உப்புவேலி வாங்க
உங்கள் வசனம்,எப்போதும் கிருபைபொருந்தினதாயும், உப்பால் சாரமேறினதாயும் இருப்பதாக.
[பவுல்]
எஸ்ரா திருவண்ணாமலையில் அவருக்கென நிகழ்த்திய உண்டாட்டில் ஒரு கதை சொன்னார். ஒரு சமையலறையில் எளிய சிக்கலாக துவங்கும் கதை, அந்த சிக்கல் வீடு, தெரு,ஊர்,உலகம் எனப் பரவும் சூழலை மையம் கொண்ட கதை. கரு இதுதான். உலகில் ஒரு நாள் உப்பு மொத்தமாகக் காணாமல் போய் விடுகிறது. ஏன்? மானுடம் இந்த நிலையில் இருப்பதன் பொருட்டு, சுவாசம் போலவே தன்னியல்பாக சில அறமதிப்பீடுகளைக் கொண்டிருக்கிறது. அந்த சாரமான ஒன்றை மானுடம் முற்றிலும் தவற விடுகிறது. முற்றிலும் தவறிய அக் கணம் இப் புவியின் மொத்த உப்பும் மறைந்து போகிறது.
பிறகு யோசித்து அக்கதையை கணிப்பொறியில் இருந்து அழித்து விட்டேன். காரணம் அதில் தாள இயலாத சாபம் ஒன்று இருக்கிறது. எல்லா எழுத்தாளனும் இருள் வெளிகளில் உழல்வது அவன் படைப்புத் தருண சிக்கல்களில் ஒன்று. உழன்றெழுந்து கிடைக்கும் ஒளியே அவனை எழுதச் செய்கிறது. ஒளியை உதறி இருளை முன்வைப்பது எந்த எழுத்தாளரும் செய்யக் கூடாதது. அதை அக் கதை எழுதி,அப்படி எழுதுவதன் வழியாக கண்டடைந்தேன். என்றார் எஸ்ரா.
இல்லம் மீண்டும், அவர் சொன்ன கதையே உள்ளே உழன்று கொண்டிருந்தது. இவ்வுலகின் மொத்த உப்பும் இல்லாமல் போனால் விளைவு என்னவாக இருக்கும்? ஒரே முடிவுதான் மானுடம் மொத்தமாக செத்துப் போகும். அன்று தேடி வாசித்தது ராய் மாக்ஸம் எழுதிய இந்தியாவின் மாபெரும் புதர்வேலி நூலின் ஏழாம் அத்யாயத்தை. மனித உடலுக்கு உப்பின் அவசியம் என்ன? ஒரு மனித உடலில் சராசரியாக உப்பு என்ன அளவில் இருக்க வேண்டும். கூடினால்,குறைந்தால் என்ன நேரும் இவற்றை அறிவியல் பூர்வமாக விரிவாக விளக்கும் அத்யாயம் அது.
பிறகு தொடர் வாசிப்பில் மரபணு நோய்களுக்கான சிகிழ்ச்சைகள் சார்ந்து பொதுவாக சில வாசிக்கக் கிடைத்தது. மானுட உடலின் மரபணு நோய்களுக்கான வேரினை, மானுடம் மரத்திலான வாழ்வை விடுத்து, இரு காலிகளாக சமவெளி வாழ்வைத் தேர்ந்த போது, மரக்கறி உணவு மட்டும் எனும் நிலையிலிருந்து விலகி, உண்ணத் தக்க எதுவும் எனும் நிலைக்குத் தகவமைந்த சூழல் வரை சென்று தேடுகிறது. கடல்புர வேட்டைச் சமூகம் வழியேதான் [உப்புக்கருவாடு] முதன்முதலாக உப்பு மனித உடலுக்குள் செல்கிறது.[யூகம்தான்].
பரிணாமத் தகவமைவில் ஒவ்வொரு விதமான தகவமைவும் பலவிதமான வசதிகளையும், இணையாக கடக்க இயலா சில சிக்கல்களையும் மனித உடலுக்கு வழங்குகிறது. உதாரணமாக இருகாலிகள் ஆனதும் நமக்கு கைகள் [கருவிகள் செய்து கொள்ளும் வகையில்] விடுதலை கொள்கிறது. இணையாக ஒரே தாவலில் தப்பித்து மரத்தின் உச்சிக்கு செல்லும் திறனை உடல் இழக்கிறது. இப்படித்தான் உப்பும் அதன் விளைவுகளும் மனித உடலில் தகவமைந்திருக்கிறது. உப்பு மானிட உடலுக்கு அளிக்கும் பல சாதகங்கள் போல, கடக்க இயலா பாதகமும் [அரிய சில மரபணு நோய்கள்] சிலவற்றை அளிக்கிறது.
