தாயார்பாதம்-கடிதங்கள்

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு

நான் எழுதக்கூடிய முதல் கடிதம். பலதடவை எழுத நினைத்தாலும் ஏனோ தயக்கம். உபயோகமாக ஏதாவது எழுதாமல் போகிறதோ என்று நினைப்பேன். இப்போது தாயார்பாதம் கதை வாசித்தேன். இந்தக் கதைதான் அறம் கதைக்குப்பின் என்னை மிகவும் கவர்ந்த கதை. நிறைய இடங்களில் கதையை வாசித்துக் கண்கலங்கினேன். ஐந்து கதைகளில் இந்த இரண்டுகதைகளிலே மட்டும்தான் பெண்ணுடைய மனசு இருக்கிறது. இரண்டிலுமே பெண்ணுடைய சீற்றம்தான் இருக்கிறது. அறம் கதையிலே அந்தச்சீற்றத்தை அவள் வெளிப்படுத்துகிறாள். அதாவது கண்ணகி மாதிரி. அதைக் கதையிலேயே சொல்கிறீர்கள். இந்தக் கதையிலே மௌனமாகச் சகித்துக்கொள்கிறாள். அதாவது சீதா மாதிரி. சீதா தேவிதான் அம்பாளின் தோற்றங்களிலே பவித்திரமானது என்று சொல்வார்கள். சீதா தேவி பூமியின் புத்திரி. பொறுமையானவள். அவளால் கருணையை மட்டும்தான் பிறருக்குக் கொடுக்க முடியும். பூமிக்கு மனிதர்கள் செய்யக்கூடிய கொடுமைகளுக்கு அளவே இல்லை. இருந்தாலும் பூமி நம்மைத் தாங்குகிறது. அன்னமும் அளிக்கிறது. என்னென்னவோ நினைப்புகள். நிறைய விஷயங்களை வெளியே சொல்லமுடியாது. ஆனால் பெண்ணின் பொறுமை இல்லாவிட்டால் மக்கள் இல்லை என்று மட்டும் சொல்ல தோன்றுகிறது

அன்புடன்

சீதாலட்சுமி மகாதேவன்

அன்புள்ள சீதாலட்சுமி

கிட்டத்தட்டக் கதையின் மையத்துக்கு வந்தது நீங்கள்தான். நான் சீதையைத்தான் உத்தேசித்தேன். காளிதாசன் சீதையை தன் பொறுமையையே தவமாக கொண்டவள் என்று சொல்கிறான். அதுவே என் தொடக்கம்

