‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-52

முன்னால் சென்ற கொடிவீரன் நின்று கையசைக்க நகுலனின் சிறிய படை தயங்கியது. புரவிகள் ஒன்றுடன் ஒன்று முட்டாதபடி அணிவகுத்திருந்தமையால் அவை ஒன்றின் நடுவே இன்னொன்று புகுந்துகொண்டு நீண்டிருந்த படை செறிவுகொண்டு சுருங்கியது. கொடிவீரனைத் தொடர்ந்து சென்ற நான்கு வீரர்கள் விற்களில் அம்புகளைத் தொடுத்தபடி இருபுறமும் காடுகளுக்குள் புகுந்தனர். அவர்கள் விலகிச்செல்வது புதரொலியாகக் கேட்டது. அவர்களின் மெல்லிய சீழ்க்கையொலிகள் தொடர்புறுத்திக்கொண்டே இருந்தன. அவர்கள் திரும்பி வந்து நகுலனை அணுகினர். முதன்மைக் காவலன் வீர்யவான் நகுலனிடம் “அரசே, இங்கே காட்டுக்குள் பலர் தங்கியிருந்திருக்கிறார்கள். காட்டாளர்கள் அல்ல. படைவீரர்கள்” என்றான்.“நாம் வருவதற்கு முன்னரே அவர்கள் கிளம்பிச்சென்றிருக்கிறார்கள். நம் புரவிக்குளம்படி கேட்டு சிலர் இறுதியாகச் சென்றிருக்கிறார்கள். அவர்களில் சிலரிடம் குதிரைகளும் இருந்திருக்கின்றன.”

“புரவிகளா?” என்றான் நகுலன். “எனில் அவர்களிடம் படைக்கலங்களும் இருக்கக்கூடும்.” பின்னால்வந்த ஒற்றைக்கை கொண்ட காவலன் “ஆம், பெரும்பாலும் அவர்கள் படையிலிருந்து விலகியோடி வந்தவர்கள்” என்றான். நகுலனுக்கு அருகே நின்றிருந்த இளம் காவலன் “அவர்கள் ஷத்ரியர்களாக இருக்க வாய்ப்பில்லை” என்றான். “அவர்களில் ஷத்ரியர்களும் இருப்பார்கள். போர் என்பது ஓரு உலைக்களம். பூச்சுக்கள் எரிந்தழிய உலோகம் வெளிப்படும் இடம். போரைக் கண்டதுமே விலகித் தப்பியோடிய பலர் இருப்பார்கள்” என்றான். மீண்டும் அவர்கள் கிளம்பியபோது வீர்யவான் “அவ்வாறு பலர் கிளம்பிச் சென்றது ஏன் நமக்குத் தெரியவில்லை?” என்றான். பின்னர் அவனே “நாம் நம்மை வைத்தே அனைவரையும் மதிப்பிடுகிறோம் போலும்” என்றான்.

மேலும் சற்று நேரத்திலேயே மீண்டும் நிற்கவேண்டியிருந்தது. “இங்கே ஒரு சிறுபடையாகவே தங்கியிருந்திருக்கிறார்கள்” என்று இளங்காவலன் சொன்னான். “எங்கே கிளம்பிச் சென்றுகொண்டிருக்கிறார்கள்?” என்று நகுலன் கேட்டான். “போர் முடிந்து படைகள் மீண்டுவரும்போது அவர்களை சிறைப்பிடிக்கக்கூடும் என எண்ணுகிறார்கள். ஆகவே தப்பி ஓடுகிறார்கள். படைத்துறப்பு சாவுத்தண்டனைக்குரிய குற்றம் என அறிவார்கள்” என்று அவன் சொன்னான். நகுலன் தலையசைத்தாலும் புரவிமேல் தயங்கும் எண்ணங்களுடன் அமர்ந்திருந்தான். “பலநூறுபேர் காடுகளுக்குள் தங்கியிருந்திருக்கிறார்கள். அஸ்தினபுரிக்குள் நுழைய அஞ்சியிருக்கிறார்கள். காடுகளுக்குள் வாழ்வது எளிது. இந்தப் பாதைகளில் போருக்கான உணவுப்பொருட்கள் சென்றுகொண்டே இருக்கும். அவற்றைத் தாக்கி கொள்ளையிட்டிருப்பார்கள். அவற்றை அங்கே படைத்தலைமை அறிந்திருக்கவே வாய்ப்பில்லை” என்றான் வீர்யவான்.