மரபணு சிகிழ்ச்சை முறைகள் வழியே இத்தகு இடர்களை களைய இயலுமா எனும் தேடல், மிஸ் மாட்ச் ஹைபோ தீசிஸ் எனும் கல்விப் புலத்தை திறந்துவிட்டிருக்கிறது. இந்தக் கல்விப் புலம் வழியாகத்தான், இன்றைய நவீன வாழ்க்கைச் சூழலில், மானுடம் இன்னும் இடைக்கற்காலத்தை சேர்ந்த உடலுடன் தங்கி நிற்கிறது எனும் அறிதலை அடைகிறார்கள். பரிணாமத் தகவமைவில் புறச் சூழலின் டைம் ஸ்பான் மிக துரித கதியிலும், இந்த உடலில் அந்த சூழலுக்கு தகவமையும் டைம் ஸ்பான் [அதன் இயல்பான] மந்த கதியிலும் இருப்பதைக் காண்கிறார்கள். அனைத்து மரபணு சார்ந்த நோய்களும் நோய்களுக்கான தீர்வுகளும் இந்த இருவேறு காலகதிகளின் இழுபறிக்கு இடையே எங்கோ நிலைபெறும் புள்ளியை மரபணு சிகிழ்ச்சைப் புலம் தேடிக்கொண்டிருக்கிறது.
சுற்றுக்குச் சென்றிருந்த புறப்பாடு நூல் மீண்டதும், அதை வைக்கும் வரிசையில் வரிசை தவறி வைக்கப்படிருந்த உப்பு வேலி நூல் தட்டுப்பட்டது. மாற்றி வைக்க எடுத்து,எடுத்தவகையில் புரட்டி ஆங்காங்கே வாசிக்க, வாசித்த வகையில் மீண்டும் முதலிலிருந்து துவங்கி மற்றொரு முறை வாசித்தேன். மிக முன்பே துவங்கி, சிறிது சிறிதாக வளர்ந்து,1850 முதலாக ஒரு கால்நூற்றாண்டு உச்சகதியில் இயங்கிய, பாரத நிலத்தை இரண்டு பாதிகளாக பிரித்த, இரண்டாயிரம் கிலோமீட்டர்களுக்கும் மேலாக நீண்ட, உப்புக்கான சுங்கப் புதர்வேலி இன்றும் எஞ்சி இருக்கிறதா எனும் தேடலில்,அதன் எச்சங்களைப் பார்க்க கிரேட் பிரிட்டனில் இருந்து வந்த ராய் மாக்ஸம் அவர்களின் ஆய்வுகளும்,தேடல்களும்,கண்டடைதலுமே இந்த நூல்.
தொழில்முறை ஆய்வாளர் அல்லாத ராய், 95 இல் ஒரு பழைய புத்தக கடையில் கண்டெடுத்த,வில்லியம் எச் ஸ்லீமன் [இந்தியாவில் தக்கி கொள்ளையர்களை ஒழிப்பதில் முன்னணியில் நின்று செயல்பட்டவர்] எழுதிய நூல் ஒன்றில் நம்ப இயலாத இந்த பிரும்மாண்ட வேலி குறித்த குறிப்புகளை காணும் ராய், பிரிட்டன் ஆவணக் காப்பங்கள், நூல்நிலையங்கள் இயற்றில் சலிக்காமல் தேடி,அந்த வேலி சார்ந்த அனைத்து வரலாற்றுப் பின்புலங்களையும் கண்டடைந்து, அதன் எச்சங்களை தேடி இந்தியா வந்து, சம்பல் கரை அருகே, சகநகர் எனும் ஊரின் புறத்தே, அந்த வேலியின் இன்னும் எஞ்சி நிற்கும் சில பகுதிகளை காண்பதில் நிறையும்,அவரது ஐந்தாண்டு தேடல் அனுபவங்களை பேசும் நூல்.
