முதலை மோடி

காலையில் இருந்தே முதலையைப் பிடித்து வீட்டுக்குக் கொண்டுவந்ததைப் பற்றிய மீம்கள், அசட்டு நகைச்சுவைகள் வந்துகொண்டே இருந்தன. டைனோசரைக் கொண்டுவந்தேன், புலியைக்கொண்டுவந்தேன், பல்லியைக் கொண்டுவந்தேன் என்று ஒரே டெம்ப்ளேட்டில் நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்கள். முதலை என்ற வார்த்தை இருந்தாலாவது மின்னஞ்சல்களை தடுத்துவைக்கலாம். என்ன செய்வது என்று தெரியவில்லை

முதலில் என்ன ஏது என்று விசாரிக்கத் தோன்றவில்லை. பிறகுதான் தெரிந்தது மோடி சின்னவயதில் முதலைக்குஞ்சை வீட்டுக்கு கொண்டுவந்திருக்கிறார் என்று ஒரு பேட்டியில் சொன்னார் என்று. அதைக் கேலி செய்கிறார்கள். இதை நகைச்சுவை என எப்படிச் சொல்கிறார்கள் என்றுதான் புரியவில்லை. ஒரே விஷயத்தை அத்தனைபேரும் மாற்றிமாற்றிச் சொல்லிக்கொண்டிருப்பதுதான் இப்போது நகைச்சுவை என பொதுவாக கருதப்படுகிறதா என்ன?

முகநூல் பொதுவாக இப்படி ஏதாவது ஒன்றைப் பிடித்துக்கொண்டு கேலி செய்துகொண்டே இருக்கிறது. வெவ்வேறு தாழ்வுணர்ச்சிகள், சோர்வுகள் இதற்குப்பின்னால் உள்ளன. ஆனால் எழுத்தாளர்களும் இந்த பொதுப்போக்கில் கலந்துகொண்டு ஆளுக்கு ஒரு துணுக்கு போட்டுவிடும் பரிதாபம்தான் தாங்கமுடியவில்லை. சொந்தமாக ஒரு வேடிக்கையைச் சொல்லக்கூடவா இவர்களால் இயலவில்லை?

மோடி என்ன சொன்னார் என்று தெரியவில்லை. எவராவது எழுதிக்கொடுத்திருக்கலாம். நம் அரசியல் தலைவர்களைப்பற்றி இப்படி இளவயது தொன்மங்கள் ஏராளமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளன. விதிவிலக்காக எவருமே இல்லை. இந்திராகாந்தி முதல் ஜெயலலிதா வரை. நேரு முதல் மு.கருணாநிதி வரை. இதெல்லாம் அரசியலின் ஒரு பகுதி. அந்தப்போக்கை விமர்சனம் செய்வது வேறு. அது இன்னொரு அரசியல். இவர்கள் இந்த கூத்திலேயே வாழ்கிறார்கள் என நினைக்கிறேன். ‘எந்நேரமும் உந்தன் மோடி கிறுக்குதடி நல்ல மொந்தைப் பழையகள்ளைப்போலே’ என்றபடி.

நான் ஆச்சரியப்படுவது ஒருவருக்குக் கூட முதலைபற்றி தெரியவில்லை என்பது. இயற்கையைப் பற்றி நவீன எழுத்தாளர்களுக்கு ஒன்றுமே தெரியாது. அவர்கள் அறிந்த இயற்கை இடுப்புக்குக் கீழே இருக்கும்  உபாதைகள்  மட்டுமே. முதலை என்றதுமே ஹாலிவுட் படங்களில் காட்டப்படும் படகை கவிழ்த்து மனிதனை வாழைப்பழம் போல அலாக்காக விழுங்கும் முதலையை நினைத்துக்கொள்வார்கள்போல.

இந்தியாவில் உள்நிலப்பகுதியிலுள்ள முதலை mugger crocodile எனப்படுகிறது. Gharial என்றும் சொல்லப்படுவதுண்டு .வட இந்தியாவில் இந்த முதலைகள் மூப்படைந்தால் எட்டடி வரை நீளமிருக்கும். ஆனால் இங்கே பொதுவாக ஆறடி நீளம்தான் இருக்கும். வடஇந்திய ஆறுகளில் இவற்றை சாதாரணமாகக் காணலாம். பலசமயம் செத்து மிதப்பதையும் கண்டிருக்கிறேன். சமீபத்தைய கும்பமேளா பயணத்தில் சம்பல் நதியில் ஒரு முதலை செத்து மிதப்பதைக் கண்டோம்.

