சிந்திப்பதற்கும் விவாதிப்பதற்குமான பயிற்சிகள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்

ஒரு நீண்ட விடுப்பில் சென்னை  சென்றிருந்தேன். சென்னை விஷ்ணுபுரம் குழும நண்பர்கள்   சொல்லி , திரு ராஜகோபால் , (Samarth learning solutions) நடத்திய  இரண்டு நாட்களுக்கான ஆளுமை மேம்பாட்டு பயிற்சியில்  17 மற்றும் 18 ஆம் தேதிகளில் கலந்துகொண்டேன்

உண்மையில் கலந்துகொள்வதற்கு முன்னர் ஆளுமை மேம்பாட்டிற்கு என்ன இரண்டு நாட்கள் பயிற்சியளிக்க வேண்டியிருக்கிறது என்னும் அலட்சிய மனோபாவம் இருந்தது. மேலும் எனக்கென்ன இனி மேம்படுத்திக்கொள வேண்டும், நல்ல ஆசிரியையாகவும் அன்னையாகவும்தானே இருக்கிறோம்? என்றும் ஒரு கேள்வி இருந்தது. எதற்கும் போகலாம் சென்னை குழும நண்பர்களை பரிச்சயம் செய்துகொண்டதுபோலிருக்கும் என்றே சென்றேன்

உண்மையில் இதுபோன்ற நிறைய பயிற்சிகளை எங்களுக்கு கல்லூரியில் வருடா வருடம் அளித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள்.  அந்த பயிற்சிகள் என்பது, ஒருவர் மேடையில் சொற்பொழிவாற்றுவார் எப்படி நாங்கள் இந்த உயரிய தொழிலை தெய்வமென நினைக்கவெண்டும், முன்னுதாரணமான ஆசிரியர்களின் வாழ்க்கை குறிப்பு இப்படியிருக்கும், அல்லது எங்களுக்கு சில விளையாட்டுககள் நடத்துவார்கள் அன்றெல்லாம் மகிழ்ந்திருந்து வீடு திரும்புவோம் அவ்வளவுதான். பயிற்சி என்று சொல்லப்பட்ட அந்த நிகழ்வுகளிலிருந்து எங்களுக்கு  கற்றுக்கொள்ளவோ, மேம்படுத்திக்கொள்ளவோ  ஏதும் இருந்ததே இல்லை.

ஆனால் ராஜகோபாலின் பயிற்சியில் கலந்துகொண்டு நிறைவு செய்த பின்னரே இது எத்தனை அவசியமான ஒன்று என்பதையும் நான் மிகத்தாமதமாக இப்பயிற்சியினை எடுத்துக்கொண்டிருக்கிறேன் என்றும் உணர்ந்து வருந்துகிறேன். 15பேர் கலந்துகொண்டோம். பெரும்பாலும் தகவல்தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் துறையை சேர்ந்தவர்களும் என்னைத்தவிர இன்னொரு ஆசிரியரும். அனைவரும் விஷ்ணுபுரம் குழுமத்தை சேர்ந்தவர்களே!

12 வருட ஆசிரியத்தொழிலில் நான் முக்கியமென கருதிவந்தது, எப்பொழுதும் அன்பாயிருப்பது, தேவைப்பட்டால் கடுமைகாட்டுவது, நேரம் தவறாமை, மாணவர்களுக்கு  சரியாக விஷயத்தை கொண்டு சேர்ப்பது  இவைகளை மட்டுமே.ஆனால் இந்த பயிற்சியின் பின்னரே இன்னும் எத்தனை முக்கியமான நான் அவசியம் பின்பற்றவேண்டிய, எனக்கும் மாணவர்களுக்கும் சேர்த்து பயனளிக்கக்கூடிய  நுட்பமானவிஷயங்கள் இருக்கின்றன என்றறிந்து கொண்டேன்