நகுலனின் படை அடுத்த காவலரணை அடைந்து அங்கிருந்த ஏழு புரவிவீரர்களையும் தன்னுடன் இணைத்துக்கொண்டது. அந்தக் காவலரண் ஓர் உயர்ந்த தேவதாருவின் உச்சியில் கட்டப்பட்டிருந்தது. அது மழைக்காற்றில் உடைந்து சிதைந்த குருவிக்கூடுபோல தொங்கியது. காவல்மாடத்தை அருகிருந்த சிறிய பாறைமேல் மீண்டும் கட்டி அங்கேதான் வீரர்கள் தங்கியிருந்தனர். காவல்மாடத்தின் தலைவன் “போர் முடிவதற்கு முன்னரே இங்கே உணவு தீர்ந்துவிட்டது, அரசே. போர் முடிந்த மறுநாள் வீசிய காற்றில் காவல்மாடம் சிதைந்தது. ஆகவே கீழிறங்கிவிட்டோம். ஒற்றர்கள் இனி காவல்பணி வேண்டியதில்லை, ஆணை வரும்வரை இங்கேயே காத்திருங்கள் என்று சொன்னார்கள்” என்றான். நகுலன் மேலே நோக்கிய பின் புரவியிலிருந்து இறங்கி தேவதாருவில் தொற்றி மேலேறத் தொடங்கினான்.

காவல்மாடத்தின் அருகே இருந்த கவையில் அமர்ந்துகொண்டு அவன் காட்டை நோக்கினான். சற்றுநேரம் காற்று வழிந்தோடும் பச்சைப்பரப்பே தெரிந்தது. பின்னர் அவன் அந்த அசைவில் நேர்நீட்சிகளை கண்டான். காட்டின் நடுவே தெரிந்த பாதைகளை நோக்கிக்கொண்டிருந்தபோது முதல் புரவிக்குழுவை பார்த்தான். அவர்கள் எந்தக் கொடியையும் கொண்டிருக்கவில்லை. மீண்டும் ஒரு குழு தெரிந்தது. பின்னர் பல குழுக்களை காடெங்கும் கண்டான். அனைவருமே ஒரே திசைநோக்கித்தான் சென்றுகொண்டிருந்தார்கள். அவன் சறுக்கி இறங்கி புரவிமேல் ஏறிக்கொண்டு “நாம் அஸ்தினபுரியை சென்றடையவேண்டும். உடனடியாக!” என்று கூவினான். புரவிவீரர்கள் அவனைத் தொடர காட்டுப்பாதையில் குளம்புகள் முழங்க புரவியை விசைகொள்ளச் செய்தான்.

“அவர்கள் அஸ்தினபுரிக்குச் சென்றுகொண்டிருக்கிறார்கள்!” என்று அவன் சொன்னான். “நாம் வென்றுவிட்ட செய்தியை அறிந்திருக்கிறார்கள். அஸ்தினபுரியில் இப்போது போதிய காவல் இல்லை என்பதும் தெரிந்திருக்கும். இவர்கள் பலநூறுபேர் இருக்கக்கூடும். ஒட்டுமொத்தமாகச் சென்று தாக்கினால் அஸ்தினபுரியை கைப்பற்றி கருவூலங்களை கொள்ளையிட முடியும். கொள்ளைச்செல்வத்துடன் இப்பகுதியில் இருந்தே தப்பியோடி தெற்கே தண்டகாரண்யத்தை கடந்தால்தான் இவர்களுக்கு வாழ்க்கை. நாம் அஸ்தினபுரியில் அரசமைத்தால் இவர்களை எஞ்சவிடமாட்டோம் என அறிந்திருப்பார்கள்” என்றான் நகுலன். “ஆனால் அஸ்தினபுரிக்குள் நுழைவது அத்தனை எளிதல்ல” என்று வீர்யவான் சொன்னான். “எளிதல்லதான். ஆனால் காட்டிலிருந்து திரும்பும் படைகள் எவை என அங்குள்ளோர் அறிந்திருக்க மாட்டார்கள். வென்றுமீளும் பாண்டவர்கள் என்றே எண்ணக்கூடும். இவர்களும் அவ்வண்ணமே செய்தி கொடுக்கக் கூடும். இருதரப்புப் படையினரும் இவர்களிலுள்ளனர்…” என்று நகுலன் சொன்னான். “அவர்கள் கோட்டையை அடைவதற்குள் நாம் சென்றடைந்துவிடவேண்டும்.”