இந்த முதலை இங்கே மேற்குமலைக் காடுகளிலும் நிறைய உண்டு. ஊர்களுக்கு மிக அருகில், மக்களுடன் கலந்தே இவை வாழ்கின்றன. காட்டுப்பயணத்தில் அடிக்கடிக் கண்டிருக்கிறோம். பொள்ளாச்சியிலிருந்து அக்காமலைக்குச் செல்லும் பயணத்தில் ஈரோடு சிவாவும் சென்னை செந்திலும் சட்டையைக் கழற்றிவிட்டு சாலையில் இருந்து ஒரு ஆற்றில் பாயமுயன்றார்கள். மேலே நின்றிருந்த நாங்கள் நீரில் ஓரு மெல்லிய அலையைக் கண்டு ஆளுக்காள் வெவ்வேறு சுருதியில் கூச்சலிட்டோம். அது அவர்களை நோக்கி மறுகரையிலிருந்து கிளம்பி வந்த முதலை. எட்டடி நீளமிருக்கும். பதறியடித்து இருவரும் மேலே வந்தனர். மலசலம் கழித்திருப்பார்கள் என நினைக்கிறேன். “முதலையை அலாக்கா டேக்கிள் பண்ண எங்களுக்கு கேப்டன் விஜயகாந்த் சொல்லிக்குடுத்திருக்கார்’ என்று செந்தில் இரண்டு நாட்கள் கழிந்து நிலைமை சீரடைந்தபின் சொன்னார்.

குமரிமாவட்டத்தில் இதை சீங்கண்ணி என்போம். இங்குள்ள ஆறுகள் குட்டைகளில் நாற்பதாண்டுகளுக்கு முன் சாதாரணமாக இருந்தது. ஆம், வாழ்க்கையின் ஒரு பகுதி. பாம்புகள் போல.ஆனால் சீங்கண்ணி வட இந்திய முதலைகளுடன் ஒப்புநோக்கச் சின்னதாக இருக்கும். ஐந்தடி நீளம் சராசரியாக. அதை பொறிவைத்துப் பிடிக்கும் சிலர் இருந்தனர். பெரிய மரக்கிளையை இழுத்து வளைத்து அதில் சுருக்கு போட்டு  காக்காயைக் கட்டி நீருக்குள் அமிழ்த்தி வைப்பார்கள். [ தூண்டில் முள்ளில் வெங்காயத்தை வைத்து சரடில் கட்டி பொறிவைத்து காக்காயைப்பிடிப்பது இன்னொரு வித்தை. தூண்டில்முள்ளை விழுங்கி சிக்கிக்கொண்ட காகம் தூண்டிலில் இரையாக ஆகிறது.] காலையில் அந்தரத்தில் முதலை சுருக்கில் தொங்கி நின்றிருக்கும். பலசமயம் வால் நெளிந்துகொண்டிருக்கும் வாயைக் கட்டிப்போட்டு அடிவயிற்றை அல்வாபோல கிழித்தால் உள்ளே முற்றிய மூக்குப்பீ போல கொழுப்பு இருக்கும்.

எழுபதுகளில் இங்கே முதலைத்தோல் நல்ல விலைக்குப் போயிற்று. கோட்டயம் எர்ணாகுளம் பக்கமிருந்து பச்சைத்தவளை வாங்க வருபவர்கள் ’முதலை இருக்கா? பாத்து போட்டுக்கலாம்” என விலை சொல்வார்கள்.[ தவளை பிடிப்பது அன்று  பெரிய தொழில். தவளைக்கால் ஜப்பானுக்கு ஏற்றுமதியாயிற்று என்பார்கள். இரவில் எட்டுகட்டை டார்ச்சுடன் வயல்வெளி, ஓடைகளுக்குச் சென்று தவளைகளின் இடத்தைக் கண்டுபிடித்து நேராக ஒளி பாய்ச்சினால் எம்ஜிஆர் பட ரசிகன் திரையரங்கில் இருப்பது போல கண்பிதுங்கி அமர்ந்திருக்கும். அப்படியே சாக்கைப்போட்டு பிடித்து கூடையில் போடவேண்டியதுதான். உயிரோடு ஜப்பான் சென்றுவிடும். அங்கே அதன் காலைமட்டும் சாப்பிடுவார்கள்.