ஆசிரியத்துக்கு மட்டுமல்ல,  ஒரு உரையாடலை எப்படி சாமார்த்தியமாக கொண்டு போவது, வியாபாரப்பேச்சுக்களை எப்படி வெற்றிகரகமாக நடத்துவது இப்படி ஏராளமாக கற்றுக்கொண்டோம்

பங்கேற்பாளர்கள் பேசுவதை வீடியோவாக எடுத்து மீண்டும் எங்களுக்கே போட்டுக்காண்பிக்கையில் அதில் நாங்கள் செய்தவையும் செய்யக்கூடாதவைகளும் எங்களுக்கே தெளிவாக  தெரிந்தது.இந்த பயிற்சியின் வாயிலாக அல்லாது வேறெப்படியும் நாங்கள் இதுபோன்ற தவறுகளை, தோற்றப்பிழைகளை சரிசெய்துகொண்டிருக்கவும் ஏன் அறிந்துகொண்டிருக்கவும் கூட வாய்ப்பில்லை, இரண்டு நாட்களுமே கொட்டும் மழையில் முழுக்க நனைந்து கொண்டும் கூட பின்மாலை வரை நீண்ட பயிற்சியில் அனைவரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டோம்.

ராஜகோபாலும் அவர் நண்பர் அருணும் இப்பயிற்சியை நடத்தினார்கள். இருவரும் மிக்க தோழமையுடன் சிரித்த முகத்துடன் சோர்வின்றி , கட்டணமுமின்றி எங்களுக்கு முழுமனதுடன்  பயிற்சி அளித்தனர். பயிற்சியாளர்களுடன் பங்கேற்பாளர்கள் இருந்ததைபோலல்லாமல்  நெருங்சிய சினேகிதரோ அல்லது சொந்த சகோதரனோ வந்திருந்து வீட்டு முன்னறையில் காபி குடித்துக்கொண்டே இயல்பாக பேசிக்கொண்டிருந்தது போன்ற ஒரு சுவாதீனமும் செளகரியமும் எங்கள் அனைவருக்கும் இருந்தது.

திரு ராஜகோபால் அவர்களை வெண்முரசு வாசகராக, விஷ்ணுபுரம் விழாவில் இலக்கிய வாசகராகத்தான் அறிமுகம் ஆனால்  இப்படியான பயிற்சிகளை நடத்துபவர் என்றே இப்பொழுதுதான் அறிந்துகொண்டேன்.

விடுப்பு முடிந்து இனி ஒரு ஆசிரியையாக  மாணவர்கள் முன்னால் நின்று முன்னைக்காட்டிலும் சரியாகவும் சிறப்பாகவும் என்னால் பாடங்களை நடத்த முடியும் என்று திடமான நம்பிக்கை வந்திருக்கிறது இப்போது. பங்கேற்பளர்களில் பல துறைகளை சேர்ந்தவர்களும் இருந்தார்கள்.  அவர்களுடன் கலந்துரையாடியதும் நல்ல அனுபவமாயிருந்தது,. பயிற்சியளித்த ராஜகோபால் மற்றும் அருண் அவர்களுக்கும், விஷ்ணுபுரம் குழுமத்திற்கும் பயிற்சிக்கு  தன் வீட்டில் இடமளித்த திரு செளந்தருக்கும் நன்றி.

அன்புடன்

லோகமாதேவி

***

அன்புள்ள லோகமாதேவி

இத்தகைய பயிற்சிகள் முக்கியமானவை என நான் அனுபவத்தில் அறிந்திருக்கிறேன். ஆகவேதான் ராஜகோபால், குவிஸ் செந்தில் ஆகியோரைக்கொண்டு ஒரு நல்ல நிகழ்ச்சியை ஈரோட்டில் ஒருங்கமைத்தோம்.