“நாம் முழவுச்செய்தியை அளிக்கலாம். அது விரைவில் சென்றுசேரும்” என்றான் வீர்யவான். “ஆம், ஆனால் அவர்களில் நம் வீரர்களும் பலர் இருப்பார்கள். நம் குறிமொழி பயின்றவர்கள். நம் செய்தியை அவர்களும் கேட்டுவிடுவார்கள். அவர்கள் இணைந்து நம்மை தாக்கவும்கூடும்…” வீர்யவான் “ஆம்” என்றான். குதிரைகள் களைப்புற்றபோது அவர்கள் ஓர் ஓடைக்கரையில் சிறிதுநேரம் ஓய்வெடுத்தனர். மீண்டும் கிளம்பியபோது அந்த விசை குறைந்துவிட்டிருந்தது. நகுலன் “அவர்களில் சிலர் அஸ்தினபுரியின் அருகிலிருந்த காடுகளிலேயே தங்கியிருந்திருக்கலாம். அவர்கள் நகர்நுழைந்த பின்னர் செய்தி அனுப்பியமையால்தான் இவர்கள் செல்கிறார்கள் போலும்” என்றான். வீர்யவான் “நானும் அதையே எண்ணினேன். நமக்குப் பின்னால் எவருமே இல்லை. ஆகவே அனைவருமே முன்னரே சென்றுவிட்டிருக்கிறார்கள். அவர்களில் முன்னணியில் இருப்பவர்கள் இந்நேரம் நகரில் நுழைந்துவிட்டிருப்பார்கள்” என்றான்.

நகுலன் “அங்கே கனகர் பொறுப்பிலிருக்கிறார். அத்தனை எளிதாக நகரை அவர்கள் கைப்பற்றிவிட முடியாது. போருக்கு எழாத முதிய வீரர்கள் பலர் உள்ளனர். பெண்டிர் உள்ளனர். அவர்கள் எதிர்த்து நிற்பார்கள்” என்றான். ஆனால் தான் சொல்வதிலுள்ள பிழை அவனுக்கே தெரிந்திருந்தது. “ஆனால் இவர்கள் பயின்ற வீரர்கள். சிறிய எண்ணிக்கையிலிருந்தாலும் போர்வெறி கொண்டவர்கள். அவர்கள் செய்தியறியாமையால் படையெனத் திரளாமல் இருக்கக்கூடும். போர்ச்செய்தியைக் கேட்டு நகரமே துயரிலும் உளச்சோர்விலும் மூழ்கியிருக்கக்கூடும்” என்றான் வீர்யவான். “இவர்கள் கட்டற்றவர்கள். கட்டற்ற படை எப்போதுமே மும்மடங்கு ஆற்றல்கொண்டது என்பார்கள். நெறிகள் இல்லை. ஆகவே போர் அவர்களுக்கு களியாட்டென ஆகிவிடுகிறது. ஒரு நகரை அழிக்க கட்டுப்பாடுள்ள படையால் ஒரு வாரம் ஆகுமென்றால் கட்டவிழ்ந்த படைக்கு ஒருநாளே போதும் என்பார்கள். கொள்ளையடிக்கலாம். பெண்டிரை…”

“ம்” என்று நகுலன் உறும வீர்யவான் நிறுத்திக்கொண்டான். மெல்லமெல்ல அவர்களின் சினமே விசையென்று ஆகியது. அவர்கள் வழியில் எங்குமே முன்னால் செல்லும் படையினரை சந்திக்கவில்லை. இரண்டுமுறை நகுலன் மரங்கள்மேல் ஏறி நோக்கினான். முன்னால் செல்பவர்களின் எண்ணிக்கை பெருகியிருப்பதைக் கண்டான். “ஈராயிரம்பேராவது தேறுவார்கள்… சிறுகுழுக்களாக நூற்றுக்குமேல் இருக்குமெனத் தோன்றுகிறது” என்றான். வீர்யவான் “அவர்கள் நதியைப்போல. செல்லச்செல்ல பெருகிக்கொண்டிருப்பார்கள்” என்றான் வீர்யவான். “நம்பிக்கை இழந்து இக்காட்டுக்குள் சுருண்டிருந்திருப்பார்கள். இது பெரிய சொல்லுறுதி. பெருவிழைவையும் வெறியையும் ஊட்டுவது… அவர்களில் சிலர் அஸ்தினபுரியின் கொள்ளையைக் கொண்டு நகர்களை உருவாக்கி அரசர்களாவதையே கனவுகாணத் தொடங்கிவிட்டிருப்பார்கள்” என்றான். நகுலன் “போதும், பேசிப்பேசி பெருக்கிக் கொள்கிறோம்” என்றான்.

