திருப்பூர் காதுகேளாதோர் பள்ளி- அடுத்த சூழ்ச்சி
திருப்பூர் குற்றச்சாட்டு -நம் அறமும் குடும்பமும்
ஒரு குற்றச்சாட்டு
திருப்பூர், கொற்றவை- கடிதம்
அன்பின் திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,
திருப்பூர் காதுகேளாதோர் பள்ளியின் நிறுவனர் முருகசாமி அய்யா, உடல்நலக்குறைவினால் நினைவிழந்து மருத்துவமனையின் தீவிரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவர்மீது தொடரப்பட்ட பொய்வழக்குகளால் அவரும் அவருடைய மாணவர்கள் சிலரும் திருப்பூர் பள்ளியைவிட்டு வெளியேறி தற்போது சென்னையில் வசிக்கின்ற நிலையில், இந்நெருக்கடி அவர்களனைவரையும் சூழ்ந்துள்ளது.
சென்னையில் அம்மாணவர்கள் தங்களின் கனவுலட்சியங்களை எல்லாம் ஒளித்துக்கொண்டு, கிடைத்த பணிகளில் சேர்ந்து பணியாற்றி வாழ்வுநகர்த்தி வருகின்றனர். எந்நிலையிலும் மனவலுவிழக்காத முருகசாமி அய்யா சில கல்வியறிஞர்களோடு சேர்ந்து தமிழ்ச்சூழலில் ‘காதுகேளாத குழந்தைகளுக்கான கல்விப்பாடத்திட்ட முறைமை’யை உருவாக்கும் பெருங்கனவில் ஈடுபட்டிருந்தார். அனைவரும் இணைந்து அந்த கனவுக்காக அயராது உழைத்து வந்தனர். முந்தையகால தன்னுடைய சாட்சியிடத்தையும் நிரூபணத்தையும் தொலைத்தவராக, ஒலியுலகம் அறியாத அக்குழந்தைகளின் எதிர்கால வாழ்வுபற்றிய உள்ளச்சத்தை மட்டுமே சுமந்துநிற்கிறார் இப்போது வரை.
மயிலாப்பூர் இசபெல்லா மருத்துவமனையில் மேலதிக சிகிழ்ச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, தங்கள் கண்முன்னே உணர்வற்றுக்கிடக்கும் தங்களுடைய ஆசான் விழிதிறந்து நலம்பெற்றெழ வேண்டி, அவரை நம்பிவந்த மாணவர்கள் இறைதொழுது கண்ணீர் சிந்துகிறார்கள். காதுகேளாத அக்குழந்தைகள் அனைவருமே அடுத்தென்ன நிகழுமென்கிற அச்சத்தைச் சுமந்து கதிகலங்கி நிற்கிறார்கள். அவர்களை கண்ணுக்கு நேரே எதிர்கொள்ளவும் இயலவில்லை.
நாம் அனைவரும் அவர்களின் பதட்டத்தில் உடன்நின்றாக வேண்டிய தருணம் என்பது மட்டுமே மனதுக்குத் தோன்றுகிறது. கையறுநிலையில், உயிர்பிழைத்தலின் சிறுவாய்ப்பைத் தேடி அதிதீவிர சிகிழ்ச்சைப்பிரிவு மருத்துவக்கூடத்துள் கிடத்தப்பட்டிருக்கிறார் முருகசாமி அய்யா.
எல்லா தோழமைகளிடத்தும் அவர்குறித்த நிலையைத் தெரியப்படுத்தி இருக்கிறோம். கீரனூர் சமரச சன்மார்க்க குருகுலத்துக் குழந்தைகள், ஆசிரியர் ரத்தினம் அவர்களின் சொற்படி தங்கள் கைப்படவே காகிதக்கொக்குகள் செய்து பிரார்த்தனை வைத்து ‘அருட்பெருஞ்சோதி’ உச்சரிக்கிறார்கள் அவருக்காக. நிறைய நண்பர்களின் வீடுகளில் வேண்டலின் வெளிச்சத்தைச் சுமந்து அகல்தீபம் ஏற்றப்படுகிறது.
எங்களுடைய எல்லாச் சூழலிலும் உங்களுடைய இருப்பினை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். எப்போதாவது அடையும் உளச்சோர்வினால் எங்கள் நம்பிக்கையின் அகக்கயிறு அவிழும்போதெல்லாம் நீங்களோ அல்லது உங்கள் எழுத்துகள் மனதுக்கு தீர்க்கத்தைத் தந்து வழிநடத்தும் ஆற்றலாக இருந்திருக்கிறீர்கள். இருக்கிறீர்கள்.
துயரின் நிர்கதியில் நிற்கும் இக்கடிதம் கூட அவருக்காக உங்களுடைய சிறு எண்ணக்குவிவு வேண்டிதான். அறிதலின்பொருட்டும் தெளிதலின்பொருட்டும் உங்கள் தளத்தை வாசிக்கும் அத்தனை பேரின் வழியாகவும் முருகசாமியின் வாழ்வு ஒருமுறையாவது எண்ணிப்பார்க்கப்படாதா, அந்த கூட்டெண்ணம் அவரின் ஆயுளை இன்னும் சிறுதுகாலம் நீட்டுவிக்காதா என்ற
தவிப்பிலிருந்தே இவ்வார்த்தைகள் எழுகின்றன.
நம் எல்லோரின் நெஞ்சார்ந்த பிரார்த்தனையோ, ஒரு குரலழைப்போ, ஒருகணம் உள்ளத்தில் நினைத்துக்கொள்ளுதலோ… அவர்களுடைய நம்பிக்கையை நீட்டிவைக்கும். காலக்கருணை அவரை குணப்படுத்தி நலம்வழங்கட்டும். நிராதரவாகப் போய்விடக்கூடாத அவருடைய மாணவக்குழந்தைகள் ஒவ்வொருக்குமான நற்சூழல் உருவாகவும் இறைவேண்டி கைகூப்புகிறோம்.
நன்றி…
இப்படிக்கு,
குக்கூ காட்டுப்பள்ளி
***