இனிய ஜெயம்
முக்கால் நூற்றாண்டைத் தொடப்போகும் சுதந்திர இந்தியாவின் விடுதலைத் திருநாளை, அன்றைய இரவை விழித்திருந்து விடுதலை நாளின் நினைவுகளை மீட்டும் வண்ணம் எதையேனும் வாசிப்பது என முடிவு செய்திருந்தேன். குகாவின் இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு நூலை எடுக்கப் போனேன்,வரிசையில் வரிசை தப்பி நின்றிருந்த செல்வேந்திரன் பரிசளித்திருந்த நான் வாசித்திராத நூல் ஒன்று என்னைத் தூக்கு என்னைத் தூக்கு என்று துள்ள, எடுத்தேன்.
சந்தியா பதிப்பகம் வெளியிட்ட, சிவ முருகேசன் மொழிபெயர்த்த [இடரற்ற வாசிப்பை நல்கும் தெள்ளிய மொழிபெயர்ப்பு ]
https://en.wikipedia.org/wiki/Sanjeev_Sanyal
சஞ்சீவ் சன்யால் எழுதிய ஏழு நதிகளின் நாடு நூல்.
என்னுடைய பாணியில் அப்படியே புத்தகத்தை நடுவில் திறந்து,கண்டிருக்கும் பக்கத்தில் இருந்து வாசிக்கத் துவங்கினேன். பிரித்தானியர் திபெத்தை குறிப்பாக லாசா நகரை எவ்வாறு ‘கண்டுபிடித்தார்கள்’ எனும் கதையில் திறந்தது நூல். லாங்டன் துவங்கி எவரெஸ்ட் நிறைவு செய்த இந்திய வரைபடத்தின் உருவாக்கப் பணி,துவங்கப்பட்டது 1800 கும் முன்பாக, ரென்னர் என்பவரால். வங்கத்தின் வினோத நிலப்பரப்பை, புலிகளுடன் போராடி, [நூல் நெடுக வரும் இந்தியப் புலிகள் சிங்கங்களின் கதை தனி] ஒவ்வொரு இடமாக அளந்து அவர்தான் பெங்கால் அட்லஸ் எனும், ஈஸ்ட் இந்தியா கம்பனி செல்வாக்கு செலுத்தும் நிலத்தின் முதல் வரைபடத்தை உருவாக்குகிறார்.
அதன் பின்னர் அறுபது ஆண்டுகள்,கம்பனி ராஜ்ஜியம் கொஞ்சம் கொஞ்சமாக விரிய விரிய, கூடவே நிலமும் அளக்கப்பட்டு,எவரெஸ்ட் சிகரம் வரையிலான முதல் இந்திய வரைபடம் 1862 இல் முழுமை பெறுகிறது. வெளியே தேசங்களின் நாடு பிடிக்கும் ஓட்டம் உச்ச கதியில். இயல்பாக தான் விரியப் போகும் அடுத்த எல்லையாக பிரிட்டன் திபெத்தை ‘குறி’ வைக்கிறது. ஆனால் திபெத்தை எப்படி அணுகுவது. இமய வெளியில் அது எங்கே .அமைந்திருக்கிறது. என்பதை எப்படி அறிவது? 1865 துவங்கி இரண்டு வருடம் ஒரு புனிதப் பயணி போர்வையில், நாங்கிங் என்பவர் பிரிட்டன் உளவாளியாக அங்கே அமைகிறார். யாத்ரீகர் குழு ஒன்றுடன் இணைந்து, நேபாளத்தை கடந்து திபெத் நிலத்தில் நுழைந்து, லாசாவில் பல சிரமங்களை கடந்து தங்குகிறார் நாங்கிங். அன்றைய தலாய் லாமாவை ஒரு பயணி வேடத்தில் சந்திக்கிறார். அங்குள்ள உள்ளூர் வணிகர்களுக்கு கணக்கு எழுதும் வேலையில் அமர்ந்து,தனியே தங்கிக் கொள்ள ஒரு விடுதியும் தேர்வு செய்து கொள்கிறார். கையில் சீதோஷ்ணம் அறிய ஒரு உஷ்ண மானி, நிலம் அறிய ஒரு பாகை மானி, ஒரு திசை மானி.இவற்றை ரகசியமாக வைத்து பராமரிக்கிறார்.