இரவெல்லாம் அவர்கள் நிற்காமல் சென்றனர். அவ்வப்போது குதிரைகளுக்கு மட்டும் நீரும் உணவும் அளித்து ஓய்வெடுக்க இடமளித்தனர். புலரியில் மரத்தின்மேல் ஏறிநோக்கிய நகுலன் திகைப்புடன் “இத்தனை கோழைகள் இருந்திருக்கிறார்களா?” என்றான். “பல ஆயிரம்பேர்… அவர்கள் காற்று கடந்துசெல்வதுபோல காட்டை வகுந்து சென்றுகொண்டிருக்கிறார்கள்…” கீழிறங்கி புரவியில் ஏறிக்கொண்டு “செல்க! செல்க!” என ஆர்ப்பரித்தான். அவர்கள் சென்ற பாதை முழுக்க குளம்படிகள் நிறைந்திருந்தன. “அவர்களில் ஒருவர்கூட புண்பட்டு இருக்க வாய்ப்பில்லை, அரசே” என்றான் வீர்யவான். “ஏன்?” என்றான் நகுலன். “போரில் களம்நின்று புண்படுபவர்கள் வேறு ஒரு வகையினர். அவர்கள் தப்பி ஓடுவதில்லை…” என்று வீர்யவான் சொன்னான். “எளிய படைவீரனாக இதை நான் நன்கறிவேன். தப்பியோடுபவர்கள் இரண்டு வகையினர். படைக்கலப்பயிற்சி இல்லாமல் பணியாளர்களாக வந்து களத்திற்கு அனுப்பப்பட்டவர்களில் ஒரு சிறுசாரார். ஆனால் தப்பியோடவும் ஒரு துணிவுவேண்டும். அது அவர்களிடமிருக்காது. தப்பிச்செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் படைக்கலப்பயிற்சி எடுத்த படைவீரர்கள்” என்றான்.

அவன் ஓரு கருத்தைக் கண்டடைந்தமையால் விரிவாக்கிக்கொண்டே சென்றான். “அவர்கள் உள்ளூர உலகியல் விழைவுகொண்டவர்கள். அவர்களைப் பிடித்து பின்புலம் உசாவினால் களவும் பெண்சேர்க்கையும் இருந்திருக்கும். பலமுறை படைத்தலைமையால் தண்டிக்கப்பட்டிருப்பார்கள். என் படைப்பிரிவிலிருந்து தப்பிச்சென்றவர்கள் எவர் என்றே என்னால் இப்போது சொல்லமுடியும்.” நகுலன் அதை செவிகொள்ளவில்லை. வீர்யவான் “ஆனால் இந்தக் கீழ்மக்கள் தங்கள் கீழ்மையாலேயே தங்கிவாழ்கிறார்கள். எங்கேனும் சென்று உயிர்பிழைத்தால் குருக்ஷேத்ரத்தின் கதையை அவர்கள் உருவாக்குவார்கள். ஒருவேளை போரில் வென்றவர்களாக அறியப்படுவார்கள். வீரர்களுக்கு சாவும் கோழைகளுக்கு வாழ்வும் என்பதுபோல் தெய்வங்கள் செய்யும் அறப்பிழை வேறில்லை” என்றான். பின்னர் உரக்க நகைத்து “இனி இக்கோழைகளின் குருதியிலிருந்து பெண்டிர் கருவுறக்கூடும். அவர்களின் மைந்தர்கள் பிறந்து ஆரியவர்த்தத்தை நிறைக்கவும்கூடும்” என்றான்.

இளங்காவலன் “அது மெய்யென்றே நூல்கள் சொல்கின்றன, அரசே. ஒவ்வொரு பெரும்போருக்குப் பின்னரும் வீரர்கள் இறந்துவிட கோழைகள் எஞ்சுகிறார்கள். அவர்களின் குருதி முளைத்துப் பெருகுவதனால் அடுத்த பல தலைமுறைகளுக்கு பெரும்போர் நிகழ்வதில்லை. மீண்டும் வீரம் எழுவது புலவரின் சொற்களிலிருந்து. குருதிக்குள் வாழும் நுண்ணிய தெய்வங்கள் அச்சொற்களை அடையாளம் காண்கின்றன. வீறுகொண்டு எழுகின்றன. பெரும்போருக்குப் பின் ஏழு தலைமுறைக் காலம் கடந்தே அடுத்த போர் எழமுடியும் என்கின்றது மகாசக்ரரின் போர்நூல்” என்றான். வீர்யவான் “ஆம், அதுவும் நன்றே. காட்டெரிக்குப்பின் எரியாத மரங்கள் எழுகின்றன. பின்னர் நெடுங்காலம் அக்காடு எரிவதில்லை” என்றான்.

