அன்பின் ஜெ..
முதலை மோடி கட்டுரை படித்தேன். மோதியைக் கிண்டலடிக்கும் அபத்தங்களைச் சுட்டியிருந்தீர்கள். அதைக் கிண்டலடித்த முகநூல் பதிவுகளில் எனதும் ஒன்று.
இது ஜேஜே சில குறிப்புகளில், வரும் ஒரு சம்பவத்தை நினைவு படுத்துகிறது. ஒரு ஐரோப்பிய நகரத் தெருவில், திடீரென ஒரு காண்டா மிருகம் ஓடுகிறது. அந்த அபத்தத்தை விட்டு விட்டு, காண்டாமிருகம் ஆசியக் காண்டாமிருகமா அல்லது ஆஃப்ரிக்கக் காண்டா மிருகமா என மக்கள் வாதம் செய்து கொண்டிருக்கும் அபத்தம்.
நாம் உண்மையில் விவாதிக்க வேண்டியது வேறு.
2014 ஆம் ஆண்டு, புதிய அரசு பதவியேற்றதும், தேசிய வனவிலங்கு வாரியம் (National Board for Wildlife) மாற்றியமைக்கப்பட்டது. இது வழக்கமான நிகழ்வுதான்.அது மாற்றியமைக்கப்பட்ட்தும், சுற்றுச்சூழல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட பல பெரும் தொழிற் முதலீடுகள் முதலீடுகள் முடுக்கிவிடப்பட்டன.
அவற்றுள் முக்கியமானது, ஜார்க்கண்ட் மாநிலத்தில், வடக்கு கோயல் நதியில் கட்டப்படவிருக்கும் 68 மீட்டர் உயர கட்கு மண்டல் அணைக்கட்டு. இது நீர் மின்சார உற்பத்திக்கும், பாசனத்துக்கும் உபயோகப்படும். ஆனால், இது கிட்டத்தட்ட 120 சதுர கிலோமீட்டர் பலமாவு புலிகள் சரணாலய நிலத்தை மூழ்கடித்துவிடும். இங்கே புலிகள் தவிர யானைகளும், காட்டு மாடுகளும் வசிக்கின்றன. இதற்கான அனுமதி 2015ல் வழங்கப்பட்டிருக்கிறது.
இன்னொரு திட்டம் – அகோலா-காண்ட்வா அகல ரயில் பாதைத் திட்டம். இதன் 38 கிலோமீட்டர் பாதை, மராத்தியத்தின் மேல்காட் புலிகள் சரணாலயத்தின் நெருக்கமான காடுகள் வழியே செல்கிறது. இதற்கான அனுமதி 2017 ல் வழங்க்கட்டுள்ளது.
மிகப் பிரபலமான ஜிம் கார்பெட் தேசியப்பூங்காவின் ஊடே செல்லும் சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்படுகிறது. உலகில் மிக அதிகமான புலிகளைக் கொண்ட சரணாலயம் இது.
தவிர, அருணாச்சலப் பிரதேசத்தில் அமையவிருக்கும் திபாங்க் 3000 மெகாவாட் நீர்மின் நிலையம் 4500 ஹெக்டர் மழைக்காடுகளை மூழ்கடிக்கும். இது போன்ற 10-12 மிக முக்கியமான திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. இவை முந்தைய அரசின் வனவிலங்கு வாரியத்தால் அனுமதி மறுக்கப்பட்டவை.
தவிர, சில தொழிற்சட்டங்கள் இலுகுவாக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பான சட்டம், 50 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் அமையும் தொழிற் திட்டங்களுக்கு, சுற்றுச் சூழல் பாதிப்பு பற்றிய மதிப்பீட்டைக் கட்டாயமாக்கியிருந்தது. அதை இந்த அரசு 350 ஏக்கராக உயர்த்தியிருக்கிறது. இது இந்தியாவின் 90% தொழிற்திட்டங்களுக்குச் சாதகமான சட்டமாக மாறியிருக்கிறது எனச் சொல்லலாம்.
70 களில், இந்தியச் சுற்றுச் சூழல் இயக்கங்கள் வலுவடைந்தன. பெரும் அணைகளை எதிர்த்துப் போராட்டங்கள் நிகழ்ந்தன. கேரளாவின் அமைதிப்பள்ளத்தாக்கும், இமாலயத்தில் காடுகளை வெட்டுவதை எதிர்த்த சிப்கோ இயக்கமும் முக்கிய உதாரணங்கள்.
அந்தக் காலகட்டத்தில்தான் முதல் முறையாக வனவிலங்கு மற்றும் சுற்றுச் சூழலுக்காக என ஒரு தனி அமைச்சகம் அமைக்கப்பட்டது. அப்போது இந்திய மக்கள் தொகை 55 கோடி. இன்று 130 கோடி.
