

இறங்கும்போதுதான் கவனித்தோம் நாங்கள் இருந்த பேருந்திலேயே இன்னொரு நண்பர் உடன்வந்துள்ளாரென்று. அவரும் என்னைப்போல பெங்களூருவிலிருந்துதான் வந்திருந்தார். அரங்கினுள் நுழைந்ததும் தங்களைச்சுற்றி ஒரு கூட்டம் மொய்த்துக்கொண்டிருந்ததைக் கவனித்தோம். குளித்துமுடித்துவிட்டு ஐக்கியமாகலாம் என்று முடிவுகட்டி நாங்கள் மேல்தளத்திலிருந்த அறைக்குச்சென்றோம். திரும்ப கீழே வந்தபோது கூட்டம் கலைந்திருந்தது. சரி சாப்பிட போகலாம் என்று கீழே சென்றோம். முந்திரிபருப்புடன் ஆவிபறக்க பொங்கலும், கேரட் வெங்காயம் தூவிய ஊத்தாப்பமும் இருந்தது. சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது இன்னும் இரு நண்பர்கள் அறிமுகமானார்கள். ஒருவர் பெங்களூரு, இன்னொருவர் திருவண்ணாமலை. அப்போது தொடங்கி நிகழ்வின் இறுதிவரை எங்கள் ஐவருக்குள்ளும் ஒரு இணக்கம் இருந்தது. எங்களில், என்னைத்தவிர மற்ற நால்வரும் தங்களின் ஏதாவதொரு கூட்டத்தில் ஏற்கனவே பங்கேற்றிருந்தனர். எனக்கு இதுதான் முதல்முறை. மலையாள வாடையடிக்கும் தங்களின் தமிழை யூடியூபில் மட்டுமே கேட்டதுண்டு. முதல் அமர்வு தங்களுடையது. தமிழ் இலக்கிய வெளியின் போதாமைகளை கோடிட்டுக்காட்டியது தங்கள் உரை. தமிழிலக்கியம் மீண்டும் தன் வேர்களைத் தேடிச் செல்லவேண்டியதன் அவசியத்தை உணர்த்தியது. புதுமைப்பித்தனின் தாக்கம் அவரை அடுத்து வந்த எழுத்தாளர்களின் சிறுகதைகளில் எவ்வாறு இருந்தது; புதுமைப்பித்தன் தன் சிறுகதைகளில் பரிசோதித்த சாத்தியங்களுள் சிலவற்றை பின்னர்வந்தவர்கள் ஏன் கைவிட்டார்கள் என துலங்கச்செய்தது தங்கள் உரை.

தங்கள் உரையின் இறுதியில் என்னை நானே நொந்துகொண்டேன். பயந்ததுபோலவே பொங்கல் தன் வேலையைக் காட்டியது. போதாக்குறைக்கு முந்தையநாள் இரவின் தூக்கமின்மையும் சேர்ந்துகொண்டது. வெகுநாள் தவத்தை வீணாக்கியதாய் நினைத்தேன். ரொம்பவே குற்றவுணர்வாய் இருந்தது.

அடுத்தடுத்த அமர்வுகளில், வயசாளி ஒருவர் முன்மண்டையில் கொஞ்சே கொஞ்சம் கற்றை முடியுடன் முன்வரிசையில் உட்கார்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். ‘ஓ இவரே தூங்கறாரு. நமக்கென்ன’ என்று மனதைச் சமாதானம் செய்துகொண்டேன்.

இரண்டாயிரத்துக்குப்பின் எழுதவந்த தமிழ் எழுத்தாளர்களைப்பற்றி எனக்கு அவ்வளவு பரிட்சயம் இல்லை. சுனில் கிருஷ்ணன் மற்றும் விஷால்ராஜா ஆகியோரின் அமர்வுகள் புது எழுத்தாளர்களைப் பற்றிய ஒரு சரியான புரிதலைத் தந்தன. சுனிலின் இரு உரைகளுமே செறிவாய் இருந்தன. இடையிடையே, பேசுவது சுனிலா, ஜெயமோகனா என்ற குழப்பம் ஏற்பட்டதைத் தவிர்க்கமுடியவில்லை.

தமிழிலக்கியத்தில் மொழிபெயர்ப்பு இலக்கியத்தின் தாக்கம் குறித்து மோகனரங்கன் பேசினார். மோகனரங்கனை இதற்குமுன் ஈரோட்டில் நடந்த ஒரு இலக்கியக் கூட்டத்தில் சந்தித்ததுண்டு. ஆனால் இதுவரை அவரிடம் பேசியதில்லை. கூச்ச சுபாவத்தில் அவர் என்னை மிஞ்சுபவராகத் தெரிகிறார்.

கோபாலகிருஷ்ணனின், ‘சிறுகதைகளில் மறைபொருள் மற்றும் குறிப்புணர்தல்’, நரேனின், அமெரிக்கச் சிறுகதைகள் – ஆகிய இரு அமர்வுகளுமே நன்றாயிருந்தன.