ஜெ

——————–

அன்பின் ஜெ.எம்.,
’இது சிறுகதை வாசிப்பு சம்பந்தமான ஒரு பயிற்சிக்களமாக ஆகிவிட்டது’ என்று தாங்கள் குறிப்பிட்டிருப்பதால் முதல் வாசிப்பில் நான் சுருக்கமாக வெளியிட்டிருந்த கருத்தை இன்னும் சற்று மேலெடுத்துச் செல்ல விரும்புகிறேன்.
சங்கீதப் பரம்பரையில் வந்து தானும் பாடக் கற்றவள் பாட்டி. ’இந்த குரலுக்கும் இந்த வித்யைக்கும் இவ எப்டி இருந்தா என்னய்யா? சாட்சாத் சரஸ்வதியைன்னா நான் என் வீட்டுக்கு கூட்டிண்டு போகப்போறேன்’ என்று சொல்லிப் புகுந்த வீட்டுக்குக் கூட்டி வரப்பட்டவள். ஆனால் புகுந்த வீடும் கணவனும் அதற்குச் சாதகமற்ற மனநிலையில் இல்லாததை ’பாட்டி பாடி கேட்டதே இல்லைன்னு எங்கப்பா சொல்வார். ஏன்னு தெரியலை. எங்க தாத்தாவுக்கு ஒரு கொணம் உண்டு. அவர் மத்தவா பாடி கேக்கமாட்டார். அவரே பாடிக்குவர்’ உணர்ந்து கொண்ட பிறகுஅந்தக் கால மதிப்பீட்டின்படி அதற்குள் அடங்கிப் போய்த் தன் எதிர்ப்பை,கலகத்தை வெளிடாதவளாக அவள் தன் வாழ்வைத் தொடர்ந்து நடத்துகிறாள்.
இடையறாத வீட்டு வேலைகளைப் பேய்த்தனமாகத் இழுத்துப் போட்டுக்கொண்டபடி அதில் மட்டுமே அவள் தன்னை ஆழ்த்திக் கொண்டதும் கூட அந்த ஆழ்மன ஏக்கத்திற்கு ஒரு வடிகால் தரும் நோக்கத்தின்பாற் பட்டதாக இருக்க வாய்ப்ப்பிருக்கிறது. மருமகள் வந்த பிறகும் கூட வேலையைப்பங்கு போட்டுக்கொண்டு தான் ஓய்வெடுப்போம் என்ற எண்ணம் சற்றும் எழாதவளாக அவள் இருப்பதற்கு அவளது இத்தகைய மன அமைப்பே காரணமாக இருக்கும் எனத் தோன்றுகிறது.
//வெறிபுடிச்சாப்ல வீட்டுவேலை செய்றதுதான் அவளோட ஒலகம் வேலைதவிர ஒண்ணுமே தெரியாது’ ’எங்கம்மா வந்ததும் அதே சிக்கல்தான். வீட்டுலே ஒரு வேலை மிச்சமிருக்காது. மாட்டுப்பொண்ணு வேலைபாத்தாத்தானே நல்லா இருக்கும். ஆனா பாட்டிக்கு செஞ்சு தீக்கறதுக்கே வேலை பத்தாது.அம்மா பாட்டி பின்னாடியே அலையறதுதான் மிச்சம்’ மாமனார் நோய் வாய்ப்பட்ட நிலையிலும் ’பாட்டியும் கைக்குழந்தைய பாத்துக்கிடற மாதிரி கவனிச்சுகிட்டா’ என்று ராமன் சொல்லுவதைப் போலத் தன்னுடைய பணியில் எந்தக்குறையும் சொல்ல இடமளிக்காதபடி அதில்முனைகிறாள் அவள்.
ஆனால் அதிலும் குறை கண்டு கணவர்தன் மீது பெட்பேனை வீசி எறியும்போது அது அவள் முதுகை முறிக்கும் கடைசித் துரும்பாகி விடுகிறது. The last straw !
தன் குரல்வளை எழும்பவே முடியாமல் போய்விட்ட ஆழ்மனச் சோகத்தோடு,குற்றம் காணவே முடியாதபடி தான் செய்து வந்த செக்கு மாட்டு வேலைகளின் மீதும் குற்றம்கண்டுபிடிக்கப்பட்டு அதன் கொடூரமான வெளிப்பாடு -மல அபிஷேகமாக- உக்கிரமாகத் தன்மீது நிகழ்ந்ததும் அவளது பொறுமையின் எல்லை தகர்ந்து போய் அவளது பாதம் படிப்படியாக மேலெழ ஆரம்பிக்கிறது.
வேலையில் மட்டுமே ஆழ்ந்தபடி…தன் எதிர்ப்புக் குரலை உள்ளடங்கியபடி பதிவு செய்து வந்த அவள் ,இப்போது அதன் அடுத்த கட்டத்திற்குத் தன்னையறியாமல் நகரத்தொடங்குகிறாள்..