அவர் கையில் வைத்திருக்கும் ஜப மாலையின் நூறு மணிகளை,குறிப்பிட்ட தூரத்துக்கு ஒரு மணி என தவற விட்டு, குறிப்பிட்ட தொலைவில் இருந்து லாசாவின் தூரம் என்ன என்று கணிக்கிறார். இரவுகளில் பதுங்கி பதுங்கி கூரைகளில் அமர்ந்து, நட்சத்திர வரிசை, தீர்க்க ரேகை வரிசை, சூழலின் உஷ்ணக் கணக்கு இவற்றை அடிப்படையாகக் கொண்டு, கடல்மட்டத்தில் இருந்து லாசா என்ன உயரத்தில் அமைந்திருக்கிறது என கணிக்கிறார். [பின்னர் இவை வரைபட வரைவுக்குள் வந்த போது, நாங்கிங் கணிப்புகள் உயரத்திலும் தூரத்திலும் சில அடிகள் மட்டுமே வித்தியாசம் கொண்டிருந்தது]. ரகசிய குறிப்புகளுடன் கிளம்புகிறார். சம காலத்தில் அவர் கண் முன்னால் சீன உளவாளிகள் சிக்கி தலை இழந்துகொண்டிருக்கும் சூழல். யாத்ரீகர் குழு ஒன்றுடன், சாங்க்போ நதிக்கரை ஓரமாகவே 800 கிலோமீட்டர் வரை நடந்து, பின்தங்கி,நழுவி, மானசரோவர் வழியாக இந்தியா வந்து சேர்ந்து,குறிப்புகளை ஒப்படைத்து, இரண்டு வருட சாகச வாழ்வை வெற்றிகரமாக நிறைவு செய்கிறார் நான்கிங்.
அடுத்த ஆவல் துவங்குகிறது, சாங்க்போ நதிதான் இங்கே வந்து கடலில் கலக்கும் பிரம்மபுத்ராவா? எப்படி அறிவது? அடுத்த உளவாளி சிக்கிமை சேர்ந்த கின்தப் திபெத்துக்கு செல்கிறார். அவருக்கு அங்கே நிலவரம் சாதகமாக இல்லை. அடிமையாக சிக்கிக் கொள்கிறார். சில வருட அடிமை வேலை. கோவில் ஒன்றில் தஞ்சம் புகுந்து புத்த பிக்குவாக சில காலம் அந்தக் கோவிலில் தங்குகிறார். அவ்வப்போது ரகசிய வேலை செய்து, குறிப்பிட்ட அளவில் 500 மரக்கட்டைகளை வெட்டி ஓரிடத்தில் பதுக்குகிறார். குறிப்பிட்ட நபர் வழியாக இந்திய அதிகார மையத்துக்கு தான் சிக்கி இருக்கும் நிலையையும், செய்யப் போகும் பணியையும் செய்தியாக அனுப்புகிறார்.
