கவிஞனின் ஒருநாள்

தீர்வுகள் – போகன்

சொற்களை தழுவிச்செல்லும் நதி

மழைத்துளிகள் நடுவே நாகம்

அலைகளில் அமைவது

ஜெ,

 

பொதுவாக முகநூல் ஊடகத்தில் எழுதப்படும் கவிதைகளைப்பற்றி ஓர் இளக்காரம் இங்கே உள்ளது. உண்மைதான் முகநூல் இலக்கியத்திற்கான ஊடகம் அல்ல. எனென்றால் அது சருகுபோல ஒவ்வொருநாளும் உதிர்ந்தபடியே உள்ளது. அத்துடன் அது கவிஞர் அறிந்த சிறிய வட்டத்தில் மட்டும் புழங்குகிறது. அது ஓர் உரையாடல்தளம். ஆகவே கவிதைகளையும் ஓர் உரையாடல்துணுக்கு என்றே வாசகர்கள் எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை எதிர்வினைகள் காட்டுகின்றன

ஆனால் கவிஞனின் உள்ளம் என ஒன்றுண்டு. அது கொந்தளிப்பும் பரவசமும் கொண்டது. உடனடியான எதிர்வினையாக எழுதப்படும் கவிதைகள் உலகமெங்கும் உள்ளன. அவைதான் அக்கவிஞனின் மிகச்சிறந்த ஆக்கங்களாகவும் உள்ளன. கவிதையின் பிரசுரம் மிகமிகக்குறைவாக இருக்கும் சூழலில் அத்தகைய எதிர்வினைகளுக்கு இடமில்லை. அவை கவிஞனின் டைரியிலேயே தேங்கிவிடும். கொஞ்சநாட்களுக்குப்பின் கவிஞனே அவற்றை பிரசுரிக்காமலும் ஆகிவிடக்கூடும்.

ஆனால் இறைக்கும் கிணறு ஊறும் என்பதுபோல எழுத எழுதப் பிரசுரிக்கப்படுவது எழுத்தாளனையும் கவிஞனையும் மேலும் எழுதச் செய்கிறது. உலகின் சிறந்த கவிஞர்கள் பலர் சொந்தமாக அச்சு ஊடகம் கொண்டிருந்தனர். இதழ்களில் வேலைபார்த்தனர். முகநூல் எவரையும் எதிர்பாராமல் கவிஞன் உடனடியாக வெளிப்பட வாய்ப்பளிக்கிறது. அவை வாசிக்கப்படுகின்றனவா என்பது வேறு. நல்ல கவிதை எப்படியும் வாசிக்கப்படும் என்பது என் எண்ணம்

உதாரணமாக போகன் 16- 08-2019 ல் எழுதிய இக்கவிதைகள். ஒரேநாளில் இவையனைத்தும் எழுதப்பட்டுள்ளன. அனேகமாக எழுதப்பட்டதுமே வெளியிடப்பட்டுள்ளன. பெரும்பாலும் ஒரு கவிதையின் உத்வேகம் இன்னொரு கவிதையாகியிருக்கிறது. ஆச்சரியம் என்னவென்றால் எல்லாமே அழகிய கவிதைகள். ஒன்றுகூட மொழியின் அழகில், சுருக்கத்தில், தரிசனத்தில் குறைவுபடவில்லை. முகநூல் என்னும் ஊடகம் அருகே இருப்பதனால், கையிலேயே செல்பேசியில் எழுதமுடிவதனால்தான் இது சாத்தியமாகிறது

டி.செந்தில்குமார்

வெட்டவெளிப்படுக்கையில்
ஆழ் உறக்கம் நடுவில்
திடுக்கிட்டு விழித்துணர்வது
கிழிந்துபோகும் நட்சத்திரமோ
கீழிறங்கிப் போகும் கண்ணீரோ..

*

திரும்பிப்போகும்போது
அவர் சொன்னார்.
‘நான் அறிவேன்.
அன்பென்பது
அதிகம் நீட்டப்படாத ஒரு பாடல்”

*

மழைக்காலத்தும்பி
தன்னை
ஆண் எனக்கொண்டது
பெண் எனக்கொண்டது.
தான் எனக்கொண்டது.
பிறர் எனக்கொண்டது.
திரியும் காற்றெனக் கொள்ளும்முன்
மழைக்காலம் தீர்ந்தது.

*

இக்கணம்
ஒரு கோமாளியின் மூக்கு.

இக்கணம்
வைரங்கள் மின்னும்
ஒரு இந்திர தனுசு.

இக்கணம்
நழுவிச்செல்லும்
மலை ஓடையுமாம்.

 

*

 

உடைந்த கோட்டைகளின் மீது
வளரும் புற்களை நான் அறிவேன்.

அவை தங்களுக்கு
எந்த
உடைந்த கோட்டை பற்றியும் தெரியாது
என்று சொல்லும்

 

*

 

ஞானி

மூச்சு
ஒரு குருவியைப் போல
மனிதர்களுள்ளே
போய்ப் போய் வருவதைப் பார்க்கிறார்.