நுரை கிளப்பியும் சாத்திரம் ஓதியும் தான் இருக்குமிடத்தை அறிவிக்கும் நற்பண்பு பச்சைத்தவளைக்கு உண்டு. நுணலும் தன் வாயால் கெடும்.  பி.பத்மராஜனின் ஒரிடத்தொரு பயல்வான் படத்தில் கதைநாயகன் அசோகனின் தொழில் தவளைபிடிப்பதுதான். நல்ல பச்சைத்தவளை நான்குகிலோ எடை வரை இருக்கும். குட்டிப்பாம்புகளையே பிடித்து விழுங்கும்.

தவளையும் முதலையும் ஒரே இடத்தில் வாழ்பவை. ஒன்றுக்கொன்று உறவும் இருக்கலாம். தவளைப்பிடியர்களின் பரிணாமம் முதலைப்பிடிப்பு.  முதலைக்கறியை சாப்பிடும் சிலர் எங்களூரில் இருந்தனர். பிடிப்பவர்களின் பரிணாமம் அது. முதலைக்கறியை நான் சாப்பிட்டிருக்கிறேன். திரச்சி [தெரண்டி] மீன்போல மென்மையாக அடுக்கடுக்காக இருக்கும். முதலைக்கறியை கமுகுப்பாளையில் கட்டி தொங்கவிட்டு கொஞ்சம் அழுகியபின் சாராய ஊறலில் போடுவார்கள். போதை வருமோ இல்லையோ குமட்டல் உத்தரவாதம்

சொல்லவருவது என்னவென்றால் முதலையின் குஞ்சு பற்றி. கவனிக்கவும், குட்டி அல்ல. முதலை முட்டைதான்போடும். கைதை [தாழையின் ஒருவகை] புதருக்குள் உலந்த சேறு அல்லது மணல் இருந்தால் முதலை முட்டை போட்டிருக்கும் முதலைகள் பொதுவாக ஆற்றுநீரிலிருந்து தள்ளி பச்சைக்கோட்டை போல அமைந்திருக்கும் புதருக்குள்தான் முட்டை போடும். மிகச்செறிந்த புதருக்குள்ளும் போடாது. கொஞ்சம் வெயில்வெப்பம் தேவை. ஒன்று இரண்டு அடி ஆழத்தில்  குழியெடுத்து முட்டைகளை போட்டு மூடிவிட்டு போய்விடும், முதலைமுட்டைகள் புதைந்த கதுப்புக்குமேல் சின்னக் குழிகள் இருக்கும். நுரைக்குமிழி உடைந்த துளைகள் போல. இப்போது நினைத்தால் பகீர் என்கிறது. அந்த முட்டைகளைத் தோண்டி எடுத்து சாராயத்துக்கு ‘வெஞ்சனமாக’ சுட்டோ பொரித்தோ தின்பவர்கள் இருந்தனர். கண்ணப்பன், குமாரசாமி, ஞானப்பன். அவர்கள் இன்றிருக்க வாய்ப்பில்லை.

முதலைக் குஞ்சு மிகப்பரிதாபமான ஒரு ஜீவன்.முதலைமுட்டை நூறுகிராம் அளவுதான் இருக்கும். ஒரு குழியில் பத்துப்பதினைந்து முட்டைகள் இருக்கும். கோழிமுட்டையை விட பெரியவை. உள்ளிருந்து வரும் முதலைக்குஞ்சு உள்ளங்கைக்குள் அடங்கும். சின்ன ஓணானா என்றே சந்தேகம் வரும். தோல் செதில் மாதிரி இருக்காது. மென்மையாக பொத்தென்று இருக்கும். உடல் ஒளி ஊடுருவுவதுபோல வெளிறி இருக்கும். ஆங்காங்கே ஒட்டிக்கொண்டு கூழாங்கல் கண்களுடன் எனக்கென்ன என்று அசையாமலிருக்கும். அன்னையுடன்  ஆற்றைச் சென்றடைந்தபின்னரும் ’என்னத்தை நீந்தி என்னத்தை  புடிச்சு….” என்ற பாவனையில் கரையோரம் மட்கிய குச்சி மாதிரி உட்கார்ந்திருக்கும். மிதிபட்டால்தான் தெரியும். தூக்கி அப்பால் போட்டால் நீந்தி இன்னொரு இடத்தில்போய் பிரமித்து அமர்ந்திருக்கும். ஆற்றங்கரையில் மாடுமேய்க்கும் பையன்கள் எடுத்து உள்ளங்கைக்குள் வைப்பார்கள். உள்ளங்கையிலோ கமுகுப்பாளையிலோ பொத்தி வைத்துக்கொண்டால் முட்டைக்குள் இருப்பதாக நினைத்து பம்மி அமர்ந்துகொள்ளும்.