குறிப்பிட்ட நாளில் நாளொன்றுக்கு ஐம்பது கட்டைகள் என பத்து நாளில் ஐநூறு கட்டைகளை, சாங்க்போவின் வெள்ளத்தில் ஒழுகிச் செல்ல விடுகிறார் கின். இது பாரத எல்லைக்குள் வந்து சேர்ந்தால் அப்படி கொண்டு வந்து சேர்க்கும் பிரம்மபுத்ராதான் இந்த சான்க்போ. வேலையை முடித்து தப்பி இந்தியா வருகிறார். இவர் தொலைந்து போனார் எனும் நிலை இங்கே.அவர் அனுப்பிய செய்தி இந்தியா வந்து சேரவில்லை. அவர் செய்த வேலையை இங்கே நின்று ஒருவருமே கவனிக்கவில்லை. எந்தப் பயனையும் விளைவிக்காத சாகச வாழ்வை நிறைவு செய்த கின், [சான்க்போ தான் பிரம்மபுத்ரா என வரைபடம் வந்த பின்னர் அறியப்படுகிறது] எந்த அங்கீகாரமும் அற்று ஒரு தையல்காரராக தனது இறுதி வாழ்நாளை டார்ஜிலிங்கில் கழித்து மறைந்தார்.
தான் நிற்கும் நிலம் முதல், தான் பரவப்போகும் நிலம் வரை, புவியல் அறிவு நோக்கி, போர்சுகல், டச்சு, சீன, பிரித்தானிய தேசங்கள் அந்த அறிவுக்காக தவித்த வரலாறின் பின்புலத்தில் வைத்து அதன் ஒரு பகுதியாக இந்திய வரைபடம் உருவான விதத்தை சொல்கிறது. நூலின் இந்தியாவின் வரைபடத்தை தயாரித்தல் எனும் அத்யாயம். அன்று பொக்கிஷங்களில் தலையாய பொக்கிஷமாக இருந்திருக்கிறது நில வரைபடங்களும், கடல் வழித் தடங்களும் கொண்ட வரைபடங்களும். 1600 களில் இந்தியாவுக்கு வந்த வணிகக்குழு, மொகலாய மன்னருக்கு பரிசாக அளித்த ஐரோப்பிய நிலம் ஒன்றின் அரிய வரைபடம் அவரால் புரட்டிக் கூட பார்க்கபடாமல், கருவூலத்தில் கூட சேர்க்கப்படாமல் திருப்பி அளிக்கப்படுகிறது. அன்றைய இந்தியாவின் ஆளும் வர்க்கத்தின் உலகப் பிரக்ஞயின் எல்லை இது.
நிலத்தை அறியாததன் பொருட்டு அலக்சாண்டர் கொடுத்த விலை, நிலத்தை அறியாததன் பொருட்டு சிவாஜி வசம் சிக்கி சீரழிந்த ஔரங்கசீப் படை, நாடு பிடிக்கும் போட்டியில் இந்த உயிர் விலையை கொடுக்காமலிருக்கும் பொருட்டு பிரித்தானிய அரசாங்கம் பட்ட பிரயத்தனங்களை விவரிக்கும் அத்யாயம். எட்டு அத்யாயங்கள் கொண்ட ஏழு நதிகளின் நாடு நூல் வழியே, உலகின் மிக இளைய மலைத்தொடரான இமயமலை உருவான கண்டத் தட்டு நகர்வுகளின் காலம் துவங்கி, உலகின் மிக மிகப் பழைய மலைத்தொடர்களின் ஒன்றான ஆரவல்லி மலைத்தொடர் மெல்ல மெல்ல கரைந்தழியும் இன்றைய காலம் வரை, பாரத நிலத்தின் சமூக, அரசியல், கலாச்சார, பண்பாட்டை உருவாக்கிய நில அமைப்பின் வரலாறையும், அந்த நில அமைப்பை சிந்து சரஸ்வதி காலம் முதல் சுதந்திர இந்தியாவின் காலம் வரை பாதித்த இந்த பண்பாட்டுப் போக்கை, பரஸ்பரம் ஒன்றை ஒன்று பாதித்து நிகழ்ந்தவற்றின் வளர்ச்சிப் போக்கை, எதிர்மறை நிலைகளை ஒரு விரிந்த பகைப்புலத்தில் வைத்துப் புரிந்து கொள்ள முயலுகிறார் நூலாசிரியர் சஞ்சீவ் சன்யால்.