சர்வ அதிகாரம் கொண்ட,கிழக்கிந்தியக் கம்பனி, அதை ஆளும் பிரிட்டன்அரியணை இரண்டுக்கும் சிக்காமல் ஊழலில் திளைத்து,பிரட்டனின் வரலாற்று நாயகனாகவும் நிலைபெற்று விட்ட க்ளைவில் துவங்கி, பிரட்டன் இந்தியாவின் இரக்கமே அற்ற ஊழல் நிர்வாக அமைப்பு குறித்தும்,அந்த அமைப்பு உருவாக்கிய இரண்டாயிரம் கிலோமீட்டர் நீள சுங்கப் புதர்வேலி இழைத்த தீங்குகள் குறித்தும், பிரிட்டிஷ் தனமாக கூட்டல் குறைத்தல் இன்றி,பதற வைக்கும் தரவுகளை முன்வைத்தபடி விரைகிறது நூல். குறிப்பாக கூட்டம் கூட்டமாக இந்தியாவில் இரண்டு பஞ்ச காலங்களில் மக்கள் மடித்து மறைந்து கொண்டிருந்த போது, சுங்க எல்லையில் நாற்பதுபைசா அடக்கம் கொண்ட குறிப்பிட்ட அளவு உப்பு,பதிமூன்று ரூபாய் வரை விற்கப்பட்டிருக்கிறது எனும் எளிய குறிப்பாக கடந்து செல்லும் ஒரு தகவல் அளிக்கும் அதிர்ச்சியும் ஆயாசமும் அளப்பரியது.
பண்டைய சீனாவில் உப்பின் தேவை அதன் மீதான மதிப்பும் வரியும் என்னவாக இருந்தது, வரலாறு நெடுக இருந்த உப்பின் முக்கியத்துவம்,காலனியாதிக்கப் பின்புலத்தில் என்னவாக இருந்தது, ஆப்ரிக்காவில், ஆசியாவின், ஐரோப்பிய நிலத்தின் ஏனைய பகுதிகளில்,பிரான்சில் என்னவாக இருந்தது, ஒப்புநோக்க உப்பின் மீதான வரிகளும் ஒடுக்குமுறையும், முற்றிலும் அறம்தவறி மிருகத்தனமான ஒன்றாக இந்திய எளிய மக்கள் மீது,கம்பனி சுமத்திய விதத்தை, ஒரு பிரும்மாண்ட வேலி வழியே,இந்திய நிலத்தையே இரண்டாக கிழித்து, இந்திய ஜனத்தொகையில் கால் வாசிப் பேர்களை குற்றவாளிகளாகிய, கால்வாசிப் பேர்களை குற்றவுணர்வே இன்றி கொன்றொழித்த கதையை,இந்தியப் பொது மனம் மறந்து போன துயர் மிகு வரலாற்றை தனது பயணம் வழியே நூலில் சொல்லிச் செல்கிறார் ராய்.
இத்தனை நீள,இத்தனை பிரும்மாண்ட புதர்வேலி,அது துவங்கி கைவிடப்படும் வரை, அது உருவான விதம், அது நிர்வகிக்கப்பட்ட விதம், அதில் கொட்டப்பட்ட உழைப்பு இதன் புள்ளி விவரங்கள் மலைக்க வைப்பவை. அத்தனையும் எதற்காக ? உலகெங்கும் உப்பு ஒடுக்குமுறைக்கு எதிராக எழுந்த போராட்டங்களை காந்தியை முன்வைத்து விவரிக்கிறார் ராய். வாழ்த்த காலத்தில் பலலட்சம் பேரை கொன்றொழித்த உப்பு வரி, காந்தியின் விடாபிடியான போராட்டம் வழியே, ஆங்கிலேயர்கள் பாரத நிலம் விட்டு நீங்கும் ஆறு மாதங்களுக்கு முன்பாக முற்றிலும் ரத்து ஆகிறது.