அதன் வெளிப்பாடே அவளது கீழ்க்காணும் நடத்தைகள். ‘வெடிகாலை நாலுநாலரைக்கே எந்திரிச்சு குளிக்க ஆரம்பிப்பா. மூணுமணிநேரமாகும் குளிச்சு துவைச்சு வர்ரதுக்கு. வந்ததும் வீட்ட கூட்டி பெருக்கி துடைக்கிறது. ஒரு இண்டு இடுக்கு விடமாட்டா. சன்னல்கம்பி கதவுமூலை எல்லாம் துடைச்சுகிட்டே இருப்பா. நடுவிலே மறுபடியும் குளியல். மறுபடியும் சுத்தப்படுத்தறது. ஒருநாளைக்கு எட்டுவாட்டியாவது குளிக்கிறது. ராத்திரி வீட்டுக்குள்ள சுத்தி வர்ரான்னு காமிரா உள்ளிலேயே படுக்கைய போட்டு அடைச்சிடறது. உள்ளயும் சுத்தம் பண்ற சத்தம் கேட்டுண்டே இருக்கும்’/
..
இறுதியில் மன நோயின் ஆக்கிரமிப்புக்கு அவள் முழுமையாகவே ஆட்பட்ட பிறகு , தாத்தா,வெளிப்படையாகக் காட்டிக் கொள்ள முடியாத ஒரு குற்ற உணர்வின் பிடிக்கு ஆளாவதோடு.. அவளைப் பார்த்துப் பயப்படவும் ஆரம்பிக்கிறார். சித்தப் பிரமை பிடித்த நிலைக்கு அவள் ஆளானதும் ‘சரிடா, எல்லாரும் மண்ணுல ரெண்டுகாலையும் வச்சுண்டிருக்கா. அவ ஒரு கால தூக்கிட்டா’ என்று முதலில் பிரகடனம் செய்பவரே அவர்தான்.
அவள் பாதம் தூக்கி விட்ட அந்த பயம் -வெளியே காட்டிக் கொள்ளா விட்டாலும் கூட- அவரைச் சற்று ஆட்டி வைக்கத்தான் செய்கிறது.. ‘தாத்தா அப்டி ஒரு ஜென்மம் வீட்டுக்குள்ள இருக்கிறதே தெரியாதேங்கிற மாதிரி இருப்பர்… பாட்டியும் ரேழி தாண்டறதில்லை. அவங்க ரெண்டுபேரும் கடைசியா எப்ப சந்திச்சுகிட்டாங்கன்னே தெரியலை’ ஆகிய பகுதிகள் அவரது அச்சத்தையும் குற்ற உணர்வையுமே வெளிக்காட்டுகின்றன.
அவள் மரணமடைந்த தருணத்திலும் கூட இவ்வாறான எதிர்வினையே அவரிடமிருந்து கிடைக்கிறது. ‘தாத்தாகிட்ட விஷயத்தைச் சொன்னப்ப தம்புராவ கீழ வச்சார். புரியாத மாதிரி கொஞ்சநேரம் பாத்தார். ‘தாசரதே’ன்னு முனகிண்டு மறுபடியும் தம்பூராவ எடுத்துண்டார். வாசலிலெ கீத்துப்பந்தல் போட்டு ஊரெல்லாம் கூடி அழுது ஒரே ரகளை. அந்த சத்தம் எதுக்கும் சம்பந்தமில்லாதவர் மாதரி அவர் தம்பூராவ மீட்டி கண்ணமூடி அவருக்குள்ள இருக்கிற சங்கீதத்த கேட்டுண்டு லயிச்சுபோய் ஒககந்திருந்தர். எடுக்கிறச்ச மூத்த அத்தை வந்து ‘அப்பா வந்து ஒரு பார்வை பாத்துடுங்கோ’ன்னார். ஒண்ணும் பேசாம தம்பூராவ வச்சுட்டு எந்திரிச்சு வந்தர். வாசலை தாண்டி கூடத்துக்கு வந்து கீழே கிடக்கிறவளை ஒரு வாட்டி பாத்துட்டு அப்டியே திரும்பி போய்ட்டர். நேரா போய் தம்பூராவ எடுத்துண்டு ஒக்காந்துட்டர். அப்றம் காவேரிக்கரைக்கு கெளம்பறச்சதான் அவர எழுப்பினாங்க’
அவரது இந்தச்செயலுக்குக் குற்ற உணர்வின் சிறு குமைச்சலைத் தவிர வேறு காரணம் எதுவும் சொல்ல முடியவில்லை… தன் குரல்வளையை எந்த வகையிலும் எழுப்பவே முடியாமல் போய்விட்ட ஆழ்மனச் சோகத்தை இறுதி வரைக்கும் எதைக் கொண்டும் அவளால் போக்கிக் கொள்ளவே முடியவில்லை என்பதன் குறியீடாகவே அழுக்கு நீக்கும் அவளது மனநோயை என்னால் கொள்ள முடிகிறது.
எனது வாசிப்பில் நான் கண்டைவது இதைத்தான்..
தங்கள் எழுத்துத் தளத்தை எந்த அளவுக்கு ஒட்டியதாக அல்லது விலகியதாக என் வாசிப்பு இருந்திருக்கிறது என்பதைத் தாங்கள் சொல்ல முடிந்தால் மகிழ்வேன்.- பலவகை வாசிப்புக்கான வாயில்களைத் திறந்து விடும் உங்கள் சிறுகதை ஆக்கங்களுக்கு என் கைகூப்பு.. அன்புடன், எம்.ஏ.சுசீலா,
புது தில்லி
www.masusila.com

