இந்தியப் பெருமிதம்

ஆசிரியருக்கு,

இந்தியர்களின் நடத்தை  இந்தியாவிற்கு உள்ளேயே நம்மால் தாங்க முடியவில்லை, இதில் மக்கள் ஒரு இயக்கமாக சென்று வெளிநாட்டில்  இந்தியாவிற்கு தலைகுனிவை ஏற்படுத்துகிறார்கள்.

கீழ்க்கண்ட சுட்டிகளில் முதலில் உள்ளது மமதா பானர்ஜியுடன் அரசு முறை பயணமாக சென்ற நமது பத்திரிகையாளர்கள் வெள்ளி ஸ்பூன்கள் சிறு பாத்திரங்கள் போன்றவற்றை திருடி cc டிவி கண்காணிப்பில்  சிக்கி பின்பு மன்னிப்பு கேட்டுக் கொண்ட சம்பவம். இது ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு.

இரண்டாவது  சுட்டி சமீபத்தில் பாலி தீவிற்கு சுற்றுலா சென்ற ஒரு இந்தியக் குடும்பம் தங்கியிருந்த ஹோட்டலில் ஹேர் டிரையர் போன்ற பொருட்களை திருடி பின்னர் பிடிபட்டது.

மூன்றாவதாக உள்ள சுட்டி இந்திய சுற்றுலா பயணிகளுக்கு என்றே பிரத்யேகமாக அச்சிட்டு சுவிட்சர்லாந்து ஹோட்டல் நிர்வாகத்தால் சமீப காலமாக வெளியிடப்படும் ஒரு சுற்றறிக்கை. அதில் பொது இடத்தில் நாம் நடந்து கொள்ள வேண்டிய விதம், உணவு உண்ணும் போது நாம் கடைபிடிக்க வேண்டிய முறைமைகள் போன்றவை குறித்து அடுக்கடுக்காக அறிவுரை சொல்கிறது. குறிப்பாக பொது இடங்களில் சத்தம் போட்டு பேச வேண்டாம் என்பது.

நீங்கள் வெளிநாடு சென்று திரும்பும் போதெல்லாம் இந்தியர்களும் மீது கூறும் குறைகளை நான் பத்தால் வகுத்து  மனதில் பதிய வைத்துக் கொள்வேன். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பத்திரிகைகளில் வெளிவரும் தகவல்களை பார்க்கும்போது அதை பத்தால் பெருக்கிக்கொள்ள வேண்டும் போல உள்ளது. இந்தியர்களின் நேர்மை குடிமை ஒழுங்கு கல்வித்தரம் ஆகியவை பெரிய அளவில் சீர்குலைந்துள்ளது.

ஆற்றுப்படுத்தி கொள்ள வேறு நாடுகளில் குறிப்பாக மேற்கத்திய நாடுகளின் சுற்றுலா பயணிகள் வெளிநாடுகளுக்கு சென்று திருடி பிடிபட்டு செய்தியாகி உள்ளதா என்று தேடிக் கொண்டிருக்கிறேன் தற்போது வரை அது சிக்கவில்லை. ஆனால் ஐரோப்பிய சுற்றுலா பயணிகள்  சிறுவர் சிறுமிகளுடன் பாலுறவு  கொள்வதற்கு என்றே கோவாவிற்கு சுற்றுலா வரும்  பழக்கத்தை கொண்டுள்ளது குறித்து முன்பு நான் வாசித்துள்ளேன். நாம் தற்போது தான் தாய்லாந்திலிருந்து துவங்கியுள்ளோம்.

