‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-57

அஸ்தினபுரியின் மேற்கே அமைந்திருந்த குறுங்காட்டில் விழிகளை முற்றிலும் இல்லாமலாக்கிய கூரிருளுக்குள் அஸ்வத்தாமன் முன்னால் செல்ல கிருபரும் கிருதவர்மனும் தொடர்ந்து சென்றனர். அஸ்வத்தாமன் செவிகளையும் தோலையும் விழிகளாக ஆக்கிக்கொண்டான். அவன் செல்லும் வழியை மட்டுமே நோக்கி பிறர் சென்றனர். அவர்களின் காலடியோசைகள் இருளுக்குள் ஒலித்து பெருகி அகன்றுசென்றன. சருகுகளுக்குள் சிற்றுயிர்கள் ஊடுருவி ஓடும் ஓசையும் தலைக்குமேல் பறவைகள் கலைந்து எழுந்து சிறகடித்து கூவிச் சுழலும் பூசலும் எழுந்தன. கிளம்பிய கணம் முதல் அஸ்வத்தாமன் ஒருகணமும் ஓய்வின்றி நடந்துகொண்டிருந்தான். அவர்கள் களைத்து ஆற்றலிழந்துவிட்டிருந்தனர். பல இடங்களில் கிருபர் விழுவதுபோல் தள்ளாடினார். கிருதவர்மன் அவரை தோள்பற்றி நிறுத்தி மீண்டும் கூட்டிச்சென்றான். அவர்களின் மூச்சொலிகள் பாம்புச்சீறல்கள்போல் ஒலித்தன.

அது உச்சிப்பகல் பொழுது. அன்று காலை நாளவன் எழுந்தபோது அவர்கள் அஸ்தினபுரியின் புறக்காட்டை வந்தடைந்திருந்தனர். நடக்க நடக்க இலைகளின் ஒளி அணைந்துகொண்டிருப்பதை, நிழல்கள் மறைவதை கிருதவர்மன் கண்டான். அதை அவன் கிருபருக்கு சுட்டிக்காட்டினான். மழைமுகில்கள் செறிகின்றனவா என அவர் வானை நோக்கினார். வான் ஒளிமங்கி கரிய தோற்கூடாரப் பரப்புபோல மாறிவிட்டிருந்தது. அவர்கள் அஸ்தினபுரியை நெருங்கும்போது முழுமையாகவே இருட்டிவிட்டது. மழையிருளை கிருதவர்மன்  கண்டதுண்டு என்றாலும் நடுப்பகலில் நள்ளிரவு எழுவதுபோல் இருளும் என்று எண்ணியிருக்கவில்லை. கிருபர் அவனை அச்சத்துடன் திரும்பி நோக்கினார். அவனும் சொல்லின்றி அவரை நோக்கினான். விழிகள் மறைவதைப்போல் அவர்கள் உணர்ந்தனர். சற்று நேரத்திலேயே ஒலிகளும் தொடுவுணர்வும் மணங்களுமாக காடு மாறியது.

ஆனால் அஸ்வத்தாமன் அதை அறிந்தது போலவே தெரியவில்லை. அவனுடைய விசை குறையவுமில்லை. அவன் எங்கு செல்கிறான் என்று அவர்கள் அறியவில்லை. அந்த வினா எழுந்தாலும் அதில் பொருளில்லை என்றும் தோன்றியது. அஸ்தினபுரியின் மேற்குக்காட்டை அடைந்தபோது கிருதவர்மன்  அவன் எங்கு செல்கிறான் என்பதை புரிந்துகொண்டான். அங்கே முன்பொருமுறை அவன் சென்று கலிதேவனின் ஆலயத்தில் பலிகொடை அளித்ததுண்டு. இலக்கு தெரிந்ததுமே அவன் ஆறுதல்கொண்டு சீராக மூச்சுவிடத் தொடங்கினான். இரவு எழுந்தது என எண்ணி நாகங்களும் சிற்றுயிர்களும் பதுங்கிடங்களிலிருந்து வெளியே வந்தன. பறவைகள் மீண்டும் சேக்கேறின. நரிகளின் ஊளைகள் எழுந்தன. அவர்கள் அஸ்தினபுரியின் மேற்குக்கோட்டைவாயிலை கடந்துசென்றபோது நகரெங்கும் நரிகளின் ஊளை முழங்குவதை கேட்டார்கள்.