ஒவொரு அமர்வின் முடிவிலும், உடனிருந்த நண்பர்களின் கண்களைப் பார்ப்பேன். இரத்தச்சிவப்பாய் இருக்கும். ‘நாம பரவால போல’ என்று மனதுக்குள் நினைத்துக்கொள்வேன். ஆனால், சாம்ராஜின் இரு அமர்வுகளுமே இதற்குத் துளியும் இடம்தரவில்லை.

திருமூலநாதன் திருப்புகழ் பாடியபோது ‘சரியான பழம் போல’ என்றுதான் நினைத்தேன். முகாமின் முதல்நாள் இரவு அவர் நிகழ்த்திக்காட்டிய எண்(எட்டு)கவன நிகழ்விற்குப் பின்னர் அவர்மீது ஒரு பயபக்தியே பிறந்துவிட்டது.

அமர்வுகள்போக மீதமிருந்த நேரங்களில் எங்கள் ஐவர்குழு கலைசினிமா பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தது. திருவண்ணாமலை நண்பர், சினிமா ஆர்வத்தில், ஒரு போலி டைரக்க்டருடன் பணியாற்றி லோல்பட்ட கதையைச் சொன்னார். அவருக்கு சொந்தமாகப் படமெடுக்க ஆர்வமிருக்கிறது. சில குறும்படங்களையும் இயக்கியுள்ளார். வான் கா (Von Gogh) வின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட At Eterniti’s Gate திரைப்படத்தைப் பார்த்ததிலிருந்து புதுமைப்பித்தனின் வாழ்க்கையைப் படமாக எடுக்க எனக்கு விருப்பமிருப்பதாக நண்பர்களிடம் கூறினேன். நண்பர்களுடன் பேசியதிலிருந்து ரெண்டு விஷயங்கள் தெளிவாய்த் தெரிந்தன. 1) தமிழின் நவீனக் கவிதைகளை வாசிக்க ரொம்பவே பயப்படுகிறார்கள் அல்லது ஒரு ஒவ்வாமை இருக்கிறது. (இனிவரும் நாட்களில் சிறுகதை ரசனை முகாம் போன்று, கவிதை ரசனை முகாமொன்று அமைத்தால் நன்றாயிருக்கும் என்பது என் அபிப்ராயம்). 2) இலக்கியம் வாசித்தபின் தன் எண்ணங்களை, உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள துணையில்லாத ஒரு தனிமைநெடி எல்லோரின் பேச்சிலும் பளிச்சிட்டது.

இரண்டுநாட்கள் தங்களுக்கு மிக அண்மையிலிருந்தும் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. என் கூச்சசுபாவம் அனுமதிக்கவில்லை. எங்களின் ஐவர்குழுவைத் தவிர வேறு எவருடனும் அதிகம் பேசவில்லை. கூடுமானவரை என் கூச்சசுபாவத்தை அழிக்கத்தான் நினைக்கிறேன். இரண்டாம் நாள் நிகழ்வுகள் முடிந்ததும் ஒரு ஒன்றரை மணிநேரம் தங்களை மொய்த்துக்கொண்டுருந்த கூட்டத்தில் நாங்களும் இருந்தோம். இறுதியாக விடைபெறும்போது தங்கள் கண்களைப்பார்த்து மெலிதாக தலையைமட்டும் அசைத்தேன்.

முகாம் இடத்திலிருந்து பஸ்பிடித்து ஈரோடு புத்தகத்திருவிழவிற்குப் படையெடுத்தது எங்கள் ஐவர்குழு. எங்களுக்குள் கைமாற்றிக்கொள்ள வசதியாக ஆளாளுக்கு முடிந்தவரை வேட்டையாடினோம். நண்பர் ஒருவர் திருவட்டாறு கோயில் பற்றி அ.கா பெருமாள் எழுதிய புத்தகத்தை வாங்க நினைத்து விசாரித்தார். ‘தமிழினியில்’ கிடைக்குமென்று ‘காலச்சுவடி’ல் சொன்னார்கள். தமிழினிக்கு விஜயம் செய்து விசாரித்தால், ஒரே ஒரு பிரதி இருந்ததாகவும் அதை அப்போதுதான் யாரோ வாங்கிச்சென்றதாகவும் விற்பனையாளர் சொன்னார். எதற்கும் கடையில் தேடிப்பார்க்கும்படி சொன்னார். கிடைக்கவில்லை. எப்படியும் அப்புத்தகத்தை வாங்கியே தீருவது என்ற தீர்மானத்தில் நண்பர், விற்பனையாளரிடம் ‘வீட்டு அட்ரஸ்க்கு பார்சல் அனுப்ப முடியுமா?’ என்று கேட்டார். ‘அட இப்போ அந்த புக்கு பிரிண்ட்லியே இல்லிங்க’ என்று ஒரே போடாக போட்டார் விற்பனையாளர். பாவம் நண்பர் மனம் புண்பட்டுவிட்டது. அவரிடம் இரவல் வாங்க நினைத்த என் மனமும்தான்.

