ப.சிங்காரம் தமிழ்விக்கி
அன்புள்ள ஜெ
சித்துராஜ் பொன்ராஜ் தன்னுடைய முகநூல் பக்கத்தில் இவ்வாறு எழுதியிருக்கிறார்
ஜெயமோகன் பக்கத்தில் சுனில் கிருஷ்ணன் தமிழகத்துக்கு வெளியே உள்ள தமிழ்ச் சிறுகதைகளைப் பற்றி பேசிய கட்டுரையைப் படிக்க நேர்ந்தது (15 ஆகஸ்டு).
சுனில் என் நண்பர்தான். அவர் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் தமிழ்ச் சிறுகதைகளைப் பற்றி எழுதியதில் முதல் இரண்டு நாடுகளைப் பற்றி நான் எதுவும் சொல்லப் போவதில்லை. அந்த அளவுக்கு எனக்கு ஆராய்ச்சி அறிவு இல்லை என்று வைத்துக் கொள்ளலாம்.
சிங்கப்பூர் சிறுகதைகளைப் பற்றி அவர் எழுதி இருந்ததைப் படித்தபோது சில முக்கியமான எண்ணங்கள் தோன்றின.
முன்னர் பல முறை சொல்லியாகிவிட்ட “அங்கீகரிக்கப்பட்ட பொது உண்மைகள்” (motherhood statements), தெரிந்தவர்கள் மற்றும் ஜெயமோகனால் அடையாளம் காட்டப்பட்டவர்களைப் பற்றிப் பேசுவது ஆகியவற்றை மீறி இன்னும் பரவலாகத் தமிழகத்தில் இருந்து வருபவர்கள் சிங்கப்பூர் படைப்புகளை ஊன்றி வாசிக்க வேண்டும். இது எல்லாம் நான்கு நாள், ஒரு வார பயணத்தில் சாத்தியம்தானா என்பது சிங்கப்பூர் டேங்க் ரோடு தெண்டாயுதபாணி சுவாமிக்கே வெளிச்சம்.
இன்னமும் குறிப்பிட்ட சில பெயர்களையும், ஆட்களையும் மட்டுமே சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரை எளிதில் எடுத்துப் போடக் கூடிய வார்த்தைகளாக மாற்றி ஜார்கன(jargon)-தனமாகப் பேசிக் கொண்டிருப்பது சலிப்பூட்டுகிறது. சிங்கப்பூரைப் பொறுத்தவரை கனகலதா, புயலிலே ஒரு தோணி எல்லாம் jargon-ஆக மாறி ரொம்ப நாள் ஆயிற்று.
சூரிய ரத்னா, சித்ரா ரமேஷ், பிரேமா மகாலிங்கம், ஷா நவாஸ், ரமா சுரேஷ் என்று இங்குள்ள பிரச்சனைகளை புதிய மொழியில் புதிய உத்திகளோடு எழுதக்கூடிய எழுத்தாளர்கள் தலையெடுத்து வெகு நாள் ஆயிற்று.
கவிதையில் மதிக்குமார் தாயுமானவன், சுபா செந்தில்குமார் மேலும் பலர்.
Jargonகளைக் கொண்டாடுவது உங்கள் உரிமை. ஆனால் சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்தின் சித்திரம் இதுதான் என்று ஒரு சில நாட்கள் வந்து போகும் தமிழக எழுத்தாளர்கள் எல்லாம் அடித்துப் பேசுவது வியப்பூட்டுகிறது.
இதைப்பற்றிய உங்கள் எதிர்வினையை எதிர்பார்க்கிறேன்
பாஸ்கர் எம்
***
அன்புள்ள பாஸ்கர்
சித்துராஜ் பொன்ராஜ் அசோகமித்திரன் பாணியில் எழுதும் நல்ல சிறுகதையாசிரியர். ஆனால் அவருடைய இலக்கிய அளவுகோல்கள் என்ன என்பது இந்தப்பட்டியலைப் பார்த்தால் தெரிகிறது. சூரியரெத்னாவை ஒரு இலக்கியவாதி என்று சொல்பவர் இலக்கியம் என்றால் என்னவென்று நினைத்துக்கொண்டிருக்கிறார்? அதை இங்கே ராணி வாராந்தரியில் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இங்கே விமர்சகர்கள் இலக்கியம் என்று வேறு சிலவற்றையே சொல்கிறார்கள். சித்துராஜ் பொன்ராஜ் சிரமம் பார்க்காமல் கொஞ்சம் வாசித்தால் புரிந்துவிடும்.