கண்டத்தட்டுகளின் நகர்வு வழியே உருவான புராதன இந்தியாவில், குஜாராத் அருகே நிகழ்ந்த டினோசர்களின் ஜுராசிக் காலம், அதற்கும் முன்பான பூச்சிகளின் காலம் இவைகளின் விளக்கத்தில் துவங்குகிறது நூல். ஐம்பது வகைமைக்கு மேலே வரும் எழுநூறு பூச்சி இனங்களின் தொல்படிமங்கள் கிடைத்திருக்கின்றன. இவற்றில் கணிசமானவைக்கு பூர்வீகம் பாரதம் கிடையாது. கண்டங்கள் தாண்டி இருக்கின்றன இவர்களின் மூதாதையர் வரிசை. டினோசர்களின் மூதாதை வரிசையும் அவ்வாறே. கண்ட நகர்வுகளின் யுகம்,பனி யுகம், டோபோ எரிமலை வெடித்த யுகம், பின் அடுத்த கண்ட நகர்வுகள் யுகம் பின் அடுத்த பனி யுகம் இவற்றின் வழியே உருவான இந்திய நிலப்பரப்பின் மனிதர்களுக்கு முன்பான உயிர்கள், இத்தகு வரலாறு காரணமாகவே எங்கோ தாய் நிலத்தைக் கொண்ட இங்கே கலவைக் கலாச்சாரம் கொண்ட சமூக வாழ்க்கைக்குள்தான் படிமங்களாகக் கிடைகின்றன.
பின்பு பிம்பெத்கா வெளியை உருவாக்கிய மானுட சமுதாயம் துவங்கி, சிந்து பண்பாட்டுக்கு முன்பான இந்தியர் வரை, ஆதிக்குடியின் மூலத்தை மரபியல் தரவுகள் வழியே ஆராய்கிறார் சன்யால். ஆரிய படையெடுப்பு, மொழிக்குடும்பம், இனக்கோட்பாடு, குண அடிப்படை கொண்ட வர்ணம், சாதி, இவை எதற்கும் அறிவியல் துணை இல்லை என்பதை அண்மைய ஆய்வுகள் வரை துணைக் கொண்டு படிப் படியாக விளக்கி, மரபணு ஓடை வழியே, இந்த நிலத்துக்கான ‘தூய‘ ஆதிக்குடி, இந்த குறிப்பிட்ட காலத்தில் இந்த நிலத்தில் வந்தேறிய குடி என ஏதுமில்லை, இங்கே மனிதர்கள் இருந்தார்கள்,இங்கே பண்பாடு துவங்கியது என்ற வகையில்தான் வேதப்பண்பாடும் சிந்து சரஸ்வதி நாகரீகமும் துவங்கியது என்கிறது நூல்.
சிந்து சரஸ்வதி நாகரீகம் எவ்வாறு முளைத்து, வணிகத்தொடர்புகள் வழியே செழித்து, சரஸ்வதியின் மறைவால் கைவிடப்பட்டு, நகர்ந்து கங்கைக் கரையில் வந்தணைந்தது எனும் சித்திரத்தை அளிக்கும் நூல், சிந்து கலாச்சாரத்துக்கு குதிரை தெரியாது, ஆரிய படையெடுப்பால் அழிந்தது போன்ற நிலைபெற்றுவிட்ட கருதுகோள்களை மைகேல் டானினோ ஆய்வுகள் குறிப்பிட்டு மறுத்துரைக்கிறது நூல். பாரத நிலத்தின் முதல் நகரமயமாக்கலை அது நிகழ்ந்த முறைமையை, அந்த நகரங்களை செழிக்க வைத்த வெளிநாட்டு வணிகம் உள்ளிட்ட கூறுகள் வழியே விளக்கும் சன்யால், டோலவீரா போன்ற நகரங்கள், எவ்வாறு அந்த வணிக உற்பத்திக்கான ஆட்களை தேசமெங்குமிருந்து கவர்ந்திழுத்து புறச் சேரிகளை உருவாக்கியது, அவற்றையும் உள்ளிழுத்து எவ்வாறு வளர்ந்தது, அங்கே பயன்படுத்திய மாட்டு வண்டியும் அது சார்ந்த உழைப்பும் இன்றும் இந்திய நிலத்தில் தொடரும் சித்திரம் என பல பல சித்திரங்களை சுவையாக முன்வைக்கிறார் சன்யால்.