முதலைக் குஞ்சுக்கு கண் சரியாகத் தெரியாது. வாசனையும் குறைவு. அறிவும் இருக்க வாய்ப்பில்லை. தூக்கி சுழற்றி போட்டால் அதே இடத்தில்  வயிறு உப்பி தரையை பற்றியபடி அமர்ந்திருக்கும். ஒரே அபாயம் அம்மாக்காரி அருகில் இருக்க வாய்ப்புண்டு. வந்தால் கவ்விக் குதறிவிடும் என்று ஒரு பயம். பெரும்பாலான முதலைக்குஞ்சுகள் அம்மாவுடன்தான் இருக்கும். ஆனால் எங்கள் ஆறு கொஞ்சம் விசைகொண்டது. ஆகவே ஒன்றிரண்டு தவறிப்போய் வந்துவிடும். எங்களூரில் ’ஒண்ணாப்பு’ பையன்கள் முதலைக்குஞ்சை வீட்டுக்குக் கொண்டுவருவது அடிக்கடி நடக்கும். நாய் கவ்விக்கொண்டு வந்துவிடும். நான் பள்ளியில் படிக்கும்போது தங்கச்சன் பலமுறை முதலைக்குஞ்சை வகுப்புக்கு கொண்டுவந்திருக்கிறான். சட்டைப்பைக்குள் விட்டிருக்கிறான். புத்தகப்பைக்குள்ளேயே தாமரையிலையில் சுற்றி வைத்துக்கொள்ளலாம்.

முதலைக்குஞ்சை வீட்டுக்குக் கொண்டுவந்தால் இரவில் முதலை தேடி வீட்டுக்கு வந்துவிடும் என்று நம்பிக்கை. முதலையுடன் பேய்களும் வரும். ஏனென்றால் சீங்கண்ணி ஜலயக்ஷியின் வாகனம். ஜலயக்ஷி நீண்ட நீலநிற கூந்தலும் சிவந்த கண்களும் கொண்டவள். தாழம்பூ வாசனை கொண்டவள். வெண்ணிறமான பரல்மீன்களை பற்களாகக் கொண்டவள். மீன்போல சிறகுகளும் உண்டு. அவளை ஏற்றிவரும் முதலை நீரில் நீந்தும் கரையேறினால் பறக்கும்.

அத்துடன் ஒரு முதலைக்குஞ்சை வீட்டுக்கு ஒருமுறை கொண்டுவந்தால் அது கண்டிப்பாக திரும்ப வரும் என்பது மூதாதையரின் பீதியில் பிறந்த நம்பிக்கை. அப்படி திரும்ப ஆற்றுக்குச் சென்ற ஒரு சீங்கண்ணி வளர்ந்தபின் வந்து அதை கொண்டுவந்த ஒரு பெண்ணை இரவில் வீடுபுகுந்து கவ்வி திரும்பக் கொண்டுசென்றுவிட்டது என்று கதை உண்டு. அவள் ஜலயக்ஷியாக ஆனாள்..ஆகவே முதலைக்குஞ்சை வாலைப்பிடித்து தூக்கி தென்னையில் அன்போடு ஓர் அடி அடித்து ஆற்றுநீரில் தூக்கிப்போட்டுவிடுவார்கள். பல்லி வயிற்றுடன் மல்லாந்து மிதந்து செல்லும்.