இல்லை, சூரியரெத்னா போலவே எழுதும் நூற்றுக்கும் மேற்பட்ட சிங்கப்பூர் எழுத்தாளர்கள் அனைவரையும் உள்ளடக்கிய பட்டியலைப் போடுவதென்றால் அவர் மாலன் போன்றவர்களிடம் போகவேண்டியதுதான்.மாலனின் இடமென்ன, அவருடைய பட்டியலின் தரமென்ன, அவற்றின் நோக்கம் என்ன என தமிழ் வாசகர்கள் அறிவார்கள்.
சிங்கப்பூரில் மேடையேறும் எல்லாருமே இலக்கியவாதிகள்தான், அத்தனைபேருக்கும் மாலை மரியாதைதான். பரிசுகள்தான். எல்லாருமே ஒரு சின்ன வட்டத்திற்குள் அடிக்கடிச் சந்திக்கவேண்டியவர்கள். துட்டியும் மங்கலமும் விசாரித்துக்கொள்ளவேண்டியவர்கள். ஆகவே அவர்கள் மொய்விருந்துப் பட்டியல்தான் போடமுடியும். ஆனால் அந்தப்பட்டியலை அப்படியே தமிழக எழுத்தாளர்கள், விமர்சகர்கள் ஆமோதிக்கவேண்டும் என எதிர்பார்க்கவேண்டாம். சுருங்கச்சொல்கிறேன், இங்கே இலக்கிய அளவுகோல் என்பது இலக்கியம் சார்ந்தது.
இந்தக் கட்டுரை அல்ல, எந்தக்கட்டுரை இலக்கியத்தைப் பற்றி எழுதப்படாலும் அதில் சில பெயர்கள் விடுபட்டிருக்கும். அரிதாக முக்கியமான பெயர்களே விடப்பட்டிருக்கும். ஆகவே சிலபெயர்களைப் பற்றிய கேள்வி எழத்தான் செய்யும். தெரிவின் விடுபடலின் அளவுகோல் சர்ச்சைக்குள்ளாகும். அப்பெயர்களைச் சுட்டி இன்னொரு கட்டுரை எழும் எனில் அது இலக்கியவிவாதமாக ஆகும். வாசகன் இரண்டையும் வாசிப்பான். இரண்டின் மதிப்பையும் அவனே முடிவுசெய்வான். அவனை நோக்கியே இக்கட்டுரைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இலக்கியவிவாதம் என்பதே அதுதான்.
சென்றகாலங்களில் க.நா.சுவின் பட்டியல் தொடங்கி இதுவரை எவ்வளவு விவாதங்கள் இங்கே நிகழ்ந்துள்ளன என்பதை இலக்கிய வாசகன் அறிவான். அந்த பட்டியல் அவற்றுக்கு எதிரான விவாதங்களின் வழியாக சற்றே முன்னும்பின்னும் உருமாறி காலப்போக்கில் ஓர் இலக்கியஅளவுகோலாக நிலைகொள்கிறது. பட்டியல் என்பது அந்த விமர்ச்கனின் அளவுகோலைக் காட்டுகிறது.
க.நா.சுவின் பட்டியல்களில் ப.சிங்காரம் இல்லை.அவருடைய பட்டியல்களில் முதலிடம் ஆர்.ஷண்முகசுந்தரத்திற்கு.ஆர்.ஷண்முகசுந்தரம் இன்று கவனிக்கப்படும் படைப்பாளி அல்ல. ப.சிங்காரம் க.நா.சுவுக்குப்பின் புதுப்பிறவி எடுத்து வந்தார். ஆனால் இன்றைய நவீன இலக்கியம் என்பது தொண்ணூறு விழுக்காடு க.நா.சுவின் பட்டியலை ஒட்டியதே.
க.நா.சுவின் அளவுகோல் அழகியல் சார்ந்தது. அதை கடுமையாக மறுத்து க.கைலாசபதி முன்வைத்த பட்டியல் முழுக்கமுழுக்க இடதுசாரி அரசியல் – கட்சிச்சார்பு சார்ந்தது. அதுவும் இங்கே விவாதிக்கப்பட்டது. அதில் இன்று ஜெயகாந்தன் மட்டுமே இலக்கிய மதிப்புடன் திகழ்கிறார். ராஜமார்த்தாண்டன் போட்ட நவீனக் கவிஞர்ப் பட்டியலில் பிரம்மராஜன் இல்லை. அதை பற்றிய விவாதத்தில் அவர் தன் தரப்பை விரிவாகப் பேசி நிறுவினார். இத்தகைய விவாதங்கள் வழியாகவே இலக்கியம் பேசப்படும். அனைவரையும் உள்ளிட்ட, விவாதத்திற்கு அப்பாற்ப்ட்ட இலக்கிய அளவுகோல் என ஒன்று உண்டா என்ன?