இத்தகைய பயிற்சிகள் ஒரு குறிப்பிட்ட செயல்முறை கொண்டவை. அவை சமகால மாணவர்கள், ஊழியர்களை பொதுவாக கருத்தில்கொண்டு தரவுகளைச் சேர்க்கின்றன. அவற்றில் நிகழும் நீண்டகால ஆராய்ச்சியின் விளைவாக பழகுதல்- ஈடுபடுதல்- வெளிக்காட்டிக்கொள்ளுதல் ஆகியவற்றில் பொதுவாக நம்மவர் அடையும் சிக்கல்களை அவதானிக்கின்றன. அவற்றை பொதுமைப்படுத்தி சில அடிப்படைகளை வகுத்துக்கொள்கின்றன. அவற்றை அவர்களிடமே சொல்லி, அவற்றுக்கான தீர்வுகளைப் பரிந்துரைக்கிறார்கள். அத்தீர்வுகளை நடைமுறைப்படுத்தும் முறை, அதில் வரும் இடர்கள் ஆகியவற்றையும் குறிப்பிடுகிறார்கள். இவர்கள் சொல்லும் அத்தீர்வுகளும் தொடர்ந்து நடைமுறையில் செய்துபார்த்து பயன்களை அவதானித்து மேம்படுத்திக்கொள்ளப்பட்டவை.

ஆகவே இவை பெரும்பாலானவர்களில் ஆழமான விளைவுகளை உருவாக்குகின்றன. உண்மையில் இத்தகைய பயிற்சிகளை எடுத்துக்கொள்பவர்கள் இரண்டு எண்ணங்களை அடைவார்கள். ஒன்று, இதெல்லாம் நமக்கே தெரியுமே ஆனால் இப்படி எண்ணியதே இல்லையே என்னும் வியப்பு. இரண்டு, தன்னுடையது மட்டுமேயான சிக்கல் என்பது பொதுவாக அனைவருக்குமே உள்ளதுதானோ என்னும் ஐயமும் அதன்விளைவான நிறைவும். மூன்று, தன் சிக்கல்களுக்கான தீர்வு இத்தனை எளிதானதா என்ற பிரமிப்பு. ஆனால் அது பயன் தருவது என்று உடனே கண்டுகொள்ளவும் அவர்களால் இயலும். மேலான கல்விநிலையங்களில் இப்பயிற்சிகள் இயல்பாகவே அமைந்துவிடும். நமக்கு இத்தகைய தனிப்பயிற்சிகள் வழியாகவே அவை இயல்கின்றன

இவற்றில் சில உலகளாவிய சிக்கல்கள். நவீன நுகர்வியம், நவீய வேலைச்சூழல் ஆகியவற்றை எதிர்கொள்வதற்கான பயிற்சிகள் உலகளாவியவை. மிகச்சிறிய சில நடைமுறைச் சிக்கல்களால் நாம் பெரிய அளவில் தோற்றுக்கொண்டிருப்போம். நமக்கு அத்தோல்வியின் விளைவு குறித்த பதற்றமும் அச்சமும்தான் இருக்குமே ஒழிய அது ஏன் என்று சற்றே விலகிநின்று நோக்க இயல்வதில்லை. இப்பயிற்சிகளில் அவை நம் முன் எடுத்துக் காட்டப்படுகின்றன. தொடர்ச்சியாக கூர்கொண்டபடியே செல்லும் நவீனச் சூழலில் நாம் தகவமைந்துகொள்ள இவை உதவுகின்றன

ஆனால் இந்தியச் சூழலில் மேலும் நுட்பமான சிக்கல்கள் உள்ளன. நாம் இறுக்கமான குடும்ப அமைப்புக்குள் இருந்து வந்தவர்கள். நமது குடும்பங்கள் உரையாடல், கலந்து பழகுதலுக்கு வாய்ப்பளிப்பவை அல்ல. கடுமையான மேல்கீழ் அடுக்குமுறை கொண்டவை. நூற்றுக்கணக்கான கட்டுப்பாடுகளால் ஆனவை. அங்கிருந்து சட்டென்று நாம் பொதுவெளிக்கு வரும்போது கடுமையான புழக்கவியல் சிக்கல்களுக்கு ஆளாகிறோம். ஆண்கள் பெண்களுடன் பெண்கள் ஆண்களுடன் பேசுவதற்கே பதறும் சூழல் இன்றும் உள்ளது. பேசினாலும்கூட இயல்பாக, தொழில்முறையாக, பேச நாம் தனியாக பயின்றே ஆகவேண்டும்.