கிருஷ்ணன்

***

Indian family steals accessories from Bali hotel, caught by staff. Viral video shocks Internet

Harsh Goenka slams Swiss hotel for notice to Indians at buffet, adds note for tourists. Internet agrees

Senior Journalists Accompanying Mamata To London Steal Silver Cutlery During Official Dinner Meet, Fined £50

அன்புள்ள கிருஷ்ணன்,

நான் எப்போதும் இதை ஒரு தன்மதிப்பீடாகவே சொல்கிறேன். ஒரு கூட்டம் இதை உடனே தமிழர்களை, இந்தியர்களைப் பற்றிய விமர்சனமாக எடுத்துக்கொண்டு கொந்தளிப்பதையும் பார்க்கிறேன். நான் இதைச் சொல்வது தாழ்வுணர்ச்சியை உருவாக்குவதற்காக அல்ல. நாம் தாழ்வுணர்ச்சிகொண்டவர்கள், ஆனால் பொய்யான பெருமித உணர்ச்சியை கற்பனைசெய்துகொள்கிறோம். நம் தாழ்வுணர்ச்சியை நாமே காணவும், அதிலிருந்து வெளிவரவும் நமக்கிருக்கும் எல்லா வாய்ப்புக்களையும் இந்த மிகைப்பெருமித உணர்ச்சி இல்லாமலாக்கிவிடுகிறது. ஆகவேதான் அதை உடைக்க விழைகிறேன். அத்துடன் தான் கண்டதை  அப்படியே சொல்வதென்பது ஓர் எழுத்தாளனின் கடமையும்கூட.

நம் நடத்தை சார்ந்த சிக்கலை இரண்டு வகையாகப் பிரித்துக்கொள்ளவேண்டும். ஒன்று, நம்முடைய பண்பாடுசார்ந்த, நம் சூழல்சார்ந்த பழக்கவழக்கங்கள். நாம் கோடைநிலத்தைச் சேர்ந்தவர்கள். மக்கள்தொகை செறிந்த நாட்டில் வாழ்பவர்கள். குலங்களாகவும் குடிகளாகவும் வாழ்பவர்கள். நமக்கு என்று ஒரு வரலாறும் மதங்களும் ஆசாரங்களும் உள்ளன. அவ்வாறு உருவாகி வந்த பண்பாட்டையும் பழக்கவழக்கங்களையும் எண்ணி நாம் தாழ்வுணர்ச்சி கொள்ளவேண்டியதில்லை. அவற்றை மாற்றிக்கொள்ள வேண்டியதுமில்லை.

உதாரணமாக, இங்கே உள்ள தட்பவெப்பநிலைக்கு வேட்டி வசதியான உடை. நமது மரபான உடை. மெல்லிய மேலாடை அணிவதும் சரி, மேலாடை இல்லாமலிருப்பதும் சரி இங்கே இயல்பானது. இங்கே நாம் இலைபோட்டு கைகளால் உண்கிறோம். தரையில் அமர்கிறோம். திண்ணைகளில் படுத்துக்கொள்கிறோம். இவையெல்லாம் நம் நாட்டின் இயல்பான பழக்கவழக்கங்கள். ஐரோப்பாவுடனோ அமெரிக்காவுடனோ ஒப்பிட்டு இவையெல்லாம் நாகரீகக்குறைவானவை என்று எண்ணுவோம் என்றால் நாம் நமது மரபை இழிவுசெய்கிறோம்.

உண்மையில் நமது மேட்டுக்குடியினருக்கு இந்த எண்ணம் வலுவாக உள்ளது. இது இந்தியாவில் ஆங்கிலேயர் வந்த காலம் முதலே இருக்கும் உளநிலை. இதைப்பற்றி ரவீந்திரநாத் தாகூர் விமர்சனம் செய்து எழுதியிருக்கிறார்- இதை அவர் பிரம்மசமாஜ மனநிலை என்கிறார். ஆங்கிலேயர் விரும்பும்படி நம்மை அமைத்துக்கொள்வதற்கான முனைப்பு இது. இது மேலும் மேலும் தாழ்வுணர்ச்சிகொண்டவர்களாக, ஆகவே மேலும் கேலிக்குரியவர்களாகவே நம்மை ஆக்கும்

