அறம் -கடிதம்

அறம் ஜெய்யமோகன்

அறம் வாங்க

அறம் விக்கி

வணக்கம் ஜெ ,

 

அறம் தொகுப்பை தற்போதுதான் வாசித்தேன். ஒவ்வொன்றும் ஒருவித அனுபவம். ஒருவாரகாலம் கொஞ்சம் கொஞ்சமாக வாசித்தேன். ஒவ்வொரு மனிதர்களுடைய அகக்கொந்தளிப்புகளையும், பரவசத்தையும் வார்த்தைகளால் சொல்லியிருக்கும் விதம் அருமை. நான் இக்கதைகளை படித்தது இப்போதுதான். ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இதுகுறித்த எதிர்மறை விமர்சனத்தை சாரு நிவேதிதாவிடமிருந்து கேட்க நேர்ந்தது. ‘நூறு நாற்காலிகள்’ கதையை அவர் ஓர் அதீதப் புனைவு, உண்மைக்கு மாறானது என்று விமர்சித்திருந்தார். இந்தக் கதை ஆர்.எஸ்.எஸ் அஜெண்டா என்று யாரோ கூறியதாகவும் சொன்னார்.

 

ஆனால் இப்போது படித்துப் பார்த்தல் பெரும் வியப்பே ஏற்படுகிறது. அந்தக்கதை காட்டும் சித்திரம் மிக முக்கியமானது. அந்தக் கலெக்டரின் அம்மா பெரும் புதிராகவே எனக்குத் தெரிந்தாள். பொதுவாக கீழ் நிலையில் இருப்பவர்கள் பொருளாதாரத்தில், வசதி வாய்ப்புகளில் மேலே வரவேண்டும் என்பது ஒரு பொதுவான வேட்கை. இங்கு அப்படியே தலைகீழ். உடை உடுத்தாதே, நாற்காலியில் அமராதே என்று ஒவ்வொருமுறையும்  அவள் கதறும்போது எதோ என்னைத் துளைத்தது போல இருந்தது. இது எம்மாதிரியான உளநிலை ? பெரும் அச்சம், வெறுப்பு, ஒவ்வாமை என்று என்னவோபோல் அவள் காட்சியளித்தாள். அப்படி வாழ்ந்தால்  தம்றான்மார் கொன்றுவிடுவார்கள் என்கிற அச்சம் எத்தனை நூற்றாண்டு அச்சம் ? தலைமுறை தலைமுறையாய் அந்த அச்சம் ஊறி ஊறி மனம்முழுக்க வேர்விட்டுப் பரவி இறுகிக்கிடக்கிறது. ஒரே தலைமுறையில் நிலை மாறுவதை அவளால் கற்பனைகூட செய்யமுடியவில்லை.

 

//அவ உனக்க ரெத்தத்த உறிஞ்சி குடிக்கா பாத்துக்கோ…// என்று மகனை அச்சத்துடன் எச்சரிப்பதும், அவர் தனிமையில் , //எஜமான்களின் நாற்காலியில் அமர்ந்திருக்கிறேனா? அதற்காக என்னை கொன்றுகொண்டிருக்கிறார்களா? இவள் என் குருதியை உறிஞ்சிக்கொண்டிருக்கிறாளா? என்னுடைய மாயைகளுக்கு வெளியே நின்று, மனவசியங்களுக்கு அகப்படாத மிருகம்போல, அம்மா உண்மையை உணர்கிறாளா ? //… என்று எண்ணிக்கொண்டிருக்கும் வரிகள் கதையில் ஹைகிளாஸ்.
பொதுவாக நான் நரிக்குறவ மக்களைப் பற்றி செவிவழி கேள்விப்பட்ட ஒன்று, அவர்கள் பிறரைப்போல ஆக விரும்பமாட்டார்கள். அவர்கள் உலகம் வேறு. அதில்தான் வாழவிரும்புவார்கள்.

ஓலைச்சிலுவை-  சாமர்வெல்லின் தியாக, சேவை மனப்பான்மை பற்றி பேசுகிறது. இருப்பினும் மதமாற்றம் என்ற ஒன்றைப்பற்றி குறிப்பிடுவதற்கு எனக்கு சிறு தயக்கம் இருந்தது. காரணம் மதமாற்றம் பற்றி பேசினாலே இந்துத்துவ முத்திரை விழுந்து விடுகிறது. மிஷனரிகளின் சேவை போற்றத்தக்கதே.  பசிக்கு உணவு கொடுப்பது, நோய்க்கு மருந்து, ஆறுதல், கல்வி போன்றவைகளில் அவர்களின் சேவை மிகப்பெரியது. ஆனால் இவை எல்லாவற்றையும் மதமாற்றம் செய்யாமல் அவர்களால் செய்ய முடியாதா ? ஒருவேளை அதுதான் அவர்களுக்கு ஆத்மார்த்த உந்துசக்தியாக இருக்கிறதா ?