ஆனால் அதைவிட நுட்பமான சிக்கல்கள் உண்டு. உதாரணமாக, முன்பு ராஜகோபாலன் என்னிடம் சொன்னது இது. இந்திய உளவியலில் தொழிற்சூழலில் உள்ள மிகப்பெரிய சிக்கலே ‘வயசுக்கு மரியாதை’ என்பதுதான். ஒருநாளில் ஒருமுறையாவது இந்த வார்த்தை காதில் விழும். வயதில் இளையவராகிய ஒருவர் தன்னை மறுத்துவிட்டால் இந்தியர்கள் புண்படுகிறார்கள். அந்தக் கருத்து எத்தனை முக்கியமானது, எத்தனை நன்மைசெய்வது என்றாலும் அதனால் பயனில்லை. இச்சூழலில் கருத்துக்களை கருத்துக்களாக எடுத்துக்கொள்ள மூத்தவர்களுக்கும், மூத்தவர்களின் இந்த உளச்சிக்கலை அடையாளம் கண்டுகொண்டு நடந்துகொள்ள இளையோருக்கும் பயிற்றுவிக்கவேண்டியிருக்கிறது

இன்னொரு உதாரணம், சென்ற ஈரோடு பயிற்சிமுகாம் விவாதங்களில் ஒர் இளைஞரின் பேச்சுமுறையை குவிஸ் செந்தில் சுட்டிக்காட்டினார். விவாதங்களில் எதிர்த்தரப்பை எள்ளலுடன், சலிப்புடன் எதிர்கொள்வது போன்ற ஒரு பாவனை அவரிடமிருந்தது. “இப்ப அதைப்பத்து இங்க சொன்னார். அதெல்லாம் இவர் நினைக்கிற மாதிரி இல்ல. அதெல்லாம் வேற..வேற எங்கியோ இருக்கு” என்று அவர் சொன்னார். இது நம் இளைஞர்கள் சாதாரணமாகப் பேசும் முறை. எதிர்த்தரப்பை ஏளனம் செய்வது, எதிர்தரப்பு பேசும்போதே சிரிப்பது, தன்னை அதைக்கடந்தவர்கள்போல காட்டிக்கொள்வது.அந்த இளைஞர் அதை வேண்டுமென்றே செய்யவில்லை. ஆனால் அந்த தருணத்தில் அவர் பழகிய அந்த பாவனைகள் இயல்பாக வெளிவந்தன. ஆனால் ஒரு பொதுவிவாதத்தில் அவை மிகமிக எதிர்விளைவுகளை உருவாக்கும்.  ,

இதில் கொஞ்சம் ஏமாற்றமான விஷயம் ஒன்றுண்டு. நாம் அனைவருமே நம்மை மிகமிக அரியவகையினர், எவரைப்போலவும் அல்லாதவர்கள் என நினைத்துக்கொண்டிருப்போம். அப்படி ஒன்றும் அல்ல நாமும் பிறரைப்போலத்தான், ஒரே சூழலில் ஒரேவகை வாழ்க்கையில் ஒரேவகையான உளவியலையும் ஒரேவகையான சிக்கல்களையும் கொண்டிருக்கிறோம் என்று தெரியவருவது கடினமானது. ஆனால் அதை நாம் ஏற்றுக்கொண்டதும் ஒரு விடுதலை வருகிறது. அது உற்சாகமானது. அவ்வாறு பொதுவான பிரச்சினைகளை அடையாளம் கண்டுகொண்டு கடந்ததுமே உண்மையிலேயே நமக்கு மட்டுமேயான சிக்கல்களை அறிகிறோம். அது மேலும் நம்மை கூர்மையானவர்களாக்குகிறது.

