அன்புள்ள ஜெயமோகன் சார்,
இங்கே நூலகத்தில் திரு அசோகமித்திரன் அவர்களின் சிறுகதை தொகுப்பை எடுத்து கை போன போக்கில் பிரித்து `காப்பி` என்ற கதையை வாசித்தேன். பார்க்க போனால் மிக எளிதான கதை. பதினான்கு வயதான மகனை வயிற்றுவலிக்கு ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறார்கள். தாய் கூட இருக்கிறாள். மகன் மயக்கத்திலேயே இருக்கிறான். அவள் அவனை குறித்து கவலையாக இருக்கிறாள். ஆசிரியரின் படைப்புலகில் வரும் கீழ் நடுத்தர வர்க்கத்து குடும்பம். மகனுக்கு குணமாக வேண்டும் என தாய் கவலையில் இருக்க அவன் சட்டென்று இரவில் இறக்கிறான். இவ்வளவு தான் கதை.
கதையில் ஒரு இழையாக மகனின் நோயும், அவன் நிலையும் வருகிறது. அது வாழ்க்கையின் inevitability ஆகவோ, ஊழ் என்றோ அவள் முன் வந்து நிற்கிறது. ஊடு பாவாக அவனது நிலையை தாய் எதிர்கொள்ளும் விதம் வருகிறது. கண் முன்னே உள்ள நிதர்சனத்தை தாயின் பேதை மனதால் அள்ள முடியவில்லை. மகன் ஒரு வாய் காப்பி குடித்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புகிறாள். ஓயாமல் இறைவனிடம் பிரார்த்திக்கிறாள். ஒரு வருட காலத்திற்கு செய்ய வேண்டிய நேர்ச்சையை நேர்ந்திருக்கிறாள். இங்கே கதையில் மையப்படிமமாக காப்பி வருகிறது. அது எதை குறிக்கிறது? காப்பி ஒரு placebo, வெறும் நம்பிக்கை மருந்து. அது குறிப்பது அவளுடைய பிராத்தனையைத் தான்.
மகனுக்கு தாள முடியாத வலி; அது தெரியாமலிருக்க மயக்க மருந்து கொடுத்திருக்கிறார்கள். இவளுக்கும் தாங்க முடியாத கவலை, ஆனால் அவளும் ஒரு மயக்கித்திலுருக்கிறாள்: ஒரு வாய் காப்பி கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடுமென. அவளுடைய பிரார்த்தனைகளுக்கு ஒரு பதில் கிடைத்துவிடுமென. ஆனால் தார்ச் சாலை இயந்திரத்தின் அடியில் மாட்டிய எறும்பென அவள் பிரார்த்தனைகளை ஊழ் நசுக்கிவிடுகிறது. அவள் ஒரு பேதை என் நாம் நினைக்கிறோம். தர்க்க ரீதியாக பார்த்தால் அவனுக்கு காப்பி எப்படியும் உதவாது, அதை எப்படி நம்புகிறாள் என்று. ஆனால் பத்து நாட்களாக வைத்து மருத்துவம் பார்த்த மருத்துவர்களாலும் அவனை காப்பாற்ற முடியவில்லை. உண்மையில் அவர்களும் அவர்களுக்கான காப்பியைத் தான் நம்பியிருக்கிறார்களா? அவர்களும் ஒரு வகையில் பேதைகள் தானோ?
மருத்துவர்களும், விசாலமும் இரு விதமாக இக்கட்டை எதிர்கொள்கிறார்கள், ஆனால் விதி அவர்கள் இருவருக்கும் எட்டாமல் தான் இருக்கிறது. உங்களது இந்த கவிதை வரி நினைவுக்கு வந்தது.
இரு பறவைகள்
இரண்டிலுமிருந்து வானம்
சமதூரத்தில் இருக்கிறது.
கதையில் தாய் பெயர் விசாலம், உலகத்திற்கே அன்னமளித்தவள், ஆனால் மகனுக்கு ஒரு வாய் காப்பி கொடுக்க முடியாமல் போய்விடுகிறது. மகன் சந்தானம். ஆம், மகன் பெயரே மகன் தான்.
சிற்சில பக்கங்கள் வரும் ஒரு கதையில், பெரிதாக திருப்பங்கள் இல்லாத, எங்கும் பெரிதாக நகராத ஒரு கதையில் ஆசிரியர், மனிதனுக்கும் ஊழுக்குமான ஓயாத போராட்டத்தின் ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றத்தை காண்பித்து விடுகிறார். இந்தக் கதை 1980 ல் வெளி வந்திருக்கிறது. இந்த கதையை புரிந்து கொள்வதற்கான பயிற்சியே உங்களை வாசிப்பதால் தான் வருகிறது. ஆனால் 80-ல் வாசகனை நம்பி இத்தனை layers உள்ள, வெளிப்புறத்தில் மிக எளிதென தோன்றும் கதையை ஆசிரியர் எழுதியுள்ளார்.
அன்புடன்
கிருஷ்ணன் ரவிக்குமார்.
அன்புள்ள ஜெ
அசோகமித்திரனின் ‘நூலகத்திலே’ என்ற சிறுகதையை வாசித்தேன். நாளிதழ் வாசிக்க நூலகம் செல்லும் ஒருவனின் எண்ணங்கள் மட்டும்தான் கதை. எதிரில் ஒருவன் செய்தித்தாளை வாசித்துக்கொண்டிருக்கிறான். அவன் வாசித்து முடித்தபின்னர்தான் இவன் வாசிக்கமுடியும். ஆனால் அவன் வாசித்து முடித்தபாடில்லை. செய்தித்தாள் வாசிப்பதே அன்று ஏதாவது பிழைப்பு சம்பந்தமான செய்திகள் உண்டா என்று அறிவதற்காகத்தான். ஆனால் அதற்கும் வழியில்லை. அப்படியே நீண்டுபோகும் கதை செய்தித்தாள் வழியாகவே சமகால வாழ்க்கையின் துக்கத்தை சொல்லிச்செல்கிறது.
நாளிதழில் குழந்தையின் பீயை அள்ளி வெளியே வீசுகிறார்கள். அதை இன்னொரு குழந்தை பொறுக்கிக்கொண்டுசென்று விற்று பசியாறுகிறது என்ற வரி என்னை நெஞ்சிலடித்ததுபோல உணர வைத்தது. இதுதான் உண்மையான முற்போக்குக் கதை என நினைத்துக்கொண்டேன். அசோகமித்திரனைப்போல இன்றைய வாழ்க்கையின் அவலத்தை எழுதிய முற்போக்கு எழுத்தாளர்கள் எவருமில்லை. ஆனால் அவர்கள் அவரை அங்கீகரித்ததே இல்லை. ஏனென்றால் அவர் அவர்கள் முன்வைத்த அரசியல் அஜெண்டாவை ஏற்றுக்கொண்டவர் கிடையாது. அவர்கள் முற்போக்கு முத்திரைகொடுப்பதெல்லாம் அதன் அடிப்படையில் மட்டும்தானே?
டி.சந்தானம்