அடுத்த இதிகாச காலத்தில், நிலம் மாறுகையில் எத்தனை வகையாக இவ்விரு இதிகாசங்கள் பரவினாலும், இவ்விரு இதிகாசங்களிலும் காட்டும் இந்திய நிலம் சார்ந்த தகவல்கள் துல்லியமாக இருப்பதை சுட்டிக்காட்டுகிறார் சன்யால். முதலில் வரும் ராமாயணம் வடக்கு தெற்காக இலங்கை வரை விரிய, அடுத்து வரும் மகாபாரதம் கிழக்கு மேற்காக விரியும் சித்திரத்தை குறிப்பிடுகிறார். அங்கிருந்து சாலை வழி,நதி வழி வணிகப் பாதைகள் தங்கள் ஆளுகைக்குள் வைத்திருந்த தேசங்கள் [மகதம் போல] மகாபாரத காலத்துக்குப் பின்பு உயர்ந்து வந்து இரண்டாம் நகரமயமாக்கலின் துவக்கத்தை நிகழ்த்துவதை சுட்டுகிறார். அடுத்து அவர் முன்வைக்கும் அவதானம்தான் கிளாசிக். புத்தர் தனது முதல் உபதேசத்தை நிகழ்த்தும் சாரநாத் நகரம் வளர்ந்த விதம் குறித்து விவரிக்கிறார். அன்றைய நாளில் ராமாயணமும் மகாபாரதமும் கண்டது போன்ற வணிக வழித்தடத்தில், மொத்த இந்தியாவுக்கும் முக்கியமான நகரமாக, சிலுவைக் குறியின் மையம் போல, இந்தியாவின் குறுக்கும் நெடுக்கும் இணைத்த வணிகப் பாதையின் மையத்தில் நிற்கிறது புத்தர் உபதேசம் நிகழ்த்திய சாரநாத். இன்றும் இந்தியாவை குறுக்கும் நெடுக்கும் இணைக்கும் என் எச் இரண்டு மற்றும் ஏழு இந்த இரண்டு நாற்கரச் சாலைகளின் சந்திப்பு புள்ளி, சாரநாத்துக்கு மிக அருகில்தான் செல்கிறது என்கிறார் சன்யால்.
பின்பு, மௌரியர்களும், குப்தர்களும் உருவாக்கிய கடல் வணிகம், அதன் வழியே செழித்த நகரங்கள் குறித்து தமிழின் சிலப்பதிகாரம் வரை இணைத்து விவரிக்கிறது நூல். நூலாசிரியர் கணக்கின்படி கிபி இரண்டில் உலக வணிகப் பொருட்களில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் இருந்து சென்றிருக்கிறது, உலக வணிக பரிவர்த்தனை தங்கத்தில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் இருந்திருக்கிறது. மௌரியர் காலத்தில் இங்கே வந்த மெகஸ்தனிஸ் துவங்கி, ஆங்கிலேயர் காலம் வரை இங்கே வந்த பயணிகளின் [மிகை தவிர்த்த] குறிப்புகள் வழியே பல தரவுகளை முன்வைக்கிறார் சன்யால்.