இத்தகைய பயிற்சிகள் முக்கியமானவை, நல்விளைவுகளை உருவாக்குபவை என கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே கல்லூரிகள், நிறுவனங்களில் இவை பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் எங்கே சிக்கல் நிகழ்கிறது என்றால் ஒன்று, மிகப்பெரிய எண்ணிக்கையில் பங்கேற்பாளர்களை கொண்டுவருவது. அவர்கள் வெவ்வேறுவகையினராக இருப்பது ஒருவர் இரண்டுநாளில் ஆயிரம் பேருக்கு ஆளுமைப் பயிற்சி அளிக்க முடியாது. உச்சகட்ட எண்ணிக்கையே நூறு என்றால்தான் பயனுள்ளதாக இருக்கும். ஐம்பதுதான் வசதியான எண்ணிக்கை. அவர்களும் பொதுவான ஈடுபாடு, பொதுவான படிப்பு, பொதுவான சமூகநிலை ஆகியவற்றின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டவர்களாக இருக்கவேண்டும். சம்பந்தமே இல்லாத கூட்டம் என்றால் பொதுச் சொற்பொழிவுகளை செய்துவிட்டு கடந்துசெல்லவே முடியும்

இன்னொன்று, இப்பயிற்சிகள் இலவசமாக நடக்கக் கூடாது. கட்டணம் இருந்தாகவேண்டும். அக்கட்டணமும் பங்கேற்பாளர்களால் கட்டப்படவேண்டும். அதாவது இப்பயிற்சி சும்மா போய் அமர்ந்துகொள்பவர்களுக்கானது அல்ல. இது விலைகொடுத்து வாங்கப்பட்டதாக இருக்கவேண்டும். இதில் பங்கெடுப்பவர்கள் உண்மையான ஆர்வத்துடன் ஈடுபடவேண்டும். இதில் ஓர் ஐந்துபேர் வந்தமர்ந்து குறுக்குக்கேள்விகளைக் கேட்டாலே போதும் மொத்த நிகழ்ச்சியும் அனைவருக்கும் பயனற்றதாக ஆகிவிடும்

இறுதியாக, இப்பயிற்சிகளின் எல்லை. குறிப்பிட்ட, தனிப்பட்டமுறையான, சிக்கல்கள் கொண்டவர்களுக்கு இவை பயனுள்ளவை அல்ல. அத்தகைய உளவியல் சிக்கல்கள், நடத்தைச் சிக்கல்கள் போன்றவற்றை தனிப்பட்ட முறையில் சிகிழ்ச்சையாளரைச் சந்தித்துத்தான் தீர்வுகாண முடியும். இவை ஒரு பொதுச்சூழலில் பொதுவாக உருவாகும் இடர்கள் சார்ந்தவை. இவை ஏன் பயனுள்ளவை என்றால் தனிப்பட்ட சிக்கல் என நாம் நினைப்பவற்றில் மிகப்பெரும்பகுதி அனைவருக்கும் உரிய பொதுச்சிக்கல்கள் என்பதே

ராஜகோபாலன் அவருடைய அமைப்பு வழியாக இப்போது இதை தமிழ்நாடு அளவில் விரிவாகச் செய்துவருகிறார். செந்திலும் தொடர்நிகழ்ச்சிகள் செய்து வருகிறார். தொழில்- கல்வி தளங்களில் அவர் செய்துவரும் இப்பயிற்சிகளை இலக்கியம் – சிந்தனை தளத்தில் அளிக்கமுடியுமா என்றுதான் ஈரோட்டில் முயன்றோம். அது மிகப்பெரிய அளவில் பயனுள்ளதாக இருந்தது. மேலும் நண்பர்களும் அமைப்புக்களும் அவர்களை பயன்படுத்திக்கொண்டால் நல்லது

ஜெ

***

முந்தைய கட்டுரைகாந்தி – வைகுண்டம் – பாலா
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-56