ஜப்பானியரோ சீனரோ அவர்களின் பண்பாடு குறித்து எந்தத் தாழ்வுணர்ச்சியும் கொள்வதில்லை. சொல்லப்போனால் அதை ஒருவகை பெருமிதமாக முன்வைத்து ஐரோப்பியர்களைக் கவர்கிறார்கள். நான் பழகியறிந்த அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும் இந்தியாவின் எந்த தேசியப் பழக்கவழக்கங்களையும் ஒவ்வாமையுடன் நோக்குபவர்கள் அல்ல. மாறாக அவற்றை கற்றுக்கொண்டு அவற்றுடன் இணைய முயல்பவர்கள். பலர் அவற்றை ஒவ்வாமையுடன் நோக்கும் இந்திய மேல்தட்டினரைத்தான் இளக்காரத்துடன் பார்க்கின்றனர். அவ்வாறு ஒருவரை ராய் மாக்ஸம் விரட்டியடித்ததைப் பற்றி எழுதியிருக்கிறேன்

நம்முடைய மதச்சடங்குகள், மதச்சின்னங்கள் ஆகிய எதைப்பற்றியும் நாம் தாழ்வுணர்ச்சியோ விலக்கமோ கொள்ளவேண்டியதில்லை. அவ்வாறு கொள்வது நம்மை மேலும் இளக்காரத்திற்குரியவர்களாகவே ஆக்கும். இன்று உலகம் தனிப்பண்புகளை இழந்து உலகளாவிய பொதுவெளியாக ஆகிக்கொண்டிருக்கையில், பண்பாட்டின் எல்லா தனித்தன்மைகளும் அரிய மானுடச்செல்வங்களாகவே கருதப்படுகின்றன. நாம் அவற்றை அறிந்து பேணுகிறோம் என்றால் அது நமக்கு தனியடையாளத்தை, தனி மதிப்பையே அளிக்கும். பழமை இன்று உலகசிந்தனைப் பரப்பில் தேவையற்ற சுமையாகக் கருதப்படுவதில்லை. செல்வச்சேமிப்பாகவே மதிக்கப்படுகிறது.

இந்தத்தெளிவுடன் நாம் அணுகவேண்டியதே நமது சிறுமைகள். இச்சிறுமைகள் எங்கிருந்து உருவாகின்றன? முதல்விஷயம் தன்மதிப்பின்மை. எங்கும் முண்டியடிக்கவும் தேவையென்றால் கெஞ்சிக்கூத்தாடவும் நமக்கு தயக்கமில்லை. இரண்டு, பிறரைப்பற்றிய எண்ணமே இல்லாமலிருத்தல். நமது செயல்களால் பிறருக்குத் தொந்தரவு வரக்கூடாது என்னும் எண்ணமே இல்லாமலிருத்தல். மூன்றாவது தூய்மைகுறித்த உணர்வின்மை. நான்காவதாக சிறு அயோக்கியத்தனங்களைச் செய்யும் துணிவு. அயோக்கியர்களே வெல்லமுடியும் என்னும் ஆழத்து நம்பிக்கை. இவை நான்கும் நம்மை குடிமைப் பண்பில்லாத கும்பலாக ஆக்கிவிட்டிருக்கின்றன.

மக்கள்பெருக்கம் மிக்க ஒருநாட்டில் சென்ற ஒருநூறாண்டுகளாக உருவாகிவந்த நவீன சமூகம் நாம். இங்கே எங்கும் எதையும் முட்டிமோதியே அடையவேண்டியிருக்கிறது. எல்லாமே முந்துபவர்களுக்கு மட்டுமே. ஆகவே நம் உளவியலில் இது பதிந்துவிட்டிருக்கிறது. முன்பதிவுசெய்திருந்தும் ரயிலில் ஏறுவதற்காக முண்டியடிக்கும் ஒருவரைப்பற்றி சுந்தர ராமசாமி ஜே.ஜே.சிலகுறிப்புகளில் எழுதியிருப்பார். கொழும்பு, மலேசியா, சிங்கப்பூரில் இந்தியாவுக்கு வரும் விமானங்களில் ஏற விமானநிலைய நெறிகளை மீறி மக்கள் முண்டியடித்துக் கூச்சலிடுவதைக் கண்டிருக்கிறேன்.