கலிதேவனின் ஆலயத்தை அவர்கள் சென்றடைந்துவிட்டிருந்தனர். அங்கே எதுவுமே தெரியவில்லை. ஆலயத்தின் வெளிவிளிம்புகூட துலங்கவில்லை. அது ஆலயம் என்று கிருதவர்மன்  தன் உள்ளத்தால் உருவகித்துக்கொண்டான். அஸ்வத்தாமன் இரு அம்புகளை உரசி அனலெழுப்பி சருகுகளை பற்றவைத்தான். சருகில் அனல் செவ்விதழ் என முளைத்து எழுந்தது. கிளைகளுக்குமேல் பறவைகள் குரலெழுப்பி கலைந்தன. சருகுகளில் தழல் படர்ந்து எழுந்தபோது ஆலயம் துலங்கியது. செதுக்காத மலைக்கற்களை அடுக்கி கட்டப்பட்டது. உள்ளே கருவறைக்குள் கரிய நீளுருளைக் கல்லில் இரு கண்கள் மட்டும் பொறிக்கப்பட்ட கலியின் உருவம் அமர்ந்திருந்தது. அக்கண்கள்மேல் அரக்கு பொருத்தப்பட்டு நீலப்பட்டுத் துணியால் கட்டப்பட்டிருந்தது. கரும்பட்டும், எதிரெதிர் சிற்றாடிகளும், தோல்சவுக்கும், குறைகுடமும், கருமயிர்ச்சுருள்களும், இடம்புரிச்சங்கும் அதன் முன் படைக்கப்பட்டிருந்தன. காகத்தின் இறகுகளாலான விசிறிகள் அதன் காலடியில் விரிக்கப்பட்டிருந்தன.

அஸ்வத்தாமன் அதன் முன் சென்று நின்றான். தன் வில்லை கலிதேவனின் முன் வைத்து “அரசே, உங்கள் பொருட்டு பழிநிகர் செய்துவிட்டு வந்திருக்கிறோம். பாண்டவ மைந்தரை குருதிபலி கொண்டோம். அப்பலியை ஏற்று அருள்க! அங்கே மூச்சுலகில் நிறைவுகொள்க!” என்றான். கருவறைக்குள் இரு நாகங்கள் அனலொளியில் நீர்வழிவென அசைவதை கிருதவர்மன்  கண்டான். அஸ்வத்தாமன் “அரசே, உங்கள் ஏற்பு என காகமோ நரியோ இங்கு வருக! என் வில்லை வாழ்த்திச்செல்க… எழுக, அரசே! நிறைவடைந்தேன் என்று எங்களுக்கு தெரிவியுங்கள். எங்கள் முழுதளிப்பை ஏற்றுக்கொண்டேன் என்று அறிவியுங்கள்” என்றான். நாகங்கள் கருவறைக்குள் இருந்து மறைந்தன. உள்ளே அவை செல்வதற்கான பாதைகள் இருக்ககூடும். கட்டப்பட்ட விழிகளுடன் கலிதேவனின் உருவிலாச் சிலை காலமில்லா களமொன்றில் என அமைந்திருந்தது. அஸ்வத்தாமன் “அரசே, வருக! அரசே, இங்கே எவ்வடிவிலேனும் எழுக!” என்று கூவினான்.

கிருபர் உடல்மாற்றி நிற்க அவருடைய மூச்சொலி கேட்டு அஸ்வத்தாமன் திரும்பி நோக்கினான். அவன் குரலில் சீற்றம் ஏறியது. “எழுக! எழுக, அரசே! நாங்கள் கொண்ட குருதிப்பலியை ஏற்று அருள்க! விண்நிறைந்தேன் எனும் சொல்லை அளிக்க எழுக! எங்கள் பணிநிறைவை குறிக்க எழுக!” என்று கூவினான். மேலும் மேலும் சீற்றமெழ நெஞ்சில் அறைந்துகொண்டு “எழுக! எழுக!” என்று கூச்சலிட்டான். ஆனால் இருள்நிறைந்த காடு ஓசையின்றி சூழ்ந்திருந்தது. சருகுகள் எரிந்த அனல்வட்டம் அகன்று சென்று தேய்ந்து துண்டுகளாகி அணைந்து புகைமணமாகி மறைந்தது. இருள் நிறைந்தபோது கலியின் ஆலயத்தின் விழிப்பதிவு வடிவம் மட்டும் எஞ்சியது. பின்னர் அதுவும் மறையலாயிற்று. அஸ்வத்தாமன் தளர்ந்து நிலத்தில் அமர்ந்தான். கிருபரும் கிருதவர்மனும் அமர்ந்தனர். இருள் அவர்களை மூடியது. இருளுக்குள் அவர்களை நோக்கியபடி வீற்றிருந்த கலியை கிருதவர்மன் உணர்ந்தான். அங்கிருந்து ஒரு சொல்லும் செயலும் எழாது என உறுதியாக அறிந்தான்.

[தீயின் எடை நிறைவு]

வெண்முரசு விவாதங்கள்

முந்தைய கட்டுரைகவிஞனின் ஒருநாள்
அடுத்த கட்டுரைதுயரக்கீற்று- கடிதங்கள்