உப்பு விளையும் கடல்புரங்கள், சம்பர் எரி, பஞ்சாப் உப்புப் பாறை வெளிகள் துவங்கி ராய் விவரிக்கும் உப்பு உற்பத்தி முறைகளும்,திணை விவரணைகளும் தனித்துவம் வாய்ந்தவை. நூலுக்குள் பாரத நிலத்தில் பருவ காலங்களுக்கு ஒப்ப,ராய் தனது தேடுதலில் மனச்சோர்வு கொள்வதும்,நம்பிக்கை கொள்வதும் சங்க இலக்கிய அழகியல் போல உருவாகி வந்திருக்கும் ஒன்று. சிறந்த உதாரணம் ராய் முதன் முதலாக மும்பை வந்திறங்கும் சித்திரம். மும்பையின் சேரிகள் சாக்கடை வீச்சம் அளிக்கும் முன்முடிவுகளைக் கடந்து,மைசூரின் சந்தன வாசம் என இந்திய நிலத்தைக் கண்டு ராய் அதில் பொருந்திக் கொள்ளும் சித்திரம்.
நூல் நெடுக கிராமத்து மக்களின் இயல்பான அன்பு, சாதிப் படிநிலைகள், அரசியல் வேறுபாடுகள் என சிறிய வார்த்தைகளில் எளிய தகவல்கள் வழியே ஒரு பாரத நில பண்பாட்டு சித்திரம் ஒன்றை உருவாக்கிக் காட்டி விடுகிறார் ராய். குறிப்பாக அவர் தங்கி இருக்கும் ஓம்காரேஸ்வரர் கோவில் அருகான குன்றில் இருந்து அவர் அளிக்கும் தகவல்களில் ஒன்று, முன்பு அந்த இடம் பைராகிகள் தங்களை அந்த குன்றிலிருந்து குதித்து மகாதேவருக்கு தங்களை சுயபலி அளிக்கும் இடமாக இருந்தது எனும் தகவல். இப்படியான தகவல்கள் கொண்டு தொடுக்கப்பட்ட நூல்.
நூலின் முக்கிய அம்சமாக நான் கருதுவது ராயின் விடாப்பிடியான குணம் துலங்கி வந்த தன்மை. ஒரு குறிப்பு.அதிலிருந்து சலிக்காத தேடல் வழியே, அந்த குறிப்புக்கான ஆவணப் பின்புலத்தை அடைகிறார். அதிலிருந்து முதல் தேடுதல் வேட்டையை நிகழ்த்தி தோற்கிறார். ஆவணக் குறிப்புகள் கொண்டு அடுத்த தேடலில் அந்த வேலி அமைந்த அந்த ஆண்டின் சரியான வரைபடத்தை அதே ஆவணக் காப்பக வளாகங்களில் சோர்வே இன்றி தேடிக் கண்டடைகிறார். எந்தத் தேடலிலும் அவரிடம் சோர்வே இல்லை. குறிப்பிட்ட நூலகத்தில் பல மாத தேடல்களின் இருதித் தோல்விக்குப் பிறகு ராய் இவ்வாறு எழுதுகிறார் ” மாதமெல்லாம் ‘தேடி’ அந்த ஆவணக் காப்பகத்தில்,உப்பு வேலி குறித்த தகவல் ஏதும் இல்லை என்று ‘கண்டுபிடித்தேன்’ ” .
ராணுவ திசைகாட்டி ஒன்றை வாங்குகிறார். அதன் வழியே அட்ச ரேகை தீர்க்க ரேகை கொண்டு வரைபடம் குறிக்கும் குறிப்பிட்ட இடத்தை அடையும் வகைமையை மீண்டும் மீண்டும் பயிற்சி செய்கிறார், சோர்வே இன்றி நடக்க பயிற்சிகள் மேற்கொள்கிறார், இப்படி தகுதிப் படுத்திக் கொண்டு இரண்டாவது முறை இந்தியா வந்து, எந்த இடத்தில் இன்னமும் அந்தப் புதர்வேலி எஞ்சி நிற்க சாத்தியமோ,அந்த நிலங்களில் டில்லி,ஆக்ரா, ஜான்சி எனத் தேடித் தோற்றுத் திரும்புகிறார். மூன்றாம் முறை இன்னும் துல்லியமான அந்த வேலி இயங்கிய காலக்கட்ட வரைபடம்,இன்று அந்த நிலம் எவ்வாறு மாறி நிற்கிறது என்பதை சுட்டும் இன்றைய வரைபடம், இவற்றைக் கொண்டு சில தேட வேண்டிய பகுதிகளை இன்னும் துல்லியம் செய்து கொண்டு இந்தியா வருகிறார். சம்பல் அருகே ஒரு கிராமத்தின் புறத்தே [இன்னும் கொஞ்ச நாளில் பொதுப்பணித்துறை அங்கே சாலை போடவிருக்கிறது] அந்த வேலியின் எஞ்சிய பகுதிகளை கண்டு பிடிக்கிறார்.
