விவாதக்கட்டுரைகள்
இன்றைய காந்திகளின் இடம் – ஒரு கேள்வி
வைகுண்டம் அவர்களுக்கு பதில்
திரு பாலா அவர்களின் விரிவான பதிலுக்கு நன்றி.
நுகர்வோர் சமூகம் இல்லாமல் காந்திய பொருளாதாரம் தனித்து தழைப்பது சாத்தியமல்ல என்பது என் கருத்து. தகவல் தொழில்நுட்பம் பெருகிவிட்ட இந்நாளில் தினம் திருவிழா பார்க்கும் குழந்தைக்கு மிட்டாய் வாங்கிக் கொடுக்காமலும் இருக்க முடியாது.
ஆனால், இன்றைய அரசியல்வாதிகள் போல் அல்லாமல், உண்மையான காந்தியர்கள் நடைமுறை சாத்தியத்தோடு தேவையான சமரசம் செய்து கொள்வார்கள் என்று வேறொரு கேள்விக்கு பதிலளிக்கையில் திரு ஜெயமோகன் சொன்னதை அறுதி கருத்தாக எடுத்துக்கொள்கிறேன்.
இருந்தும், பொது நிதி (பப்ளிக் பைனான்ஸ்) பற்றிய ஐயம் இன்னும் தொடர்கிறது. ஓய்வூதியம், அனைவருக்கும் உயர் படிப்பு வரை இலவசக்கல்வி, இலவச மருத்துவம் போன்றவை தொழில் மயமான சமூகத்தில் தோன்றின. Rights based/ Entitlements based governance பெரும் வரி விதிக்கும் அரசு கொண்ட சமூகத்திலேயே சாத்தியம். காந்தியம் அத்தகைய அரசுக்கு எதிரானது அல்லவா?
பசுமை சமுதாயம் வேண்டுவோரிடமும் எனக்கு இதே கேள்விதான். அந்த சமூகத்தை நோக்கி பயணம் செய்தால், அரசு உத்திரவாதத்துடன், அரசு செலவில், தனி மனிதனின் அவசிய தேவைகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு முரணாகவே இருக்கும். க்ரீன் பீசுக்கும், பெர்னீ சாண்டர்ஸுக்கும் அடிப்படை முரணா? மேதா பாட்கருக்கும், ழான் ட்ரீஸுக்கும் அடிப்படை முரணா?
பல மாற்றங்கள் வந்து விட்டன. 1950 ல் ஜனத்தொகை 50 கோடி. இப்போது 135 கோடி. 150 கோடிக்கு திட்டம் இட வேண்டும். டிராக்டர் சாணி போடாதே என்று குமரப்பா சொன்னார். சாணி போடும் கால்நடைகள் மீத்தேன் வெளியிட்டு புவி வெப்பமயமாதலுக்கு காரணமாகின்றன என்ற புரிதல் அப்போது இருந்ததா?
நாட்டின் பாதுகாப்பும் புரியவில்லை. சீனாவும், பாகிஸ்தானும் அண்டை நாடுகளாக இருக்கும்போது பாதுகாப்புக்கு செலவிடும் தொகை எவ்வளவு இருக்க வேண்டும், அதற்கான வரி வசூல் எவ்வளவு இருக்க வேண்டும்? ஆடு சாத்வீகமாக இருக்க விரும்பலாம். ஓநாயின் சித்தாந்தம் வேறாக இருக்கிறதே?
காந்திய பொருளாதாரத்தை தற்கால தேவைகளோடு ஒட்டி விளக்கும் எழுத்துக்களை சுட்டினால் நன்றி.
வைகுண்டம்
மதுரை
***
அன்புள்ள ஜெ
இன்றைய காந்திகள் வரிசையை அவை வந்துகொண்டிருக்கையில் நான் வாசிக்கவில்லை. நீளமான கட்டுரைகளாக இருக்கின்றன என நினைத்தேன். சமீபத்தில் ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். பலவகையான கேள்விகள் எழுந்தன. இவர்கள் அனைவருமே காந்தியச் செயல்முறையாளர்கள். காந்தியக் கொள்கையாளர்கள் அல்ல. காந்தியச் செயல்முறையை இன்றைய வாழ்க்கைக்காக பயின்று எடுப்பவர்கள். நான் மேலை மார்க்ஸியத்தை ஓரளவு வாசித்தவன் – என்னுடைய ஆராய்ச்சிக்காக. அவை அனைத்துமே கல்வித்துறை சார்ந்த ஆராய்ச்சிகள். தரவுகளை வெவ்வேறு அறிக்கைகளிலிருந்து எடுத்துக்கொண்டவை. தரவுகள் போல மாயை வேறில்லை என்பதை என்னைப்போன்ற ஆராய்ச்சியாளர்கள் நன்கு அறிவார்கள்.
அத்தகைய ஆராய்ச்சிகள் மேல் எனக்கு பெரிய நம்பிக்கையின்மை உண்டு. அல்துஸர் முதல் அடோர்னோ வரை மேலைமார்க்ஸியத்தின் அத்தனைபேரும் நம்மூர் அத்வைதிகளைப்போல கூர்மையான வாய்ப்பந்தல்காரர்கள் என்பது என் மதிப்பீடு. இதற்கு வந்துச்சேர பதினெட்டு ஆண்டுகள் ஆனது. ஒருகாலத்தில் வெறியோடு வாசித்தவன் என்பதனால் அந்த வாசிப்பு பயனில்லாதது என்பது எனக்கு நினைக்கவே சோர்வு தருவது. இப்போது சம்பந்தமே இல்லாத வேலையைச் செய்கிறேன். ஆய்வின் ஒரு பகுதியாக கணிப்பொறி மென்ப்பொருளை படித்ததனால் வாழமுடிகிறது. இந்தக் காந்தியர்கள் காந்தியக்கொள்கையை மயிர்பிளக்க முயலவில்லை. இன்றையதேவையை எதிர்கொள்ள முடியுமா என்று பார்த்தார்கள், வென்றார்கள். இப்படி ஒரு ஆயிரம் பத்தாயிரம் பேர் பல கோணங்களில் முயல்வதுவழியாகவே காந்தியம் வாழமுடியும். வளரமுடியும்.
இதெல்லாம் சாத்தியம் என இவர்கள் செய்துகாட்டியபின்னர்தான் நாம் அறிகிறோம். முடியுமா என்று விவாதிப்பதும் கொள்கையளவில் முடிவுசெய்தபின் எதிர்காலத்தில் செயலாக ஆக்குவோம் என்பதுமெல்லாம் வெறும் அக்காடமிக் மூளையோட்டலாகவே முடியும். பாலா சிறப்பாகத் தொகுத்து எழுதியிருக்கிறார். ஒரு தேர்ந்த எழுத்தாளரின் நடை தெரிகிறது. அவர் தொடர்ந்து எழுதவேண்டும்
எம்.ராஜகோபால் .
***