நாம் சிறிய குழுக்களாகவே வாழ்ந்த மக்கள். இங்கே அந்தரங்கம் என்பதே இல்லை. கடந்த ஒரு தலைமுறைக்காலமாகவே இன்னொருவருக்கு அந்தரங்கம் என ஒன்று உண்டு என்பதே நமக்குத் தெரிகிறது. ஆகவே இன்னொருவரின் வசதியோ தொந்தரவோ நம் கவனத்திற்கு வருவதே இல்லை. ரயில்களில் உச்ச ஒலியில் செல்பேசி அழைப்புச்சத்தத்தை வைத்திருப்பார்கள். இரவெல்லாம் அது அலறும். மெல்ல வையுங்கள் நான் தூங்கவேண்டும் என்று சொன்னால் சீறிக்கொண்டு சண்டைக்கு வருவார்கள். நள்ளிரவில் பெட்டிக்குள் ஏறியதுமே அத்தனை விளக்குகளையும் போட்டு பலத்த கூச்சலிட்டு தங்கள் படுக்கையை தேடுவார்கள். உண்மையிலேயே நாகரீகம் என்பது இன்னொருவரைத் தொந்தரவு செய்யாமலிருப்பது எனத் தெரியாது.

ஊழல்மிக்க நாடு இது. நிர்வாகத்திறன் இல்லாத நாடு. நிர்வாகத்திறன் இன்மை முதலில் தெரிவது தூய்மையின்மையில்.குப்பைகள் நடுவே வாழ்ந்து பழகிய நமக்கு ஒருமுறை வெளிநாடு சென்றுவந்தாலொழிய தூய்மையான நகர் எப்படி இருக்கும் என்பதே தெரியாது. சிறு திருட்டுக்களை, அயோக்கியத்தனங்களை சாமர்த்தியம் என நினைத்துக்கொள்கிறோம். இந்த காட்சியில் தெரிவது ஒரு திருட்டுக் குடும்பம். ஆனால் சின்னத்திருட்டுக்களை இந்தியர்கள் சாதாரணமாகச் செய்வதுண்டு. விமானங்களில் கேட்புக்கருவிகளை திருடி பைக்குள் போடுபவர்களைக் கண்டிருக்கிறேன். ஒருவர் தனக்கு கொடுத்ததை தன் பைக்குள் செருகிவிட்டு நான் பயன்படுத்தாத என் செவிக்கருவியை மெல்ல எடுத்து தன்னுடையதாக கொடுக்க முயல்வதை கையும் களவுமாகப் பிடித்திருக்கிறேன். அவருக்கு வெட்கமே இல்லை. அசட்டுச் சிரிப்பு.

மேலே சொன்ன நம் தனித்தன்மை, நமது மரபு ஆகியவற்றை அடுத்ததாகச் சொல்லப்பட்ட குடிமைப்பண்புகளுக்கு மாறாக அமையாதபடிக் கடைப்பிடிப்பதே நாகரீகமாக இருக்க முடியும். குளிர்சாதன ரயில்பெட்டியில் விடிகாலை எழுந்து அமர்ந்துகொண்டு “ஏசப்பா ஏசப்பா!” என்று கூப்பாடு போடுவது, கழிப்பறை நீரை திறந்துவிட்டு குளித்து விபூதி அணிந்து வந்து அமர்ந்துகொள்வது போன்ற கீழ்மைகளை அப்படித்தான் நாம் கடக்கமுடியும்.

