நெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம்

நெடுஞ்சாலை நாவல்

கண்மணி குணசேகரன்

ராஜேஸ்வரி பஸ்  எங்க ஊருக்கு இரண்டு பஸ் வருது ஒரு பஸ் எங்க ஊருரோட  கடைசியா திரும்பி கள்ளக்குறிச்சி போகும், இன்னும் ஒன்னு விழுப்புரம் வரை போகும். இதுவரைக்கும் இந்த பஸ் முதலாளிகள் எல்லாம் எப்படி இதை நடத்துறாங்க நினைச்சு பார்த்தது கூட இல்லை இதில் ஒரு இடத்தில் ராஜேஸ்வரி பஸ்ஸின் முதலாளி செட்டியார் வருகிறார் டிக்கெட்  கலெக்ஷன் குறைவாக இருக்கிறது என்று செக்கரை வாங்கு வாங்கு என்று வாங்குகிறார்.

” நீ பாட்டுக்கு பின்னாடி சீட்ல ஒட்காந்துகிட்டு வரவ போரவ சூத்துல மூஞ்சிய தேச்சிட்டு  இருந்தா எப்படியா கலெக்ஷன் வரும்”

இதை பார்த்ததும் அங்கு வேலை கேட்டுச் சென்ற தமிழரசனுக்கு மட்டுமல்ல எனக்கும்கூட அதிர்ச்சியாகவே இருந்தது ஒரு முதலாளியின் உண்மை முகத்தை நேருக்கு நேர் நின்று பார்க்கும் போது நம்மையே கதிகலங்க வைக்கிறது.

 

” தமிழரசன் செட்டியாரு கண்டக்டர் வேலை கேட்டு”

 

” க்கு‌ம் செட்டியார் மொதல மொழநீட்டு நீட்டிடு செட்டியார்ன மட்டும் இப்பவே மொதலாலியாக்கி உட்டுரன் சரியா?, செட்டி கிட்ட கொஞ்சம் அசந்த அப்பறம் நா உங்கிட்ட சீட்டு கிழிச்சி கொடுக்க நிக்கனும் ஆளயே முழுங்கிடொனுவ செட்டிங்க ”

 

கண்மணி குணசேகரனின் யதார்த்த எழுத்து அற்புதமான கலைப் படைப்பாக கைகூடி வந்திருக்கிறது. கடலூரில் போக்குவரத்து அலுவலக ஊழியரான குணசேகரன் அவரது பணி அனுபவங்கள் தொகுத்து எழுதி இருக்கிறார். ஆறு வருடமாக இந்த கதைக்கருவை எழுதலாம் என்று திட்டம் வைத்திருந்தும் எங்கே இதை எழுதி தன்னை வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பி விடுவார்களோ என்ற பயத்தில் எழுதாமல் இருந்ததாக அவரே குறிப்பிடுகிறார் பிறகு ஒருவழியாக எழுதிவிட்டார். இத்தனை ஆண்டுகள் ஆகியும் எதுவுமே நடக்கவில்லை ஏனென்றால் அவரது படைப்புகளை யாருமே வாசிக்கவே இல்லை என்பதே காரணம், சரி நானாக புத்தகத்தை கொடுத்து வாசிக்கச் சொல்லியும் பார்த்துவிட்டேன் யாரும் வாசிக்கவேயில்லை  என்று கண்மணி சொல்கிறார்.