 

//ஆமலே, சோறுக்காகத்தான். கர்த்தர் எனக்கு சோறும் கறியும்தான்லே. அதை எங்க போயிச் சொல்லவும் எனக்கு வெக்கம் இல்ல//  இவ்வரியைப் படிக்கும்போது ஒருகணம் மதங்கள், தத்துவங்கள் தோற்பதை உணர்ந்தேன். மிக எளிய உண்மை. ஒரு ஆங்கிலப்படத்தில் வாடிகன் நகர காவல் அதிகாரி ஒருவர், ”என்னோட வாடிகன் நோயாளிகளுக்கும், சாகப்போறவங்களுக்கும் ஆறுதல் கொடுக்கும், என்னோட வாடிகன் பசியோட வர்றவுங்களுக்கு உணவு கொடுக்கும்” என்று பேசுவார்.

ஒருவகையில் யோசித்தால் இன்று கிறிஸ்தவம் உலகம் முழுக்கப் பரவியதற்கு இந்த எளிமைத்தனம் ஒரு முக்கியமான காரணமாகத் தெரிகிறது. பெரிய சித்தாந்தமெல்லாம் தேவையில்லை. ஒரு சராசரி மனிதனுக்கு வயிற்றுக்கு உணவும், மனதுக்கு ஆறுதலும் கிடைத்துவிட்டால் அதைவிட அவனுக்கு என்ன வேண்டும் ? அதையே அவன் கொண்டாடுவான்.

கதையின் இறுதியில் குழந்தையைப் பறிகொடுத்துக் கதறும் தாயிடம் சாமெர்வெல் குருவாயூரப்பனின் படத்தைக் கொடுத்து ”இனி இதாக்கும் உன் குழந்தை…’’ என்ற வரிகளை படிக்கும்போது ஒரு சிறு கற்பனை. இது அவரை சிறுமை செய்வதுபோல இருந்தாலும் ஒருகணம் வந்து சென்றது.  குருவாயூரப்பனின் படத்திற்கு பதில் தன்னிடமிருந்து ஒரு இயேசுவின் படத்தை எடுத்து அதை அவளிடம் கொடுத்து ”இனி இதுதான் உன் குழந்தை…” என்று சொல்லியிருந்தால்… அவர் அப்படிச் செய்யவில்லையே !

மயில்கழுத்து- முற்றிலும் மாறுபட்ட வாசிப்பனுபவம். அழகில் ஊறி ஊறி கரைந்துபோகும் ராமனின் அகஉணர்ச்சிகளை வார்த்தைகளால் நீங்கள் வெளிப்படுத்தியிருக்கும் விதம் அருமை. கடைசி நான்கு பக்கங்களை மீண்டு மீண்டும் வாசிக்கவேண்டுமென்று தோன்றுகிறது.

//…வாங்கடீ ஒலகத்திலே உள்ள அத்தன பேரும் வாங்கடீ. உங்க வெளையாட்டயும் வெஷத்தையும் முழுக்க எம்மேலே கொட்டுங்கடீன்னு எந்திரிச்சு நின்னு கத்தணும்போல இருக்கு. என்னை குளுந்து போக விடாதீங்க. என்னை பற்றி எரிய விடுங்க …// ….. ஐயோ, என்ன மனுஷன்டா இவன் ! !  பெண் ஆணை ஈர்க்கவும், அச்சுறுத்தவும் செய்கிறாள். ஆணால் பெண்ணை வெல்ல முடியவில்லை. அதனால்தானோ அவளைக் கட்டுப்படுத்தி அடக்கி வைக்க நினைக்கிறான் ?

கோட்டி- ராமையா போன்றோரை இச்சமூகம் கோமாளிகளாகத்தான் ஆக்கும். இந்தக் கோமாளியாக்குதல் இன்னும் அதிகரித்துக்கொண்டுதான் செல்கிறது. சமூகத்தால் முற்றாக நிராகரிக்கப்பட்டு, தூற்றப்பட்டு வாழ்ந்த ஒரு மனிதனைப்பற்றி படிக்கும் போது, இடையிடையே அவருடைய நகைச்சுவை சேட்டைகளை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. கடைசியில், முறையான மருத்துவம் கிடைக்காமல் நோயுற்று, ஆட்டோவில் சென்று கொண்டிருக்கும்போது இறந்தார் என்று படிக்கும் போது என்னவோபோல இருந்தது.

நன்றி,

விவேக்ராஜ்.

அறம் -ராம்குமார்

அறம் -கடிதங்கள்

அறம் – உணர்வுகள்

அறம் – வாசிப்பின் படிகளில்…

அறம் -கடிதங்கள்

முந்தைய கட்டுரையுவன் சந்திரசேகரின் ‘கானல்நதி’- கலைச்செல்வி
அடுத்த கட்டுரைநீரும் நெறியும்