அன்று மாலை அவர்கள் அமைதியை கேட்டனர். “நாளை விடிகையில் நாம் அஸ்தினபுரியை காணமுடியும்” என்று வீர்யவான் சொன்னான். “ஆனால் நமக்கு முன்னால் சென்றவர்கள் என்ன ஆனார்கள்? எந்த ஓசையும் எழவில்லையே” என்றான் நகுலன். “அவர்கள் காத்திருக்கக் கூடும்” என்றான் வீர்யவான். “எவரை? எதை?” என்றான் நகுலன். “அறியேன்… நம் வீரர்கள் சிலரை அனுப்பி உள்ளே சென்று பார்க்கவேண்டியதுதான். அவர்கள் காட்டுக்குள் தேங்கிச் சூழ்ந்திருக்கிறார்கள் என்றால் நம்மால் அவர்களைக் கடந்து அப்பால் செல்லமுடியாது” என்றான் வீர்யவான். “நாம் சென்றாகவேண்டும்” என்றான் நகுலன். “அதற்கு ஒரு வழியே உள்ளது. அவர்கள் நடுவே அவர்களில் சிலர் என சென்று பின் முந்தி கோட்டை நோக்கி செல்லவேண்டும். கோட்டையின் அம்புத்தொலைவை அடைவதற்குள் நாம் எவரென்பதை கொம்பூதி அறிவிக்கலாம். நாம் முந்தாவிடில் இவர்கள் அஸ்தினபுரியை சென்றடைந்துவிடுவார்கள்… அதன்பின் அழிவின்றி வெல்லல் இயலாது.”

நகுலன் மீண்டும் தேவதாரு மரத்தின் உச்சியில் ஏறிக்கொண்டு நோக்கினான். காட்டின் உள்ளே பல்லாயிரக்கணக்கானவர்கள் சிறு சிறு குழுக்களாக மிக மெல்ல சென்றுகொண்டிருப்பதை கண்டான். அவர்கள் ஏன் விசையழிந்தார்கள் என்று தெரியவில்லை. கீழிறங்கி “அவர்கள் செல்லும் விசை மிகவும் குறைந்துவிட்டிருக்கிறது. எவருடைய ஆணையையேனும் எதிர்பார்க்கிறார்களா என்று தெரியவில்லை. எதிர்பார்க்கிறார்கள் என்றால் அங்கே அவர்களுக்கு தலைமை இருக்கிறது என்று பொருள்” என்றான். “இரவில் அவர்கள் ஓசையில்லாமல் அஸ்தினபுரியை அணுகமுயல்கிறார்கள் என்று தோன்றுகிறது. நகரைச் சூழ்ந்திருக்கும் குறுங்காடு இன்னும் சற்றுநேரத்தில் வரத்தொடங்கும்” என்றான் காவலர்தலைவன். “நாளை புலரியில் அவர்கள் நகரை தாக்குவார்கள் என எண்ணுகிறேன். இவ்விரவிலேயே நாம் அவர்களைக் கடந்துசென்றால் நன்று” என்று நகுலன் சொன்னான். “நம் புரவிகள் ஓசையெழுப்பலாகாது… நாம் காற்றென அவர்களை கடப்போம்.”

அவர்கள் புரவிகளின் குளம்பொலி எழாது மிக மெல்ல காட்டுக்குள் சென்றனர். புரவிகளும் அவர்களின் நோக்கத்தை புரிந்துகொண்டன. “சாலையினூடாகவே செல்க! காட்டுக்குள் பறவைகள் நம் வரவை அறிவிக்கும். சாலையில் புரவிகள் செல்வதற்கு அவை பழகிவிட்டிருக்கும்” என்று நகுலன் சொன்னான். சீரான விசையில் அவர்கள் சாலையினூடாக சென்றுகொண்டே இருந்தனர். காட்டில் எங்கும் மானுட அசைவே தென்படவில்லை. ஆனால் சாலையெங்கும் புரவித்தடங்கள் நிறைந்திருந்தன. பின்னிரவில் புரவியிலிருந்தவாறே நகுலன் சற்று துயில்கொண்டான். அவன் படுத்துத் துயின்று இரண்டு நாட்கள் கடந்துவிட்டிருந்தன. அரைக்கனவும் அரைநனவுமாக அவன் சென்றுகொண்டே இருந்தான். சூழ வந்தவர்களின் பேச்சொலிகள் கேட்டுக்கொண்டிருந்தன. மிக அருகே வந்தவனை திரும்பி நோக்கி அவன் திடுக்கிட்டான். அவன் நெற்றியில் திறந்த செவ்விழி ஒன்றை கொண்டிருந்தான்.