அந்தப் புதர்வேலியை அடையும் அரை மணி நேரத்துக்கு முன்பு வரை ராய் காதுகளுக்கு எதிர்மறை சொற்களே விழுந்து கொண்டிருக்கிறது. அதிலும் ஒன்று, தவிர்க்கவே இயலாத தரவு கொண்டது, பத்தடி உயரமும் அகலமும் கொண்ட அந்தப் புதர்வேலி,அதை உருவாக்கிய மரங்கள் செடி கொடிகள் எல்லாம் அதிகபட்சம் அறுபது ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழக் கூடியது, பின்பு பட்டுப்போகும், அதன் பின் புயல் மழை 1877இல் கைவிடப்பட்ட அந்த வேலியின் எச்சம் எங்கும் எஞ்சி இருக்கும் எனும் வாய்ப்பே கிடையாது எனும் நிலை. முற்றிலும் ஒரு அதிசயம் போலத்தான் அந்தப் புதர்வேலியின் மிச்சம் ராய்க்கு தரிசனம் தருகிறது.
அந்தப் புதருக்கு ராயை அழைத்து செல்லும் கிராமத்து பெரியவர் சொல்கிறார்,’ராத்திரி இங்க தகவல் சொன்னா போதும்,காலைல டெல்லிக்கு போய்டும்’ ஆம் வேலி காவல் பணியில் பல்லாயிரம் பேர் வேலை பார்த்திருக்கிறார்கள். சுங்க எல்லைளில் இறுதிக் காசையும் உறிஞ்சி,செழித்திருக்கிறது பிரிட்டன் கஜானா. சும்மா இணையத்தில் சால்ட் இன்பெக்டர் என தட்டிப் பார்த்தேன். அ.மாதவையா இதே காலச் சூழலில் ஆந்திராவில் சால்ட் இன்ஸ்பெக்டராக பணியாற்றி இருக்கிறார். 2018 ஆண்டுக்கான உப்பு ஆய்வாளர் தேர்வுக்கான சிலபஸ் கிடைக்கிறது. உப்பு ஆய்வாளருக்கு மாதம் ஒரு லட்சம் ஊதியம் என்கிறது அரசு செய்தி தகவல்கள் வலைதளம். தமிழக சுகாதாரத் துறை, மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை மத்திய அரசு கொண்டு வந்த அயோடின்கலந்த உப்புக்கான அனுமதி மீது தடை கோரி வழக்கு தொடர்ந்திருக்கிறது என்கிறது இணையம். உப்பில் சேரும் [அயோடின்] ரசாயனம் தைராய்டு போன்ற உபத்திரவங்களுக்கு காரணியாக அமைகிறது என்கிறது வாதத் தரப்பு. வேறு வேறு வடிவில் உப்பு மீதான போராட்டங்களும் அறக் கேள்விகளும் இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
உப்பு வேலி நூல் வெளியீட்டு விழாவில் ராய் மாக்ஸம் அவர்களை கண்டேன். யாரோ சார் ஒரு போட்டோ என குரல் கொடுக்க,ராய் தில்லை நடராஜர் பாணியில் நின்று இந்த போஸ் ஓகேவா என்று புன்னகைத்தார். சுனில் கிருஷ்ணன் ராய் குறித்து ஒரு முறை சொன்னார். காரைக்குடி பங்களா தெருவை சுற்றிப் பார்த்த ராய் ”எல்லாம் பர்மால இருந்து வட்டியா வந்ததுதானே.சரி பாத்து வெச்சுக்கறேன். பர்மா போகும்போது அவங்ககிட்ட சொல்றேன்”. என்றிருக்கிறார். முழு கற்பனையால் கூட உலகின் ஒட்டு மொத்த உப்பை காணாமல் ஆக்கிவிட முடியாது என்று நினைக்கிறேன். ராய் போன்ற ஒருவர் அங்கே எப்போதும் எஞ்சி நிற்பார் .
கடலூர் சீனு
உப்புவேலி, இலக்கிய முன்னோடிகள் -கடிதங்கள்
உப்புவேலி -கேசவமணி
உப்புவேலி பற்றி பாவண்ணன்
உப்புவேலி விழா காணொளி