70களில் தேசியப் பூங்காக்கள் அமைக்கப்பட்டு, முக்கியமான காடுகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. அந்தப் பூங்காக்களுக்குள் எந்த வளர்ச்சித் திட்டங்களும் அனுமதிக்கப்படக் கூடாது என்பது சட்டம்.
முந்தைய வனவிலங்கு வாரியத்தில் முக்கிய உறுப்பினர்களுள் ஒருவர் ரஞ்சித் சிங். அவர் 1971 முதல், இந்திய வனவிலங்குப் பாதுக்காப்பு மற்றும் சட்டமியற்றுதல் துறைகளில், பெரும் பங்களிப்பைச் செய்தவர். அவர் தவிர, பறவையியலாளர் அசத் ரமானி, இயற்கையியலாளர் ப்ரவீன் பார்கவ், வனப்பாதுக்காப்பு நிபுணர் ப்ரேர்ணா சிங் பிந்த்ரா போன்ற துறை வல்லுநர்கள் நீக்கப்பட்டு புதிய வனவிலங்கு வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. புதிய வனவிலங்கு வாரியத்தில், யானை நிபுணர் பேராசிரியர் சுகுமார் என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். தவிர குஜராத்தைச் சேர்ந்த இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
மொத்தத்தில், அரசு, தனியார் திட்டங்களை, சுற்றுச் சூழல் சட்டங்களில் இருந்து காக்கும் புதுச் சுவர்களை எழுப்பியிருக்கிறது. இன்று சூரிய ஒளி மின்சாரம், அனல் மின்சாரத்தைவிட மலிவாகிவிட்ட காலத்தில், இன்னும் எதற்கு சூழலைப் பாதிக்கும் மின் திட்டங்கள். இவை போன்ற விவாதங்களே முன்னெடுக்கப்பட வேண்டியவை.
இப்போது, மோதி பிடித்த முதலைக்கு வருவோம். முதலில், அந்த தொலைக்காட்சி நிகழ்வு படம் பிடிக்கப்படும் முன்பு புல்வாமா தாக்குதல் நிகழ்ந்த்து. அது நிகழ்ந்து பல மணிநேரம் வரையில் இந்தப் படப்பிடிப்பு நிகழ்ந்த்தாகச் சொல்லப்படுகிறது. புல்வாமா தாக்குதலுக்கான எதிர்வினை முக்கியமா அல்லது இந்தப்படப்பிடிப்பு முக்கியமா எனக் கேள்விகள் எழுகின்றன. இரண்டாவது, சுற்றுச் சூழல் சட்டங்களை நீர்த்துப் போகச் செய்து விட்டு, காட்டுக்குள் சென்று, வன உயிர்ப் பாதுக்காப்பைப் பேசுவது எவ்வளவு அபத்தம். அதைவிட அபத்தம், இந்தி தெரியாத பியர் க்ரில்ஸிடம் இந்தியில் மட்டுமே பேசியது.
இதற்கு முன்பும் சில சர்ச்சைகள் எழுந்தன. முதலாவதாக மோதி விற்ற தேநீர். அவர் சிறுவராக இருந்த காலத்தில், அவர் தேநீர் விற்றதாகச் சொல்லப்படும் வாட்நகரில் ரயில்நிலையமே இல்லை என்று சொல்லப்படுகிறது. அதேபோல், அவர் படித்ததாகச் சொல்லப்படும், ‘மொத்த அரசிய அறிவியல்’ என்னும் படிப்பு. அது, தில்லிப் பல்கலைக்கழகத்தில் மட்டுமல்ல, உலகிலேயே எந்தப் பல்கலைக்கழகத்திலும் பயிற்றுவிக்கப்படுவதில்லை என்றும் சொல்லப்படுகிறது. எனவேதான், மோதி பிடித்த முதலை முக்கியத்துவம் பெறுகிறது.
மோதி முதலை பிடித்தாரா இல்லையா என்பதல்ல முக்கியம். இன்று சுற்றுச் சூழல் மிகவும் முக்கியமாகப் பேசப்படுகின்ற ஒரு மனித இனப்பிரச்சினை. ஆர்க்டிக் பனிப்பாளங்கள் அபாயகரமான அள்வில் குறைந்து வருகின்றன. இமய மலையிலும். 2013 கேதார்நாத் பெருவெள்ளச் சேதம் நிகழ்ந்தது அதனால்தான். நாம் பேச வேண்டிய பிரச்சினைகள் வேறு.
அன்புடன்
பாலா