“யார்?” என்று அவன் கேட்டான். நுதல்விழி உறுத்து நோக்க அவன் புன்னகைத்தான். அவனுடனிருந்தவர்கள் பதினொருபேர். அனைவரும் நுதல்விழி கொண்டவர்கள். தோள்களில் செஞ்சடை விரிந்தவர்கள். புலித்தோலாடை அணிந்து வலக்கையில் முப்புரிவேலும் இடக்கையில் நாகமும் கொண்டவர்கள். அவன் “யார்? யார் நீங்கள்?” என்றான். அவர்களில் ஒருவன் அருகணைந்து “அனல்!” என்றான். “என்ன?” என்றான் நகுலன். “அனல், அனல், அனல்.” அவன் உரக்க “என்ன சொல்கிறீர்கள்? பித்தர்களா நீங்கள்?” என்றான். அவர்களில் ஒருவன் “ஆம், பெரும்பித்தர்கள்” என்றான். உடுக்கோசை எழுந்தது. குதிரை அஞ்சிக் கனைத்தது. அவன் விழித்துக்கொண்டான். அருகே வந்தவர்களை திகைப்புடன் நோக்கி நீள்மூச்செறிந்து “எங்கு வந்திருக்கிறோம்?” என்றான். “அஸ்தினபுரியை அணுகிவிட்டோம், அரசே. இது குறுக்குவழி. போர்க்களத்திற்கு செய்தி கொண்டுசெல்லும்பொருட்டு உருவாக்கப்பட்டது. பின்னர் அத்திரிப்பாதையாகியது. மெல்ல அகன்று வண்டிப்பாதையாக மாறியது… நாம் அஸ்தினபுரியின் கிழக்குவாயிலுக்கு முன்பிருக்கும் பெருமுற்றத்தின் வடக்குபுறத்தின் குறுங்காட்டிற்குள் இருக்கிறோம்.”

நகுலன் “அவர்கள் எங்கே?” என்றான். “இக்காட்டுக்குள் நமக்கு முன்னால் அவர்கள் தேங்கி காட்டுக்குள்ளேயே நின்றுவிட்டிருக்கிறார்கள்” என்று வீர்யவான் சொன்னான். நகுலன் காட்டுக்குள் நோக்கி ஒலிகளைக் கூர்ந்து “முன்புலரி… கருக்கிருள் கடந்துவிட்டிருக்கிறது” என்றான். அருகிருந்த மரத்தில் ஏறி மேலிருந்து நோக்கினான். இருளுக்குள் ஒன்றும் தெரியவில்லை. அவன் இருளை நோக்கி நோக்கி விழிகளுக்குள் இருளை நிறைத்துக்கொண்டான். மெல்ல காட்சிகள் திரளத் தொடங்கின. அவன் காட்டுக்குள் மரச்செறிவுகளின் நடுவே பரவியிருந்த உதிரிப்படைவீரர்களை கண்டான். பலர் புரவியின் மேலேயே அமர்ந்திருந்தனர். படைக்கலங்களை கையிலேயே வைத்திருந்தனர். கிளம்பவிருக்கிறார்கள். அவன் உள்ளம் பதற்றம் கொண்டது. அஸ்தினபுரியை நோக்கி செல்ல என்ன வழி? இவர்கள் பல ஆயிரம்பேர் இருக்கக்கூடும்… இவர்களைக் கடந்து கோட்டைமுகப்பை அடையவேண்டும். கோட்டைமுற்றத்தின் விளிம்பில் காவல்மாடம் உண்டு. அதுவரைக்கும் சென்றால்கூட போதும். அங்கிருந்து எரியம்பினூடாக கோட்டையை எச்சரிக்கை செய்துவிடமுடியும்.

அவன் முன்பு அறிந்திராத ஒரு மணத்தை உணர்ந்தான். அல்லது முன்பு அறிந்த மணம் அது. அக்காட்டுக்குள் இருந்து எழுவது அல்ல. அந்நிலத்தைச் சேர்ந்ததும் அல்ல. பிறிதொன்று. முன்பே எப்போது அறிந்திருக்கிறோம் இதை? எவ்வகை மணம்? மூச்சை இழுத்து அதை நெஞ்சில் நிறைத்தான். அப்போது மணம் எழவில்லை, அது உளமயக்குதான் என்று தோன்றியது. மீண்டும் காட்டை நோக்கியபோது அந்த மணம் மிகமிக மென்மையாக வந்து மூக்கை தொட்டது. எரிமணமா? அல்ல. அனல் அதில் இல்லை. மண் மணமா? ஈரமண்ணின் மணம் அல்ல. புதுமழைமணமும் அல்ல. ஆனால் அனல்மணம் என ஏன் தோன்றியது? மணங்களைப் பொறுத்தவரை நினைவும் அறிவும் தொட்டு எடுக்கும் முன்னரே ஆழம் அடையாளம் கண்டுகொள்கிறது. மணங்கள் நேரடியாகவே கனவுக்குள் செல்பவை.