மனிதர்கள் வாழும் பகுதியில், சாதாரணமாக நாங்கள் புல்லறுக்கப்போகும் இடங்களில், செத்தை குப்பைகளுக்கு நடுவேதான் முதலைகளும் இருந்தன. அவற்றின் உலகம் வேறு. எவரும் அவை வாழும் அரைச்சதுப்புப் புதர்களுக்குள் போவதில்லை. விரால்மீன் பிடிப்பவர்கள், தவளை பிடிப்பவர்கள் தவிர. அவர்களால் முதலைகளுக்குத்தான் ஆபத்து. என் சின்ன வயதில் மாடுமேய்க்கும் ‘தலைதெறிச்ச’ பையன்களுடன் தான் எனக்கு கூட்டு. இன்றளவும் என் இயற்கை அறிவுச்செல்வம் அன்று ஈட்டியதே. அன்றெல்லாம் அவர்கள் உதவியுடன் சீங்கண்ணிக் குஞ்சுகளை பிடித்து வீசி விளையாடியிருக்கிறேன். அதன் வாலையே பிடித்து அதற்கு கவ்வக்கொடுப்பது ஒரு நல்ல விளையாட்டு. திற்பரப்பு ஆனைக்கயத்தில் அவை அன்று நிறைய இருந்தன. பழைய  திருவிதாங்கூர்ஆவணங்களின்படி நூறாண்டுகளுக்கு முன் எங்கள் நிலத்தில் பல்லாயிரக்கணக்கில் அவை இருந்தன. இன்று மிகமிக அருகிவிட்டன. காடுகளில் மட்டுமே காணக்கிடைக்கின்றன. நெய்யாற்றின்கரையில் ஒரு சீங்கண்ணிச் சரணாலயம் உள்ளது

ரப்பர் பாலை அமிலம் ஊற்றி உறையவைக்கும் வழக்கம் வந்ததும் எங்களூரின் நீரின் இயல்பே மாறிவிட்டது. ரப்பர்த்தோட்டங்களில் இருந்து அந்த அமிலம் நீர்வழியாக ஆற்றில் கலக்க ஆற்றின் பல உயிர்கள் மறைந்தன. சீங்கண்ணி முட்டைகள் அமிலத்தால் அழிந்தன, ஆகவே அவை இல்லாமலாயின என்று சொல்கிறார்கள். கூடவே பச்சைத்தவளைகளும். சென்ற ஆண்டு ஒரு இளவயது நண்பன் இன்று ஒரு பச்சைத்தவளையைக்கூட பார்க்கமுடியவில்லை என்றான்.

ஆனால் சீங்கண்ணி எவரையும் தாக்கி நான் பார்த்ததே இல்லை. இத்தனைக்கும் ஆற்றிலிருந்து ஐநூறு அடி தொலைவில், ஏறத்தாழ நூறடி உயரத்தில் உள்ள என் வீட்டுக்கு இரவில் வந்து பலமுறை வெளியே தூங்கிய  கோழியைப் பிடித்துக்கொண்டு சென்றிருக்கிறது.காலடித்தடம் வைத்து அதன் வருகையை அறியலாம். மரத்தில்கூட கொஞ்சம் தொற்றி ஏறும். நம்பமுடியாத அளவு தொலைவுக்கு ஊருக்குள் அது ஊடுருவி கோழிக்கொள்ளை செய்வதுண்டு. நாய்க்குட்டிகளையும் கொண்டுசெல்லும். ஆனால் அதனால் கடிபட்ட எவரையாவது பார்த்திருக்கிறேனா? நினைவில் இல்லை. அதன் வாயளவுக்கு கொக்குதான் உச்ச அளவு. ஆட்டுக்குட்டிகளைக்கூட கவ்வுவதில்லை.

அன்றெல்லாம் சீங்கண்ணி வாழ்க்கையின் ஒரு பகுதி. ஆற்றங்கரையிலோ தோடுகளின் [ இயற்கையான ஓடை] கரையிலோ படப்பில் [செடித்தழைப்பில்] அதை கண்டால் மண்வெட்டியால் தரையில் ஓர் அடிபோட்டால்போதும்  அதிர்வில் அது திடுக்கிட்டு திரும்பி அதன் பாட்டுக்குச் சென்றுவிடும். “பாவம் அதுவே வாயப்பொளந்துகிட்டு கெடக்கு’ என்று எங்களூரில் அதை ஒன்றும் செய்யமாட்டார்கள். ஆனால் ஏன் அத்தனை பயம்?அது கொஞ்சம் கரடுமுரடாக இருந்ததனால்தானா?

இன்று பேச்சிப்பாறை அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் சீங்கண்ணிகள் உள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு முன் பேச்சிப்பாறை அணையின் புறநீர்ப் பகுதியில் ஒரு பெண்மணியை சீங்கண்ணி தாக்கி கையை கடித்து துண்டாக்கிக் கொண்டு போய்விட்டது. செய்தியை கண்டதும் சீங்கண்ணிகளும் மாறிவிட்டனவா என நினைத்துக்கொண்டேன்.

முந்தைய கட்டுரைமகரந்த வெளி – தமிழ் சிறுகதை உலகு தமிழகத்திற்கு வெளியே- சுனில் கிருஷ்ணன்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-48