image description

தமிழரசன் அய்யனார் ஏழைமுத்து ஆகிய மூவரும் தற்காலிக பணி ஆட்களாக பெரியார் டிப்போ வேலைக்குச் செல்கிறார்கள் அவர்கள் சந்திக்கும் வேளை சவால்களை அவர்களின் குடும்ப பின்புலத்தையும் சொல்லிச் செல்கிறது நாவல். எங்கேயோ ஒரு அரசு பேருந்து டயர் வெடித்து நிற்கிறதை நாம எல்லோரும் பார்த்திருப்போம் ஆனால் அதற்குப் பின்னாடி ஒரு சீஎல் க்கு பத்து நாள் வேலை போகும் என்பது நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. புது டயர் வாங்க வேண்டிய காச எவனோ ஒரு அரசியல்வாதி எடுத்துட்டு போயி வப்பாட்டி ஊட்ல படுத்து கெடந்துட்டு வருவான், ஆனா அதுக்கான தண்டனையை அத்து கூலிக்கு வேலை செய்ர  கடைநிலை ஊழியன் தலையில் விழுகிறது. ஒரு அரசுத்துறை எவ்வளவு ஊழல் மலிந்த தாக இருக்கிறது என்பதை நேரடியாக இதில் பேசப் படவில்லை ஆனால் கதையில் பின்புலத்தில் கதையை இயக்குவது இந்த ஊழல் தான் என்பதை வாசகன் அறியலாம். நகர அரசு பேருந்து என்றால் நம் நினைவுக்கு வருவது ஓட்டை உடைசல் மான ஒரு பேருந்தும் சிடுசிடுப்பு முகத்துடன் உள்ள நடத்துனரும் தான், அந்த முகத்திற்கு பின்னணியில் இருக்கும் காயங்களையும் துயர் மிகுந்த பணிச்சுமைகளை எடுத்துச் சொல்கிறது இப்படைப்பு எதார்த்தமான கதாபாத்திரத்திமும் பேச்சு பொழியும் தொய்வு இல்லாமல் வாசிக்க முடிகிறது. அய்யனார் சந்திரா சந்தித்துக்கொள்ளும் அத்தியாயம், ஏழைமுத்து மனைவி பார்வதியை கம்பளி ஆடு குட்டி போட்டதை வைத்து குழந்தையின்மையை குத்தி காட்டி சண்டை இழுக்கும் அத்தியாயமும் இந்நாவலின் உச்சமான இடம். பேருந்தும் நெடுஞ்சாலையும் பலருக்கு பல நினைவுகளை கொடுக்கிறது காதல் பிரிவு, காயங்கள், மரணங்கள், சண்டை, அடிதடி என்று ஆனால் அதை இயக்கும் நபர்களின் பணிச்சுமையை நான் நேரில் கண்டிருக்கிறேன் சார் சார் கொஞ்சம் பாத்து போடுங்க மூனு நாள எரங்காம ஒட்ரன் சார் என்று சீசன் நேரங்களில் தன் பிஎம் இடம் கெஞ்சும் ஓட்டுநர்களை நான் பார்த்து இருக்கிறேன். அப்படி ராபகலாக கண்விழித்து ஓட்டும் ஓட்டுநர்களுக்கு நடத்துநர்களும் இந்தப் படைப்பை கண்மணி குணசேகரன் அவர்கள் சமர்ப்பித்திருக்கிறார். இதை வாசித்த பிறகு பேருந்து ஓட்டுநர் நடத்துநர் மீது நீங்கள் கொண்டிருக்கும் பார்வை மாறி இருக்கும். கண்மணியின் முக்கிய படைப்பு அவரின் ‘அஞ்சலை’ கேரளாவில் ஒரு பல்கலைக்கழகம் இதை பாடமாக வைத்து இருக்கிறது அப்படி பட்ட மகத்தான கலைஞன் எங்க மள்ளாடை கொள்ளியில் இருந்து வந்தவன் என்பதே எங்கள் நடு நாட்டிற்கு பெருமை…

 

இந்தப் புத்தகத்தை கொடுத்து விட்டு கண்மணி குணசேகரனின் “அஞ்சலை” நாவல் இருக்கிறதா என்று நூலகரிடம் கேட்டேன் கண்… மணி… குணசேகரனா…… அவரை இப்பதான் கேள்விபடரேன் தம்பி என்றார்….

 

ஏழுமலை

 

அஞ்சலை – கண்மணி குணசேகரன்

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-53
அடுத்த கட்டுரைசிங்கப்பூர் இலக்கியம் – ஒரு பெயரிலி