**************

அன்புள்ள ஜெ

தாயார்பாதம் கதை வாசித்தேன். அறம் கதையும் இந்தக்கதையும் மட்டும் தனியே இருந்தன. மற்றகதைகளும் பிடித்தன. ஆனால் இந்தக்கதைகள்தான் என் மனசிலே ஆழமான சலனத்தை உண்டுபண்ணின. என்ன காரணம் என்று தெரியவில்லை. நான் பெண் என்பதனால் மட்டும் இல்லை. சிறு வயதிலே வெறிபிடித்ததுபோல வேலைசெய்யக்கூடிய பெண்களை நிறைய பார்த்திருக்கிறேன். என் அம்மாகூட நடுராத்திரியில் எழுந்து பருப்பில் கல்பார்க்க ஆரம்பித்துவிடுவாள். சமையலறையிலே கைப்பிடித்துணியை எல்லாம் துவைத்து அழகாக மடித்து வைப்பாள். நிறைய முகங்கள் என் மனசிலே வந்தன. எல்லாருமே வர்க்கஹாலிக்ஸ் என்று சொல்லலாம். வேலைசெய்து பழக்கப்பட்டுவிட்டது என்றுதான் நான் நினைத்திருந்தேன். இந்தக்கதையை வாசித்தபோது எதற்காகவோ அவர்கள் அப்படி இருக்கிறார்கள் என்ற எண்ணம் வந்தது. அவர்கள் அப்படி ஒதுங்கிப்போனார்களா என்று நினைக்க முடிகிறது. ஒரு ஐம்பது அறுபது வயதான பழையகால பெண்களிடம் ஒரு நிசப்பதம் வந்துவிடும். எதற்குமே பேச மாட்டார்கள். மணிக்கணக்கிலே எதயோ யோசித்துக்கொண்டு எதையாவது செய்துகொண்டிருப்பார்கள். அவர்கள் மனசிலே என்ன ஓடுகிறது என்று நினைத்திருக்கிறேன். வாழ்க்கையை பலவிதமாக பங்குபோட்டு பலருக்காக கொடுத்துவிட்டார்கள் போல இருக்கிறது என்று இப்போது நினைத்துக்கொள்கிறேன். எனக்கே நாற்பத்தியாறு வயதாகிறது. அடிக்கடி இந்த நினைப்பு வந்துகொண்டே இருக்கிறது எனக்கும். வேலை நிறைய செய்து மனசை ஆற்றிக்கொள்வதுபோல நானெல்லாம் எப்போதுமே பாட்டுக்கேட்டுக்கொண்டு இருக்கிறேன் என்று நினைத்துக்கொள்கிறேன். நிறைய எழுத ஆசை. இன்னொரு கடிதத்திலே எழுதுகிறேன்

அமுதா

அன்புள்ள அமுதா

உங்கள் கடிதத்தின் சில பகுதிகளை வெளியிடுகிறேன்

உங்கள் கடிதம் என் கதையை எனக்கே இன்னும் கொஞ்சம் புரியவைத்தது என்றால் மிகையல்ல. நானும் பெண்களை அகல நின்று கவனிப்பவன், ஆண்.

நன்றி

ஜெ

இந்த வரிசையில் அறத்திற்கு பிறகு என் மனதை வெகுவாக உலுக்கிய சிறுகதை ‘தாயார் பாதம்’. தேனீயின் மீது ஏறி அமர்ந்து கொண்டதைப் போன்றே ரீங்கரித்துக் கொண்டே இருக்கிறது உள்ளில். சில இடங்களில் இயல்பாக உடல் சிலிர்த்துக் கொண்டது. என்ன சொல்ல.. மிகச் சிறந்த அனுபவம். ஜெமோவிற்கு மனமார்ந்த நன்றி.

காயத்ரி சித்தார்த்

முந்தைய கட்டுரைதாயார் பாதம், வாசிப்பும் பயிற்சியும்-கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅறம்,சோற்றுக்கணக்கு-கடிதங்கள்