அயல் இலக்கியம்- கடிதம்

இலக்கியவிமர்சனம், அயல் இலக்கியம்

வணக்கம் ஜெ.

 

உங்கள் வாசகர்களுக்குச் சிரமம் வைக்காமல் முகநூலில் நான் எழுதியதை நானே அனுப்பி வைக்கிறேன்.

 

ஜெயமோகனை நான் மிகவும் மதிக்கிறேன். அவருடைய விஷ்ணுபுரம் மற்றும் கொற்றவை நாவல்கள் சமகால தமிழ்ப் படைப்பிலக்கியத்தின் உச்சங்கள் என்று சொல்ல அவருடைய பல “வாசகர்களாகப்பட்டவர்களைவிட” எனக்கு அருகதை உண்டு. ஏனென்றால் இந்த நாவல்களை நான் சில முறைகளாவது (முழுமையாக) வாசித்திருக்கிறேன். என்னை எங்கெல்லாம் தற்காலத் தமிழ் இலக்கியத்தைப் பற்றி ஆங்கிலத்தில் பேச அழைக்கிறார்களோ அங்கு தவறாமல் அவரையும் எஸ். ராமகிருஷ்ணனையும் பற்றிப் பேசி வருகிறேன்.

 

சுனில் கிருஷ்ணன் எழுதிய கட்டுரைக்குச் சுனிலிடமிருந்துதான் பொதுவெளியில் எதிர்வினை வரும் என்று எதிர்ப்பார்த்தேன். என் பதிவு வந்த அன்று காலையே சுனில் எனக்குக் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். அதை என் பக்கத்தில் வெளியிடவும் சொல்லியிருந்தார். நான்தான் செய்யவில்லை. மறுபடியும் சொல்கிறேன், சுனில் என் நண்பர்.

 

ஜெயமோகனின் நீண்ட பதிவுக்குப் பதிலாக நான் நீட்டி முழக்கப் போவதில்லை. தமிழ்கூறு நல்லுலகம் பிழைத்துப் போகட்டும். ஆனால் 10 முக்கிய எண்ணங்களைப் பதிவு செய்து விடுகிறேன்.

 

(1) சொன்னதுபோல் எதிர்வினை என்பது பொதுவெளியில் சுனிலிடம் வர வேண்டும் என்று எதிர்ப்பார்த்தேன். அதனால் அவர் அனுப்பிய குறுஞ்செய்தியை அவர் அனுமதி தந்தும்கூட நான் வெளியிடவில்லை. இதுவரைக்கும் அவர் பதில் தந்ததாய் எனக்குத் தகவல் இல்லை. சித்துராஜ் சொல்வதை ஜெயமோகனிடம் எடுத்துச் சென்று பள்ளிக் குழந்தைகள் பாணியில் ‘ஆசிரியர் திட்டுவார்’ என்று வாயைப் பார்த்துக் கொண்டிருப்பது ஜெயமோகனின் வாசகர்கள் கையாளும் பாணி போலும். இது முன்னாலும் நடந்திருக்கிறது.  நானும் பல முறை சொன்னதுபோல: இவர்கள் சொல்லி எல்லாம் என்னைத் திருத்திவிட முடியாது.

 

(2) என் பதிவில் (என்னையும் சேர்த்து) நான் யாருக்கும் இலக்கியவாதி பட்டம் கட்ட வரவில்லை. அயலகத் தமிழ் இலக்கியத்தைப் பற்றிப் பேச வருபவர் முக்கியமான தொகுப்புக்களை வாசித்திருக்கலாம் என்றேன். தப்பா? சுனில் பேச வந்த தலைப்பு யார் சிறந்த அயலகத் தமிழ் இலக்கியவாதி என்பதைப் பற்றியதல்ல. அயலகத் தமிழ் இலக்கியங்கள் எதைப் பேசுகின்றன என்பது பற்றி. அப்படி இருக்க முக்கியமான படைப்புக்களைப் பாரபட்சமில்லாமல் படித்துவிட்டுப் பேசுவதுதானே நியாயம். இதில் இலக்கிய அளவுகோல் எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். சிங்கப்பூர் இலக்கியத்தைப் பற்றிப் பேச சிறந்த இலக்கியவாதியாக நான் கருதும் சுனிலிடம் போதிய ‘சரக்கு’ இல்லை என்கிறேன் நான். அவர் கூறிய கருத்துக்கள் மொத்தமும் (யார் ஓரளவுக்குச் சிறப்பாக எழுதுகிறார்கள் என்பது உட்பட) ஜெயமோகன் முன்னால் சொன்னவை. இலக்கிய விமர்சனத்துக்கும் இலக்கிய அளவுகோலுக்கும் ஜெயமோகன் பக்கங்களையே ‘மூல கிரந்தங்களாக’ பயன்படுத்துவது எத்தகைய இலக்கிய ஆராய்ச்சி என்பதை நான் அறிய மாட்டேன். Go to the sources, Suneel!

 

(3) சுனில் கட்டுரைக்கெல்லாம் இங்கு யாரும் பதற்றப்படவில்லை. அவனவனுக்கு ஆயிரம் வேலைகள்.