கூட்டிற்கு
குருவி சொந்தமில்லை
என்பதை
அவர்கள் அறிந்திராதையும்

 

*

 

ஜென்
ஒழுங்குற மறுப்பது.
குருவி
எப்போது
உன் கவனத்தை ஈர்க்கப் பாடும்
எப்போது தன் பாட்டை
நிறுத்திப் பறக்கும் என்பதை
நீ அறிவாயா?

*

காற்று
கவனி!
என்பதைப்போல
திரையை அசைக்கிறது

கவனி…..கவனிகவனி..கவனி..

 

ஒரு இசைக்கோர்வை போல
திரை
உன் ஒளியில்
படித்துக் கொண்டிருக்கும் புத்தகம் மீது
ஒரு குறுக்கீடு செய்கிறது.

 

பூமியில் மானிடர்க்கு
ஒளியே போதம்.
மின்னி மின்னி
இணை நடனம் போல்
துள்ளி ஆடுகிறது
கவிதை.

காற்றென
வந்தது
கவிதைதான்.

 

*

சரி பண்ண முடியாத அளவுக்கு
அந்த வீடு சிதிலமடைந்திருந்தது.
அது பற்றிய
எந்தப் புகாரும் இல்லாத
இரண்டு அணில்கள்
உள்ளே போய்வந்து கொண்டிருந்தன.
அருகிலிருந்த மரம்
அந்த வீட்டை நோக்கி நடக்கத் துவங்கி இருந்தது.
ஒரு ஓடை தன் திசையை மாற்றிக்கொண்டு
வீட்டின் முற்றத்தில் உலாத்திக் கொண்டிருந்தது.
‘இந்த வீட்டில் சரிபண்ண வேண்டிய எதுவுமில்லை’ என்ற படி
நான் விலகி நடந்தேன்

*

1
காலித்தராசில்
ஒரு இறகைப்போல்
நான்
என் காதலை வைக்கிறேன்.

2
ஆடி ஆடி
அது
அமைதிக்கு வருகிறது.

 

*

 

நீரில் அளைவதோர்
ஒளிப்பிறழ் கை.
நிலத்தில் திரிவதோர்
மாய உடல்.
நிணக்கூட்டு.
தினவுத் திளைப்பு.
வலிச் செதில்.
கரையக் கரைய எழுமே
ஒரு உப்புப் பொம்மை

 

அன்புள்ள செந்தில்,

ஆச்சரியம்தான். எல்லா கவிதைகளுமே இயல்புக்குமீறிய படைப்பூக்கத்துடன், கூரிய மொழியில் அமைந்துள்ளன. ஒரே படைப்பெழுச்சியிலிருந்து எழுந்தவை. ஆனால் ஒன்றோடொன்று தொடர்பே அற்றவையாக வெவ்வேறு வகையில் சிதறிச்செல்பவையாக உள்ளன. இத்தகைய தருணங்கள் எந்தப் படைப்பாளிக்கும் முக்கியமானவை. நீங்கள் சொல்வதுபோல ஒரு படைப்பெழுச்சி மேலும் மேலும் கவிதைகளை உருவாக்குகிறது. அருவியில் குளித்துக்குளித்து தீராததுபோல. முன்பு என் உறவினர் ஒருவர் அருவியிலேயே உயிரைவிட்டார்.

ஜென் பாணியில் அமைந்தவை சில கவிதைகள். அவை இயற்கையில் ஒரு காட்சியை, ஒரு மர்மத்தைச் சுட்டிக்காட்டி அன்றாடம் உருவாக்கும் உறைந்துபோன அர்த்தங்களை உடைக்கின்றன. மழைக்காலத் தும்பி, இக்கணம் ஆகிய இரண்டும் முற்றிலும் வேறுபட்டவை. அவை அவ்வாறு சொல்லடுக்கப்படுவதனால் மட்டுமே கவிதையாகின்றன. இறுதிக்கவிதையான ‘நீரில் அளைவதோர்’ புதுக்கவிதையில் அரிய ஒரு மாதிரி. கற்பனாவாதக் கவிதைக்குரிய புறவய அர்த்த இணைப்பு அற்ற சொற்குவை அது. அதன் உணர்வெழுச்சியாலும் உதிரிக் காட்சியாலும் கவிதையாகிறது

ஒரு வீச்சில் ஊசல் இப்படி ஒரு திசைநோக்கி எழுவது நல்லதுதான். திரும்ப மறுஎல்லைக்குச் செல்லும் சோர்வையும் சந்திக்கவேண்டும். எப்படியாயினும் கவிஞருக்கு வாழ்த்துக்கள்

ஜெ

 

போகன்

வள்ளலார்,ராஜ்கௌதமன் -போகன் சங்கர்

போகன் கவிதைகள் பற்றி சுயாந்தன்

பெருந்தேவி,போகன்,பால்நிலைச் சீண்டலின் நகைச்சுவை

1. பூ – போகன்