ஏன் அனல்மணம் என்று தோன்றியது? மண்மணம் என்றும் தோன்றியதே ஏன்? அனல்மண். ஆம், அது அனல்கொண்ட மண்ணின் மணம். அதை அவன் காந்தாரத்திற்குச் சென்றபோது முகர்ந்திருந்தான். ஆண்டுக்கணக்கில் வெயிலில் வெந்த செம்புலத்தின் மணம் அது. மிகமிக மென்மையான செம்புலப்புழுதி வானில் முகிலென எழுந்து காற்றில் பறந்து அகன்று விண்ணுருவப் பறவை ஒன்றின் தூவல் என விழுந்து சூழ்கையில் எழும் மணம். மண்ணின் அனல். ஆனால் அது இங்கே எப்படி வர முடியும்? அப்போது அவன் உணர்ந்தான், நெடும்பொழுதாக அந்த மணத்தை அவன் முகர்ந்துகொண்டிருந்தான் என்று. ஆனால் எங்கிருந்து வருகிறது? இந்த ஈரநிலத்தில், தழைமணமும் சேற்றுமணமும் நீர்மணமும் நிறைந்த காட்டுக்குள்?

ஏன் காவல்மாடம்வரை செல்லவேண்டும்? எரியம்பு ஒன்றை இங்கிருந்தே தொடுக்கலாம். காவல்மாடத்திலிருப்பவர்கள் அதைக் கண்டு எச்சரிக்கை அடைந்தாலே போதும். அவர்களின் விழிதொடும் எல்லைக்குள் வந்துவிட்டோம். ஆனால் சூழ்ந்திருக்கும் இப்படை எழுந்து தாக்கிவிடக்கூடாது. அதை இனிமேல் அஞ்சுவதில் பொருளில்லை. அஸ்தினபுரியின் கோட்டையில் எரியம்புச் செய்தி சென்றுவிட்டதென்றால் முழுவிசையுடன் திரும்பி காட்டுக்குள் புகுந்துவிடமுடியும். கங்கையை அடைந்தால் அங்கிருந்து படகுவழியாக அஸ்தினபுரியை சென்றடையலாம். அவன் இறங்கப்போகும்போது காட்டுக்குள் நிழலுருக்களாகத் தேங்கிய முழுப் படையும் காற்றில் துணி வளைந்து விம்முவதுபோல முன்செல்ல எழுந்து அக்கணம் அப்படியே நீள விம்மிவிம்மி நின்று மீண்டும் தொய்ந்தனர்.

அவன் அக்கணம் அவர்களின் நிலையை புரிந்துகொண்டான். அவர்கள் நெடும்பொழுதுக்கு முன்னரே அங்கே வந்துவிட்டிருக்கின்றனர். ஆனால் அஸ்தினபுரியை நோக்கி செல்ல அவர்களால் உளம்கூட்ட முடியவில்லை. நெடுங்காலமாக உள்ளத்தில் உறைந்த தளை. தெய்வங்கள்மேல், முடிவல்லமைமேல், குடிநெறிகளின்மேல் கொண்ட அச்சம். பலமுறை உள்ளத்தால் அவர்கள் தாக்கிவிட்டனர். உடல்கள் தேங்கித் தவித்துக்கொண்டிருந்தன. தலைமை இல்லாத படை. ஆணை எழாமல் தாக்கும் பழக்கமில்லாதது. தலைவன் என்பவன் ஒரு பெருந்திரளின் கூர்முனையாக எழுபவன். ஆற்றலின் முதற்புள்ளியெனச் செல்பவன். ஒருவன் அக்கூட்டத்திலிருந்து எழவேண்டும். ஓர் ஆணை எழுந்தாகவேண்டும்.