இணையாகவே பல நுண்ணிய குறிப்புகளும் நூல் நெடுக தொடருகிறது. உதாரணமாக தாமிரலிப்தி சிலிக்கா எரி இவற்றில் செழித்த கயிறு வணிகம், அவை வெளிநாட்டு வர்த்தகத்தில் முக்கிய சரக்காக அமைந்த விதம், போலவே, ஓடிசாவில் குறிப்பிட்ட வகையில், ஆணிகள் அறையாமல், கயிறுகள் கொண்டு தைத்து [பாறையில் முட்ட நேர்ந்தால் மொத்தமாக உடையாமல் இருக்க ஒரு டெக்னிக்] கப்பல் கட்டும் விதம் குறித்து நூல் சொல்கிறது. இப்படி ஒவ்வொரு நகரமாய சூழலிலும் செழித்த தனித்துவமான தொழில்நுட்பங்கள் பலவற்றை சுவாரஸ்யமாக சொல்லிச் செல்கிறது நூல்.
பக்தியார் கில்ஜி படையெடுப்பில் நாளந்தா வீழ, அதே சூழலில் அயல் நிலத்தில் முதல் பல்கலைக் கழகம் துவங்கப்படுகிறது. அறிவின் அச்சு எதிர்திசைக்கு நகர்கிறது. தொடர் படையெடுப்பால் வட தேசங்கள் கலகலக்கும் சூழலில், இங்கே சோழ தேசத்தில் அடுத்த நகர்மயமாதல் நடந்து கொண்டிருக்கிறது. பாபர் துவங்கி டில்லி எனும் நகரம் எத்தனை முறை, எத்தனை வடிவங்களும் விரிவாக்கமும் கொள்கிறது எனும் சித்திரம் வியப்பூட்டும் ஒன்று.
ஆங்கிலேயர் காலத்தில் கல்கத்தா மும்பை போன்ற நகரங்கள் வளர்ந்த சூழலை சொல்லியபடி செல்லும் நூல், இந்தியப் பிரிவினையின் போது நகர்மயச் சூழல் என்னென்ன பாதிப்பை அடைந்தது [டில்லி முழுக்க அகதிகளால் நிரம்பி வழிகிறது] இன்றைய இந்தியாவின் அரசியல் வரைபடத்தை அடைய, சுதந்திரத்துக்குப் பிறகும் கால் நூற்றாண்டு இந்தியா போராடிய விதத்தைத் தொடர்ந்து, இன்று டில்லிக்குப் புறநகராக வளர்ந்துகொண்டிருக்கும் குருகான் நகரின் சித்திரத்தில் வந்து நிறைகிறது நூல்.
மெல்ல விவசாயம் கைவிடப்படுகிறது. நிலங்கள் சொத்துக்கள் அதன் சட்டங்கள் மீதான சிக்கல் தலைமுறை விவசாயம் என்பது இல்லாமல் போகிறது. நிலம் விற்ற காசு கையில். நகரத்துக்கு உழைக்கும் வர்க்கங்களுக்கு நகரத்துக்குள் இடம் இல்லை. இங்கே இந்த புறநகரில் வயல் விற்ற காசில், உரிய அனுமதிகள் தேவை இல்லை எனும் வசதியில், அந்த வர்கத்துக்காக புற சேரிகள் உருவாகின்றன. இப்போது அந்த விவசாயிகள் இங்கே முதலாளி. பின்பு அரசியல். வணிக வளாகங்கள் வருகை. பள்ளியின் வருகை. இங்கே தங்கிய உழைக்கும் வர்கத்தின் அடுத்த தலைமுறை பள்ளிகளை நோக்கி ஆங்கில அறிவு நோக்கி நகர, புறநகர் நகரத்துடன் இனைய, குருகான் ஆறு கிலோமீட்டர் எனும் சாலைக்கல் இப்போது நகரின் மையத்தில். ஒரு நகரம் எவ்வாறு இன்று வளர்கிறது என்பதன் வெவேறு இழைகளில் ஒரே ஒரு இழையை சுட்டி நிறைகிறது நூல். உபரியாக அந்த நகரின் வளர்ச்சிக்காக ஆரவல்லி மலைத்தொடரின் நீட்சி கொஞ்சம் கொஞ்சமாக அழிவதை சொல்கிறது நூல்.
