கிருஷ்ணப்பருந்து- கடிதங்கள்

கிருஷ்ணப்பருந்து

பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய ஜெ,

வாரத்தில் ஏதேனும் ஒரு நாளாவது மயிலாடுதுறை பிரபுவுடன் அலைபேசாமலிருப்பது அரிதாகிக் கொண்டுவருகிறது. தளத்தில் வந்திருந்த கிருஷ்ணப்பருந்து கடிதத்தை படித்துவிட்டு அவரிடம் பேசிக்கொண்டிருந்த போதுஅந்நாவல் மீதான ஆர்வத்தை மேலும் அதிகப்படுத்தினார். புதுவை வெண்முரசு கூடுகைக்கு பேச வந்த நாளில்புத்தகத்தை கடலூர் சீனுவிடம் திருப்பியளிப்பதாய் இருந்தவரிடமிருந்து நான் வாங்கிச்சென்றேன். ஒரே நீட்டிப்பில்வாசித்து முடித்ததை என்னாலேயே நம்ப இயலவில்லை. பொதுவாகவே ஐதீகங்களின் மீதான ஐயப்பாடுஎப்போதுமே என்னுள்ளுண்டு. அவற்றையே ஆதாரமாகக் கொண்டு இதுவரை நான் முற்றிலும் கண்டும் கேட்டும்அறிந்திராத மாந்திரீகம் எனும் அதிமானுட தளத்தைச் சார்ந்தது என்றாலும் நாவலின் சம்பவச் சித்தரிப்புகள்சுவாரஸ்யம் குன்றாமல் வாசிப்பைக் கொண்டு சென்றது.

கதைக்களத்திற்கான காலம் பற்றி யோசித்தபோது நிச்சயம் அது துல்லியமாக யூகிக்கமுடியாததுதான் என்றே பட்டது. பன்னூறாண்டுகளுக்கு முன்னம் மருமக்கள் வழி மான்மியம் நிலவிய ஒரு காலகட்டம், மக்களின் அன்றாடவாழ்க்கை முறைகளோடு மந்திரவாதம் பின்னிப்பிணைந்த ஒரு காலகட்டம், ஜாதிகளை விட ஆசாரங்களுக்குமிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்த காலகட்டம் போன்ற அலகுகளைக் கொண்டே காலகணிப்புமுறைஅமைந்துள்ளது. தவிர இவை அனைத்தின் முடிவுக்காலத்தைச் சுட்டுவதாகவே நாவல் நிறைவு கொள்கிறது.

மனோசக்தியை பலப்படுத்தும் மந்திரவாதக் கலையின் ஆணிவேராக கருதப்படும் ப்ரஹ்மச்சர்யத்தின்படிநிலைகளான குரு வந்தனம், குருவிற்கு ஏற்புடையதையே செய்தல், குருவின் நோக்கம் உணர்தல் மற்றும்குருவிற்கான இறுதி காணிக்கையளிக்காமல் இல்லறத்தை கைக்கொள்ளாதிருத்தல் ஆகியவற்றைமீறியதற்காகவே புத்தூர் குடும்பத்த்தின் மகாமாந்திரீகனான குமாரன்தம்பியின் வீழ்ச்சி நிகழ்கிறது. மேலும் குடும்பத்தின் குலதெய்வமான கிருஷ்ணப்பருந்தை மறந்ததால் வந்த விளைவு என்றும் கொள்ளலாம். இன்றையவழக்கமே நாளைய பரம்பரை பழக்கம் என்ற தனது கார்யஸ்தரின் ஆலோசனையைக் கருத்தில் கொண்டேகுமாரன்தம்பி தனது குடும்பத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் அனைத்து மாந்திரீக மீறல்களையும் நிகழ்த்துகிறான்.

இது பகுத்தறிவிற்கு ஒவ்வாத புதினம் என்று புறந்தள்ளுதலை விட பழங்காலத்தவர்களின் மாந்திரீகத்தின் மீதானநம்பிக்கைகளையும் நடவடிக்கைகளையும் புரிந்துகொள்ள வகை செய்யும் படைப்பு என்று கொண்டால்புதியதோர் திகைப்பான வாசிப்பனுபவம் உறுதி. பயன்படுத்தப்படும் விதத்தை பொறுத்து திறவுகோலாகஅமையத்தக்க, எல்லாக் காலங்களிலும் எங்கும் நிறை பரப்பிரம்மம் எனும் கருதத்தக்க மறைமொழிகளானமந்திரங்கள் மீது மதிப்பும் புரிதலும் மேம்படும்.

எனவே நாவலை வாசித்து முடித்த மனதோடு நானும் என்னை பீடித்த சகல விஷங்களும் விலகும் பொருட்டு அந்தபக்ஷிராஜனை சிந்தையில் நிறுத்தி ஆராதிக்கிறேன்.

க்ஷிப ஓம் ஸ்வாஹ

இந்நாவலின் திரைவடிவத்தையும் பார்த்தேன். ஒரு நாவலை வாசிக்கும்போது கூடிவரும் யதார்த்தத்தன்மை அதைதிரைப்படமாய் காணும் போது குலைந்துவிடுவதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன் என்று தான் சொல்லவேண்டும்.

மிக்க அன்புடன்

மணிமாறன்.

***

அன்புள்ள ஜெ

கிருஷ்ணப்பருந்து மாந்த்ரீகநாவலை நானும் படித்தேன். அதை ஒரு த்ரில்லராக வாசிக்கலாம். ஆனால் அதற்கும் அப்பால் செல்லும் குறியீட்டுத்தளம் அதற்கு உண்டு.

ஓர் அராபியக் கதை உண்டு. பாலைவனத்தில் ஒரு கொடிய தெய்வம் உண்டு. அது பாலையில் வழிதவறி சாகக்கிடக்கும் பயணியின் முன் தோன்றும். அவன் தன் உடலில் ஏதேனும் ஒரு உறுப்பை அறுத்துக்கொடுத்தால் அதைக்கொண்டு அறுசுவை உணவை சமைத்து அளிப்பதாகச் சொல்லும். அவன் வெட்டிக்கொடுப்பான். அது விருந்து சமைத்து அளிக்கும். அவன் அதில் மயங்கி தன் உடலைவெட்டி வெட்டி கொடுத்து அங்கேயே பலியாவான்.]

அதீதமான ஆற்றல்கள் பலவும் இதேபோல அதற்குச் சமானமான எதையாவது இழந்தபின்னர்தான் கிடைக்கின்றன. ஒரு சாதனையாளரைப் பார்த்தால்கூட அதற்குச் சமானமாக அவர் எதையாவது இழந்திருப்பார் என்பதைக் காணலாம். எப்போதாவது அவர் இழந்தவற்றைப்பற்றி சபலம் கொள்ள ஆரம்பித்தால் சாதனையை இழக்க ஆரம்பிப்பார். நான் இந்நாவலை வாசிக்கையில் அண்ணாச்சி ராஜகோபாலைத்தான் நினைத்துக்கொண்டேன்.

நுணுக்கமான தகவல்கள் கொண்ட சுவாரசியமான நாவல் இது. அதன் வழியாக நாம் நிறைய சிந்தனைகளைச் சென்றடையவும் முடிகிறது

சாந்தகுமார்

முந்தைய கட்டுரைஆயிரமாண்டு சைக்கிள் -கடிதம்
அடுத்த கட்டுரைகவிஞனின் ஒருநாள்