சுனில் கிருஷ்ணன் குறிப்பிடாத, நான் மதிக்கக்கூடிய பல படைப்பாளிகள் உள்ளனர். நான் ஒரு கட்டுரை எழுதினால் அவர்களை குறிப்பிடாமலிருக்க மாட்டேன். இக்கட்டுரையில் நான் முரண்படும் இடங்கள் உள்ளன. உதாரணமாக, எனக்கு மலேசியாவின் மகாத்மனின் கதைகள் எவ்வகையிலும் முக்கியமாகப் படவில்லை. நான் அவரை குறிப்பிட்டதே இல்லை. அவருடைய புறனடை வாழ்க்கை, அவருடைய தனிப்பட்ட தேடல்கள் அங்கே உள்ளவர்களிடம் ஆழ்ந்த பாதிப்பை உருவாக்கியவை. ஆனால் எனக்கு அக்கதைகள் மட்டுமே கிடைக்கின்றன. அவை பெரும்பாலும் கதையென திரளாத, கலை என கூர்கொள்ளாத நேரடி வெளிப்பாடுகளாகவே உள்ளன. அதேசமயம் என் குறிப்புகள் எதிலும் நான் மலேசியாவின் பாலமுருகனை விட்டுவிடமாட்டேன். இதுவே இலக்கியவிமர்சனத்தின் மாறுபட்ட பாதை.
இப்படி ஏதேனும் ஓர் அளவுகோல் வந்தால் ஒரு சாரார் பதற்றமாகிறார்கள். அவர்களுக்கு இந்த அளவுகோல் அல்ல, எந்த அளவுகோலுமே பதற்றம் அளிப்பதுதான். அதற்குப்பதிலாக சென்ஸஸ் அறிக்கை போல ஏதேனும் நூல்வெளியிட்ட அத்தனைபேரின் பெயரையும் இலக்கியவாதிகளின் பட்டியலாக நீட்டுவதே அவர்களின் வழக்கம். முன்பு க.நா.சுவுக்கு எதிராகவும் இதுவே நிகழ்ந்தது. நான் ஈழ இலக்கியம் பற்றி ஒரு கட்டுரை எழுதியபோது மு.பொன்னம்பலம் அப்படி ஒரு பெரிய நீட்டோலை வாசித்த நினைவு.
இது ஓர் பொது உளச்சிக்கலாகவே நிலவுகிறதுபோலும். சிங்கப்பூர் இலங்கை போன்ற சிறிய வட்டங்களுக்குள் ஒரு பெயர் விடுபட்டால்கூட அது வம்புச்சண்டை ஆகும். ஆனால் ’நமக்கெதுங்குங்க வம்பு?” ‘நாளைக்குப்பின்ன அவங்க மூஞ்சியப் பாக்கணும்ல?” என்பவை போன்ற கூற்றுக்கள் இலக்கியக் கொள்கைகள் அல்ல என்பது இவர்களுக்கு இன்னமும் தெரியாத ஒன்று.
இங்கே எந்தக்கட்டுரையிலும் ஒரு தெரிவு இருக்கும். ஆகவே ஒரு நிராகரிப்பும் இருக்கும். அந்தக் கட்டுரையாளனின் அளவுகோல் அது. அவனுடைய இலக்கியப்பார்வை சார்ந்தது. தன் வாசிப்பினூடாக உலகப்பார்வையினூடாக அவன் அதை வந்தடைக்கிறான். அதை நிராகரிக்க எவருக்கும் உரிமை உண்டு. ஆனால் அது இலக்கியவிவாதத்தின் மொழியில் இருக்கவேண்டும். தர்க்கபூர்வமாக அமையவேண்டும். ‘இவரை ஏன் விடப்போச்சு? இது தப்பு’ என்பது இலக்கியவிவாதம் அல்ல. சித்துராஜ் அவருடைய பெயருதிர்ப்பு, வெற்றுத் தோரணைகளைக் கடந்து இதையெல்லாம் கொஞ்சம் வாசித்து தெரிந்துகொள்ளலாம்.