சிந்து நாகரீகம் துவங்கி இந்த நிலச் சூழல்,அது உருவாக்கிய பண்பாடு, அந்தப் பண்பாட்டால் மாற்றி அமைக்கப்படும் நிலத்தின் சூழல் எனும் இந்த இழையின் ஓட்டத்தில் பல்வேறு பண்பாட்டு அசைவுகளை தொடுத்துச் செல்கிறது நூல். உதாரணமாக புலம்பெயர்ந்தது குஜராத்தில் அடைக்கலம் கண்ட பார்சிக்கள் பல வணிகங்கள் வழியே முக்கியமான வணிக சக்தியாக உயர்ந்து ,ஒரு சூழலில் மும்பை நகரம் எனும் மையத்துக்கே அஸ்திவாரமாக அமையும் சித்திரம். ஆங்கிலோ இந்தியர் கலாச்சாரம் உருவாகி, ரயில் பாதைகளை மையம் கொண்டு அவை அமைந்து, ஆஸ்திரேலியா கனடா நிலத்துக்கு சென்று கரைந்து மறையும் சித்திரம். இந்தியாவை தாய் நிலமாக கொண்ட [மரபணு ரீதியாகவும்] ஜிப்சிக்கள் நாடோடிகளாக மாறி உலகம் சுற்றியது, லண்டனில் எழுபத்தி ஒன்றில் அவர்களுக்கு என ஒரு மாநாடு நடந்தது, நாடற்ற அவர்களுக்கு அங்கே அவர்கள் தங்களுக்கு என ஒரு கொடி உருவாக்கிக் கொண்டது, அந்தக் கொடியின் மையத்தில் அசோக சக்கரம் அமைந்தது போன்ற சித்திரங்கள்.
நூலில் எனக்கு பிடித்த மையங்கள் பல. குறிப்பாக இந்த நூல் உருவாக்கிக்காட்டும், இங்கே இயங்கிக் கொண்டிருந்த வேறு விதமான வரலாற்று பிரக்ஞை குறித்த புள்ளி. சரஸ்வதி அந்தர்வாகினியாக ஓடும் அலகாபாத்தில்தான் [காந்தி அஸ்தி கரைத்த பிரயாகை] இந்தியாவை கம்பனி வசமிருந்தது பிரிடன் எடுத்துக் கொண்ட பிறகான, பிரிடன் மகாராணியின் முதல் அறிக்கை வாசிக்கப்பட்டு,அதன் நினைவாக அங்கே ஒரு தூண் நடப்படுகிறது. அங்கே ஏற்கனவே அசோகரின் செய்தி தூண் உண்டு, அதன் அருகே குப்தரின் தூண், இப்படி ஜகாங்கீர் வரை ஒரு வரலாற்று செய்தி வரிசை அங்கே உண்டு.
கேரள மாப்ளா முஸ்லிம் குறித்த சித்திரம் அடுத்தது. நபிகள் காலத்திலேயே இங்கே கேரளத்தில் மசூதி உருவாகி தனித்தன்மை கொண்ட கலாச்சாரம் உருவாகி, இன்று அரபு தேசம் சென்று அந்தக் கலாச்சாரக் கண்ணிகள் இன்றும் கேரளத்தின் பொருளாதார மையத்தை தீர்மானிக்கும் சக்தியாக விளங்குவதை காட்டும் குறிப்புகள்.
வாசிக்க வாசிக்க எத்தனை வினோத திருகு கண்ணிகள் வழியாக உருவாகி வந்திருக்கிறது நமது கலாச்சாரம் எனும் வியப்பு கூடிக்கொண்டே போகிறது. ஏழாம் நூற்றாண்டில் இராக் நாட்டில் கர்பலா எனும் இடத்தில் நடக்கும் சண்டையில், ஹுசைன் எனும் மன்னருக்காக இங்கிருக்கும் பஞ்சாபை சேர்ந்த மொஹியல் பிராமணர்கள் களமிறங்குகிறார்கள். அவனுக்காக உயிர் துறக்கிறார்கள். இந்த ஹுசைனி பிராமணர்கள் ஒவ்வொரு ஆண்டும் மொகரம் பொழுதில் ஷியா பிரிவினர் உடன் இணைந்து துக்கம் அனுஷ்டிக்கிறார்கள். இது நூல் தரும் இது போன்ற பல்வேறு குறிப்புகளில் ஒன்று.