நண்பர்களை வழியனுப்பிவிட்டு நானும் பஸ்பிடித்து உட்கார்ந்தேன். ஐவர்குழு தற்காலிகமாக கலைந்தது. அடுத்து விஷ்ணுபுரம் விருதுவிழாவில் கூடுவதாய் தீர்மானம் நிறைவேற்றிக்கொண்டோம்.

இரண்டு நாட்கள் இலக்கியம் தவிர வேறெதுவுமில்லை. புதிய நண்பர்கள். புதிய புதிய முகங்கள். சிரிப்பு. கொண்டாட்டம். இந்த நினைவுகள் அனைத்தையும் தேக்கிப் பத்திரப்படுத்திக்கொண்டு கண்ணயர்ந்தேன்.

முகாமின் இரண்டாம் நாளன்று தங்களைச்சுற்றி குழுமியிருந்த எல்லோரிடமும் சிறுகதைகளைப்பற்றி ஏதேனும் சந்தேகமிருந்தால் கேட்கச் சொன்னீர்கள். கூட்டம் அதிகமாயிருந்ததால் வாளாவிருந்துவிட்டேன்.

என் சந்தேகங்கள்.

  1. தங்கள் உரையில், தமிழின் வணிக இலக்கியம் கையாண்ட களங்களை தீவிர இலக்கியம் ஏரெடுத்தும் பார்க்கவில்லை என்றீர். தீவிர இலக்கியம் தன் எல்லையை யதார்த்தக் களங்களோடு சுருக்கிக்கொண்டதாகக் கூறினீர். போர் போன்ற களங்களை தீவிர இலக்கியம் இலக்கியம்மாகக் கருதவில்லை என்றீர். இதற்கு என்ன காரணம்? வணிக இலக்கியத்திற்கும் தீவிர இலக்கியத்திற்கும் இருந்த மோதல் மட்டும்தான் காரணமா? இந்தப்போக்கு தமிழ்ச் சூழலில் மட்டும்தான் நிலவுகிறதா, இல்லை பிற மொழி இலக்கியங்களிலும் உண்டா? (சரியாகத்தான் கேட்கிறேனா என்று தெரியவில்லை, பிழையிருப்பின் பொறுத்துக்கொள்ளவும்).
  2. மோகனரங்கன் அமர்வைப்பற்றி கோபாலகிருஷ்ணன் பேசும்போது, இந்திய பிறமொழி இலக்கியங்களிலிருந்து தமிழுக்கு வந்த மொழிபெயர்ப்புகளைப் பற்றிக் குறிப்பிட்டார். அப்போது தெலுங்கிலிருந்து தமிழுக்கு குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்புகள் எதுவும் வரவில்லை என்றார். இந்நிலைக்குக் காரணம் என்ன?
  3. சிறுகதையோ, நாவலோ படைப்பாக்கத்தின்போது எழுத்தாளனின் ஆழ்மனது (subconsciousness) எந்த அளவுக்கு பங்கு வகிக்கிறது? படைப்பின் அனைத்து கோணங்களும் எழுத்தாளனின் பிரக்ஞைக்குட்பட்டுத்தான் பிறக்கிறதா?
  4. அவ்வப்போது சில சிறுகதைகள் எழுத முற்பட்டதுண்டு. ஒவ்வொரு முறையும் நான் தோற்றுப்போகும் இடம் வசனம். எழுதும் கதைகளில் ஒன்று வசனமே இருபதில்லை (வெறும் narration) இல்லையேல் வசனம் செயற்கையாக இருக்கிறது. இதனை எப்படி சரிசெய்வது? (இந்தபிரச்சினைக்கும் என் கூச்சசுபாவத்திற்கும் தொடர்புண்டு என்று நினைக்கிறேன்).

 

இறுதியாக – நிகழ்விற்குவரும் அனைவருக்கும் ஈமெயில் அனுப்பி, ஒருங்கிணைக்க வாட்ஸ்-அப் குழு தொடங்கி, பல வகையிலும் உதவியாய் இருந்த அழகிய மணவாளனுக்கும் பெருந்துரை பாரிக்கும் நன்றி. ஒருங்கிணைத்த ஈரோடு கிருஷ்ணன் மற்றும் பெயர்தெரியாத நண்பர்களுக்கும் நன்றி.

 

 அன்பு அசோகன்.     

 

அன்புள்ள அன்பு அசோகன்

 

இந்த வினாக்களுக்கு அங்கே பங்கெடுத்த, எழுத்தாளர்கள் வாசகர்கள் எவரேனும் பதில் சொன்னால் மகிழ்வேன்

ஜெ

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-55
அடுத்த கட்டுரைகாந்தி – வைகுண்டம் – பாலா