நகுலன் கீழிறங்கி “அரக்கு சேருங்கள்… எரியம்புகளை தொடுக்கவேண்டும்” என்றான். ஒன்றையொன்று துரத்திச்செல்லும் மூன்று எரியம்புகள் எதிரி அணுகுவதன் செய்திகள். அவற்றை அந்தக் காவல்மாடத்திலிருப்போர் நோக்கவேண்டும். உடனே அவர்கள் கோட்டைக்குச் செய்தி அனுப்பவேண்டும். கோட்டை உடனடியாக மூடப்பட்டு காவலர் முகப்புமாடங்களுக்கு விற்களுடன் வந்துசேரவேண்டும். ஆனால் அப்போது வேறுவழியே இல்லை. அரக்குருளைகளுடன் வீரர்கள் ஓடிவந்தனர். நகுலன் சருகுப்பிசிறை அம்புமுனைகளை உரசி பற்றவைத்தான். அரக்கை பற்றவைத்துக் கொண்டிருக்கையில் எங்கோ ஒரு கூகை குழறியது. அது அனலை கண்டுவிட்டிருந்தது. எவரோ எங்கோ ஏதோ கேட்டார்கள். அவன் அரக்கைப் பற்றவைத்து வீரன் கையில் கொடுத்துவிட்டு அம்புமுனையில் மரவுரியைச் சுற்றி எரியும் அரக்கில் தோய்த்து கொளுத்தி விண்ணில் ஏவினான். மூன்று அம்புகளின் அனல்கள் சிவந்த பறவைகள் போல ஒன்றையொன்று துரத்தின. காடெங்கும் ஒரே குரல் என எழுந்த முழக்கத்தை அவன் கேட்டான். பேருருவ அரக்கன் ஒருவன் உறுமுவதுபோல.

ஆனால் காவல்மாடத்திலிருந்து அனலம்புகள் எழவில்லை. “அங்கே எவருமில்லை என எண்ணுகிறேன்…” என்று வீர்யவான் சொன்னான். “ஆம், ஆனால் ஒருவேளை அஸ்தினபுரியின் கோட்டையில் இதை பார்க்கக் கூடும்…” என்றான் நகுலன். “இக்காட்டிலிருப்பவர்கள் நம்மை பார்த்துவிட்டார்கள். அவர்கள் நம்மை சூழ்ந்துகொள்ளக்கூடும்” என்றான் வீர்யவான். “நமக்கு வேறுவழியில்லை” என்ற நகுலன் மீண்டும் மூன்று எரியம்புகளை வானில் தொடுத்தான். அஸ்தினபுரியின் கோட்டையின் மேல் எரியம்புகள் எழவில்லை. முரசுகளும் கொம்புகளும் ஒலிக்கவில்லை. “அங்கும் எவருமில்லை என தோன்றுகிறது” என்றான் வீர்யவான். “கோட்டையில் எவருமில்லாமலிருக்க வாய்ப்பே இல்லை” என்றான் நகுலன். “அங்கே ஒரே ஒருவர் இருந்தால்கூட பார்த்திருப்பார்கள்” என்றான் வீர்யவான். “ஆனால் இவர்கள் ஏன் திரும்பி நம்மீது பாயவில்லை?” என்று ஒரு வீரன் கேட்டான். “அவர்கள் தயங்கி நின்றிருக்கிறார்கள். அந்தத் தயக்கத்தை உடைத்து அவர்கள் எத்திசையில் வேண்டுமென்றாலும் பாயக்கூடும்” என்றான் நகுலன்.

“மீண்டுமொரு அம்பை செலுத்தலாம், அரசே… அவர்களின் தயக்கத்தைக் கண்டால் நமக்கு பொழுதிடை உள்ளது என்றே தோன்றுகிறது” என்று வீர்யவான் சொன்னான். நகுலன் மீண்டும் அரக்கில் தோய்த்து எரியம்புகளை தொடுத்தான். இறுதி எரியம்பு அனலுடன் வளைந்து காட்டில் விழுந்தது. அஸ்தினபுரி அமைதியாகவே இருந்தது. கூர்ந்து கேட்டபின் “ஐயமே இல்லை, அங்கே எவருமில்லை” என்று வீர்யவான் சொன்னான். காட்டுக்குள் எரியம்பு விழுந்த இடத்தில் ஒரு பறவை “ஹாக்!” என்ற ஒலியெழுப்பி செங்குத்தாக வானிலெழுந்தது. அவ்வொலியே ஆணை என ஆனதுபோல் காட்டுக்குள் கூடிநின்றிருந்த உதிரிப்படையினர் பொருளில்லாத போர்முழக்கத்தை எழுப்பியபடி காட்டிலிருந்து பாய்ந்து அஸ்தினபுரியின் முகப்புமுற்றத்தை நிறைத்து கோட்டை நோக்கி சென்றனர்.

வெண்முரசு விவாதங்கள்

முந்தைய கட்டுரைவெறுமே மலர்பவை
அடுத்த கட்டுரைஇன்றைய காந்திகள் -கடிதங்கள்