அதே போல பதிமூன்றாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்தியாவுக்கு அகதிகளாக வருகிறார்கள் பர்மா சீன எல்லையில் வாழும் தாய் இனத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் இந்துவாக மாறி அசாமில் ஒரு அரசாட்சியை உருவாக்கும் நிலைக்கு உயர்கிறார்கள்.அஹோம்களின் அரசு என்று பெயர் பெற்ற அந்த அரசு,1671 இல் மொகலாயர்களுடன் உச்சக்கட்ட போரில் இறங்குகிறது. பெஷ்வாக்களுக்கோ சிவாஜிக்கோ கூட சாத்தியப்படாத முழு வெற்றியை அஹோம்கள் அடைகிறார்கள். பிரம்மபுத்ரா நதிக்குள் வைத்து மொத்த மொகலாயப் படையையும் சின்னாபின்னம் செய்து மூழ்கடிக்கிரார்கள்.
எழுத எழுத இந்த நூலின் மொத்த விஷயங்களையும் எழுதிவிட வேண்டும் எனும் உத்வேகம் பொங்குகிறது. சிந்திக்க பல வாசல்களை திறந்து வைக்கும் நூல். உதாரணமாக இந்த ஹுசைனி பிராமணர்களை அடிப்படையாகக் கொண்டு சிவாஜியின் பக்கத்தை நோக்கினால் சிவாஜி படையில் முதன்மை கப்பல் படை தளபதி பெயர் தௌலத் கான். குதிரைப் படை தளபதி பெயர் இப்ராகிம் கான். அவரது படையில் நான்கில் ஒருவர் முஸ்லிம். வங்காள வணிகர்களின் பொருளுதவி கொண்டே, கிளைவ் பிளாசி போரில் நவாபை வெல்கிறான் என்கிறது இந்த நூலின் குறிப்பு. வரலாற்றை திரும்பிப் பார்த்தால் சிவாஜியை அவ்ரங்கசீப் சார்பாக எதிர்த்தவர் ஜெய் சிங்.
இந்த நூலின் ஒவ்வொரு குறிப்பும் சிந்தனையின் வெவ்வேறு பாதைகளை திறப்பன. உதாரணமாக வீரத்துக்குப் புகழ்பெற்ற, சத்ரிய ராஜ்புத் இன் ஒரு பகுதி இன்று சிறுபான்மை அந்தஸ்து கேட்டு போராடிக் கொண்டிருக்கிறது என்கிறது இந்த நூலின் குறிப்பு. அப்படியே இதை ராமகிருஷ்ண மடத்துக்கும் போட்டுப் பார்க்கலாம் ஒரு காலத்தில் இந்திய மறுமலர்ச்சியின் தூண்களில் ஒன்றாக இருந்த மிஷன், இன்று அவர்களும் சிறுபான்மை அந்தஸ்து கேட்டு வழக்காடிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி பலவற்றை இந்த நூல் சார்ந்து சொல்லிக்கொண்டே போகலாம். இங்கே நிறுத்திக் கொள்கிறேன். என்னை விட விரிவாக நூலின் உள்ளடக்கத்தை பாவண்ணன் முன்வைத்திருக்கிறார் .சுட்டி கீழே.
சுதந்திர தினம் எனக்கு இனிதே புலர்ந்தது. உங்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.
கடலூர் சீனு
***
புதிய வெளிச்சம் – ஏழு நதிகளின் நாடு