சுனீல் கிருஷ்ணன் எழுதியது வெளியே இருந்து வந்து வாசிக்கும் ஒருவரின் நோக்கு. அவருடைய பார்வை வெளியே இருப்பவரின் பார்வை என்ற அளவிலேயே முக்கியமானது. உள்ளிருந்து இன்னொருவர் இன்னொரு பார்வையை முன்வைக்கலாம். அவ்வகையில் அந்தப்பார்வை முக்கியமானது. அப்படி ஏதேனும் உருப்படியான பார்வைகள் [இலக்கிய வாக்காளர்பட்டியல் தவிர்த்து] எழுதப்பட்டிருந்தால் அது கவனத்திற்குரியது. அனுப்பிவைக்கவும், படித்துப்பார்க்கிறேன்.
ஓர் இலக்கியச் சூழலை வெளியே இருந்து பார்க்கும் பார்வைக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. உள்ளூரிலுள்ள தனிநபர் அரசியல்கள் அதைப் பாதிப்பதில்லை. உள்ளூரின் கலாச்சாரப்பூசல் சூழலும் அதைப் பாதிப்பதில்லை. அந்தக் கதைக்குள் என்ன இருக்கிறதோ, சூழல்கடந்து எது தொடர்புறுத்துகிறதோ அதுவே எஞ்சுகிறது. கதைகள் கதைகளாகவே எஞ்சுகின்றன. அவற்றுக்கு ஒப்பீட்டு மதிப்பு என்பதே இல்லை. ஆகவே ’காலம்கடந்த’ பார்வை போலவே ‘சூழல்கடந்த’ பார்வையும் முக்கியமானது.
தமிழகத்தில் வங்க, மலையாள, கன்னட இலக்கியம் குறித்து ஆய்வாளர்கள் எழுதியிருக்கிறார்கள். தமிழ்வாசகனாக அவை எவ்வகையில் பொருட்படுத்தத் தக்கவை என்றுதான் அந்த ஆய்வுகள் காட்டுகின்றன. உதாரணமாக, தமிழில் வெளிவந்த வங்க நாவல்களில் அதீன் பந்த்யோபாத்யாய இங்கே பேசப்பட்டிருக்கிறார். அதே அளவு வங்கத்தவருக்கு முக்கியமானவரான மகாஸ்வேதாதேவி முக்கியமாக இங்கே கருதப்படவில்லை. ஏனென்றால் மகாஸ்வேதாதேவியின் எளிய இடதுசாரி அரசியலுக்கு இங்கே பெரிய மதிப்பில்லை.
அதேபோன்றதுதான் மலேசிய, ஈழ, சிங்கப்பூர் எழுத்துக்கள் பற்றிய தமிழ்நாட்டுச்சூழலின் பார்வையும். அங்குள்ள அவர்களின் அணுகுமுறையும் தெரிவும் வேறாக இருக்கலாம். இங்கே ஒரு விமர்சகனுக்கு எவை முக்கியமாகத் தெரிகின்றன, ஏன் முக்கியமாகத் தெரிகின்றன என்பது முற்றிலும் வேறான கேள்வி. அங்கே அவர்களுக்கு முக்கியமான ஒருவர் இங்கிருக்கும் விமர்சகருக்கு முக்கியமில்லாமல் தோன்றலாம்.அங்கிருக்கும் ஒரு பிரச்சினை இங்கே பொருட்டாகத் தோன்றாமலிருக்கலாம்.அங்கே ஒரு குறிப்பிட்ட வாசிப்பு நிகழ்ந்திருக்க இங்கே முற்றிலும் வேறு ஒரு வாசிப்பு நிகழலாம். வெளிப்பார்வை வேறு ஒரு தெரிவை முன்வைக்கிறது அது எந்த இலக்கியவாசகனுக்கும் முக்கியமானதே.
அதேபோல எவராலும் ஒருமொழியின் ஒரு சூழலின் ‘அனைத்து’ நூல்களையும் வாசித்துவிட்டு எழுத முடியாது. தமிழில் வெளிவந்த ‘அனைத்து’ நூல்களையும் வாசித்துவிட்டா சித்துராஜ் அபிப்பிராயங்களை அள்ளிவிடுகிறார்? ஒரு சூழலில் சிலநூல்கள் விமர்சனம் வழியாக அடிக்கோடிடப்படுகின்றன. அவையே பொதுவான வாசிப்பில் வட்டத்திற்குள் வரும். சிலநூல்கள் அவற்றின் கருப்பொருளால் கவனத்திற்கு வரும். சிலவற்றை அந்த விமர்சகன் தேடிப்பிடிப்பான். அவற்றை மட்டுமே எவராயினும் வாசிக்க முடியும். கருத்தை சொல்ல முடியும்.
எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு க.நா.சு ‘வாசித்திருக்கிறீர்களா?” என்ற பட்டியலை வெளியிட்டார். நவீனத்தமிழிலக்கியத்திற்கு ஒரு வரைவை அளித்த பட்டியல் அது. அன்று அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி ‘தமிழில் வெளிவரும் அத்தனை புத்தகங்களையும் நீங்கள் படித்துவிட்டீர்களா? இல்லையேல் நீங்கள் எப்படி பட்டியல் போடலாம்?” அதற்கு க.நா.சு நீண்ட விளக்கம் அளித்தார். அரைநூற்றாண்டுக்குப்பின்னரும் அதே கேள்வி அப்படியே எழுவது பரிதாபம்தான்.
சுனீல்கிருஷ்ணன் ஈரோடு சிறுகதை முகாமில் தமிழ்ச்சிறுகதையின் பத்தாண்டுக்கால போக்குகளைப் பற்றியும் பேசினார். 130 சிறுகதைத் தொகுதிகளைக் கருத்தில்கொண்டதாகவும், அவற்றில் பதினொரு சிறுகதைத் தொகுதிகளை குறிப்பிடுவதாகவும் சொல்லி நான்கு கதைகளை மாதிரிக்குச் சுட்டிக்காட்டியிருந்தார். பதினொன்றுக்கு விஞ்சியவர்கள் கூச்சலிடலாம். நூற்றுமுப்பதுக்கும் அப்பாலுள்ள மேலும் இருநூறுபேர் கூச்சலிடலாம். ஆனால் இலக்கியவிமர்சனம் என்பதே தெரிவுதான்.
ஆகவே அயலார் பேசக்கூடாது, உள்ளிருந்துதான் பேசவேண்டும், முழுக்க வாசித்துவிட்டே பேசவேண்டும் என்பதெல்லாம் இலக்கியத்தில் அசட்டுக்கூற்றுக்கள்.இந்த சிங்கப்பூர் கும்பலுக்கே ஒரு விந்தையான நிலைபாடு உள்ளது. மாலன் போல அங்கே சென்று நாத்தழுதழுக்க நன்றி தெரிவித்து அவர்களைப் புகழ்வதை மட்டுமே செய்து மீள்பவர்களைக் கண்டு பழகிவிட்டிருக்கிறார்கள். அதையே அனைவரிடமும் எதிர்பார்க்கிறார்கள். இவர்களுக்கு இலக்கியவிமர்சனம் என்றால் என்ன. இலக்கிய அளவுகோல் என்றால் என்ன என்று புரிய இன்னமும் ஒரு தலைமுறைக்காலம் ஆகலாம்.
கடைசியாக, சுனில் கிருஷ்னனின் அக்கட்டுரை பட்டியலிடவில்லை. சிங்கப்பூர் மலேசியா ஈழத்தில் எழுதுபவர்களின் முழுப்பட்டியலையும் அளிப்பது அல்ல அதன் நோக்கம். அக்கட்டுரையை வாசிப்பவர் எவரும் காணலாம். அது அங்கே ஐம்பதுக்கும் மேற்பட்ட தொகுதிகளை வாசித்தபின் அவர் அவதானித்த ஒரு சில பொதுப்போக்குகளை மட்டுமே சொல்கிறது. [ஐம்பது தொகுதிகள் போகட்டும், ஐம்பது கதைகளை வாசித்த சிங்கப்பூர் எழுத்தாளர்கள் அங்கே இருக்கிறார்களா?] அச்சூழலில் எந்தெந்த கருக்கள் கதையாகின்றன, எப்படிக் கதையாகின்றன என்று மட்டுமே பேசுகிறது. அதற்கு உதாரணமாகச் சில ஆசிரியர்களின் கதைகளைச் சுட்டுகிறது. கனகலதாவின் கதை அவ்வாறு ஒரு குறிப்பிட்ட கலாச்சாரச்சிடுக்கைச் சுட்டிக்காட்ட, ஒரு பொதுப்போக்கை பேச மட்டுமே பயன்படுத்தப்படுகிறது அக்கட்டுரையில்.
சித்துராஜ் பொன்ராஜின் குறிப்புக்கு இலக்கியரீதியான எந்த முக்கியத்துவமும் இல்லை. இலக்கியவிமர்சனம் செயல்படும் முறையை அறியாத ஒருவர் அங்குள்ள சிலரை கவரும்பொருட்டு எழுதிய வம்புக்குறிப்பு அது.
ஜெ
****