உதாரணமாக, ஓர் இந்தியபாணி விருந்தில் கையால் சாப்பிட நாம் கூச்சப்படவேண்டியதில்லை. மிகப்பெரிய விருந்துகளில் கோடீஸ்வரர்களாகிய அராபியர் கைகளால் சாப்பிடுவதை நான் கண்டிருக்கிறேன். ஆனால் ஒரு பஃபெ விருந்தில் தட்டு நிறைய அள்ளி வைத்து கைகளால் அள்ளி அள்ளி தின்று எச்சில் கையுடன் மீண்டும் சென்று அள்ளுவதும், சாப்பிட்ட கையாலேயே அகப்பைகளை எடுப்பதும் பிறருக்கு ஒவ்வாமையை உருவாக்கும் என நாம் புரிந்துகொள்ளவேண்டும். அந்த விருந்துமுறையின் நாகரீக முறைமைகள் என்ன என்பதை கற்றுக்கொண்டபின்னரே உண்ணவேண்டும்

[தெரியாதவர்களுக்கு  பஃபே பற்றிய பத்து விதிகள்.

1. எக்காரணம்கொண்டும் எதையும் கையால் சாப்பிடக்கூடாது.

2. ஒரே சமயம் இரண்டு உணவு வகைகளுக்குமேல் தட்டில் இருக்கக்கூடாது.

3. வெவ்வேறு உணவுவகைகளை கலந்து சாப்பிடக்கூடாது.

4. முதன்மை உணவு, இனிப்பு என வெவ்வேறு உணவுகளுக்கு வெவ்வேறு தட்டுகளைப் பயன்படுத்தவேண்டும்.

5. எச்சில் தட்டுடன் மீண்டும் உணவு எடுக்கச் செல்லக்கூடாது. வேறு தட்டையே எடுக்கவேண்டும்.

6. நாஃப்கினால் வாயை துடைக்காமல் மீண்டும் உணவு எடுக்கும் இடத்திற்குச் செல்லக்கூடாது.

7. உண்ணும் கையால் அகப்பைகளை தொடக்கூடாது.

8. உணவு எடுக்கையில் பேசக்கூடாது

9. உணவு எடுக்குமிடத்தில் வைத்து சாப்பிடக்கூடாது, சாம்பிள் சாப்பிட்டுப்பார்த்து எடுக்கக்கூடாது

10. எந்தப்பொருள் கீழே விழுந்தாலும் எடுக்க முற்படக்கூடாது. நாம் குனிந்தால் இன்னொருவர் மேல் இடித்துக்கொள்வோம். ஊழியர்களே அதை இயல்பாக எடுக்க முடியும்

இவை பத்துமே பிறருக்கு ஒவ்வாமையை உருவாக்காமல் உண்பதன்பொருட்டு மட்டுமே உருவானவை].

நாம் ஐரோப்பியராக மாறவேண்டியதில்லை. அவ்வாறு மாறுவது வேரற்றவர்களாக்கும். கேலிப்பொருட்களுமாக்கும். ஆனால் குடிமைப்பண்புகள், பொதுப்புழக்க நெறிகள் ஆகியவற்றை கற்று கடைப்பிடித்தேயாகவேண்டும். நாம் அடையவேண்டியது இந்த நாகரீகத்தைத்தான். இவை நம் குறைகள் என நாம் உணர்வதே முதலில் செய்யவேண்டியது. அதற்குத் தடையாக இருப்பது நாம் நாகரீகசமூகம், நாம் விருந்தோம்பல்கொண்டவர்கள், நாம் நுட்பமானவர்கள், நாம் ஒழுக்கமானவர்கள்ம் நாம் தூய்மையானவர்கள் என்றெல்லாம் நாம் கொண்டிருக்கும் பொய்யான நம்பிக்கைகளை உடைப்பதுதான். நம் தலைமுறைகளுக்காவது உலகப்புழக்கத்தை சொல்லி வளர்க்கலாம்.

ஜெ

***

முந்தைய கட்டுரைசிங்கப்பூர் இலக்கியம் – ஒரு பெயரிலி
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-54