 

(4) பட்டியலில் பெயர்கள் விடுபட்டுப் போனதற்காக நான் கூவுவதாக ஜெயமோகன் சொல்கிறார். வெளியிலிருந்து வருபவர்கள் சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்தைப் பற்றிப் பேசக் கூடாது என்று நான் சொல்கிறேன் என்கிறார். இது என் பதிவின் மிக மேம்போக்கான வாசிப்பு. சுற்றுலா பயணிகளாகச் சிங்கப்பூருக்கு வரும் தமிழக எழுத்தாளர்கள் சும்மா ஜெயமோகன் பக்கங்களையே இலக்கிய அளவுகோலாகப் பயன்படுத்திச் சிங்கப்பூர் இலக்கியத்தைப் பற்றிப் பேசுவதைத்தான் குறிப்பிட்டேன்.

 

(5) சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்தைப் பற்றி எதை வேண்டுமானாலும் சொல்லுங்கள்

முழுக்கப் படித்துவிட்டுச் சொல்லுங்கள் என்பது என் வாதம். சும்மா உங்களை அழைத்து வந்து ‘ஆதரித்தவர்களின்’ கருத்துகளை மட்டும் பிரதிபலிக்காதீர்கள் என்பது என் வேண்டுகோள்.

 

(6) ஆமாம் மாலன் மேல் அப்படி என்ன காண்டு?

 

(7) கனகலதாவைப் பாராட்டியதை நான் எங்கும் தவறென்று சொல்லவில்லை. சிங்கப்பூரின் தலை சிறந்த எழுத்தாளர்களில் அவர் ஒருவர் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. (அவர் தமிழ் முரசில் இருக்கிறார். அந்த ஸ்தாபனப் பத்திரிகையில் என் கவிதை வெளிவராமல் போனால் நான் எப்படி மோட்சம் அடைவேன்?) கனகலதாவைத் தாண்டியும் வரவேண்டும் என்கிறேன். கண்ணதாசன் சொன்னதைப் போல் ‘என் மனைவி அழகானவள் என்றால் உன் மனைவி அசிங்கமானவள் என்று அர்த்தமல்ல.’ இதைக் கனகலதாவிடம் பதிவு வந்த அன்றிரவே சொல்லிவிட்டேன். (கண்ணதாசன் சொன்னதை அல்ல. நான் நினைப்பதை).

 

(8) ஆமாம் சூர்ய ரெத்னா மீது அப்படி என்ன கோபம்? பரமபதம் நாவலிலே கனகலதா கூட தொடாத சிங்கப்பூர் இரவு விடுதி கலாச்சாரத்தையும், சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த தமிழர்கள் சந்திக்கும் அறச் சிக்கல்களையும் சொல்லியிருக்கிறார். சொல்லும் தரம் உங்கள் அளவுக்கு இல்லை என்பதால் அவர் செய்திருக்கும் பதிவு மோசமானதாகி விடுமா?

 

(9) சிங்கப்பூரில் எழுத்தாளர்களைக் கவர்வதற்காக நான் பதிவு போட்டதாக ஜெயமோகன் சொல்கிறார். ஆமாம், நான் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் பதவிக்கு வருடா வருடம் போட்டியிடுகிறேன் பாருங்கள். அவர்கள் சார்பாக நான் போட்ட பதிவுக்கே ஆதரவாகச் சிங்கப்பூர் எழுத்தாளர்கள் வர மாட்டார்கள். இவர் வேற காமெடி பண்ணிகிட்டு.

 

(10) விஷ்ணுபுர சந்திப்புகளுக்கு இந்த வருஷமாவது போக வேண்டும் என்று போன வாரம்தான் நினைத்தேன். நண்பர்களோடு பேசினேன். இப்போது அது நடக்குமா, விடுவார்களா தெரியவில்லை.

 

ஜெயமோகன் அறியாதது அல்ல. கிருஷ்ணரை அர்ஜுனனும் சதா சர்வ காலமும் நினைத்துக் கொண்டிருந்தான். சிசுபாலனும் நினைத்துக் கொண்டிருந்தான்.

 

இந்த இடத்தில் எனக்குச் சிசுபாலன் வேடம்.

 

 

மிகுந்த அன்புடன்

 

சித்துராஜ் பொன்ராஜ்

 

அன்புள்ள சித்துராஜ்,

நன்றி

 

இத்தகைய விவாதங்களில் என் நிலைபாடு எப்போதும் ஒன்றே. இலக்கிய விவாதங்களில் எத்தனை சூடு வேண்டுமென்றாலும் உருவாகலாம். அவை வாசகர்களை உள்ளே இழுப்பவை. அவற்றினூடாக பல அடிப்படைகளை வாசகர்கள் கற்றுக்கொள்ள முடியும். பல தரப்புகளை அறியமுடியும்

 

ஆனால் இலக்கியவிவாதங்களை சிறுமைப்படுத்துவது, ஓரிரு வரிகளில் நக்கல் கிண்டலுடன் கடந்துசெல்வது, அவற்றை பல்வேறுவகையான வம்புகளாக ஆக்குவது ஆகியவை இலக்கியத்திற்கே எதிரான செயல்கள்.

 

நீங்கள் சுனீல்கிருஷ்ணனின் கட்டுரையின் அத்தனை போதாமைகளையும் சுட்டி வலுவான ஒரு கட்டுரை எழுதலாம். அதில் அவரை விளாசலாம். என்னையும்தான். அதில் பிழையேதுமில்லை

 

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-51
அடுத்த கட்டுரைஅபியை அறிதல்- நந்தகுமார்