வெறுமே மலர்பவை

கலாப்ரியா கவிதைகள்
தற்குறிப்பேற்றம்

கலாப்ரியாவின் கவிதைகளைப்பற்றி ஒரு முன்பு ஒரு நீண்ட கட்டுரை எழுதினேன். அதில் அவருடைய கவிதைகளிலுள்ள ’வெறும்படம்’ என்னும் இயல்பைப்பற்றி எழுதியிருந்தேன். முகநூலில் அவர் எழுதிக்கொண்டிருக்கும் பலநூறு கவிதைகளிலிருந்து இக்கவிதைகளைத் தெரிவுசெய்கையில் மீண்டும் அந்தக் கருத்தே முந்தி எழுகிறது.

நவீனக் கவிதையில் காட்சிச்சித்தரிப்பு என்பது இரண்டு வகையிலேயே பயின்றுவருகிறது. ஒன்று, படிமங்கள். காட்சிகளின் கூரிய சித்தரிப்பு ஒரு குறிப்பிட்ட வகையில் அவற்றைப் பார்க்கும்படி நம்மை பணிக்கிறது, நாம் அவற்றை அர்த்தங்களாக விரித்தெடுக்கும் வாய்ப்பை பெறுகிறோம். நம்முள் அவை குறியீடுகளாக வளர்கின்றன. உணர்வுகளாகின்றன. முழுவாழ்க்கைக்கும் பிரதிநிதிகளாக நிலைகொள்கின்றன. அவற்றைப் படிமம் என்கிறோம். இன்னொன்று நுண்சித்தரிப்பு. அது அலைகடலில் ஒரு மிடறுபோல. வாழ்வின் ஒரு தருணம். ஒரு கதைத்துளி.

இவ்விரண்டும் அல்லாத காட்சிகள் என தமிழில் கலாப்ரியாவின் கவிதைகளிலேயே காணக்கிடைக்கிறது. அவருடைய தனி இயல்பு, தமிழ்க்கவிதைக்கு அவருடைய கொடை அது. அவருடைய தொடக்ககாலக் கவிதைகள் முதலே இந்த இயல்பு தொடர்ச்சியாக இருந்துவருகிறது. சொல்லப்போனால் ஒரு காட்சியை ஏதேனும் வகையில் அவர் படிமமாக ஆக்கும்போதுதான் அவை கீழிறங்கி எளிய அர்த்தம் கொள்கின்றன.

இச்சித்திரங்களைப் பற்றி சுஜாதாவும் முன்பு சொல்லியிருக்கிறார். இவை அளிக்கும் அகத்தூண்டல் [Evocation ] மட்டுமே இவற்றை கவிதைகளாக்குகின்றன. மேலதிகமான அர்த்தமோ வாழ்க்கைக்குறிப்போ இவற்றுக்குத் தேவையில்லை என. எதையும் கரந்து வைத்துக்கொள்ளாத காட்சிகள். குழந்தைகள் அல்லது மலர்கள் போல. அவ்வண்ணம் அவை இருப்பதனாலேயே கவிதையாக ஆகின்றவை. அவற்றிலுள்ள வேடிக்கைபார்க்கும் குழந்தை நம்மை வந்தடைந்தால், ஒருகணம் புன்னகைத்துவிட்டால். நாம் கவிதையை வாசித்துவிட்டோம்

*

மழைத்தாரைகளை
வடம் போலக் கயிறு
திரித்து இழுத்து
வருகிறது நதி
நகர மறுக்கிறது மலை

*

நெடுங்குகை இருளுக்குள்
முடிவற்றுப் போய்க் கொண்டிருக்கிறான்
ஓடும் ரயிலில்
புல்லாங்குழல் வாசிக்கும்
கண் தெரியாத இசைஞன்

*

எப்போதோ பெய்த மழையில்
எப்போதோ நிறைந்து ஓடிய நதி
எப்போதோ கலந்த கடலில்
இப்போது மறைகிறது
எப்போதோ புறப்பட்ட
ஒரு நட்சத்திர ஒளி

*

விருந்தினன் அமர்ந்திருக்கும்
இருக்கையின் கீழ்
தூசியும் நூலாம்படையும்
திடீரெனக்
கண்ணில் பட
முகந்திரிந்து தவிப்பான்
விருந்தோம்புபவன்

*

தோட்டத்தில் வறட்சியின்
சாட்சியாய் மீதமிருக்கும்
செடியில் ஒற்றைப் பூ
முந்திக் கொண்ட பறவைகள்
தேனருந்தி விட்ட
அதைச் சீக்கிரம் பறி
எத்தனை தேன்சிட்டுகள்
வண்ணத்துப் பூச்சிகள்
எவ்வளவோ தொலைவு
பறந்து வந்து ஏமாந்து போகின்றன

*

இடுப்பில் குடமேந்தி
நின்றபடியே தெரு நடுவில்
கிசுகிசுப்பாய் பேசிக் கொண்டிருந்த இருவரும்
ககலவென்று சிரித்தபடி
அவரவர் வீட்டுக்குப் பிரிகிறார்கள்
ஆளுக்கொரு குடம் புன்னகை
முகத்தில் சுமந்து

கலாப்ரியா-வண்ணதாசன் கடிதம்

கலாப்ரியாவுக்கு கண்ணதாசன் விருது

கலாப்ரியா படைப்புக்களம் – நிகழ்வுக் குறிப்புகள்

முந்தைய கட்டுரைபக்தி இலக்கியம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-52